இணைய இதழ்இணைய இதழ் 88சிறுகதைகள்

மாப்ள சம்முவன்! – ரவிச்சந்திரன் அரவிந்தன்

சிறுகதை | வாசகசாலை

த்தியானம் மாப்ள சம்முவன் போன்ல கூப்புட்டுப் பேசுனப்பத்தான் நாவகம் வந்துச்சு ஊருக்குப் போயி மூனு மாசம் ஆச்சுன்னு. ஊருக்கு போறதப்பத்தி நெனச்ச ஒடனே எனக்கு மனசு குதியாட்டம் போட தொடங்கிருச்சு. பெருநகர வாழ்க்கையில கை நெறையக் காசு, வேற பல வசதிகளும் கெடச்சாலும், இருபத்தஞ்சு வருசமா சொந்த பந்தம், கூடப்பழகுன சினேகிதகாரனுகன்னு மண்ணும் மனுசங்களுமா வாழ்ந்துட்டு, இப்ப பக்கத்து ஊட்டுல குடியிருக்கறவிங்ககூட ஆருன்னு தெரியாம பொழைக்கறதெல்லாம் ஒரு பொழப்பா?

வேற வழியில்லாம ஏத்துக்க வேண்டியிருக்குது. என்ன பன்றது? ஊருல பெருசா சொத்து சொகமிருந்தா அங்கயே காலத்தை ஓட்டிருக்கலாம். அப்பாரு கட்டுன நாட்டு ஓடு மேஞ்ச பழைய ஊடு ஒன்னு இருக்குது. வித்தா அது பெரிய வெலைக்குப் போகாதுங்கறனால சும்மா பூட்டி வெச்சிருக்கறம். அய்யனும் அம்மாளும் அலுத்தா சலிச்சா போயி ஒரு வாரம் பத்து நாளு இருந்து சொந்த பந்தங்களைப் பாத்துட்டு வருவாங்க. அக்கம் பக்கமெல்லாம் சொந்தக்காரங்கதான். போனா எப்ப வேணுமின்னாலும் ஆரு ஊட்டுக்குள்ளாற வேணுமின்னாலும் போயி சாப்படலாம். அப்பிடியொரு பாசம், பழக்கம். அதுனாலதான் எனக்கு ஊருக்கு போறதுன்னா அத்தனை சந்தோசம். கண்ணுல கண்ட ஒடனே ‘கண்ணா சாமீ! ஊட்டுக்கு வா கண்ணூ..’ ன்னு கூப்படறப்ப, அந்தப் பாசமே அத்தன சொகமாயிருக்கும்.

காலேஜுல படிக்கறதுக்காக கோயமுத்தூர் போன காலத்துல இருந்தே என்னால டவுன் வாழ்க்கையில பெருசா ஒட்ட முடியல. கடசி வருசம் படிக்கையிலயே வேலை கெடச்சதுனால அம்மாவும ஐய்யனும் எங்கூடையே வந்துட்டாங்க. நானும் ஒரே பையன். ஓட்டல்ல சாப்பிட்டு கஷ்டப்பட வேண்டாமுன்னு வாடகைக்கு ஒரு ஊட்ட புடிச்சு ஊர்லயிருந்த தட்டுமுட்டு சாமானத்தை தூக்கிட்டு ஐயனும் அம்மாளும் டவுனுக்கு என்ற கூடயே வந்துட்டாங்க.

சொந்தபந்தமுன்னு சொன்னா, அவிங்கள்லயும் பெரிய காசு பணமுள்ள ஆளுக ஆருமில்ல. அல்லாரும் சின்னதா ஏதாவுது வேலை செஞ்சு பொழைக்கறவங்கதான். அதனாலதான் ஒருத்தருக்கொருத்தரு ஒதவியா இருந்தாகோணுமிங்கற கட்டாயம் தானா அமைஞ்சு போச்சி.

எப்பவும் ஒரு நல்ல பழக்கம், எங்க போனாலும் ராத்திரி ஏழு எட்டு மணியாச்சுன்னா பறவைக அல்லாம் கூடடையற மாதிரி அல்லாரும் ஊடு வந்து சேந்துருவாங்க. வேச காலமாயிட்டா சொல்லவே வேண்டாம். பொம்பளைக, வயிசுப் புள்ளைகளத் தவுர அல்லாரும் ஆளுக்கொரு வட்டல்ல சோத்தைப் போட்டுட்டு பொது வாசலுக்கு வந்து குச்சுகிட்டு ஊருகதை பேசீட்டுத்தான் சோறுங்கறது பழக்கம். தனித்தனி குடும்பமாப் பொழச்சாலும் ஒருத்தருக்குமே பெரிய ரகசியமெல்லான் கெடையாது. ஒரு ஊட்ல ஒன்னுன்னா அது அல்லாரூட்டுக்கும் தெரியும்.

ஆராவதுட்டுல கொழம்பில்லேன்னா வெறுஞ்சோத்த வட்டல்ல வெச்சுகிட்டு உக்காந்திருக்கறவன் “ஆறாவதூட்டுல கொழம்போ ரசமோ இருந்தா எடுத்துட்டு வாங்கோ”ன்னு உருமையோடகேப்பான். தொடர்ந்து…

“அத்தே, நீங்க சோறுண்டாச்சா? மத்தியானம் என்ன பன்னுனீங்க?” ன்னு கேட்பான் ஒரு மருமகன். “நானு மத்தியானத்துக்கு கொள்ளுப் பருப்புக் கடஞ்சு ரசம் வெச்சன் மருமகனே. பருப்பு கொஞ்சந்தானிருக்குது.. ரசம் வேணுமின்னா எடுத்துட்டு வருட்டா?” 

