![](https://vasagasalai.com/wp-content/uploads/2024/10/mathikumar-thayumanavan-e1728045159910-780x470.jpg)
உயிர்த்தெழ வேண்டாம்
நெடுநெடுவென வளர்ந்த
மரம் போல
நீண்டு செல்கிறது இரவு.
இந்த நாளின் மகிழ்வுகளை
அதன் அடியிலிருந்து எழுத ஆரம்பிக்கிறேன்.
மூன்றடி உயரம் வரை வருகிறது.
போலவே இந்த நாளின் துயர்களை
அதன் மேல் அடுக்குகிறேன்.
இரவு இன்னும் வளர்ந்து
கொண்டே செல்கிறது.
இரவை இரண்டாக வெட்டுகிறேன்.
மகிழ் இரவு : துயர் இரவு
மரம் இருந்த இடத்தில்
போதி துளிர்க்கிறது.
விடியப் போகிறது போல.
மகிழ்வுகளையும் துயரங்களையும்
குறுக்கு நெடுக்காக இட்டு
அவசர அவசரமாக
நானே என்னைச் சிலுவையில்
அறைந்து கொள்கிறேன்.
•
வாழ்வின் உவர்ப்புச் சுவை
துரோகம் பாரித்த
கடலொன்றில் தளும்பிக்
கொண்டிருக்கின்றது என் படகு.
எழும்பும் அலைகளில்
உள்ளே வந்துவிழும்
பாம்புகளுக்கு
உன்னைப் போலவே
கொடிய விஷம்
உனக்கும் அவற்றைப் போலவே
வழவழப்பான தோல்.
நெளியும் உணர்வுகளில்
லயித்திருக்கும் படகிற்கு
சூட்சமங்கள் தெரியாமலில்லை.
உன் புறக்கணிப்பை
நெம்பி நெம்பி
என் துடுப்புகள் உடைகின்றன.
பின் சுலபமாக எரித்துவிடுகிறாய்
அந்தப்படகை.
இப்பொழுது
கடலாகி நிற்கிறேன் நான்.
வா..படகாக.
என் மீது ஊர்..
பின் படர்.
இறுதியாய்ப் புணர்..
அந்தக் கலத்தலில்
நிகழ வேண்டும்
உன் கரைதல்.