கனவுகளின் விளக்கம் [The interpretation of Dreams] – நூல் வாசிப்பு அனுபவம் : உதயபாலா
கட்டுரை | வாசகசாலை
உளவியல் என்பது தீர்க்க முடியாத அதாவது நம்மால் விளங்கிக் கொள்ள முடியாத சிக்கலான வடிவம் என்றுதான் இப்புத்தகத்தை வாசிக்கும் வரையிலும் நினைத்திருந்தேன். ஏனென்றால் நான் இளநிலை கல்வியல் படிக்கும்போதான அனுபவம் அத்தகையது.
தேர்ந்த அனுபவமும், தெளிந்த கற்றலும் ஏற்படும்வரை உளவியலை ஒரு பாடமாகப் புரிந்துகொள்வது சிக்கலான வடிவமாக இருந்தாலும் கூட, அறிஞர் சிக்மன்ட் ஃராய்ட்டின் எழுத்துக்களை நாம் வாசிக்கும்போது அவரின் கருத்தை மிக எளிதாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
குறிப்பாகவே, மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகங்களின் மீது எனக்கு நாட்டமில்லாமல் போனதற்கு மொழியாக்கம் செய்யும் எழுத்தாளர்களின் எழுத்து நடையை முக்கியமான காரணமென்றே சொல்லலாம். ஏனென்றால் கரடுமுரடான நடையோடு, கருத்துச் சிதைவான பத்திகளை உள்வாங்கிக்கொள்ள முடியாமல் சில பக்கங்களிலேயே திணறியிருக்கிறேன். அந்த நிலையிலிருந்து இந்நூலை மொழிபெயர்ப்பு செய்துள்ள எழுத்தாளர் நாகூர் ரூமி என்னைக் காப்பாற்றியிருப்பதோடு மட்டுமல்லாது, மிக அழகாக புரிந்து கொள்ளவும் வைத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு முதலில் நன்றிகளும் வாழ்த்துகளும்.
கொள்கை அரசியலை தெளிவுற கற்கும் நோக்கத்தோடு எனது வாசிப்பை இவ்வாண்டு துவங்கலாம் என நினைத்திருந்த நேரத்தில் வெறுமனே கருத்தியலை மட்டுமே ஊட்டமாகப் பெறுவது கற்றலில் கடினத்தன்மையாய் அமைந்து விடும். ஆகவே, இடை இடையே மன நம்பிக்கையை அதிகரிக்கும் விதமான புத்தகங்களையும் வாசிக்கலாம் எனத் திட்டமிட்டதன் விளைவாக நான் சேர்த்து வைத்திருந்த புத்தகங்களில் முதன்மையாக இப்புத்தகம் கண்ணில் பட்டது. அதற்கான காரணம் இந்த புத்தக அட்டைப் படத்தில் “உலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று!” என அச்சடிக்கப்பட்டிருந்தது தானன்றி வேறொன்றுமில்லை. அதற்குப் பிறகே ஆசிரியர் பெயரையும், புத்தகத்தின் பெயரையும் நோக்கினேன்.
உலகில் விரல்விட்டு எண்ணக் கூடிய சாதனையாளர்களில் ஒருவர்தான் இந்த சிக்மென்ட் ஃபிராய்ட். ‘உளவியலின் தந்தை’ என்றும் போற்றப்படுகிறார். விரிவுரையாளர், மருத்துவர், நரம்பியல் நிபுணர் என தம் தொழிலைத் துவங்கிய இவர் மனித மூளையைப் பற்றி பல ஆராய்ச்சிகளைச் செய்திருப்பதோடு, மனித மனம் என்னும் மகத்தான ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வதற்கான ஆராய்ச்சிகளையும் செய்துள்ளார்.
