இணைய இதழ்இணைய இதழ் 100கவிதைகள்

ச.ஆனந்தகுமார் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

இரண்டு உலகங்கள்

எனக்கு குயில்கள் கூவுகிற சத்தம் கேட்கிறபோதுதான்
அவசரமணிந்து அலுவலகம்
கிளம்புவாய்..

வீட்டில் புதிதாய் பூத்த பூவை காட்டி
புன்னகையில் நனைக்கிற போதெல்லாம் கடுகடுப்பணிந்து தாமதாகிவிட்டதென்பாய்..

அவசரத்திற்கு வாழ்க்கைப்பட்டு
இரக்கமற்று கோலம் மிதித்து
நேர சிறைக்குள் ஆயுள்கைதியாய்..

பாடலும் ஓவியமும் வேலையற்ற
நேரக்கடத்தலென்பாய்..

நமக்கே நமக்கான நேரத்தில்
எதிர்காலம் சிந்தித்து நிகழ்காலம்
தவறவிடுகிறாய்..

சின்ன சின்ன அனுபவங்களில் நிரம்பி வழிகிற நான்..யுக்திகள் வகுத்து
இலக்கிற்குள் அமிழ்ந்து கிடக்கிற நீ..

உன் உலகத்தில் குயில் இறந்து
கொண்டிருப்பது கூட உனக்கு
புலப்படவில்லை.

நினைவுகள்

நினைவுகளின் பலம்
பிரிவில் பிரதிபலிக்கிறது..

பழகிய சம்பவங்களின்
தொகுப்பு மனதடுக்குகளில்
நங்கூரமிட்டிருக்கிற பரவை..

வெறுமையெனும் பாலைப் புயல்
ஏதிலியாக்கி இறந்த காலத்திற்குள்ளேயே
இயங்கச் சொல்கிறது..

நீக்கமற்ற நினைவுப்புழைகள்
மறக்க முடியாத
சபிக்கப்பட்டிருக்கிற
ஆசிர்வாத கசடுகள்…

முறித்தெறிந்திட முடியாமல்
வேர்விட்டிருக்கும் ஓர்மை
கவடுகளில் வாடும் பூக்கள்..
பிரியங்களுக்கு மலர்வளையம்
வைக்க தேவைப்படலாம்..

கைபேசியின் தொடுதிரையில்
எரிகிற தன்முனைப்பிற்குள்
அமர்ந்து அழைப்பிற்காய் காத்திருக்கலாம்..

நினைவுகளின் பலம்
பிரிவுகள் பிரதிபலிக்கும்..

இயல்பு

குழிகள் வெட்டியும்
வலைகள் விரித்தும்
முதுகில் குத்தப்பட்டு தந்திரமாய்
கூண்டிலடைக்கப்பட்டு
உடல் இளைத்து உருவம் தொலைத்தாலும்..

வைக்கப்பட்ட இறைச்சி துண்டுகள்
நுகரப்படாமல்
அப்படியேதானிருக்கின்றன..
உயிர்விடும்போதிலும்
வேட்டையாடுகிற சிங்கம்
சிங்கமெனவே வீழ்கிறது..

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button