வெண்சுருட்டு
சிற்றுண்டிக்குப் பிறகான
வெண்சுருட்டின் மேல்
பல நூற்றாண்டுக்கான
காதலை கொட்டிவிடுவார் அப்பா
உடன் தேனீர் கிடைத்தால்
கூடுதல் அமிர்தம் கைப்பெற்ற தேவனாவார்
எப்போதும் மாரில் தொட்டிலிட்டு
உறங்கும் வெண்சுருட்டுக்குழந்தைகள்
பற்றும் கங்கை கிரீடமாகக்கொண்டு
அப்பாவின் இதழ்களில் சிம்மாசனமிடும்
அம்மாவின் நிராசைகளில் ஒன்று
தானுமொரு வெண்சுருட்டாக மாறி
அப்பாவின் மாரில் ஊசலாட
வேண்டிக்கொண்டது
சட்டைப்பை வெறுமையான நாட்களில்
இலைச்சுருட்டு சிலகாலம் அப்பாவை
ஆட்கொண்டதும் உண்மை
பின்னெப்போதோ
உடற்கூராய்விற்குப் பிறகான
அப்பாவின் பிரேதம்
ஒரு வெண்சுருட்டாகி எங்கள் கைக்கு வந்தது
கொல்லியிடும் போதுதான்
ஒரு பிரபஞ்சத்தை வெண்சுருட்டாக்கி
புகைவிடக் கற்றுக்கொண்டோம்
அம்மாவும் நானும்
•
நிலவாழுயிரி
ஒரு அரசனைப்போல
குடிக்கூடகத்தினுள் நுழைகிறேன்
எனக்காய் காத்திருக்கிறது
சற்றுமுன் ஓய்ந்த நாற்காலி
ஒன்றோடொன்று இணைசேரும் ரசக்கோட்பாடுகளின்
மதுக்கணக்குகள் மனதில் அத்துப்படி
உரிமையாய் கைநீட்டி
இன்னும் கொஞ்சம் ஊற்றக்கேட்கும்
கண்களில் போதைமேகம்
இப்படியேப் போனால்
இருள்பாதைக்குள் வழித்தவறலாம்
சொர்க்கம் தேடி வந்த இடம்
நரகம் செல்லும் நதிப்பாதையெங்கும்
ஊதச்சொல்லி நுகரக்காத்திருக்கும்
நிலவாழ்முதலைகள்
நீர்வாழியான எனக்கு
நீச்சலும் அத்துப்படியென்பதை
எப்படி புரியவைப்பேன்?
ஒரு குடிக்கூடகத்து அரசன்
காலிப் பணப்பையோடு
எவ்வளவு நேரம்தான் இப்படியே
நீந்துவது இத்தார்ச்சாலையில் ?
•
குலசாமி
மதியிறுக்கக் குழந்தையின்
பொன்திருமேனி மோதும்
காரணமற்ற சிரிப்பொலியின்
களங்கமற்றத் துகள்கள்
பூங்கா நிறைக்கும் மந்தகாசம்
நடைப்பயிலும் முதுமைகளின்மேல்
மணலை வாரியிறைத்துவிட்டு
மழை பெய்வதாய்
வான்நோக்கி சிலிர்த்துக்கொள்கின்றது
அருவருக்கும் கடிவாளமற்ற
கண்களுக்கும் காதுகளுக்கும்
யார் சொல்வது?
அவன்தான்
இவ்வுலகின் அவதாரமற்ற
பெருங்கடவுளென
டார்க் ஃபேண்டசி
முதல்முறை மேடையேறுகிறாள்
மயக்கம் பரவவியர்க்கும் விழித்துடைக்க கைக்குட்டைத் தேடும் நொடிகளில்
ஓடிவருகிறார் அப்பா மேடைக்கு
அதிஉன்னதமான ஈயவிரல்களில்
அன்பின் நிமித்தம் காய்த்திருக்கின்றன
முத்து முத்தாகக் கொப்புளங்கள்
நீட்டும் கைகளிலிருந்து அவரது இளமைச்சாயலில்
தவறி விழுகிறது கைக்குட்டை
தொலைத்திருந்த கனவுகளை அள்ளியெடுத்துக்
கையில் திணிக்கிறார்
உள்ளுக்குள் பத்திரமாக இருந்தது
கனவுருப்புனைவில் இனிக்குமிரு
இருண்ட கற்பனைகள்