‘Psycho Analysis’ என்ற மன அலசல் முறையை ஃராய்டுதான் முதன் முதலில் உருவாக்கினார். இவர் ஆராய்ந்து எழுதிய புத்தகங்களில் “கனவுகளின் விளக்கம்” (The Interpretation of Dreams) எனும் இப்புத்தகம் உலகத்தை மாற்றி ஐந்து புத்தகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கனவுகளைப் பற்றிய எனது அனுமானம் வயதாக வயதாக மாறிக்கொண்டே வந்திருப்பதை அறிவேன். குறிப்பாக பள்ளிப் பருவத்தில் சில கனவுகள் என்னை பயமுறுத்தியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். சில கனவுகளை எனது பெற்றோர்களிடமும், சில கனவுகளை நண்பர்களுடன் பகிர்ந்திருக்கிறேன். இன்னும் சில கனவுகளை யாரிடமும் சொல்லாமல் கூட ரகசியமாக வைத்திருக்கிறேன். பின்னாட்களில் நாத்திகனாக மாறத் துவங்கியதிலிருந்து கிடைத்த அனுபவத்தினாலும், கற்றலினாலும் “கனவுகள் என்பது வெறுமனே நம்மின் அக, புற நினைப்பு” என்ற முடிவில் அதைப் பற்றி எண்ணங்களை பெரும்பாலும் தவிர்த்திருக்கிறேன். ஆனால், இந்தப் புத்தகத்தை வாசித்த பிறகு கனவுகளைப் பற்றிய விளக்கங்களையும், அது சார்ந்த உளவியலையும் உணர ஆரம்பித்திருக்கிறேன். நமது ஆரோக்கியமான வாழ்விற்கு இந்த கற்றல் ஆக்கத்தினை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்ற சிந்தனையையும் பெற்றுவிட்டதாக உணர்கிறேன். ஃப்ராய்ட் தனது ஆராய்ச்சி மற்றும் உரையாடல்களை மட்டுமல்லாது பல அறிஞர்களின் மேற்கோள்களையும், உளவியல் சார்ந்த உதாரணங்களையும் நமக்குப் புரியும் விதத்தில் இந்த நூலில் தந்திருக்கிறார்.
கனவுகளைப் பற்றிய சில விளக்கங்கள் (புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது)
• கனவுகள் வேறொரு உலகத்திலிருந்து வருகின்றன என்று சொல்ல முடியாவிட்டாலும் அவை வேறொரு உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
• கனவுகள் குறியீட்டுத் தன்மை கொண்டவை அல்லது சங்கேத மொழி பேசுபவை அல்லது உள் விஷயம் கொண்டவை.
• கனவு காணத் தகுதியில்லாத ஒரு மனிதன் காலப் போக்கில் பைத்தியமாகி விடலாம்.
• அரிஸ்டாட்டில் காலத்தில் கனவுகள் நோய் அறிவிக்கும் என்ற உண்மை உணரப்பட்டுள்ளது.
• கனவில் வரும் காட்சிகள் யாவும் நம்முடைய நனவு வாழ்வின் அனுபவங்களில் இருந்து எடுக்கப்பட்டவையே.
• நினைவுபடுத்தும் கனவுகளைத்தான் ஹைபர்னீசிக் (Hypermnesic) கனவுகள் என்று சொல்வார்கள்.
• நினைவில் தங்குவதற்குக் காரணமே ஒழுங்கு, இசைவு, வரிசை, அர்த்தம் ஆகியவைதான்.
• கனவில் நாம் சிந்திப்பதில்லை, அனுபவிக்கிறோம்.
• கனவானது மனநோயின் அறிகுறிகளில் ஒன்றாகவும் அதேசமயம் நோய்க்கான தீர்வைச் சுட்டும் வழியாகவும் உள்ளது.
“கனவுகள் வருங்காலத்தை அறிவிக்கின்றன என்று பழங்காலத்தில் நம்பப்பட்டது. அந்த நம்பிக்கையில் உண்மையே இல்லை என்று ஒரேயடியாகச் சொல்லிட முடியாது” என்று கனவுகளைப் பற்றிய விளக்கம் தந்துள்ள இந்த நூல் வாழ்வில் வெற்றிபெறத் துடிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
கனவுகளின் விளக்கம்
சிக்மன்ட் ஃராய்ட்
தமிழில் – நாகூர் ரூமி
பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 112
விலை: ரூ.110