“ரெண்டையும் கலக்கி உண்டா அருமையா இருக்கும் இருக்கறதை எடுத்துட்டு வாங்க, நாளைக்கு நானு புளியம்பட்டி சந்தைக்குப் போகையில உங்குளுக்கு கறியெடுத்துட்டு வாறன்”

“அடே, உனக்கு சோத்துக்கு சாறு வேணுமின்னா சொல்லு, அதுக்கு வதுலுக்கு கறியொன்னும் எடுத்துட்டு வரவேண்டாம். நீ அத்தச்சோடு பெரிய பண்ணாடியொன்னும் ஆக வேண்டாம். நீ குஞ்சாமணிய ஆட்டிகிட்டு அம்மணப் பொச்சோட சுத்தீட்டு இருந்த காலத்திலிருந்து அத்தையூட்டுல புட்டுச் சுட்டா மொதல் அடசலு உனக்குத்தான்.” என்று சொல்லி அத்தை ரெண்டு கிண்ணங்களை கொண்டாந்து பொன்னன் முன்னால வெய்க்கும்.. அத்தையோட பேச்சுக்கு எப்பவுமே சென்சார் கெடையாது. இஷ்டத்துக்கு வார்த்தைக பொழங்கும். அவங்க வயசும் அல்லாத்துகிட்டயும் அவுங்களுக்கு இருந்த உரிமையும், பிரியமும் அப்புடி. ஆரும் அதைக் கண்டுக்க மாட்டாங்க. சிறுசுல இருந்து பெருசுக வரைக்கும் அல்லாரும் கலகலன்னு சிரிச்சுகிட்டு ரசிப்பாங்க. ரசிச்சுக் கேக்கறாங்கன்னு தெரிஞ்சாப் போதும் அத்தைக்கு… சரஞ்சரமா பழமொழிகளும், பழைய கதைகளும் வந்து உழுகும். 

 ஊருக்குள்ளாற மொத ஊடே என்ற சித்தப்பனூடுதான். அங்க போகாம ஊருக்குள்ள வரமுடியாது. அதுனால வாற வழியிலையே பொழுதோட சித்தப்பனூட்ல அரிசீம்பருப்பு சோறு தின்னாச்சு. சுடச் சுட சோத்தைப்போட்டு சின்னாத்தா ரெண்டு கரண்டி நெய்யையும் ஊத்துச்சு. நல்லா ஒரு கட்டு கட்டியாச்சு. ஊட்டுக்கு வந்து துணிமாத்தி ஒரு லுங்கியக் கட்டிட்டு பாத்தா மணி ஒம்பதுதாகுது. நானும் ஒரு கயித்துக் கட்டலைக் கொண்டாந்து வாசல்ல போட்டுட்டுப் படுத்தேன். அத்தை கச்சேரி ஆரம்பிக்கற நேரமாச்சு. யாரையாவது வம்பிழுக்கும் நக்கலும் நைய்யாண்டியும் கிண்டலும் கேலியுமா கச்சேரி களைகட்டும்..

அத்தையோட வாயிலிருந்து ஆம்பள-பொம்பளைக கதைக, விடுகதைக எல்லாம் சர்வ சாதாரணமா சகட்டுமேனிக்கு வரும். தவறாம எல்லா பசங்ககிட்டயும் கேக்கற விடுகத, ‘அடேய் ஒரு துப்பாக்கி ரண்டு குண்டு அதென்னடா?’ ங்கறதுதான். அதென்னமோ, அத்தையோட வாயிலிருந்து.. வாறது பச்சையான கதைகளாயிருந்தாக்கூட அதை அத்தை சொன்னா ஆருமே வித்தியாசமா எடுத்துக்க மாட்டாங்க. மீறி யாராவது ஏதாவது சொன்னாலும் அவிங்க முடிஞ்சாங்க. அடுத்து அவிங்க வாயைப் புடுங்கி அவிங்களை உண்டு இல்லேன்னு பண்ணிப்போடும். என் வாயி சும்மா இருக்குமா? 

“அத்தை, உங்குட்ட கதைகேட்டு எத்தனை நாளாச்சு…. ஆரம்பிங்கோ”

நான் சொன்னதுதான் போதும், அடுத்த நிமிசம் அத்தை ஆரம்பிச்சிடுச்சு.

“அந்தக்காலத்துல நாங்கெல்லாம் வளுசுப் புள்ளைகளா இருந்தப்ப காரமடைத் தேருக்கு போறவிக அல்லாம் கட்டுச்சோறு கட்டிட்டு நடந்துதான் போவாங்க. எங்கய்யனும் ஆத்தாளும் அப்புடிப் போயிருந்தப்ப ஒரு விசுக்கா, தேரு நெலை வந்து சேந்து சனமெல்லாம் கொண்டுவந்த கட்டுச்சோத்து மூட்டைய அவுத்துத் தின்னுபோட்டு நடந்துவந்த சலுப்புல சத்தரத்து திண்ணைகள்ல குறுக்கையும் மறுக்கையுமா உருண்டு கெடந்துச்சாம். அப்ப வயசான ஒரு தாசனுக்கு மட்டும் தூக்கமே வருலையாமா? தேருக் கூட்டத்துல அழகழகான பொம்பளைக மேல நல்லா ஒரசீட்டு வந்தது ராத்திரியெல்லாம் கேந்தி புடிச்சி மொனகிட்டு கெடந்தாராம். அதே மாதிரி வேற ஒரு ஓரத்துல படுத்திருந்த பொம்பளை ஒருத்தி தெனவெடுத்த மாதிரி முக்கீட்டுக் கெடந்தாளாம். முக்கீட்டுக் கெடந்த பொம்பளையப்பாத்து மொனகீட்டுக்கெடந்த தாசன், “ஏனம்மா, உங்குளுக்கு என்ன ஆச்சுங்க? ஒடம்பு கிடம்பு செரியில்லீங்களா?” ன்னு கேட்டாராம்.

“அதையேஞ்சாமி கேக்கறீங்க என்றகிட்ட ஒரு படுகுழி இருக்குதுங்க. நான் பொறந்தப்பவே எங்கூடவே பொறந்த சனியனது. ராத்திரியானாப் போதும் என்னைப் படாதபாடு படுத்துதுங்க”ன்னு சொன்னாளாம். சொல்லிப் போட்டு, “நீங்க ஏஞ்சாமி ரொம்ப நேரமா மொனகீட்டே இருக்கறீங்க? உங்குளுக்கும் மேலுக்கு நல்லாயில்லயா?”ன்னு கேட்டாளாம். அதுக்கு அவரு, “ஆதையேஞ்சாமி கேக்கறீங்க, என்ற கூடவே பொறந்த ஒரு படுபாவி எங்கூடவே இருந்துகிட்டு ராத்திரியானா என்னையப்போட்டு படாத பாடு படுத்தறான் தாயீ.” ன்னானாம். 

