15. குழலன் எங்கே?
அரசி கிளியோமித்ராவுக்கு உடனடியாக விஷமுறிவு மருந்து கொடுத்த வைத்தியர், பாயாசத்தைப் பரிசோதித்துவிட்டு, ‘’ஆம் அரசே… இதில் விஷம் கலந்திருப்பது உண்மைதான். நல்லவேளை அரசியார் சில மிடறுகளே அருந்தினார்’’ என்றார்.
அடுத்த நொடி… ‘’அடிப்பாவி… உன்னை மகள் போல பாவித்த மகாராணிக்கே விஷம் கொடுக்க நினைத்தாயா?’’ என்றபடி வாளை உருவிக்கொண்டு பாய்ந்தான் கம்பீரன்.
யாருமே இந்த வேகத்தைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவனது வாள் காற்றைக் கிழித்தவாறு செவ்வந்தியின் கழுத்தை நெருங்கிவிட்டது.
ஒரு நூலிழை இடைவெளிதான்… மின்னல் வேகத்தில் சுழன்று வந்த இன்னொரு வாள், ‘டிங்ங்ங்…’ என்று மோதி கம்பீரனின் வாளைத் தடுத்தது.
‘விருட்’ எனக் கழுத்தைத் திருப்பிப் பார்த்தான். சூர்யனின் வாள் வீச்சுதான் அது. கண்களில் கனலுடன் முறைத்த கம்பீரன், ‘’மடையா… என்ன தைரியம்?’’ என்று சீறினான்.
‘’மடையன் நீர்தான் தளபதியாரே… இது என்ன அவசரம்?’’ என்று எதிர்த்து கேட்டான் சூர்யன்.
‘’எவ்வளவு திமிர் உனக்கு? ராணியின் உயிரை எடுக்க நினைத்த துரோகிக்கு வக்காலத்தா? நீயும் கூட்டுக் களவாணியோ?’’ என்று கத்தினான் கம்பீரன்.
‘’கம்பீரா… வாயை மூடு’’ என்று கத்தினார் சிங்கமுகன்.
‘’அ… அரசே… இ… இவள்…’’
‘’விசாரிக்கும் முன்பே தீர்ப்பு எழுத நீ யார்? அதுவும் நான் ஒருவன் இங்கே நின்றிருக்கும்போதே என் கட்டளை எதுவுமின்றி எப்படி இதைச் செய்ய துணிந்தாய்? டேன்சன் டேன்சன்’’ என்று சீறினார்.
‘’தா… தாமதித்தால் தப்பிவிடுவாள் அரசே…’’
‘’எப்படி? இத்தனை பேர் சூழ்ந்திருக்க எல்லோரையும் மீறி மாயமாகிவிடுவாளா? இவள் என்ன மந்திரக்காரியா? அந்தச் சுரங்கக் கொள்ளையர்களையும் மர்ம மனிதனையும் மாதக் கணக்கில் தப்ப விட்டுள்ளீர்கள். அவர்களைப் பிடிக்க துப்பில்லை. இந்தப் பெண் ஓடிவிடுவாளாம்… நொடியில் வாள் வீசுகிறாய்? வெட்கமாக இல்லை?’’ என்றார் உக்கிரமாக.
கம்பீரன் சற்றே பின்னால் நகர்ந்து தலை தாழ்த்தினான். நிலாமதிசந்திரன் முன்னால் வந்தார்.
‘’அரசே… செவ்வந்திதான் இந்த இடத்தின் பொறுப்பில் இருந்தவள். மற்ற உணவுகளைச் சமையல் கலைஞர்கள் செய்தபோது இந்தப் பாயாசத்தை மட்டும் இவளே செய்திருக்கிறாள். உள்ளே வந்ததுமே அரசியார் கையில் கொடுக்கிறாள். இதற்கு மேல் சந்தேகப்பட என்ன இருக்கிறது?’’ என்று கேட்டார்.
‘’இப்பத்தான் சந்தேகம் அதிகமாகுது மிஸ்டர் மந்திரி’’ என்றபடி முன்னால் வந்தார் கிங்விங்சன்.
சிங்கமுகன் அவரை ஏறிட்டுப் பார்க்க… ‘’ஸாரி மிஸ்டர் சிங்கமுகன்… நான் கொஞ்சம் பேசலாமா?’’ என்றான்.
‘’ஐயா அயல்தேசத்து வணிகரே… இது எங்கள் நாடு… எங்கள் ராஜாங்க விஷயம்… நீர் என்ன பேசப்போகிறீர்?’’ என்றான் கம்பீரன்.
‘’கம்பீரா… சேட்டப்… நீ சிறிது நேரம் வாய் மூடி இருக்கிறாயா?’’ என்று அதட்டினார் சிங்கமுகன்.
