”விழுப்புரம் போய்விட்டு மதியமே திரும்பி வருவதாகச் சொன்ன பெரியப்பாவையும் பெரியம்மாவையும் இன்னும் காணோம். மணி மூணாகப் போகிறதே” – சுவர் கடிகாரத்தைப்பார்த்தபடி மாலினி பயத்துடன் முணுமுணுத்தாள்..
வெளியே ‘ஹோ’ என்று மழை! அதன் ஆரம்ப கட்டத்திலேயே மின்சாரம் பறிபோய்விட்டது. நேற்று நள்ளிரவு லேசாய் அடித்த காற்றுக்கு டெலிபோன் இணைப்புகள் எல்லாம் அறுந்துவிட்டன.
மழையின் இரைச்சலைக் கேட்க பயந்து வீட்டு ஜன்னல்களை எல்லாம் அடைத்து இருந்தாள் மாலினி. இப்போது அவள் பார்வைக்கு தப்ப முடியாதபடி ஜன்னலைப் பிளந்துகொண்டு வீட்டிற்குள் வெள்ளம் வர ஆரம்பித்துவிட்டது. மெதுவாய் நுழைந்து வேகமாய் எல்லா இடங்களையும் ஆக்கிரமிக்கவும் மாலினி அரண்டுபோனாள்.
இனி கீழே இருந்தால் ஆபத்து.
மாலினி மாடிக்கு ஓடினாள். அங்கிருந்து பார்த்தபோது கிராமத்தின் எல்லா வீடுகளுமே தண்ணீரில் மிதப்பது தெரிந்தது.
எதிர்வீடு அதற்கு அடுத்தவீடு என்று தெருமுழுதுமே ஏற்கனவே காலியாகி விட்டிருந்தது. எல்லோரும் மழை வலுத்ததுமே அந்த ஊரைவிட்டுப் போய்விட்டார்கள் போலிருக்கிறது. ஜன்னல்களை மூடிவிட்டு தனியே வீட்டில் இருந்ததால் மாலினியை யாருக்குமே தெரியவில்லை.
இப்படியுமா மனிதர்கள்? ஆபத்துவரும்போது ‘தனியா இருக்காதே; வெளியே வா. தப்பித்துக் கொள்ளலாம்?’ என ஒரு குரல் கொடுக்க மாட்டார்களோ?
அவர்களைச் குற்றம் சொல்லி என்ன? யாருக்குமே அப்போதைய நிலையில் எதுவும் தோன்றாதுதான்.
மனதை சமாதானப்படுத்திக்கொண்டு மாடியில் நின்று பார்வையை வீசிப் பார்த்தாள்.
ஒரு ஈ காக்கையைக் காணோம்! அதோ வடக்கே தென்னந்தோப்பில் மரங்களெல்லாம்கூட பாதிக்குமேல் மூழ்கிவிட்டன. அக்ரஹாரத்தில் மேலக்கோடியில் உள்ள அம்மன் கோவில் கோபுரம் தெரிகிறது. கோவிலுக்குள்ளும் நீர் புகுந்துவிட்டதா என்ன?
மாலினி கையெடுத்துக் கும்பிட்டாள். அந்தக் கோவிலுக்கு பெரியம்மாவுடன் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் போவாள்.
“தாயில்லாப் பொண்ணுடி…..வேண்டிக்க நீயும்.. நெய்விளக்கு போட்றேன் தாயே; நிறைவான புருஷன் கிடைக்கணும்னு” என்பாள் பெரியம்மா மீனாட்சி.
ப்ளஸ்டூவரை படிக்கவைத்துவிட்டு, பிறகு மாலினியை கிராமத்துப் பள்ளிக்கூடத்து குழந்தைகளுக்கு கணக்கு ட்யூஷன் எடுக்க வைத்துவிட்டாள் மீனாட்சி.
இன்னமும் கிராமங்களும், பழைய நடைமுறைகளும் அமுலிலிருப்பதை அந்த கிராமமும், மீனாட்சியின் போக்குமே சொல்லிவிடும்.
வீட்டில் பெரியம்மா வைத்ததுதான் சட்டம்.பெரியப்பா சங்கரலிங்கம் விழுப்புரத்தில் ஒரு தனியார் வங்கியிலிருந்து ஓய்வுபெற்ற வங்கிக் கணக்காளர். விபத்தில் இறந்துபோன தன் தம்பியின் ஒரே மகள் என்பதால் மாலினியிடம் தாராளமாய் பாசத்தைப் பொழிபவர். உயர்ந்த எண்ணங்கள் இருந்தாலும் அதை செயல்படுத்த தயக்கம் காட்டுபவர்… வீட்டில் மனைவியிடம் ஏற்பட்ட பயம் அவருக்கு வெளியிலும் தொடர்ந்ததோ என்னவோ.. தானாக வலிய யாருக்கும் உதவிசெய்ய முன்வரமாட்டார்; மனைவியின் அனுமதி கிடைத்துவிட்டால் வாரிச்சுருட்டிக்கொண்டு ஓடுவார்.