இதையெல்லாம் கேட்டுகிட்டிருந்த ஒரு மூத்த சாமியாரு, “அப்ப ஒரு காரியம் பண்ணுங்க. ரெண்டுபேரும் ஒரு ஓரமாப்போயி அந்தப் படுபாவியத் தூக்கி படுகுழியில போட்டுட்டு நிம்மதியாத் தூங்குங்க”ன்னு சொன்னாராம். அவிங்களும் “ரங்கனாதா….. கோயிந்தான்னு” சொல்லிட்டு அதே மாதிரி செஞ்சாங்களாம். இதையெல்லாம் கேட்டுகிட்டிருந்த இன்னொரு சாமியாரு “ஹூம் நானொரு பாவங்கேட்டவன், நானுந்தேன் அறுவது வருசமா பந்த சேவையத் தூக்கிட்டு சுத்தராப்புல ஒரு படுபாவியத் தூக்கி தோள்ல போட்டுட்டு காடு மேடெல்லாம் சுத்தறன், எனக்கொரு படுகுழி சிக்க மாட்டேங்குதே ரங்கநாதா, ஒரு படுகுழி கெடைக்க மாட்டேங்குதே”ன்னு பொலம்பிட்டே தூங்குனானாம்.

அத்தையின் கதையைக் கேட்டுட்டு, கெக்கெ பிக்கென்னு சிரிப்பு சத்தம் பலபக்கத்திலிருந்தும் வந்துச்சு.

இதையெல்லாம் கேட்டுகிட்டிருந்த என்ற மாப்ள ‘சம்முகன்’ என்கிற ஷண்முக சுந்தரம், “அத்தை, போதும் படுத்துத் தூங்கு. உட்டா வெடியால வரைக்கும் ஊருக்கதை பேசுவ” ன்னான்.

அதுக்கு ஒடனே அத்தை, “மருமவனே! சம்முகா வந்துட்டியா? சோறுண்டையா? போ போ போயி பத்தரமா கதவச்சாத்தி தாழைப் போட்டுட்டுப் படுத்துக்க சாமி. கதவுக்குப் பொறகால அந்த ஆட்டாங்கல்லை எடுத்து முட்டுக் குடுத்துட்டுப் படுத்துக்க. நடுச்சாமத்துல எவனாவது வந்து கதவைக் கிதவை நெம்பிகிட்டு உள்ளாற பூந்தரப்போறானுக.”

சுத்தியிருந்த எல்லாரும் பளிச்சின்னு சிரிச்சாங்க.

சம்முகன் கோவத்தோடு, “ஆங்… அல்லாம் எங்குளுக்குத் தெரியும் நீ வாயை மூடீட்டு கம்முன்னு படு” ன்னு சொல்லிட்டு நகர்ந்தான்.

சம்முகன் எனக்கு தாய்மாமன் மகன். ரெண்டு பேருல ஆராவது ஒருத்தரு பொட்டப்புள்ளயா இருந்திருந்தாலும் கட்டற முறை. அதுனால நானு எப்பவும் அவனை ‘மாப்ள சம்முவா’ன்னுதான் கூப்படறது. சின்ன வயுசிலேருந்து அவனுக்கு அத்தைதான் எல்லாம். அவனோடு அம்மா வழியில அவனுக்கு அம்முச்சியாகோனும், அப்பா வகையில அத்தை மொறை. அத்தை அவனைக் கிண்டல் பண்றதும், அத்தைகூட அவன் சீராடிகிட்டு சத்தம் போடறதும், பொறகு ரண்டுபேரும் ராசியாகறதும் அவங்க ரெண்டு பேருக்குமே ரம்ப சாதாரணமான விசயம்.

“அத்தே! என்னோ? இன்னைக்கு நம்ம மாப்ள நொம்ப சீர்றான், ஏதோ சமாச்சாரமிருக்குதாட்ட? என்ன ஆச்சு? “ன்னு கேட்ட ஒடனே என்ற கிட்ட நைசா கண்ணை சிமிட்டீட்டு…“ஆமா, அவஞ்சீறி அஞ்சாறாச்சு. பத்து வயிசு வரைக்கும் அவுனுக்கு நாந்தான் பொச்சுக் கழுவி உட்டுட்டு இருந்தேன். மூனு வயிசிலயே அவங்காத்தா உட்டுப்போட்டு போயிட்டா…”

“அவஞ் சம்சாரத்தை எங்க காணோம்? கண்ணாலம் மூச்சி மூனு வருசமிருக்குமா? இப்ப உண்டாயிருக்காளா? “

“என்னத்தை உண்டாயிருக்கறா? அறுக்கமாட்டாதவன் பொச்சுல அம்பத்தெட்டு கருக்கறவாளாம், இவனும் கார்த்திக மாசத்து நாயாட்ட ஊட்டுக்கு வந்தா அவ முந்தானியப் புடிச்சுகிட்டு அவ பொறகாலயேதான் சுத்தீட்டே இருக்கறான். ஆனா, ஒன்னையும் காணோம். அவ வகுத்துல ஒரு பூச்சி பொட்டக் காணோம். அவளையும் நான் ஜாட மடையா கேட்டுப் பாத்துட்டேன். ஏம்புள்ள? ரவைக்கு உங்கூடத்தான் படுக்கறானா? நெப்பு நெதானம் ஏதாவுது அவனுக்குத் தெரியுதா? தெரியிலேன்னா நீயாவுது அவுனுக்கு கொஞ்சம் வெவரமா சொலிக்குடூன்னுகூட சொல்லிப்பாத்துட்டன். அவளென்னடான்னா ‘வாயை மூடீட்டு போ கெழவீங்கறா’ என்னைய”

“ரண்டுபேரும் சந்தோசமாத்தான இருக்கறாங்க? சண்ட வழக்கு ஒன்னுமில்லயே?”