கம்பீரன் அமைதியாகி இன்னும் சில அடிகள் பின்னால் சென்றான். கிங்விங்சன் பக்கம் பார்த்த சிங்கமுகன், ‘’நீங்கள் சொல்லுங்கள்’’ என்றார்.
‘’விஷம் கலந்தது இந்தப் பெண் என்றால் இந்நேரம் நாம் வர்றதுக்கு முன்னாடியே எஸ்கேப் ஆகி இருக்கலாமே… இவ்வளவு தைரியமாகவா இருப்பாள்?’’ என்றான் கிங்விங்சன்.
‘’இவர்களைப் போன்ற ராஜ தூரோகிகள் காரியம் முடியும் வரை அருகில் இருந்து இடையூறின்றி நிறைவேற்றிவிட்டு பின்னர் தங்களையே மாய்த்துக்கொள்பவர்கள். இவள் நிச்சயம் அடுத்த நாட்டு அரசனுக்காகத்தான் இதைச் செய்திருப்பாள்’’ என்றார் நிலாமதிசந்திரன்.
‘’அதை விசாரித்தால் தெரிந்துவிடும் மந்திரி… இங்கே இருந்த மத்வங்களும் முன்னாடி வாங்க’’ என்றார் கிங்விங்சன்.
தலைமைச் சமையல்காரரும் அவருடன் இருந்த பணியாளர்களும் பயத்துடன் முன்னால் வந்து நின்றார்கள்.
‘’இந்தப் பாயாசத்தை செய்தது இவளா?’’ என்று கேட்டான் கிங்விங்சன்.
‘’ஆமாங்க’’ என்றார் தலைமைச் சமையல்காரர்.
‘’அப்போ நீங்க பக்கத்ல இருந்தீங்களா?’’
‘’இருந்து பார்த்தேன்ங்க. அப்போ எதுவும் கலக்கலைங்க.’’
‘’சரி… எல்லாம் ரெடியானதும் இங்கே யார்லாம் இருந்தீங்க?’’
‘’இங்கே இருக்கிற எல்லோரும்தாங்க.’’
‘’செவ்வந்தி… நீ இந்த இடத்திலேதான் இருந்தியா?’’ என்று கேட்டான் கிங்விங்சன்.
அதிர்ச்சியும் அவமானமும் விலகாமல் இருந்த செவ்வந்தி மெல்ல பேசினாள்… ‘’ஆ… ஆமாம்!’’
‘’வேற எங்கேயும் போகவே இல்லியா?’’
‘’அரசர் கவிதை வாசிக்க ஆரம்பித்தபோது மட்டும் வாசலில் சென்று நின்று கவனித்தேன்’’ என்றாள்.
‘’ஆமாங்க… நானும் இன்னும் சிலரும் கூட அப்போ வாசலுக்கு வந்து கவனிச்சோம்ங்க’’ என்றார் தலைமைச் சமையல்காரர்.
‘’குட்… குட்… உங்களோடு அப்படி வெளியே வந்ததெல்லாம் யாரு?’’ என்று கேட்டான் கிங்விங்சன்.
அவர் தலையைத் திருப்பி தனது பணியாளர்களை நோட்டமிட்டு சிலரை அழைத்தார். அவர்கள் முன்னால் வந்தார்கள்.
‘’குட்… குட்… அப்போ உள்ளேயே இருந்த மத்தவங்க இப்டி வாங்க’’ என்றான் கிங்விங்சன்.
அவர்கள் பயத்துடன் இன்னொரு பக்கம் நின்றார்கள்.
‘’மிஸ்டர் சிங்கமுகன்… இவங்களை நல்லா விசாரிச்சா தெரிஞ்சுடும்’’ என்றான்.
‘’அருமை மிஸ்டர் கிங்விங்சன்… நன்றி… வீரர்களே… இவர்களை இழுத்துச் சென்று சிறையில் வையுங்கள். நான் வரும் வரை இவர்களை ஒரு ஈ எறும்பு கூட நெருங்கக் கூடாது’’ என்றார் சிங்கமுகன்.
‘’அ… அரசே… இவர்களுடன் சந்தேகத்தின் அடிப்படையில் இவளையும் அடைத்து வைக்க வேண்டும். விசாரணைக்குப் பிறகு விடுவிக்கலாம்’’ என்றான் கம்பீரன்.
சிங்கமுகன் கழுத்தை திருப்பி செவ்வந்தியை ஏறிட்டார். அவள் வணங்கி, ‘’பரவாயில்லை அரசே… என்னையும் சிறையில் அடையுங்கள். இன்னும் சரியாக விசாரியுங்கள். நான் நிரபராதி என்று நிரூபித்துவிட்டு பின்னர் வெளியே வருகிறேன்’’ என்றாள்.