குழந்தைகளுக்கு பள்ளிப் பாடம் கற்றுக் கொடுக்கும்போதே குழந்தைகளிடம் வாழ்க்கைப்பாடம் கற்றுக்கொண்டாள் மாலினி.
கள்ளம்கபடம் அறியாதது, வேற்றுமை பாராட்ட தெரியாதது குழந்தை மனது! அது, என்றும் மனிதர்களிடம் நிரந்தரமாயிருக்கக் கூடாதா? வளர வளர மனவயலில்தான் எத்தனை களைகள்!
பெருமூச்சு விட்டபடி சுற்றிலும் பார்க்க ஆரம்பித்தாள்.
அணை ஏதும்உடைந்துவிட்டதா என்ன? எதனால் இப்படி ஒரு வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது? மின்சாரம் இல்லாததால் டிவியும் அணைந்துபோய்விட்டது. பகலிலேயே இருட்டு கவியத் தொடங்கியது.
வீடே மெல்லமெல்ல அமிழ்வதுபோல பிரமையானது.
தாத்தா கட்டிய வீடு. அதைக் கட்டிய கதையை மாலினி சிறுமியாய் பெரியப்பா வீடு வந்த புதிதில் பாட்டி சொல்லக் கேட்கணுமே! அந்த நாளில் சுண்ணாம்பும் வெல்லப்பாகும் கோழிமுட்டையும் அரைத்து அரைத்துக் கட்டினார்களாம். அடிக்கிற மழையிலும் காற்றிலும் அணையே உடையுமானால் தாத்தா கட்டிய வீடு எம்மாத்திரம்?
மாலினி அச்சத்துடன் தெருவையே பார்த்தாள்.
தெருவா அது? நதி ஒன்று சுழித்துசுழித்து ஓடிக்கொண்டிருப்பதுபோல வெள்ளப்பிரவாகம் எங்கும்!
கோயில் அர்ச்சகர் ராமசுப்புவின் வீட்டுக்கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. மாப்பிள்ளை பம்பாயாம் அதனால் மாப்பிள்ளைக்கு பைஜாமா குர்தா என்று புது டிசைனில் எடுக்க டவுனுக்கு போகவேண்டுமென்று மாலினி நேற்று கோயில்போனபோது பெருமையாய் கூறிக்கொண்டார். கிராமத்துக்காரர்களுக்கு பம்பாய் டில்லியெல்லாம் இப்போதும் அமெரிக்காவுக்கு சமம்!
பெரியம்மாவும் பெரியப்பாவும்கூட மாலினியின் கல்யாண விஷயமாகத்தான் விழுப்புரத்துக்குப் போயிருக்கிறார்கள். பையனுக்கு
திருவனந்தபுரத்தில் பாங்க் வேலையாம். ஒரு கால் சரி இல்லையாம். பிறவி ஊனமாம். ”அதனால் என்ன.. நல்ல சம்பளம்” என்று சொல்லிவிட்டாள் மீனாட்சி. ஜாதகம் பொருத்தம் பார்த்தாயிற்று. ’பெண் லட்சணமாயிருக்கா சீர் செனத்தியே வேண்டாம்’என்று பிள்ளைவீட்டார் வேறு வாக்கு கொடுத்துவிட்டனர்.. மாலினியிடம் அவள் கல்யாண விஷயமாய் அவள் விருப்பத்தைக் கேட்க வேண்டாம் அதற்கு அவசியமில்லை என்பது மீனாட்சியின் முடிவு.
காலையிலேயே கிளம்பிப்போனார்கள். அப்போதே தூறலாக இருந்தது. “டிவில மழை புயல்ன்னு சொல்வான் …எல்லாம் அளப்பு..ஒன்னும் பெருசா வராது” – என்று அடித்துச் சொல்லிவிட்டு தயங்கிய கணவரின் கையைப் பிடித்துக்கொண்டு போய்விட்டாள் மீனாட்சி. அவர்கள் புறப்படுப்போன அப்புறம்தான் மழை சீறிஅடிக்க ஆரம்பித்தது.
மணி ஐந்துஆகிவிட்டது, இன்னமும் டவுன் போனவர்கள்வரவில்லை. தகவல் சொல்ல லாண்ட்லைன் போன் வேலை செய்யவில்லை. மாலினிக்கு செல்போனெல்லாம் கிடையாது. மீனாட்சிக்கு மட்டும் உண்டு.
கீழே என்ன ஆயிற்றோ?
நல்லவேளை, ஓடிவந்து எல்லா முக்கிய சாமான்களையும் ஒருத்தியாகவே மாடிக்கு கொண்டு வந்து வைத்துவிட்டாள்.
அதுவரை புத்திசாலித்தனம்தான்.
தெருவில்-கண்ணுக்கு எட்டியதொலைவில் -விளக்கு ஏதும் இல்லை. இருட்ட ஆரம்பித்துவிட்டது.
