கண் உடையவர் கற்றவர்
இந்தக் கட்டுரைக்கு ‘பட்டேலும் ஜின்னாவும்’ என்ற தலைப்பும் பொருத்தமாக இருக்கும். ஆனால், சிலர் இது ஓர் அரசியல் கட்டுரை என்றோ, வரலாற்றுக் கட்டுரை என்றோ கருதிவிடக்கூடும். இந்தக் கட்டுரை மண் பயனுற வாழ்ந்த இரண்டு ஆளுமைகளைப் பற்றியது- டி.கே.பட்டேல் (1932-2020), எஸ்.எம்.ஏ. ஜின்னா (1944-2013). இருவரும் அரசியல் தலைவர்கள் அல்லர். அவர்கள் என் கையெட்டும் தூரத்தில் இருந்தனர். நான் வெகுகாலம் கைகளை நீட்டாதிருந்தேன். என் கண்ணெதிரே காட்சி இருந்தது. அந்நாளில் நான் முகத்திரண்டு புண்ணுடையவனாக இருந்தேன்.
ஆண்டு: 2011. நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஹாங்காங் நிறுவனம், ஓர் உள்கட்டமைப்புத் திட்டத்திற்காக என்னைச் சென்னையில் பணியமர்த்தியிருந்தது. எனது நண்பர், ஹாங்காங் வணிகர், பல அமைப்புகளில் அங்கம் வகிப்பவர், தொழில் நிமித்தம் இந்தியாவிற்கு அடிக்கொருதரம் பயணம் செய்தவர், என்னிடம் ஒரு வேண்டுகோளை முன் வைத்தார். ஒரு ஹாங்காங் தொண்டு நிறுவனம், மதுரையில் பள்ளிக் கட்டிடம் அமைக்க உதவி வருகிறது. நான் அந்தக் கட்டுமானத்தைப் பார்வையிட வேண்டும்.
நண்பர் சொன்னதை நான் ஒரு காதால் கேட்டேன். இன்னொரு காதிற்கு வேறு பயன் இருந்தது. நண்பருக்கும் அது தெரிந்திருந்தது. ஆகவே இரண்டாம், மூன்றாம், நான்காம் முறையாக என்னை மதுரைக்குப் போகச் சொன்னார். நண்பர் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவராக இருந்தார். ஆகவே, நான் விவரம் கேட்டேன். ‘Help The Blind Foundation’ (HTBF – பார்வையற்றவர்க்கு உதவும் அமைப்பு), ஒரு தொண்டு நிறுவனம். ஹாங்காங்கில் இயங்கி வருகிறது. டி.கே.பட்டேல் என்பவரால் நிறுவப்பட்டது. ‘Indian Association for the Blind’ (IAB – இந்திய பார்வையற்றோர் சங்கம்) மதுரையில் இயங்கி வருகிறது. எஸ்.எம்.ஏ. ஜின்னா என்பவரால் நிறுவப்பட்டது. IAB நடத்தி வரும் பார்வையற்ற பிள்ளைகளுக்கான மேல்நிலைப் பள்ளியில் ஒரு சிறப்புக் கட்டிடம் கட்ட HTBF நிதி நல்குகிறது. நான் கட்டுமானத்தைப் பார்வையிட்டு, பணி எவ்விதம் நடைபெற்று வருகிறது என்பதைக் கொடையாளர் அறியத்தர வேண்டும்.
ஒரு காலைப் பொழுதில் மதுரையிலிருந்து அழகர் கோயில் செல்லும் சாலையில் இருக்கும் சுந்தரராஜன்பட்டிக்குச் சென்றேன். அங்குதான் IAB-இன் மேல்நிலைப் பள்ளியும், விடுதியும், பயிற்சி மையங்களும் இருந்தன. அங்குதான் HTBF-இன் நிதியுதவியில் புதிய கட்டிடம் எழும்பி வந்தது. கட்டுமானத்தின் வரைபடங்களை நண்பர் எனக்கு முன்னதாகவே அனுப்பியிருந்தார். இப்போது நான் அதன் தரத்தையும் பணிகளின் முன் நகர்வையும் மதிப்பிட வேண்டும். அதற்கு எனக்குப் பயிற்சி இருந்தது. ஆனால், எந்தப் பயிற்சியும் இல்லாத ஓர் உலகத்திற்குள் காலடி எடுத்து வைக்கப் போவதை நான் அறிந்திருக்கவில்லை.