‘’ம்… செவ்வந்தியையும் அழைத்துச் செல்லுங்கள். வைத்தியரே… இந்த எல்லா உணவுகளையுமே பரிசோதனை செய்யுங்கள். எதையும் யாரும் சாப்பிட வேண்டாம். பரிசோதனைக்குப் பிறகு கொட்டிவிடுங்கள்’’ என்றார் சிங்கமுகன்.
‘’ஆகட்டும் அரசே’’ என்றார் வைத்தியர்.
‘’சரி… குழலன் சொன்னது போல இன்று நாம் அனைவருமே பொதுமக்களுடன் கலந்துதான் சாப்பிட வேண்டும் என்று இறைவனே தீர்மானித்து இருக்கிறான் போல. வாருங்கள் போகலாம்’’ என்றார் சிங்கமுகன்.
செவ்வந்தியும் மற்ற சந்தேக மனிதர்களும் வீரர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர். சூர்யனைக் கண்களால் உள்வாங்கி நன்றியையும் காதலையும் சொன்னபடி சென்றாள் செவ்வந்தி.
தன்னை ரகசியமாக முறைக்கும் கம்பீரனைத் தானும் ரகசியமாகப் பார்த்து புன்னகைத்தான் கிங்விங்சன்.
******
‘’அப்புறம் என்ன ஆயிற்று?’’ என்று கேட்டான் உத்தமன்.
அவனது வீட்டுக்கு வெளியே நிலவொளியில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
‘’இன்றிரவு சிறைச்சாலைக்குள் விசாரணை நடக்கப் போகிறது. செவ்வந்தி அக்கா நிச்சயம் இதைச் செய்திருக்க மாட்டார்’’ என்றான் குழலன்.
‘’அந்தப் பணியாளர்களில் ஒருவனோ சிலரோதான் விஷம் கலந்திருக்க வேண்டும். ஆக… வெளியே இருக்கும் அந்தச் சுரங்கக் கொள்ளையர்கள்தான் அரசுக்கு ஆபத்தானவர்கள் என்று நினைத்திருந்தோம். இப்போது, அரசருக்கும் அரசிக்கும் ஆபத்து அருகிலேயே இருக்கிறது’’ என்றாள் நட்சத்திரா.
‘’அந்த கிங்விங்சன் எப்படி இதைக் கண்டுபிடித்தாராம்?’’
‘’அவர் பாயாசத்தைக் குடிக்க முயன்றபோது வந்த வித்தியாசமான வாடை சந்தேகம் ஏற்படுத்தியதாம். வணிக விஷயமாகப் பல்வேறு நாடுகளுக்குச் சென்றவராம். அங்கே சில அரசர்கள் விஷத்தால் கொல்லப்பட்டதை எல்லாம் அறிந்தவராம். அதோடு, சிலர் கள்ளத்தனமாக விஷங்களைத் தயாரித்து ரகசியமாக விற்பதை அறிந்தவராம். அப்படி பழகிய வாடை என்பதால் சந்தேகம் வந்ததாம்’’ என்றான் குழலன்.
‘’வணிக அனுபவம் படைத்தவனின் விளக்கம் நம்பும்படியாகத்தான் இருக்கிறது. ஆனால், அவனது கண்களில் நான் கள்ளத்தனத்தைப் பார்க்கிறேன். அவனது ஒவ்வொரு பேச்சிலும் மிகப்பெரிய தொலைநோக்கு திட்டங்கள் இருப்பதை உணர்கிறேன். இதுவும் அப்படியாக இருக்குமோ என்று அச்சமுறுகிறேன்’’ என்றான் உத்தமன்.
‘’அரசருக்கு மிக நெருக்கமானவராக ஆகிவிட்டார். இரவு சிறைச்சாலை விசாரணையின்போது அவரையும் உடன் இருக்கும்படி அரசர் கேட்டுக்கொண்டுள்ளார். எனில், எந்த அளவுக்கு அவர் மனதில் இடம்பிடித்துவிட்டார் என்று பாருங்கள் அண்ணா’’ என்றான் குழலன்.
‘’இது ஆபத்தாயிற்றே… ஓர் அயல்தேச வணிகனை அரசாங்க விஷயம் வரை சேர்த்துக்கொள்வது சரியில்லையே.’’
‘’இதையேதான் தளபதி கம்பீரனும் சொல்ல முயன்றான். அவனை அரசர் அடக்கிவிட்டார்’’ என்றாள் நட்சத்திரா.
‘’அக்கா… அவரே ஒரு கள்ளன்தான். அவரிடம் ஏற்பட்டிருந்த பதற்றத்தையும் பரபரப்பையும் பார்த்தீர்கள் அல்லவா? சூர்யன் அண்ணா ஒரு நிமிடம் தாமதித்து இருந்தாலும் இந்நேரம் செவ்வந்தி அக்காவை நாம் புதைத்திருப்போம்’’ என்றான் குழலன்.