நீச்சலடித்து ஓடிவிடலாமா என்றால் வயதுக்கு வருமுன் ஆற்றில் குளிக்கப் போனபோது நீச்சலடித்து இக்கரைக்கும் அக்கரைக்கும் போனதுதான்.. நீச்சல் என்பதே மறந்தே போய்விட்டது. எதுவுமே பழக்கத்தில் இருந்தால்தான் மறக்காது அதனால் தண்ணீரில் திடீரென குதிக்க பயமாகவும் இருந்தது,
அழுவதைத் தவிர வேறுவழிதெரியாமல் அழத் தொடங்கியது அந்த இருபத்தி மூன்று வயது குழந்தை.
பயத்திலும் கவலையிலும் கண் அயர்ந்துவிட தூங்கியே விட்டாள்.
யாரோ நீந்திவரும் சத்தம் ‘சளக் சளக்’ என்ற நீரசைவின் ஒலியில் கேட்கவும், திடுக்கிட்டு விழித்தாள்.
மாடிப்படிகளில் காலடி ஓசை, தீனமாய் கேட்டது.
“ சின்னம்மா?’
அவள் நிமிர்ந்தாள்.
“சின்னம்மா… இங்கனயா இருக்குற? மரக்காணம் ஏரி மதகு உடைஞ்சி வெள்ளம் வந்து ஊரே காலியாயிப் போச்சே.. உனக்குத் தெரியாதா,?’
மாலினி திகைப்புடன் அவனையே பார்த்தாள்.
உதயனா? ஆமாம்; அவனேதான். பள்ளி சிநேகிதன். அவனைக் கண்டதும் அழுகை பீறிட்டது. துன்ப நேரங்களில் மனதுக்கு நெருக்கமானவர்களைக் கண்டால் வரும் ஆனந்தக் கண்ணீரைப் போல அவள் கண்ணிலும் நீர்வடிய ஆரம்பித்தது.
“அளுவாத.. நீ தனியா இருக்கலாம்னு நினச்சி உன்னயக் காப்பாத்ததான் வந்தேன். வா ,வா! படகு இருக்குது…நான் கொண்டாந்தேன்.. ஏதோ பெரிய ஆபத்து வரப்போகுது…தப்பிச்சி போயிடலாம் வா”
வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள். மாடிப்படிகளில் இறங்கி கீழே வந்ததும்தான் பரவி நிற்கும் நீரின் ஆகிருதி மனதுக்கு பிரமையை
கொடுத்தது.
கையிலடங்கும். காலடியில் கிடக்கும். நாம் பகிர்ந்தாலே ஒழிய தன் கொள்ளளவை மாற்றிக்கொள்ளத் தெரியாத இயற்கையின் பெரும்பகுதியை வளைத்துக் கொண்டிருக்கிற நீருக்குத்தான் எத்தனை சக்தி! நெருப்பு எழுந்தால் நீரால் அணைக்கலாம். நீரே பொங்கிப் பிரவாகமானால்? யாரோ செய்த அதர்மத்தைத் தட்டிகேட்கப் புறப்பட்டதுபோல என்ன ஒரு சீற்றம்! பிரளயத்தின் ஒத்திகையா அல்லது பின்னர் வர இருக்கும் கலியுக முடிவின் ஆரம்பக்கட்டமா?
மாலினிக்கு அச்சமேற்பட்டது.
“உதயா! வீடு பூரா தண்ணி சூழ்ந்திருக்குதே வெளில எப்படி போகிறது?”
“சும்மா வா சின்னம்மா…வாசலுக்கு கஷ்டப்பட்டு போயிட்டா அங்கன படகு வச்சிருக்கேன்.. படகிலே ஏறிட்டு போயிடலாம்.. ஊர்கோடில சத்திரம் கொஞ்சம் உயரமான இடத்துல இருக்குறதுனால அங்க வெள்ளம் புகுந்துக்கல..எங்க சனம் எல்லாம் அங்கன போயிட்டாங்க.. நான்தான் இன்னும் யாரெல்லாம் வெள்ளத்துல தவிக்கிறாங்களோன்னு தேடி வந்தேன்”
“ இந்த தண்ணீய பாத்தாலே பயமா இருக்கு எனக்கு”
“அப்படி பயந்துகிட்டு வூட்ல ஏன் உக்காந்துட்டு இருந்தே சின்னம்மா?”
“நான். எதையுமே நானாக என்றைக்கு செய்திருக்கிறேன்? அம்மா அப்பா இல்லாத அனாதை இல்லையா நான்? என்னை விட்டுட்டு வளர்த்தவங்க டவுனுக்குப் போயிட்டாங்க..”
“சரி வா. நேரமாவுது”
அவன் தண்ணீரில் இறங்கி நடந்தான். மாலினி தொடர்ந்து இறங்கினாள். மார்பளவு தண்ணீரைப் பிளந்துகொண்டு வாசலுக்கு வருவதற்குள் இரண்டு இடங்களில் கால்தடுக்கி விழுந்துவிட்டாள்.