ஐ.ஏ.பி
முதலில் IAB வளாகத்தை ஆர்வலர் ஒருவர் சுற்றிக் காட்டினார். பள்ளி 1992-இல் தொடங்கப்பட்டது. மாணவர்களில் பலர் வளாகத்திற்குள் இருந்த விடுதியிலேயே தங்கியிருந்தனர். டாடா நிறுவனத்தின் அழைப்பு மையம் ஒன்று உள்ளே இயங்கி வந்தது. அன்றைய தினம் அங்கு அழைப்புகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தவர்கள் 40 பேர் இருக்கலாம். மறுமுனையில் இருந்தவர்களுக்கு இவர்கள் பார்வையற்றவர்கள் என்று தெரியாது. வளாகத்திற்குள் ஒரு கணினிப் பயிற்சி மையமும், ஓர் இலகு பொறியியல் பட்டறையும், ஒரு பிரெயில் அச்சகமும் இயங்கி வந்தன. பாடநூல்கள் அல்லாமல் பல நூல்கள் அங்கு அச்சிடப்பட்டன. க்ரியா பதிப்பகத்தின் தற்காலத் தமிழ் அகராதி அவற்றுள் ஒன்று.
அடுத்து, போன வேலையைப் பார்த்தேன். HTBF நல்கையில் உருவாகி வந்த கட்டுமானத்தைப் பார்வையிட்டேன். மூன்று மாடிகள். 18,000 சதுர அடிப் பரப்பில் பார்வையற்றோருக்காகப் பார்த்துப் பார்த்து செய்யப்பட்ட வசதிகளுடன் கூடிய வகுப்பறைகளும், பிரெயில் நூலகமும், கணினி மையமும், மாணவியர் விடுதியும் உருவாகி வந்தன. கட்டுமானக் கலைஞருக்கும் பொறியாளருக்கும் ஒப்பந்ததாரருக்கும் டி.கே. பட்டேலின் நோக்கம் தெளிவாகத் தெரிந்திருந்தது. அவை: நவீனம், தரம். மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடம் திட்டமிட்டபடி உருவாகி வந்தது.
ஜின்னா
இறுதியாக ஜின்னாவைச் சந்தித்தேன். முகம் நிறைந்த சிரிப்போடு வரவேற்றார். அவரது முன்கதையை பின்னால்தான் அறிந்தேன். விவரம் தெரிவதற்கு முன்னாலேயே அவரது தந்தை குடும்பத்தைக் கைவிட்டு ஓடிப்போனார். ஜின்னா தனது ஐந்தாம் வயதில் தாயை இழந்தார். 13-ஆம் வயதில் ஒரு விபத்தில் பார்வையை இழந்தார். பள்ளிப் படிப்பு இடை நின்று போனது. வறுமையும் கல்லாமையும் சூழ்ந்தது. ஐந்தாண்டுகள் ஏர்வாடி கிராமத்தின் இருட்டறைகளில் முடங்கிக் கிடந்தார். பிற்பாடு பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியைக் குறித்து அறிந்தார். வயதில் குறைந்த மாணவர்களோடு படிப்பைத் தொடர்ந்தார். கல்லூரிப் படிப்பு மதுரை அமெரிக்கன் கல்லூரியில். அங்கு பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற மாணவர் ஜின்னா. தியாகரசர் கல்லூரியில் முதுகலை படித்தார். ஆசிரியர் பயிற்சிப் பட்டயம் பெற்று அரசுப் பள்ளியில் சேர்ந்தார். சராசரி