“அந்தக் கூத்த ஏன் கேக்கற” என்று சொல்லிவிட்டு அத்தை ‘கெகெக்கெக்கே’ ன்னு சிரிக்கத் தொடங்கிருச்சு. எதிரில உக்காந்திருந்த என்னோட பெரியம்மாளிடம் கண்ணை சிமிட்டீட்டு, “வள்ளீம்மா, சம்முகனும் செலுவியும் சந்தோசமா இருக்கறாங்களான்னு கண்ணான் கேக்கறான்” என்றதும் அங்க இங்க உக்காந்திருந்தவங்க எல்லாம் சிரிக்கத் தொடங்கினாங்க.

“அட என்னோன்னு சொல்லிப் போட்டு சிரிங்க… நானும் சிரிப்பனல்ல?”

சம்முகனுக்கு புசுபுசுவென்று கோவம் வந்தது. அத்தையைப் பார்த்து “இப்ப நீ வாயை மூடீட்டு கம்முன்னு இருக்க மாட்டியா?”

“உன்ற பூளைவாக்கு நம்ம கண்ணானுக்கும் தெரியுட்டும்… அவனென்ன அல்லு அசலா? உன்ற சோடிதாண்டா? அதையெங்கேக்கற சாமீ…” என்று முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டு கால்களை நீட்டி சுவரில் நல்ல வசமாக சாய்ந்து உக்காந்துகொண்டு கதைய ஆரம்பிச்சா அத்தை.

“போன மாசத்துல ஒரு நா, இப்புடித்தான் ராத்திரி ஒம்பத்து மணிக்கு அல்லாரும் உக்காந்து பேசிகிட்டிருந்தோம். எங்கயோ ரெண்டு நாளு வெளியூரு சோலியாப் போயிட்டு திலும்பி வந்த பய்யன் பம்மி பம்மி உக்காந்துட்டிருந்தான். இவன் பொண்டாட்டி இதா இந்தப்புள்ள செலுவி இருக்கறாளே? இவ நாம் பேசறதையே கேட்டுட்டு, என்ற வாயைப் பாத்துட்டு குக்கீட்டிருந்ததா என்று அத்தை ஆரம்பிக்கவும், ‘ஆத்தா, செத்த கம்முன்னு இரு ஆத்தா.. ஏன் என்ற மானத்த வாங்கறே?’ ன்னு சொல்லிகிட்டே எந்திரிச்சு வந்து அத்தையோட வாயைப் பொத்துனா, சம்முகன் பொண்டாட்டி செல்வி.

“அட சித்த சும்மா கெட” என்று அவளது கையைத் தட்டிவிட்டு உற்சாகமாகத் தொடர்ந்தார் அத்தை.

“ஏதோ ஒரு சோலியா ரெண்டு நாளு வெளியூரு போயி ராத்தங்கீட்டு வந்தானா? ஒலகத்துல இல்லாத ஒரு பொண்டாட்டியக் கட்டீட்டு வந்துட்டான் சாமி. நாங்கெல்லாம் உக்காந்துட்டிருக்கறம். இந்த கேனச்சிய பாத்து உள்ள போயிப் படுக்கலாம்னு சாடை பன்றான். இந்த கிறுக்கிக்கு அது புரியாம ஊரு பழமை பேசீட்டு இருக்கற என்ற வாயைப் பாத்துட்டு உக்காந்திட்டிருக்கறா. அதென்ன ஒரு எழவெடுத்த கேந்தியோ இவுனுக்கு? பொண்டாட்டியக் கட்டிபுடிச்சிட்டு படுக்கலியீன்னா தூக்கம் வராது. ‘யே புள்ள உள்ள வந்து படு, எனக்கு தூக்கம் வருது’ன்னான். 

“ஏண்டா திருவாத்தான் உனக்குத் தூக்கம் வந்தா நீ போயித் தூங்கு. அவளை என்னத்துக்குக் கூப்படற?” ன்னு கேட்டன் நானு. அதுக்கு, “என்ற பொண்டாட்டிகூட நான் படுக்கறதுக்குக்கூட உன்றகுட்ட உத்தரவு வாங்கோனுமா?’’ ன்னான்.

“ஆத்தா மகராசி, நீ போயித் தூங்கு தாயீ! நீ கூடப்போயி அவங்கூட படுக்குலேன்னா… அழுதுபோடுவான் போல இருக்குது”ன்னு சொல்லி இவளை முடுக்கியுட்டுப் போட்டு சித்த நேரத்துல அல்லாரும் படுத்து தூங்கிட்டோம். நல்ல நடுச்சாமம், மணி ரெண்டு இருக்கும்.

“திடீர்னு நட்ட நடு ராத்திரியில ஆரோ ஒரு பொம்பளை குய்யோ முறையோன்னு அழுகுற சத்தமும் ஆரோ அடிக்கற சத்தமும் கேக்குது. வாசல்ல படுத்திருந்த அத்தன சனமும் முழிச்சுகிச்சு. அல்லாரும் நல்ல தூக்க மப்புல இருந்தங்காட்டி ஆரோட ஊட்டுக்குள்ளார இருந்து சத்தம் வருதுன்னு ஒருத்தருக்கும் ஒரு நெதானம் கெடைக்கல. ஒருத்தருக்கொருத்தர் மூஞ்சியப்பாத்துட்டு கிலி புடிச்சு உக்காந்திருக்கறம். என்னடா இது நா வரைக்கும் இப்புடி நடந்ததேயில்லியேன்னு ஒன்னும் புரியாம உக்காந்து கெடக்கறம். சட்டுன்னு சத்தமே இல்ல. செரி போயி அல்லாரும் தூங்குங்கன்னு சொல்லிட்டு படுத்தா, மறுக்கா அடிக்கற சத்தமும் அழுகற சத்தமும் கேக்குது “