“பாத்து வா சின்னம்மா”
“உனக்கு நான் எப்போதும் மாலினிதான் உதயா” சொல்ல நினைத்தாள். முடியவில்லை. பாழாய்ப்போகிற தயக்கம் வந்து தொலைத்தது.
மறுபடி அவள் விழுமுன் கைகொடுத்து அவளைப் பிடித்துக் கொண்டான் உதயன்.
“கைவிட்டுடாதே உதயா..” சொல்லிவிட்டாள்.
உதயனுக்குத்தான் புரியவில்லை.
படகில் உட்கார்ந்ததும் கொஞ்சம் பயம் விலகின மாதிரி இருந்தது. கொஞ்சம்தான்.. படகு கவிழாமல் நிலைகுலையாமல் இருக்கணுமே என நினத்ததும் மறுபடி முகம் வெளுத்துப் போனது.
உதயன் அதை கவனித்தவன் போல, ”பட்டணத்துப்பொண்ணுங்க எல்லாம் எவ்ளோ தைரியமா இருக்காங்க. நம்ம ஊர்லயும் பொண்ணுங்க தேறிட்டாங்க. நீதான் இந்தகாலத்துல இப்படி பயந்தபொண்னா இருக்கற?” என்றான்.
அவன் படகை செலுத்தும்போது வெள்ளத்தோடு போராடுவது அவனுடைய இரும்புக்கரங்கள் அப்படியும் இப்படியும் துடுப்புகளை
வலிப்பதன் மூலம் தெரிந்தது.
‘ஊர் பூரா வெள்ளம் வந்து மூழ்கிடிச்சா உதயா?”
“ஆமா…நானும் நீயும் சேர்ந்து ஒண்ணாங்கிளாஸ் படிச்ச பள்ளிக்கூடமும் முழ்கிடிச்சி… ரொம்ப சேதம். அடிச்சி நகத்துது மளை.ஊரே காணாமப் போயிடும்”
“ஏரியெல்லாம் உடைஞ்சிபோயிடுச்சா என்ன?’
உதயன் சிரித்தான். பிறகு ,”ஏரிமட்டுமா? அதிக மள இங்க பெஞ்சி வெள்ளம் …கடல்போல அலையடிக்குது, ”
“ஆமா…நான் வீட்ல தனியா இருக்கறது எப்படி தெரிஞ்சுது உனக்கு?”
“ஜோசியம் பாத்து வந்தேன் “
“விளையாடாம சொல்லேன் உதயன்?”
“ஒரு யூகம்தான்..காலைல உங்க பெரியம்மா பெரியப்பா டவுன் பஸ் ஏறினத பொட்டிக்கடைல நின்னுட்டு இருந்தப்போ பாத்தேன். அவங்க திரும்பி வரலைனு தெரியும் எனக்கு. ஏன்னா டவுனு பஸ் எதுவும் மதியமிருந்து ஊருக்குள்ள வரல. பெருமளைல ஏரிக்கரை முதல்ல உடைஞ்சிடுமே! அப்பத்தான் நீ என்ன ஆனியோன்னு யோசிச்சேன்.. சரின்னு ஓடியாந்தேன்..”
“நீ மட்டும் வரலேன்னா என்கதி என்ன ஆவறது உதயா?”
“நான் வராட்டி என்ன? வேற யாராச்சும் வந்து காப்பாத்துவாங்க ஏன்னா கடவுள் நல்லவரு”
“கடவுள் நல்லவரா? எனக்கு அப்படிதோணல உதயா! கடவுள் நல்லவர்னா என் அம்மாஅப்பாவை என் சின்னவயசுலேயே ஏன் பறிக்கணும்? எவ்ளோ நல்லா படிப்பே நீ! உன்னை ஏன் இப்படி ஏழ்மையான குடும்பத்துல பொறக்கவச்சி படிக்கவிடாமல் ஊர்ல கூலிவேலை செய்யவைக்கணும்? கூடப்படிச்ச தோழியைப்போய் பேர் சொல்லாமல் இப்படி நீ’ சின்னம்மா’ என்று ஏன் கூப்பிடணும்?”
“அதுக்கெல்லாம் காரணம் இருக்கும். எல்லாம் ஒரு நிலைல இருந்திட்டா மனுஷன் தலைகால் புரியாமபோயிடும் பாரு! அதுக்குதான்!”