மனிதரின் வாழ்க்கை இந்த இடத்தில் நிலைகொண்டிருக்கும். ஆனால் அவர் ஜின்னா. ‘ஹெலன் கெல்லர் பார்வையற்றோர் கழகம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அது பார்வையற்றவர்களின் விடுதியாகவும் அவர்களின் கல்வி, வேலை வாய்ப்புகளை ஆற்றுப்படுத்தும் அமைப்பாகவும் விளங்கியது. அவ்வமயம் ஓர் அமெரிக்க அமைப்பு உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றுவோரைக் கண்டறிந்து அவர்களுக்கு உயர் கல்வி வழங்கியது. அதில் இந்தியாவிலிருந்து தெரிவான ஒரே நபர் ஜின்னா. பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பெர்க்கின்ஸ் பார்வையற்றோர் பள்ளியில் சிறப்புக் கல்வி கற்றார். பார்வைக்கு குறைவு அமெரிக்காவில் ஒரு சாபமாகப் பார்க்கப்படுவதில்லை என்பதைக் கண்டார். பார்வையற்றோர் பயன்கொள்ளும் பல்வேறு தொழில்நுட்பங்களை அறிந்துகொண்டார். 198-2இல் தாயகம் திரும்பினார். ஹெலன் கெல்லர் கழகம் IABஆக மாறியது. 1992-இல் அது சுந்தரராஜன்பட்டிக்கு இடம் பெயர்ந்தது. சிறப்புப் பள்ளியும் தொடங்கப்பட்டது.
2011-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நான் ஜின்னாவைச் சந்தித்தபோது இந்த நெட்டோட்டத்தின் எந்த வலியும் அவர் முகத்தில் தெரியவில்லை. காலம் அவர் மீது கருணையில்லாமல் நடந்து கொண்டிருக்கலாம். ஆனால், அவருக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. மாறாக இணக்கம் இருந்தது. தொண்டு நிறுவனங்கள், வங்கிகள், அரசு அதிகாரிகள், கார்பரேட் நிறுவனங்கள் எல்லோரோடும் இணக்கமாக இருந்தார். பார்வையற்ற பிள்ளைகளுக்குக் கல்வியும் வேலையும் கிடைக்கும் எல்லாக் கதவுகளையும் அவர் தேடியடைந்தார். அவை அவருக்காகத் திறந்தன.
ஆகஸ்ட் 2012-இல் HTBF நல்கையில் உருவான புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் நான் பலமுறை சுந்தரராஜன்பட்டிக்குப் போனேன். டி.கே.பட்டேலுடன் மின்னஞ்சல் தொடர்பும் உருவாகியது. திறப்பு விழாவில்தான் பட்டேலை முதன் முதலாகப் பார்க்க வாய்த்தது. அதற்கு முன்பு பல ஆண்டுகள் அவர் சுவாசித்த அதே ஹாங்காங் காற்றை சுவாசித்திருந்த போதும், அவரையும் அவரது சமூக அக்கறையையும் கொடையுள்ளத்தையும் அறியாமலிருந்தேன். பட்டேல் பார்வையற்றவர்கள் பால் கொண்ட கரிசனத்திற்கு ஹாங்காங் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
ஹாங்காங்கில் எப்படி?