“லைட்டப் போட்டுட்டு காதத் தீட்டீட்டு உக்காந்தா, ஒரு பொம்பள கொரலு அழுதுகுட்டே, ‘உனக்கென்ன பைத்தியமா புடிச்சுருக்கு… நாசமாப் போனவனே..‘ அப்புடின்னு. சத்தம் வெளிய கேக்கக்கூடாதுங்கற மாதரை கொரல அடக்கிட்டு பேசற மாதரை கேட்டுது. சாத்தியிருக்கற ஒவ்வொரு ஊட்டுக்கதவா பாத்து ஒட்டுக் கேட்ட பொறகுதான் சத்தம் சம்முகனூட்டுக்குள்ளாறயிருந்து வருதுன்னு தெரிஞ்சுது. மறுக்கா அடிக்கற சத்தமும் அழுகுற சத்தமும் கேட்டுச்சு. அல்லாரும் ஒருத்தரை ஒருத்தரு மூஞ்சிய மூஞ்சிய பாக்கறாங்கோ. எத்தனை நேரந்தான் பொறுமையா இருக்கறது. அவனென்ன பெரிய புடிங்கியான்னு சொல்லிட்டு, பொறகு நாந்தான் போயி கதவை டம்மு டம்மு நாலு இடி இடிச்சன்.”

“ஆரது? இன்னேரத்துல கதவை தட்டறது?” ங்கறான் ஒரு சாமார்த்தியம். 

“டேய் சம்முகா, நாந்தாண்டா.. கதவத் தொற… என்ன அங்க சத்தம்?” ங்கறன். 

“ஓன்னுமில்ல நீ போயி கம்முன்னு படு. நேரங்காலந் தெரியாம இமுசை”ங்கறான்!.

“செரி, எப்புடியோ நாசமாப்போகுட்டுமுன்னு. நான் வந்து கம்முண்ணு படுத்துட்டன். லைட்டெல்லாம் ஆப் பண்ணிட்டு படுத்துட்டம். ஆனா, நாங்க ஆருமெ தூங்குல. சித்த நேரங்கழிச்சு மறுக்காவும் அடிக்கற சத்தமும், ‘அய்யோ அய்யோ என்ன அடிக்கறானே நாசமாப்போனவன்னு’ செலுவி அழுகுற சத்தமும் கேட்டுச்சு. நானெந்திரிச்சு லைட்டப் போட்டுட்டுப் போயி கதவை எட்டி ஒரு ஒதையுட்டன். ‘கட்டீத்தீனி கதவை தொறடான்னு’ சொல்லி ஒரு சத்தம் குடுத்தவொடனே கதவைத் தொறந்துட்டான். இருட்டுக்குள்ள ரண்டு பேரும் நிக்கறாங்க. லைட்டப் போடு புள்ளன்னு சொன்னதும் செலுவி லைட்டப் போட்டா. ஊட்டுக்குள்ள பாத்தா சாமானம் செட்டெல்லாம் உருண்டு கெடக்குது. இவன் அண்டர்வேறோட நிக்கறான் அந்தப்புள்ள இடுப்புல சீலையில்லாம வெறும் உள்பாவாடை சாக்கிட்டோட நிக்கறா. எனக்கா? இதென்னடா எழவு பிருசம் பொண்டாட்டிக்குள்ள அந்த விசியத்துலதான் ஏதாவது தகராறாட்ட இருக்குது போலன்னு நெனச்சுகிட்டு அந்தப் புள்ளகிட்டப் போயி, ‘என்னாச்சு புள்ள? என்ன பிரச்னை? அவன் உம்பிருசந்தான? அவங்கூப்ட்டா போயி படுக்க வேண்டியதுதான? மாட்டேன்னு சொன்னையா நீயி? இதுக்கு இந்நேரத்துல இப்புடி ஆராவுது அடிச்சுக்குவாங்களா? மானங்கெட்ட பொழப்பா இல்ல இருக்குது’ண்ணன்”.

“அதுக்கு இவ ‘ஆத்தா அறுவுகெட்டத்தனமா பேசாத என்ன விசியமுன்னே எனக்குத் தெரியில, ஒரு காரணமுமில்லாம தூங்கிட்டிருந்த என்னயப்போட்டு அடியடின்னு அடிக்கறான், கெட்ட கெட்ட வார்த்தைல பச்சை பச்சயாத் திட்டறான். எனக்கு ஒன்னுமே புரியில’ ங்கறா.”

“டேய் சம்முகா…என்னடா ஆச்சு உனக்கு? இப்புடி ஊரு அடங்குன நேரத்துல அந்தப் புள்ளையப்போட்டு இப்புடி அடியடின்னு அடிக்கற? என்னடா நடந்துச்சு? ஏண்டா இப்புடி மானத்த வாங்கறே? ன்னேன்”

“ஓன்னுமில்ல. எல்லாம் வெடியால பேசிக்கலாம், நீ போயி கம்முன்னு படு”ங்கறான்.

“நீயேம்புள்ள இப்புடி இடுப்புல சீலையில்லாம அரையுங்கொறையுமா நிக்கறே?ன்னா, “இதா.. இந்தப் பைத்தியகாரந்தான் என்ற சீலையெல்லாம் உருவி உட்டுட்டான்..” ங்கறா.

“எழவெடுத்தவனே என்ன ஆச்சு உனக்கு? படுக்கப் போகையில ரண்டுபேரும் சந்தோசமாத்தான உள்ளாற வந்து படுத்தீங்க. அதுக்குள்ள சித்த நேரத்துல ரண்டுபேருக்குள்ளாற என்னதான் பிரச்னை?”

“இந்த ராத்திரில என்னையப் பத்தி, உனக்கு ஊரெல்லாம் சொல்லி என்ற மானத்தக் கெடுக்கோணுமா? வெடியால பேசிக்கலாம் போ. ஏய் போடி போயி கதவை சாத்தீட்டு வந்து படு…”

“ஐய்ய்யோ சாமி! நான் இந்த ஊட்டுக்குள்ள உண்றகூடப் படுக்க மாட்டன் நீ யென்னைய கொன்னாலும் கொன்னு போடுவ.“ன்னு சொல்லி சீலைய எடுத்துக் கட்டீட்டு பாயச் சுருட்டீட்டு வெளிய வந்துட்டா செலுவி.