உதயன், மாலினியின் பெரியப்பா சங்கரலிங்கத்தின் வயலில் வேலை பார்க்கும் இளைஞன். அவன் அப்பா நாகையில் படகோட்டியாக இருந்தவர். மாரடைப்பில் இறந்துபோகவும் அவன் அம்மா உதயனின் இரண்டாவது வயதில் தன் பிறந்த ஊரான சின்னரங்கப்பட்டி என்கிற விழுப்புரம் அருகே உள்ள இந்த கிராமத்துக்கு வந்துவிட்டாள். வீட்டுவேலை செய்து பிழைப்பவள். அப்பாவின் நினைவாக உதயன் படகை எடுத்துக்கொண்டு அடிக்கடி ஏரிக்குப்போய் வருவான். சாதாரணமாக அவன் அக்ரஹாரத்தின் குடி இருப்பு பகுதிக்கு
யார் வீட்டுக்குள்ளும் வரமாட்டான். இடுப்புத் துண்டை கையில் ஏந்திக்கொண்டு தலைகுனிந்தபடி வாசலோடு நின்றுபேசிபோய்விடுவான். அது அவன் குலத்துப் பழக்கம். காலம் மாறினாலும் சிலர் மாறுவதில்லை.
இன்றுதான் மாலினி அவனிடம் அதிகம்பேசி இருக்கிறாள்.
படகுநின்றது.
“இறங்கு சின்னம்மா. சத்திரம் வந்திடிச்சி..” என்றான்.
பதட்டத்துடன் அவசரமாய் இறங்கியதில் கால்வழுக்கிவிட அப்படியே உதயனின்மீது சாய்ந்து விட்டாள்.
கைத்தாங்கலாய் அவளைப்பிடித்துக்கொண்டு நிதானமாய் மண்டபம் நோக்கி நடந்தான். அவன் கையின் பிடிப்பில் மாலினிக்கு உடலில் ரத்தம் புதுவெள்ளம் எடுத்தாற் போலிருந்தது. மனதுக்குப் பிடித்தவர்களை உடம்புக்கும் பிடித்துவிடுமோ!
அவனுக்கு முன்பே அங்கே சிலர்இருந்தார்கள்.
“சின்னம்மா, இப்படி உக்காரு” என மேடான திண்ணைபோலிருந்த ஒரு இடத்தைக் காட்டினான்.
மாலினி களைத்துப் போய் உட்கார்ந்தாள். மழையின் சாரலில் உடம்பு நடுங்கியது.
கண்ணைஇருட்டுக்கொண்டுவர அப்படியே சுருண்டு படுத்துவிட்டாள்.
“சின்னம்மா !சின்னம்மா!” அழைத்தான் உதயன்.
“உம்ம் “
“என்ன செய்யுது? ஏன் முகமெல்லாம் இப்படி சிவந்திருக்குது?” என்று கேட்டபடி அவன் அவளுடைய நெற்றியில் கைவிரல் வைத்துப் பார்த்தான்.
அனலாய் கொதித்தது.
“காச்சலடிக்குதே சின்னம்மா?”
“ஹ்ம்ம்”
“இங்க வென்னிதண்ணிக்குக்கூட வளி இல்லயே?”
உதயன் சுற்றுமுற்றும் பார்தான். எதிரே ஒரு மூலையில் அர்ச்சகரின் குடும்பம் அமர்ந்திருக்கவும் அவர்களிடம் ஓடிச்சென்றவன், “ஐயா! சின்னம்மாக்கு காச்சலடிக்குது “என்றான் கலங்கிய விழிகளுடன்.
“அதுக்கு என்ன செய்யணும் இப்போ? வெள்ளம் வடியட்டும் முதல்ல… நானே பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிட்டு நெல்லும் பருப்பும் வெள்ளத்துல போறத பாத்து அவஸ்தப்படறேன் நீவேற இப்போ வந்து காச்சல் மண்ணாங்கட்டின்னு புலம்பாத போடா..” என்று ராம சுப்பு சீறி விழுந்தார். அவர் மனைவி உதட்டைச் சுழித்தாள். பக்கத்தில் அந்த கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஏதோ கேட்கவந்து உடனே வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
உதயன் திரும்ப மாலினியின் அருகில் வந்தான், ”சின்னம்மா, நீ ஏதும் சாப்டியா?’ என்றான் கவலையாக.
“எனக்கு எதுவும் வேணாம்”
“கேட்டதுக்கு பதில் சொல்லு. ஏதும் சாப்புட்டியா இல்லியா?”
“காலையில சாப்டேன், இப்போ பசி இல்ல உதயா”
“சுருண்டு படுத்ருக்கியே ! பசிதானே? நாலு நாளு ஆனாலும் சாப்பிடாம எனக்கெல்லாம் பழக்கமுண்டு. நீ வசதியான மேட்டுக்குடி பொண்ணு.. உனக்கு அப்படி கிடையாது. இரு, எங்காச்சும் யாராச்சும் பொட்டலம் தராங்களான்னு பாக்றேன்..”
“ஒண்ணும் வேணாம்.. நீ இங்கேயே இரு. என்னை விட்டுப் போகாத… எதுன்னாலும் இங்க இருக்கற எல்லாரும் சேர்ந்து போவோம்..”