ஹாங்காங் போன்ற வளர்ந்த நாடுகளில் பார்வையற்றவர்கள் சுயேச்சையாக இயங்க முடியும். நடைபாதைகளில் அவர்கள் யார் உதவியுமின்றி நடந்து செல்ல முடியும். சாலையைக் கடக்க வேண்டிய இடங்களில் பிரத்யேகத் தட்டை ஓடுகள் பதிக்கப்பட்டிருக்கும்; அவர்கள் இந்த ஓடுகளைத் தங்கள் கோல்களால் தட்டி உணர்ந்து கொள்ள முடியும்; இவை பாதைகளையும் திருப்பங்களையும் அவர்களுக்குப் புலப்படுத்தும். பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களின் தானியங்கிக் கட்டணக் கதவுகள், மின் ஏணிகள், நடைமேடைகள், படிக்கட்டுகள், திருப்பங்கள்-ஒவ்வொன்றையும் அவர்கள் அறிந்து கொள்ளவும் பயன்படுத்தவும் வகை செய்யப்பட்டிருக்கும். மின்தூக்கிகளில் தளங்களின் எண்கள் பிரெயிலில் எழுதப்பட்டிருக்கும். பொது இடங்களில் பிரெய்லி வரைபடங்கள் இருக்கும். சாலையைக் கடக்க வேண்டிய மஞ்சள் கோட்டுப் பாதைகளில் சிவப்பு விளக்கு எரியும்போது ஒரு ஒலியும், மஞ்சள் பச்சை விளக்குகளின் போது வெவ்வேறு விதமான ஒலியும் கேட்கும். பார்வையற்றவருக்கான சமிக்ஞை வெளிச்சத்தில் இல்லை, ஒலியில் இருக்கிறது. அதனால் அவர்கள் பயன்படுத்தும் கணினிகள், திரையில் தோன்றும் எழுத்துக்களை வாசித்து அவர்கள் காதுகளில் சொல்லும். கணினியின் விசைப் பலகையைப் பார்வையுள்ளவர்களைக் காட்டிலும் அவர்களால் விரைவாகப் பயன்படுத்த முடியும். சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாலும், கல்வியில் தங்களைத் தகவமைத்துக் கொண்டிருப்பதாலும் பார்வையற்றவர்களால் யாரையும் போல் இயங்க முடியும்.
இந்தியாவில் எப்படி?
மாறாக நமது நாட்டில் சாலைகள், போக்குவரத்துச் சாதனங்கள், கட்டிடங்கள் எவையும் ஊனமுற்றோரை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டவை அல்ல. இந்தியாவில் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் 3.5 கோடிப் பேர். இதில் 49.5 இலட்சம் பேர் முழுமையாகப் பார்வை இழந்தவர்கள். உலகில் உள்ள பார்வையற்றவர்களில் மூன்றில் ஒருவர் இந்தியர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. பார்வைக் குறைபாட்டிற்கு அறிவியலர் சொல்லும் காரணங்களில் முதன்மையானவை: ஊட்டச் சத்து குறைவான உணவு, குருதிக் கலப்புடைய மாமன் மகள்- அத்தை மகன் இடையே நிகழும் திருமணங்கள் (consanguine marriage). இவ்வகைத் திருமணங்கள் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் அதிகம் நடைபெறுகின்றன. இந்தியாவில் பார்வையற்ற பலரும் வறுமையும் கல்வியின்மையும் கவிந்திருக்கும் குடும்பங்களில் பிறந்தவர்கள். இன்னும் சுமையாகவும், சாபமாகவும், முற்பிறப்பின் தீவினையாகவும் பார்க்கப்படுகிறவர்கள்.
பார்வையற்றவர்களில் ஒரு பகுதியினர் பிச்சைக்காரர்களாவதற்கு இதுதான் காரணமாக இருக்க வேண்டும்.
தாங்கள் வசிக்கும் நாடுகளில் பார்வையற்றவர்கள் மற்றவர்களுக்குச் சமதையாக வாழ்வதைப் பார்க்கும் வெளிநாட்டு இந்தியர்கள் தாய்நாட்டில் எதிர்கொள்ளும் ‘குருட்டுக் கபோதி ஐயா’ என்கிற ஓலத்தை எவ்விதம் எதிர்கொள்கிறார்கள்? சிலர் முகஞ்சுளித்துக் கடந்து போகிறார்கள். சிலர் அவர்களது திருவோடுகளில் பிச்சையிடுகிறார்கள். சிலர் அடுத்த வேளை உணவு வழங்குகிறார்கள்.
டி.கே.பட்டேல் இவற்றைத் தாண்டிச் சிந்தித்தார். பார்வையற்றவர்களின் பிரதான எதிரி கல்வியின்மை என்பது பட்டேலின் கருத்து. குஜராத்தியான பட்டேல் வள்ளுவனைப் படித்திருப்பாரா என்று தெரியவில்லை. வள்ளுவன் ‘கற்றவரே கண் உடையவர்’ என்கிறான். எண்ணும் எழுத்தும் இரு கண்களைப் போன்றவை என்கிறான். பட்டேலும் ‘கல்வி பார்வையற்றவர்களின் கண்களாய் விளங்கும்’ என்றார்.
