இரு கருநீலக் காப்பிக் கோப்பைகளின் இறுதி யாத்திரை
பார்ப்பதற்கு ஒன்றுபோலவே இருக்கும்
ஒவ்வொரு நாளும்
ஒன்றின் மீது ஒன்று அமரும்
நம் இருவரின் கருநீலக் காப்பிக் கோப்பைகள்
கைத்தவறி ஒரே நேரத்தில்
அந்தரத்திலிருந்து வீழ்கின்றன.
உருவ ஒற்றுமையாய்
இருக்கும் அத்தனை இடையூறுகளையும்
ஒருவேளை வெகுகாலமாய்ச் சுமந்து
சலித்திருக்கலாம்.
பயனாளர் மாறிமாறிப் போகும்
சாத்தியங்களையும் சந்தர்ப்பங்களையும்
வெறுக்கத் தொடங்கியிருக்கலாம்.
காலம் முழுக்க ஒரே மனிதரின்
ஒரு சோடி இதழ்களுக்கு மட்டுமே
தன்னை ஒப்புக்கொடுக்கும் வைராக்கியம்
உடைபடுவது சகிக்காத நாளில்
தற்கொலைக்கான முதல் திட்டத்தை
உருவாக்கியிருக்கலாம்.
சமூகத்தில் தனது தனித்துவத்திற்காய்
கோப்பைகளின் மாறுபட்ட
நிறமும் வடிவமும்
உள்ளிருக்கும் பானத்தின்
ருசியைக்காட்டிலும் முக்கியமென
நம்ப வைக்கத் துவங்கிய
அழகுப் பூச்சு விளம்பரங்களை
எதேச்சையாய் கோப்பைகள்
பார்த்ததால் கூட இருக்கலாம்.
ஒவ்வொருமுறை கழுவி வைக்கப்படுகையில்
மேற்கொண்ட திட்டத்தின் முத்தாய்ப்பாய்
சற்று முன்பு
தன் உடலைச் சாய்த்து
கைகளிலிருந்து
நழுவி வீழும் கோப்பை
உன்னுடையதா என்னுடையதா?
•
நொறுங்கிய காப்பிக் கோப்பைகள்
நம் பழமைகளைத் தேக்கியிருப்பவை.
உண்மையில்
நம் ரகசியங்கள் ஏந்தி ஏந்தி
விளிம்புகளில் கறைபடிய
எச்சில் ஒழுகும் கழுதையெனச் சுமந்திருப்பவை.
இருவரில் எவரது கோப்பை
இன்னும் சுமக்கத் தேவையிருக்குமெனத்
தீர்மானிக்கும் உரிமையை
நம்மில் யாரிடம் கொடுத்திருக்கிறது
என்பதே அதன் முக்கிய கவலை.
சுமக்க முடியாத அந்தரங்கங்களைச் சுமந்திருக்கும்
காலிக்கோப்பைகள்
அதிக காலம் வாழ விரும்புவதில்லை.
நமது பழைய தூசுகள்,
ஆகப்பழைய தவறுகள்,
சந்தர்ப்பவாதப் பிடிவாதங்கள்,
வீணான தீர்மானங்கள்,
தேவையற்றோரின் தலையீடுகள்,
காதலை காமத்துக்கு மட்டுமே
பயன்படுத்தத் துணிந்த
நமது போலித்தனங்கள்
உடைபடும் நேரம் நெருங்குவதை
அவை உணர்ந்திருக்கக்கூடும்.
இதோ
என் கோப்பையும் உன் கோப்பையும்
வீழ்ந்து நொறுங்கியும்
அருகருகே அமர்ந்து
நம் வாழ்க்கையைத்தான்
வெகுநேரம் பேசிக்கொண்டிருக்கின்றன.
நமக்குத் தேவையெல்லாம்
கோப்பைகளில் இட்டு நிரப்ப
அவசியமற்ற நம் வலுவான புரிதல்கள்.
கோப்பைகளுக்கு
நம் முத்தங்களைத் தவிர
கொடுக்க வேறேதும் தேவைப்படாத
அன்பின் ரசம் மின்னும் பொழுதுகள்.
•
சாபா மீனின் சாபம்
சுடும் கல்லின் மேல்
துடிக்காது கிடக்கும்
ஒரே நேர்கோட்டில் வெட்டப்பட்ட
அரையுடல் சாபா மீனின்
ஒற்றைக் கண் வழி
கடந்த காலத்தைப் பார்க்கிறது.
முன்னொரு காலம் இருந்தது.
கொரிய உணவுக்கடையில்
முழு சாபா மீனாய் நாம் இணைந்து
பசியில் ருசித்தத் தருணம்.
கூடலின் மத்தியில்
இரையிட்டதும் விட்டுச்சென்ற
வளர்ப்பு மீன்தொட்டியின்
இணைமீனினைப் போல
வேலை நிமித்தம்
அலைபேசியினை மட்டுமே
தழுவிக் கொண்டிருக்கும்
உன் கரங்களைப் பற்ற இயலாது
தவிக்கும் கைகளுக்குள்
காலம் திணித்திருக்கும்
முள் கரண்டிகளின் ரணம்.
விளங்கிக் கொள்வதற்குள்
வீங்கிய பொருளாதாரம்
இதோ பிரித்துவிட்டது ஒரு மீனை
இரு பாதி உடல்களாக
இனி ஒன்றாகவே முடியாதென
நம்ப வைக்கும்
அத்தனை சாத்தியங்களோடும்.
எனக்கு இப்போது இருக்கும்
பயமெல்லாம்
நம் பிணைப்பும் இப்படியொரு
வலுவிழந்த காலத்தின் நேர்கோட்டில்
துல்லியமாக பிரிக்கப்பட்டுவிடுமோ என்பதும்,
யாரால் உண்ணப்படுவோம் என்பதே
அறிய இயலாத துக்கத்துடன்
இருவேறு மேசைகளில்
பாதி உடல்களாய் காத்திருக்கும்
சாபா மீனாய்
நாம் மாறிவிடுவோமோ
என்பதும்தான்.