உதயன் சிரித்தான். “பாத்தியா.. தண்ணீ வேறுபாடு பாக்காம எல்லாத்தியும் அடிச்சிட்டுப் போகும்.. வெள்ளம் வந்திச்சின்னா எல்லாரும் ஒண்ணாயிடறோம். இந்த வெள்ளம் வராட்டி அந்த கோயில் ஐயா இங்க வந்து எங்க சாதிசனங்களுக்கான இந்த சத்திரத்துல வந்து உக்காருவாரா?”
“அவர் பற்றி எனக்கு அக்கறை இல்லை. ஆனா, எனக்கு அதெல்லாம் கிடையாது. அப்புறம் பாரதி பாடல்களை படிச்ச பெண் அப்படீன்னு என்னை சொல்லிக்கவே முடியாது. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றவர் பாரதி தெரியுமா?”
“நானும் ஆறாம்க்ளாஸ் வரை படிச்சேனே.. கொஞ்சம் இதெல்லாம் விளங்கும்.. ஆனாலும், இப்படி நான் உன்பக்கத்துல உக்காந்திட்டு இருக்கறதே பாவம்!.அதர்மம்”
“பாவமாவது புண்ணியமாவது? மனசு சுத்தமா இருந்தா அதுவே போதும். அதுக்குமேல தர்மம் எதுவும் இல்லை”
“இதெல்லாம் வெறும் பேச்சு. எதிரே உக்காந்திட்டு நம்மையே பாத்திட்டு இருக்கற இந்த ஐயா நாளைக்கே ஏதும் நம்மைப்பத்தி கதை கட்டிவிடுவாரு….”
மாலினி அவனையே பார்த்தாள். அவன் சொல்வது உண்மைதான். காலம் எவ்வளவு மாறினாலும் சில மனிதர்கள் மாறுவதே இல்லைதான்.
அர்ச்சகர் லேசுப்பட்டவரில்லை. அவருடைய மனைவியும் முன்பு ஒரு சமயம் பள்ளி ஆசிரியையுமான பத்மாவை அபாண்டமாய் பள்ளி வாத்தியார் ஒருவருடன் இணைத்துப் பேசியதை மாலினியால்
மறக்கமுடியவில்லை..
ஆபத்து சமயத்தில் உதவுவதுதான் மனிதத்தன்மை. அதைத்தான் உதயன் செய்தான். இது தவறாகிவிடுமா?
உதயன் தன் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு பிஸ்கட் பொட்டலம் எடுத்தான். பிரித்து அவளிடம் நீட்டினான்.
“இந்தா சின்னம்மா சாப்பிடு”
“வேணாம்”
“ஏன் சின்னம்மா அவரு பாத்துடுவாருன்னுதானே வேணாம்கிறே?”
“அதெல்லாம் இல்ல எனக்குப் பசி இல்ல.. அதுக்குக் காரணம் நீ பக்கத்தில் இருக்கிறதாலயும் இருக்கும்”
உதயன் மௌனமாய் கீழே உட்கார்ந்தான் மழை விட்டுவிட்டு பெய்தபடியே இருந்தது.
அந்த சத்திரம் பழைய காலக் கட்டிடம். நாட்டு ஓடுகளால் வேய்ந்த கூரை. தண்ணீர் மெல்ல மெல்ல சத்திரத்திற்குள்ளும் நுழைய ஆரம்பித்தது, அதைக்கண்டதும் அலறிபுடைத்துக்கொண்டு உள்ளே இருந்த மக்கள் வெளியே வந்தனர். நீரில் நீந்தியும் போராடி எதிர்நீச்சல் போட்டபடியும் கடந்தனர். அர்ச்சகர் குடும்பமும் மாலினியும் உதயனும் மட்டுமே அங்கிருந்தனர். மாலினிக்கு நினைவே போகும் அளவு காய்ச்சல் அடித்தது. அந்த நிலையில் அவளை அங்கே விட்டுவிடவோ வேறிடம் கொண்டுசெல்லவோ வகையற்று திகைத்து அமர்ந்துவிட்டான் உதயன்.
அர்ச்சகரைப் பார்த்து, ”போனவருசம் சென்னப்பட்டிணத்துலயே ஏரிங்க உடஞ்சி வெள்ளம் நகரத்துல வந்திடிச்சாம் நம்ம கிராமம் இதுல எந்த மூலைங்க ஐயா?” என்று கேட்டான் உதயன்.
“உம்” என்று உறுமினார் அவர். அவனோடு பேசவும் பிடிக்காத வெறுப்பு முகத்திலும் குரலிலும் தெரிந்தது.
அப்போது சத்திர சுவரை கவனித்த உதயன் உரத்த குரலில், “சாமி !இப்படி நாங்க உக்காந்திருக்கிற பக்கம் வந்திடுங்க… அங்க செவுத்துல விரிசல் வரலாம். அதனால ஆபத்து வரும்” என்றான்.