பட்டேல்
டி.கே.பட்டேல் மும்பையின் புகழ் பெற்ற புனித சேவியர் கல்லூரியில் பொருளாதாரம் கற்றவர். அந்தத் துறையில் வல்லுநர். ஹாங்காங்கின் சர்வதேச வங்கியொன்றிலும் ஒரு பெரிய வணிக நிறுவனத்திலும் உயர் பதவிகள் வகித்தார். மனைவி நித்தி பட்டேல் ஹாங்காங்கின் பாரம்பரியம் மிக்க பள்ளி ஒன்றில் ஆங்கிலம் பயிற்றுவித்தார். பட்டேல், இந்துஸ்தானி, கர்னாடக இசையில் ஈடுபாடு மிக்கவர், ரசிகர், புத்தகப் பிரியர். மனைவி நித்தி பட்டேலுக்குத் தோட்டக் கலையிலும் மொழியியலிலும் ஆர்வம் அதிகம். தம்பதிகள் ஹாங்காங்கின் எழிலான பகுதிகளில் ஒன்றான ஸ்டப்ஸ் சாலையில் வசித்தார்கள். இரண்டு மகள்கள், நல்ல நிலையில் இருக்கிறார்கள். வாழ்க்கையின் மாலைப்பொழுதை ஓய்வாக அனுபவிக்க இதைவிட நல்ல பின்புலம் வேண்டுமா என்ன? ஆனால், பட்டேலின் மனம் ஓய்வெடுக்கச் சம்மதிக்கவில்லை.
2003-ம் ஆண்டு சென்னை வந்திருந்த பட்டேல் அடையாறு புனித லூயி பார்வையற்றோர்-காது கேளாதோர் பள்ளியின் விடுதிக் கட்டிடம் பழுதுபட்டிருப்பதைக் கண்டார். தம் சொந்தச் செலவில் (ஒன்றரைக் கோடி ரூபாய்) பள்ளிக்கு வகுப்பறைகளும் விடுதிகளும் கட்டிக் கொடுத்தார் பட்டேல்.
பட்டேலின் கொடையுள்ளத்தை அறிந்தார் ஜின்னா. பட்டேலைத் தொடர்பு கொண்டார். மதுரையில் தமது பிள்ளைகளுக்கு ஒரு சிறப்புக் கட்டிடம் கட்டித் தருமாறு கோரினார். பட்டேல் மதுரைக்கு வந்தார். இரண்டு ஆளுமைகளும் சந்தித்தனர். IAB-க்கு ஒரு புதிய கட்டிடத்தின் அவசியம் இருப்பதை பட்டேல் புரிந்துகொண்டார்.
இதே காலகட்டத்தில் இதயத்தோடு தங்கள் பர்ஸையும் திறக்கத் தயாராயிருந்த வெளிநாட்டு இந்தியர்களோடு சேர்ந்து ஹாங்காங்கில் ‘ஹெல்ப் த பிளைண்ட் பவுண்டேஷ’னைத் தொடங்கினார் பட்டேல். IAB-இன் சிறப்புக் கட்டிடத்திற்கு 2011-இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அது 2012-இல் திறக்கப்பட்டது. அந்த ஆண்டுதான் டி.கே.பட்டேலுக்கு அகவை 80 நிறைந்தது.
தொடர்ந்து 2015-இல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சூசை நகரில் அமைந்துள்ள அமலராக்கினி பார்வையற்றோர் பள்ளிக்கு மாணவியர் விடுதியும் விளையாட்டுத் திடலும் வழங்கியது HTBF. மதிப்பு ஒன்றரைக் கோடி ரூபாய். அந்த ஆண்டுதான் நித்தி பட்டேலுக்கு அகவை 80 நிறைந்தது.
உதவித் தொகை
பார்வையற்ற மாணவர்களின் பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டிடங்கள் கட்டித் தருவதில்தான் HTBF-இன் பணி தொடங்கியது. ஆனால், அது ஆற்றி வரும் இன்னொரு பணி அதனினும் முக்கியமானது. அது பார்வையற்ற மாணவர்களின் கல்லூரிப் படிப்பிற்கு உதவுவது. HTBF-இன் பயனாளிகள் அனைவரும் இந்தியர்கள் என்பதால் 2011-ஆம் ஆண்டு அமைப்பு முறைப்படி இந்தியாவில் பதிவு செய்யப்பட்டது.