“நானு அவங்கிட்டப் போயி ரகசியமா, ‘ஏண்டா? அட என்னதான் நடந்துச்சு?” ன்னு கேட்க, ‘அத்தை அதைய நான் என்ற வாயால எப்புடி சொலுட்டுமுன்னு’ ஓன்னு அழுகறான். நடந்த விசியத்தச் சொன்னா நீயே அருவாளை எடுத்து அவளை ஒரே வெட்டா வெட்டிப் போடுவ தெரியுமா?’ ங்கறான்.

“செரி, நீ வெளிய வா மொதல்ல. ஏ… புள்ளைகளா ஆறாவது அஞ்சாறு கிளாசு காப்பி போடுங்க. இன்னைக்கு சிவராத்திரிதான் போ”

“நம்ம பாப்பாத்தி போயி வரக்காப்பி போட்டு கொண்டாந்து அல்லாருக்கும் குடுத்தா. அல்லாருங் காப்பியக் குடிச்சிட்டு அவன்ற மூஞ்சியவே பாத்துட்டு உக்காந்துட்டு இருக்கறம். நல்லா ‘புரிச்சு புரிச்சுன்னு’ எருமை கழுனீரு குடிக்கறாப்புல காப்பியக் குடிச்சுபோட்டு வாயத்தொறக்காம கடப்பாறய முழுங்குனவனாட்ட குக்கீட்டிருந்தான். திடீர்னு, துண்டெடுத்து மூஞ்சில வெச்சுகிட்டு ஓன்னு அழுகறான்.

“என்றா ஆச்சு? இப்ப எதுக்கு இப்புடி அழுகற?’’

“அத்தே நான் மோசம் போயிட்டேன். இந்தக் கழுத முண்டையத்தான் கட்டுவேன்னு ஒத்தக்கால்லு நின்னு இவளக் கட்டுனதுக்கு என்னைய நல்லா கழுத்தறுத்துட்டா…. கட்டுன புருசன பக்கத்துல படுக்க வெச்சுட்டு, கள்ளப் புருசனுக்கு ராத்திரி கதவைத்தொறந்து உட்ட கண்டாரவோளி……”

“எதுக்கால உக்காந்திருந்த செலுவி எந்திரிச்சு வந்து உட்டாளே ஒரு அறை சம்முகனை… எல்லாம் அப்புடியே பிருமத்தி புடிச்ச மாதரை ஆயிப்போச்சு எனக்கு. சட்டுன்னு சுதாரிச்சுகிட்டு அந்தப்புள்ளயைக் கையைப் புடிச்சு இழுத்துட்டு வந்து பக்கத்துல வந்து உக்கார வெச்சு, ‘என்ன தெகிரியமிருந்தா என்ற முன்னால அவனை கை நீட்டியடிப்ப நீயி? வெளக்குமாறு பிஞ்சு போகும், ஆம்மா!’ன்னு ஒரு சத்தங்குடுத்தன் நானு. ‘புஸ் புஸ்ஸு’ன்னு மூச்சு உட்டுகிட்டு ஆத்தர ஆத்தரமா அழுகறா அவ..’இந்த நாசமாப்போனவன் என்னையத்தான் கட்டிக்குவேன்னு சொல்லி அழுகறானேன்னு வந்த நல்ல நல்ல மாப்ளையை எல்லாம் வேண்டாமுன்னுட்டு இவனைக் கட்டிகிட்டதுக்கு எனக்கு இதும் வேணும் உன்னமும் வேணும்,. ஆத்தா, வெடிஞ்சதும் நான் என்ற ஊட்டுக்குப் போறன், எங்கயாவது தறிக்கு வேலைக்குப் போனாலும் மாசம் மூனாயிரம் நாலாயரம் கெடைக்கும். மூனு வருசம் இந்த எச்சக்கலை நாயிகூட பொழச்சதுக்கு எனக்கு இவன் அவுசாரிப் பட்டம் குடுத்துட்டான்’ன்னு சொல்லி குதி குதின்னு குதிக்கறா. அதுக்குப் பொறவு இந்த திருவாத்தான் வாயைப் பொளந்துட்டு பேயறஞ்ச மாதரை உக்காந்துட்டான். ஒரு சனம் வாயைத் தொறக்கல. இது என்னடா கந்தரகோலமுன்னு ஆயிப்போச்சு. இதுக ரெண்டும் சிட்டுக்குருவிகளாட்ட கூத்தும், கும்மாளமுமா, தமாசுமா ஒத்துமையாயிருந்த புள்ளைக இப்புடி அடிச்சிக்குதுகளேன்னு அல்லாருக்குமே சங்கட்டமா இருந்துச்சு.”

“ரண்டுபேரையும் கையப் புடிச்சு கூட்டீட்டு வந்து என்ற ரண்டு அள்ளைல உக்கார வெச்சுட்டு உள்ள போயி திந்நூரு டப்பாவைக் கொண்டாந்து வெச்சு ரண்டுபேரு நெத்தீலயும் திருநீரு பூசிவிட்டு, ‘ஆத்தா.. செலுவீ என்ன ஆச்சுன்னு வெவரமாச் சொல்லு சாமீ’ன்னன். அந்தப்புள்ள பூள் பூளுன்னு அழுதுபோட்டு. ‘நல்லாத் தூங்கிட்டிருந்தனாத்தா..இந்த நாசமாப் போனவன், என்னய்யப் புடிச்சு உலுக்கி ‘எங்கடி போனான் அவன்? இப்ப இங்கிருந்தவனை எங்க ஒளிச்சு வெச்சிருக்கற?’ன்னு கேட்டான். எனக்கு ஒன்னும் புரியில. ‘அட! ஆரைக் கேக்கற? ஆரு வந்தாங்க இங்க? நாம்பாட்டுக்குத் தூங்கிட்டிருக்கறன்? நடு ராத்திரில எழுப்பி என்னைய என்னென்னமோ கேக்கற?’ ன்னேன். அதுக்கு, ‘உன்னையக் கேக்காம ஆரையடி கேக்கறது? கழுத முண்ட! கட்டுன புருசனைக் கட்டிப் போட்டுட்டு கள்ளப் புருசனோட பக்கத்தாலயே படுத்துகிட்டு கும்மாளம் போடற நீயி, பாத்துகிட்டு என்னைய வெளக்குப் புடிக்கச் சொல்றையான்னு கெட்ட கெட்ட வார்த்தைல பேசறான். வெளிய சத்தம் கேட்டிருமின்னு குசு குசுன்னு பேசறான். நானும் வெளிய தெரிஞ்சா அசிங்கறமாயிருமேன்னு ரம்ப நேரம் சத்தம் போடாம அழுதுகிட்டே பதிலு சொல்லிட்டிருக்கறன். இந்த அக்கப்போரு ஒரு மணி நேரம் நடந்துச்சு. திடீர்னு அடிக்க ஆரம்பிச்சுட்டான். அப்பறந்தான் அடி தாங்க முடியாம நான் சத்தம் போட்டு அழுக ஆரம்பிச்சிட்டன். இந்த பைத்தியகாரங்கூட உனி நான் ஒரு நிமிசம் பொளைக்க மாட்டன்.’ ன்னு அழுகறா.”