அவரும் அவரது குடும்பமும் அவசர அவசரமாய் இந்தப்பக்கம் வரவும் சுவர் சரிந்து விழவும் சரியாக இருந்தது. நீர் அரிப்பினைத் தாங்காமல்பயங்கர ஒலியுடன் சாய்ந்த சுவர் வெள்ளத்தில் கரைந்து ஓடியது.
சத்திரம் இப்போது அந்தரத்தில் நிற்கும் சர்க்கஸ்காரனைப்போல தள்ளாடியது.
“உதயா! உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னெ தெரியல ,, கடவுள்மாதிரி எங்கள காப்பாத்திட்டேப்பா..” நெகிழ்ந்தார் ராமசுப்பு திடீரேன்று.
“தெய்வம் மனித ரூபத்தில் வரும்னு சொல்வாங்க… அது இப்போ உண்மையா போயிடிச்சு” என்று கைகுவித்தாள் அவரது மனைவி. மகள் கல்யாணக் கனவுகளில் இருந்தாளோ என்னவோ புன்னகையுடன் காணப்பட்டாள்.
உதயன் சிரித்தபடி, ”எல்லாத்துக்கும் மேல சாமி இருக்காரு.. அவருக்கு தெரியாத கணக்கு வழக்குங்களா நமக்குதெரியபோகுது? சரி, இனிமே இங்க இருக்க லாயக்கில்லங்க.. வாங்க வேற இடம்போயிடுவோம்..” என்றான்.
“ஆமா உதயா! உன்படகில எங்களையும் கூட்டிக்கிட்டு போ. மீட்புப்படையினர் படகு நம்ம ஊர்ப்பக்கம் இன்னும் வரலையே.. நீதான் ஊர்க்காரன். சொந்தப் படகு வச்சிருக்கே.. அடுத்த வாரம் ஜனனிக்கு கல்யாணம் தெரியுமில்லையா? இப்போ எங்களை கரை சேர்த்துடுப்பா மகராஜனா இருப்பே” கெஞ்சினார்.
“என்னைக் கும்பிடாதீங்க சாமி..நான் ரொம்ப சின்னவன் எல்லாத்திலியும்”
“இல்லடாப்பா….நீ, ரொம்பப் பெரியவன்”
உதயன் படகைப் பார்த்தான். அவர்களைப் பார்த்தான். படகில் நால்வர் மட்டுமே செல்லலாம். அந்த குடும்பத்திலேயே மூவர்
இருக்கிறார்கள், மாலினியோடு நால்வர். அவர்களைப் படகில் ஏற்றி தான் கீழேயிருந்து கையினால் வலித்துக்கொண்டு செல்ல
தீர்மானித்தான்.
“சின்னம்மா எந்திரி” என்று காய்ச்சலில் கண்மூடிப் படுத்திருந்தவளை அழைத்தான்.
“சின்னம்மா?”
அவள் எழுந்திருக்கவே இல்லை.
“சரி சாமி.. நீங்கள்ளாம் படகுல ஏறுங்க” என்றுகூறி மாலினியை அப்படியே தூக்கி தன் தோளில் சாய்த்து ஏற்றிக்கொண்டான் உதயன். படகுக்கு அவர்கள் வரவும் சத்திரத்தின் எஞ்சியபகுதியும் சரிந்து விழுந்தது.
“ஐயோ! பிழைச்சோம் “ வீறிட்டார் ராமசுப்பு..
எல்லோரையும் ஏற்றிக்கொண்ட படகில் தான் மட்டும் கீழே நீரில் நடந்தபடியே படகினைத் தள்ளிக்கொண்டுவந்தான் உதயன்.
படகு நீரைப்பிளந்து செல்ல அதற்கு ஈடுகொடுத்து தள்ளுவது எளிதாக இல்லை. உயிரைக் கையில் பிடித்து வேகமாய் தள்ளினான். மேல்மூச்சுவாங்கியது. கழுத்துவரை நீரில் இருந்துகொண்டு கைகளினால் எப்படிதான் தள்ளினானோ!
மாலினி மயக்கம் தெளிந்தவள் விழித்துப்பார்த்து, ”எங்க இருக்கோம்?” என்றாள்
“சத்திரம் முழுக்க இடிஞ்சி போயிடிச்சு.. இன்னும் பயங்கரமா ஏதோ நடக்கும் போலிருக்கு. உதயந்தான் நம்ம காப்பத்தினான்” என்றார் அர்ச்சகர்..
மாலினியின் கண்களில் இப்போது வெள்ளம்.. “உதயா” என்றாள் உடைந்த குரலில்.
எங்கோ தொலைவில் குரல்கேட்டது.
“மாலினீ …..மாலினீ!”
யாரு பெரியப்பவா?
ஆமாம் அவர்தான்.
“ஐயா! கவலைப்படாதீங்க.. சின்னம்மாவை நான் அங்கிட்டு கரைபக்கம் கொண்டாந்து சேர்த்திடறேன்” என்று பதில்குரல் கொடுக்க வாய் திறந்தான் உதயன். வார்த்தையே வரவில்லை. உடம்புசோர்ந்து நா வறண்டு போனது.