இந்தியாவில் பார்வையற்ற பிள்ளைகள் பலரும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களின் பெற்றோர்கள் பார்வைக் குறைபாட்டை தெய்வக் குற்றமாகக் கருதி மன உளைச்சலில் வாழ்பவர்கள். இவர்களில் கணிசமானோர் பள்ளிப் படிப்போடு நின்று விடுகிறார்கள். நகரங்களில் இருக்கும் கல்லூரிகளின் விடுதிக் கட்டணங்களைப் பலராலும் கட்ட முடிவதில்லை. அதனால் HTBF கல்லூரிகளில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. ஒரு மாணவருக்கு ஆண்டொன்றுக்குச் சராசரியாக ரூ.25,000 வழங்கப்படுகிறது.
2008-இல் சென்னையில் தொடங்கப்பட்டு, பின் பல்வேறு தமிழக நகரங்களுக்கு விரிந்த இத்திட்டம், தற்போது தமிழகத்தின் எல்லையைத் தாண்டி 13 மாநிலங்களுக்குப் பரவியிருக்கிறது. ஒன்பது அறங்காவலர்கள், ஊழியர்கள், தவிர நாடெங்கிலும் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியாற்றுகிறார்கள். இதுகாறும் HTBF-இன் கல்வி உதவித் தொகை பெற்றவர்கள் 19,000 பேர். கடந்த கல்வியாண்டில் (2023-24) மட்டும் 2,510 பேர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 446. இந்தத் திட்டத்தில் இதுகாறும் பட்டம் பெற்றவர்கள் 6,080 பேர். நாளதுவரை அமைப்பு வழங்கியிருக்கும் உதவித் தொகை ரூ. 21.13 கோடி.
உதவித் தொகை தவிர திறன் மேம்பாட்டுக்கான பயிற்சியும் பல நகரங்களில் வழங்கப்படுகிறது. கணினி, ஆங்கிலம், கணிதம், தொடர்புத் திறன் முதலான பல துறைகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. இது தவிர மாணவர்களுக்கு மடிக் கணினியும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்புக் கண் கண்ணாடியும் (Special Vision Glasses-SVG) வழங்கப்படுகின்றன.
இரண்டு குஜராத்திகள்
2014-இல் பணி நிமித்தம் நான் ஹாங்காங் திரும்பினேன். அதன் பிறகு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் டி.கே.பட்டேலைச் சந்திக்கலானேன். ஒரு சமயம், ஒரு பன்னாட்டு அறக்கட்டளை பட்டேலை அணுகியது. அதிகம் அறியப்படாத நூறு ஆளுமைகளைப் பற்றிய மலர் ஒன்றை அது ஆண்டுதோறும் வெளியிட்டு வந்தது. அதற்காக ஒரு குறிப்பை எழுதித் தருமாறு அது பட்டேலைக் கேட்டுக் கொண்டது. அந்தப் பணி எனக்குக் கிடைத்தது. நான் அதை மகிழ்வோடு செய்தேன். மலர் வெளியானபோது நான் எழுதிய இரண்டு பத்திகளை பட்டேல் வெட்டி விட்டார் என்பது தெரிந்தது. HTBF கொடை வழங்கிய கட்டிடங்களைக் குறித்தும் பயனர்களைக் குறித்துமான விவரங்கள் மலரில் இருந்தன. பட்டேல் நீக்கிய பத்திகள் இவைதான்:
இந்தியாவின் மேற்குக் கரையில் இருக்கிறது குஜராத் மாநிலம். தென் கரையில் இருக்கிறது தமிழ்நாடு. தமிழ் மண் இரண்டு குஜராத்திகளின் வாழ்க்கைப் பாதையை மாற்றிப் போட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய மோகன்தாஸ் காந்தி இந்தியாவின் நிலையைப் புரிந்து கொள்வதற்காக நாடு முழுதும் மூன்றாம் வகுப்பு ரயிலில் பயணம் செய்தார். 1921-ஆம் ஆண்டு மதுரையில் விவசாயிகளின் நிலையைக் கண்டு மனம் வருந்தினார். அந்த எளிய விவசாயிகளைப் போலவே உடுத்தத் தொடங்கினார். நான்கு முழ வேட்டியும் ஒரு மேல் துண்டுமே அவரது ஆடையானது. ஆங்கிலேயர்களின் ‘அரை நிர்வாணப் பக்கிரி’ போன்ற கேலிப் பேச்சுகள் அவரைத் தீண்டவில்லை. அந்த அரையாடையே மகாத்மாவின் அடையாளமானது.