“இல்ல நாம் பாத்தனே. இவளோட மாமன் பையன், அவந்தான்…. அந்த கோம்பை நாயாட்ட வளத்தியா இருப்பானே? கண்ணாலத்துக்கு மின்னாடி இவ பொறகால சுத்தீட்டிருந்தானே? அந்த நாயி! இவ பக்கத்துல படுத்திருந்தான். எனக்கு அவசரமா ஒன்னுக்கு வந்துச்சுன்னு எந்திரிச்சா என்னால எந்திரிக்க முடியில, காலுங்கையும் கட்டிப் போட்டிருக்குது. அப்பறந்தான் நானெப்புடியோ சமாளிச்சு எந்திரிக்கறதுக்குள்ளாற இவ அவனைத் தாட்டி உட்டுட்டான்னான். ‘உள்ளாற போயி உன்னையக் கட்டிப்போட்டிருந்த கவுத்தை எடுத்துட்டு வாடா’ன்னு சொன்னன். உள்ளாற போயிட்டு ரண்டு நிமிசத்துல வெறுங்கைய்யோட வந்து நின்னான். நானொன்னு வெச்சன் பளார்னு. கட்டித்தினி! அந்தப் பையன் கலியாணமூச்சு ஊருட்டுப் போயி ஒரு வருசமாச்சு, ஆறு மாசத்துக்கு மின்னாடி நான் பாத்தப்பக்கூட ‘மெட்றாசுல வேலைக்குப் போயிட்டிருக்கறன், லீவுக்கு ஊருக்கு வந்தனாத்தா’ன்னு சொல்லி எங்குட்ட பேசிட்டுப் போனான். உன்ற பொண்டாட்டிகூட படுக்கறதுக்காக அவங்கட்டுன பொண்டாட்டிய உட்டுப்போட்டு நடுச் சாமத்துல ரயிலேறி மெட்றாசிலிருந்து வந்து, நாங்க இத்தன பேரு வாசல்ல படுத்திருக்கறவங்களையெல்லாம் தாண்டி, உள்பக்கம் தாப்பா போட்டிருக்கற கதவுக்குள்ளாற பூந்து ஊட்டுக்குள்ளாற படுத்திருக்குற உன்னையக் கவுறுபோட்டுக் கட்டி வெச்சிட்டு…? பைத்தியகாரனாடா நீயி? கேனப்பொச்சு, இப்புடியுமிருப்பானா ஒரு ஆம்பள?”

‘’அப்ப இதெல்லாம் நெசமில்லையா? கெனாவா? அத்தை நெசமாட்டவேயிருந்துச்சு அத்தையின்னு சொல்லிட்டு நடுவாசல்ல குத்த வெச்சு ஓன்னு அழுக ஆரம்பிச்சுட்டான்.”

ஊட்டு சனமே சிரி சிரின்னு சிரிக்குது, ‘சம்முவா! நல்ல வேளை அந்தப்புள்ளை கோவத்துல அறுவாளையெடுத்து உன்னைப் பொளந்திருந்தா என்னாகறது?’ன்னு ஒரு பக்கம். 

‘செலுவி, இதுதான் சாக்குன்னு நீ நல்லா நொங்கு நொங்குன்னு நொங்கிருக்க வேண்டீதுதான?’ன்னு மறு பக்கம்.

ஒருவழியா அத்தை கதைய சொல்லி முடிக்க மறுக்கா அல்லாரும் சிரிச்சு அடங்குன பொறகு, “அத்தை, நம்ம கையில ஒரு கதையிருக்குது சொல்லுட்டா?” ன்னு கேட்டுட்டு, சம்முவன பாத்து, “மாப்ளை நம்ம கதையச் சொல்லுட்டா?’” ன்னு நான் கேட்டதும், ‘சாமி சாமி! கண்ணா, சித்த கம்முன்னு இருடா நீயி, இதைச் சொல்லியே ஒரு மாசமா ஆளாளுக்கு என்னைய ஓட்டீட்டு இருக்கறாங்க. நீ வேற அதைய சொன்னா நான் முடிஞ்சன். கம்முன்னு படுத்துத் தூங்கு நீயி’ன்னு சொன்னான்.” 

எங்கிட்ட சம்முவனப் பத்தி ஒரு கதையிருக்குதுன்னு தெரிஞ்சவொடனே ஆளாளுக்கு ‘கண்ணா… கண்ணா… சொல்லு கண்ணா…’ ன்னு பலபக்கத்துலயும் இருந்து கொரல் வந்துச்சு. 

“மாப்ள! இத்தன பேரு ஆசையா கேக்கைல நானெப்புடி கம்முன்னு இருக்க முடியும் சொல்லு?”ன்னு சொன்னவுடன, சம்முவன் தப்பிக்க எந்திரிச்சு ஓடப்பாத்தவனை அல்லாருமா சேந்து குண்டுக்கட்டா தூக்கீட்டு வந்து அமுக்கி உக்கார வெச்சிட்டாங்க.