படகுமெல்ல நகர்ந்தது. சுற்றிச் சுற்றி வந்தது. ஆடி கவிழ்ந்துவிடும் போலிருந்தது, அப்போதெல்லாம் தோள்கொடுத்து தாங்கிப்பிடித்தான் உதயன்.
ஒருவழியாக வெள்ளம் வடிந்த கரையை அடைந்தது படகு.
அங்கே கையில் டார்ச்லைட்டுகளுடன் பலர் நின்றுகொண்டிருந்தார்கள்.
“இன்னும் சில நிமிஷம் தாமதிச்சிருந்தா எல்லாரும் செத்துப்போயிருப்போம்” என்றபடி படகினின்றும் இறங்கினார் ராமசுப்பு..
தொடர்ந்து இறங்கின அவர் மனைவி, “புனர் ஜென்மம்தான் போங்க” என்றாள் பெருமூச்சுவிட்டு.
“என்னாச்சு.. நாங்க டவுன்ல மாட்டிக்கிட்டோம்..மழை நின்னதும் டவுன்ல வெள்ளம் கொஞ்சம் வடிஞ்சதும் புறப்பட்டு வந்தோம்…மாலினி உனக்கு ஒண்ணுமில்லையே?” சங்கரலிங்கம் குழப்பமாய் கேட்டார்.
“ஆமா, இந்த உதயன் லூஸ் மாதிரி நின்னுண்டு இருந்தான். நாந்தான் படகை எடுடா வெள்ளம் வடிஞ்ச திசைல போடான்னேன்” என்று கொஞ்சமும் வெட்கமின்றி சொன்னார் ராமசுப்பு..
“அப்படியா? மாலினியை தெய்வம்போல நீங்கதான் காப்பாத்தி கரை சேர்த்திருக்கீங்க..? கோயில்ல கைங்கர்யம் செய்றவர் அல்லவா.. அதான் தெய்வச் செயல் செய்து விட்டீர்! நன்றி ராம்சுப்பு”
“என் ஆயுசுல இப்டி ஒருமழைவெள்ளம் வந்து பார்த்ததே இல்லை. பாழாப்போன வெள்ளம் எல்லா ஜாதிக்காரங்களையும் சில மணிநேரம் ஒண்ணாசேர்த்து தொலைச்சிடுத்து..நீ ங்க தப்பிச்சி டவுனுக்குப் போயிட்டீங்க…? நாங்க புத்தியை உபயோகிச்சி எப்டியோ வந்து சேர்ந்தோமாக்கும்”
உதயன் படகை தள்ளிக்கொண்டுநகர்ந்தான். பாலத்தடியில் சுழித்து சீறும் வெள்ளத்தின் பேரொலிகூட அவன் காதில் விழவில்லை சற்றுமுன் கடவுளுக்குப் பணி செய்யும் அர்ச்சகர் ராமசுப்பு பேசியஅதர்ம பேச்சில் உடல் இற்று விழுந்துவிட்டான்.
சற்று முன்னேறிச் செல்வதற்குள், கண்ணை இருட்டிகொண்டுவந்தது, நெஞ்சில் தாங்கமுடியாத வலி. வெள்ளச் சுழலில் அவன் உடல் சாய்ந்தது.
“உதயாஆஆஆ” மாலினி பெரிதாய் அலறினாள்.
அவள் பெரியப்பா சட்டென உதயனைக் காப்பாற்ற வெள்ளத்தில் இறங்க காலை எடுத்துவைத்தவர் உடனே தயங்கி இழுத்துக்கொண்டார்.
மீனாட்சி அவரிடம், ”அடிச்சிக்கிட்டு வர்ற வெள்ளம் எப்படி இருக்குமோ? கரைலயே நில்லுங்கோ நீங்க போகவேண்டாம்” என்று தடுத்தாள்.
“ஐயா, உமக்கு நீச்சல் தெரியும்தான். அதுக்காக இப்படியா புது வெள்ளத்துல காலை வைக்கிறது? கடவுள் இருக்கார் அவருக்கு
தெரியாத கணக்குவழக்கா?” சொல்லிவிட்டு நகர்ந்தார் ராம்சுப்பு.
மாலினிக்கு மறுபடி கண்ணை இருட்டிகொண்டு வரவும், ”உதயா! ஐயோ.. யாராவது காப்பாத்துங்க…. உதயனை வெள்ளம் அடிச்சிட்டே போகிறதே…” என்று பெரியகுரலில் வீறிட்டாள்.
“நீ வாடி பேசாம”
அவளை இழுத்தாள் மீனாட்சி.
வெடுக்கென அவள் கையை உதறிய மாலினி, ”உ..த..யா ஆ..ஆ…!” என்று கதறிக்கொண்டே அவனை நோக்கி நீரில் குதித்தாள்.
இப்போது நீச்சல் லாவகமாய் வந்தது.