அந்தச் சம்பவம் நிகழ்ந்து 82 ஆண்டுகளுக்குப் பிறகு, 2003-ஆம் ஆண்டு இன்னொரு குஜராத்தி-டி.கே.பட்டேல்- ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள ஹாங்காங்கிலிருந்து சென்னை வந்தார். அடையாறு காந்தி நகரில் காலை நேரம் நடைப் பயிற்சி மேற்கொண்டார். புனித லூயி பார்வையற்றோர்-காது கேளாதோர் பள்ளியைக் கடந்தபோது அதன் விடுதிக் கட்டிடம் சிதிலமடைந்திருப்பதைக் கண்டார். பச்சாதபத்தோடு அந்த இடத்தைக் கடந்துபோக அவரால் முடியவில்லை. தம் சொந்தச் செலவில் பள்ளிக்கு வகுப்பறைகளும் விடுதிகளும் கட்டிக் கொடுத்தார் பட்டேல். இதற்குப் பிறகு அவரது வாழ்க்கை பார்வையற்றவர்களின் நலனோடு பின்னிப் பிணைந்துவிட்டது.
இவைதான் வெட்டுண்ட பத்திகள். இதை நான் சுமந்துகொண்டே திரிந்தேன். அதை இறக்கி வைக்கிற வாய்ப்பு 2019-இல் கிடைத்தது. 2017-இல் பணி நிமித்தம் மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பியிருந்தேன். 2019-இல் HTBFஇன் ஒருங்கிணைப்புக் கூட்டமொன்று சென்னையில் நடந்தது. நாடெங்கிலுமிருந்து தன்னார்வலர்களும் அமைப்பாளர்களும் பயனர்களும் கலந்து கொண்டனர். எனக்குப் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. நான் பட்டேல் வெட்டிப் போட்ட பத்திகளைச் சொல்ல அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டேன். அந்தக் கூடுகை மகிழ்வான தருணமாக அமைந்தது. ஆனால், எனக்குத் தெரியாது, நான் பட்டேலைச் சந்திப்பது அதுதான் கடைசி முறை என்று. அடுத்த ஆண்டு அவர் விடை பெற்றார். அதற்கு ஏழு ஆண்டுகள் முன்னரே யாரும் எதிர்பாராத தருணத்தில் ஜின்னா விடை பெற்றிருந்தார்.
பார்வை
இரண்டு ஆளுமைகளும் தாங்கள் தோற்றுவித்த அமைப்புகளின் பெறுமதியை அறிவார்கள். ஆகவே, அவை தொடர்ந்து இயங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவர்கள் செய்திருந்தார்கள். அவர்களுக்குள் இன்னொரு ஒற்றுமை இருப்பதை நான் சமீபத்தில் உணர்ந்தேன்.