“இது நடந்து நம்ப வருசமே ஆச்சு. இதைய ஆருகுட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லி எனக்கு லஞ்சமா என்னைய சினிமாவுக்கெல்லாம் கூட்டீட்டுப் போயிருக்கறான். நாங்க பள்ளிக்கோடம் படிக்கறபோது இவன் பத்தாவுது முழுப் பரிச்சைக்கு என்றகூட சேந்து படிக்கறேன்னு சொல்லீட்டு எங்கூட்டுக்கு வந்து ராத்திரி பன்னண்டு மணிவரைக்கும் படிச்சிட்டு இருந்தம், பசங்க பொறுப்பா படிக்கறானுகளேன்னு எங்கம்மா ரெண்டுபேருக்கும் காப்பியெல்லாம் வெச்சுக் குடுத்துச்சு. படிச்சு முடிச்சிட்டு ரெண்டுபேரும் எங்கூட்டு ஆசாரத்துலயே பாயைப் போட்டு படுத்துட்டோம். நடு ராத்திரி அல்லாரும் அசந்து தூங்கையில பாதி தூக்கத்துல எந்திரிச்சு பாயில உக்காந்துட்டே ‘பாம்ம்பூ பாம்ம்பூ”ன்னு கத்தறான். சத்தங்கேட்டு ஊட்டுக்குள்ளாற தூங்கிட்டிருந்த அய்யனும் அம்மாவும் லைட்டப் போட்டுட்டு ஆளுக்கொரு தடிய எடுத்துட்டு வந்து, ‘எங்கடா பாம்பூ?’ன்னு கேட்டா? கண்ணை இறுக மூடீட்டு மறுபடியும் ‘பாம்ம்பு…. பாம்ம்பு’ன்னு கத்தறான். அம்மாவுக்குக் கோவம் வந்து தலையில நங்குன்னு ஒரு கொட்டு வெச்சு ‘எழவெடுத்தவனே கண்ணைத் தொறந்து எங்க பாம்புன்னு சொல்லித்தொல’ன்னு சொன்னப்பறம் கண்ணைத்தொறந்து எங்க மூனுபேரையும் மாத்தி மாத்திப் பாத்துட்டு, ‘என்னோடு டவுசருக்குள்ள பாம்பு பூந்த மாதிரி கெனாக் கண்டேன்’ ன்னானே பாக்கோணும். அய்யனுக்கு செரியான கோவம் ‘வக்கள்ளி! கழுதைக்கான மாதர வயிசாச்சல்ல? கொஞ்சமாவுது அறுவு வேண்டாம்? படுத்துத் தூங்குங்க’ ன்னு சொன்னாங்க. அப்பவும் உக்காந்து திரு திருன்னு திருட்டு முழி முழிக்கறான். அப்பத்தான் நான் கெவுனிச்சன் பயத்துல படுக்கையிலயே மூத்தரம் பேஞ்சு வெச்சுருந்தான். அது அப்படியே நடு ஊட்ல கொளம் கட்டி நிக்குது. எங்கம்மாவுக்கு வந்தக் கோவத்தப் பாக்கோணுமெ.. ‘சனியனே, கெரகம் புடிச்சவனே! பாயி போர்வையெல்லாம் கொண்டுபோயி பொடக்காளில போட்டுட்டு அக்கட்டால தள்ளி வேற பாயைப் போட்டுப்படு’ன்னு சொல்லி ஒரு பழய சாக்கைக் கொண்டாந்து போட்டுச்சு, மாப்பள நல்ல பய்யனா லச்சனமா சாக்கெடுத்து மூத்தரமெல்லாம் தொடச்சு, மூத்தர சாக்கையும், பாயையும், போர்வையையும் கொண்டுபோயி பொடக்காளீல போட்டுட்டு வந்து படுத்தான். மாப்பளை உன்னியுமாடா நீ திருந்தலே”ன்னு சொன்னதும் அல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. 

என் பங்குக்கு பழைய கதைய சொல்ல…. ‘அடப்பாவி! இப்புடியொரு கதை வேறையா? செலுவி உனிமே ராத்திரி படுக்கறதுக்கு மின்னாடி அவங்கையு காலெல்லாம் கட்டிப் போட்டுரு, இல்லேன்னா அவனுக்கு திண்ணைல பாயைப் போட்டுக் குடுத்துட்டு நீ பத்தரமா உள்ள போயி படுத்துத் தூங்கு…’

இப்டி ஆளாளுக்கு சம்முகனை வண்டியேத்த வெக்கத்தால் மொகமெல்லாம் சிவந்து போன அவன், “‘அல்லாம் மூடீட்டுப் போங்கடா.. நீ வா புள்ள.. நாம உள்ளாற போலாம்”ன்னு சொல்ல, சிரிசுகிட்டே அவளும் அவம்பின்னாடி போயி கதவத்தாழ் போட்டா. 

கடைசியா அத்தை “ஆம்மா, அன்னைக்கு உன்ற ஊட்டுல தூங்கையில அவன்ற டவுசருக்குள்ளாற பாம்பு பூந்துச்சுன்னு ரகளை பண்ணுனான், இந்த விசுக்கா பொண்டாட்டி பாவாடைக்குள்ளாற வேற பாம்பு பூந்துச்சுன்னு ரகளை பண்ணுனான்.”ன்னு முடிக்க அந்த ராத்திரியில எல்லாருமாக கூட்டாகச் சேந்து சிரிச்ச சிரிப்பு அடங்க ரொம்ப நேரமாச்சு.

*****

ravi96498@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. சார் கொஞ்ச நாள் முன்ன உங்க வாட்சப் படத்தைப் (WhatsApp DP) பார்த்த போது என்ன கி.ரா படத்தை வச்சுயிருக்காருனு நினைச்சேன். நல்ல பார்த்த பின்புதான் உங்க படம்னு தெரிஞ்சுது, இந்த கதையும் அதுமாதிரி தான். வட்டார மொழி நல்லா இருக்கு. அந்த அத்தைப் போல ஒரு உறவினரைத் தெரியும். எனக்கு கதையின் துள்ளல் மிகவும் பிடித்திருக்கிறது. துள்ளல் மட்டும் இருப்பதாகவும் தோன்றுகிறது. நன்றி சார்????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button