சுஜாதாவின் கதைகளுள் ஒன்று ‘பார்வை’. அந்தக் கதையை தனது ‘ஊறும் வரலாறு’ (விகடன் பிரசுரம், 2022) நூலில் குறிப்பிடுகிறார் கவிஞர் நந்தலாலா. பிறவியிலேயே பார்வை இழந்த ஒருவர் தனது சக பயணியான பார்வை உள்ள எழுத்தாளர் ஒருவரைப் பார்த்து, ‘தங்களால் எனக்கு நிறங்களைப் புரிய வைக்க முடியுமா?’ என்பார். கண் தெரிந்த அந்த எழுத்தாளர் யோசித்து, ‘நான் ஸ்வரங்களில் ‘ச’ என்றால் மஞ்சள் என்றும், ‘ரி’ என்றால் நீலம் என்றும் புரிந்துகொள்ளுங்களேன்’ என்பார். அதற்கு அந்தப் பார்வையற்றவர் சொல்வார், ‘எனக்குத்தான் பிறவியிலேயே பார்வை இல்லையே, எப்படி மஞ்சளையும் நீலத்தையும் ச-ரி போன்ற ஓசைகளால் புரிந்துகொள்வது?’ என்று. எழுத்தாளரிடம் பதில் இருக்காது. அப்போது அந்தப் பார்வை இல்லாத நண்பர் எழுத்தாளரிடம், ‘ஏன் தெரியுமா உங்களால் சொல்ல முடியவில்லை? கண் தெரிந்த ஒருவர், மற்றொரு கண் தெரிந்தவருக்காக உருவாக்கிய வார்த்தைகள் அவை. உங்கள் வார்த்தைகள் எல்லாம் ‘கண் தெரிந்த வார்த்தைகள்’ என்பதோடு கதை முடியும். “ஆனால், நம் ‘பார்வை’ பற்றிய புரிதல் விரியும்” என்று நந்தலாலா முடிப்பார்.
இதைப் படித்ததும் எனக்கு ஜின்னாவும் பட்டேலும் நினைவுக்கு வந்தார்கள். ஜின்னா பார்வையற்றவர். ஆனால், அவரால் பார்வையுள்ளவர்களின் கண்களால் உலகத்தைப் பார்க்க முடிந்தது. அதுவே IAB-ஐ பார்வையற்ற மாணவர்களின் தனிச் சிறப்பான கல்விக்கூடமாக மாற்றியிருக்கிறது. பட்டேல் பார்வையுள்ளவர். அவரால் பார்வையற்றவர்களின் கண்களால் உலகைப் பார்க்க முடிந்தது. அதுவே, HTBF-ஐ பார்வையற்ற மாணவர்களைத் தேடிக் கண்டடைந்து அவர்களுக்கு உதவும் அறக்கட்டளையாக மாற்றியிருக்கிறது.
Indian Association for the Blind (IAB), சுந்தரராஜன் பட்டி, அழகர் கோயில் சாலை, அரும்பாரூர், மதுரை; இணையம்: www.theiab.org; மின்னஞ்சல்: contact@theiab.org; அலைபேசி: +91 96008 33223.
நிர்வாகக் குழு: டாக்டர் சி.ராமசுப்பிரமணியன், எம்.ரோஷன் பாத்திமா, டாக்டர் ஆர்.சுரேந்திர நாதன், அப்துல் ரஹீம் (ஜின்னாவின் மகன்), எஸ்.மஞ்சுளா, ஏ.சேர்மத்தாய், எஸ்.மாரிமுத்து, எஸ்.அஞ்சலி, ஆர்.பாலசரஸ்வதி
Help the Blind Foundation(HTBF), B3A, Ph.1, ஸ்பென்சர் பிளாசா, அண்ணா சாலை, சென்னை; இணையம்: www.helptheblindfoundation.org; மின்னஞ்சல்: donor_connect@helptheblind.in; அலைபேசி: +91 90033 30197.
நிறுவன அறங்காவலர்கள்: ஜே.வி.ரமணி, வி.சி.கணேசன், எஸ்.எம்.ஏ. ஜின்னா, செந்தில் அருணாசலம், சீதாராமன்.
தற்போதைய அறங்காவலர்கள்: என்.சிவாஜி ராவ், ஆர்.சுந்தர் குமார், எஸ்.நரசிம்மன், தீபா கிருஷ்ணமூர்த்தி (பட்டேலின் மகள்), ஜே.ராதாகிருஷ்ணன், டி.கே.ஷர்மா, நடராஜன் சங்கரன், ரமேஷ் பூரி, டி.விஜயலெட்சுமி
அனுபவம் தொடரும்….