‘’அதுவும் சரிதான் குழலா… அந்த கம்பீரன் மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால், மகாராணிதான் அவனை உயிர் காத்த தெய்வம் போல நம்பிக்கொண்டு இருக்கிறார்’’ என்றான் உத்தமன்.
‘’விசாரணையின் முடிவு என்ன என்பது என் அண்ணா வந்தால்தான் தெரியும்’’ என்றாள் நட்சத்திரா.
‘’வந்து சொன்னதும் எனக்கு சொல் நட்சத்திரா’’ என்றான் உத்தமன்.
‘’ஏன்… நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்’’ என்றாள்.
‘’உன் மட அண்ணன்தான் என்னையே சந்தேகப் பட்டியலில் வைத்துள்ளானே’’ என்றான் உத்தமன்.
நட்சத்திரா அவனை முறைப்புடன் ஏறிட்டாள்… ‘’ஐயா பத்திரிகையாளரே… நீர் மட்டும் ஊரில் உள்ள எல்லோரையும் சந்தேகப்படலாம். கேட்டால் ‘அது எனது தொழிலின் குணம்’ என்று சொல்லிக்கொள்ளலாம். என் அண்ணா மட்டும் சந்தேகப்படக் கூடாதோ?’’ என்று கேட்டாள்.
‘’அண்ணனுக்கு ஏற்ற தங்கை… அறிவில்’’ என்றான் உத்தமன்.
‘’ம்… கொஞ்சம் அசையாமல் இரும் உத்தமரே’’ என்ற நடட்சத்திரா அவனை இன்னும் நெருங்கினாள்.
தனது இரு கைகளையும் அவனது முகம் அருகே கொண்டுசென்று நெற்றியையும் நாசி வரையும் பொத்தி கண்கள் மட்டும் தெரியும்படி பார்த்தாள்.
‘’எ… என்ன செய்கிறாய்?’’ என்று கேட்டான் உத்தமன்.
‘’கண்களைக் காண்கிறேன்’’ என்றாள்.
‘’அக்கா… சிறுவன் இருக்கிறேன்’’ என்றான் குழலன்.
‘’அடச்சீ… இது காதல் பார்வை இலையடா பொடியா… விசாரணைப் பார்வை… அந்தக் கறுப்பு ஆடை மனிதனின் கண்களைப் பார்த்தேன் அல்லவா…’’
நட்சத்திராவின் கைகளைத் தட்டிவிட்டு எழுந்த உத்தமன், ‘’உதைக்கும் முன்பு இங்கிருந்து போய்விடு பைத்தியக்காரி’’ என்றான்.
‘’என்ன… என்ன… உதைப்பாயா? ஐயா… முன்பு போலில்லை, இப்போது எங்களது இடையிலும் வாள் இருக்கிறது. காட்டட்டுமா… பார்க்கிறீர்களா?’’ என்று எழுந்தாள் நட்சத்திரா.
‘’ம்ஹூம்… இதற்கு மேல் நான் இங்கே இருக்க விரும்பவில்லை’’ என்றபடி எழுந்து நடக்க ஆரம்பித்தான் குழலன்.
உத்தமன் வீட்டைக் கடந்து வரப்பு மீது நடந்து மறுபக்கம் இருந்த மரங்கள் அடர்ந்த பாதை வழியே தனது வீடு நோக்கி போக ஆரம்பித்தான் குழலன்.
சிறிது தூரம் வந்ததும் தன்னை யாரோ கண்காணிப்பது போன்று முதுகில் உணர்ந்தான். நடையின் வேகத்தை மெல்ல குறைத்தான். மிக மெதுவாகக் கழுத்தைத் திருப்பிப் பார்த்த நொடியில்…
சற்று பின்னால் இருந்த ஒரு மரத்தின் மறைவில் இருந்து ஓர் உருவம் அவன் மீது பாய்ந்தது. குழலன் சுதாரித்து விலகும் முன்பு அவனது உடலை தரையில் குப்புற வீழ்த்தி முதுகு மேலே அமர்ந்தது.
‘’ம்… ம்…’’ என்று திமிறியபடி குழலன் கழுத்தை ஒடித்துப் பார்த்தான்.
கறுப்பு ஆடையில் கண்கள் மட்டுமே தெரியும்படி இருந்த அந்த உருவம், தன் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் குழலனின் தலையைத் தாக்கியது.
குழலனின் கண்கள் இருண்டன. வாயைத் திறந்து அலற முயன்றான். ஆனால்… ஒரு வார்த்தையைக் கூட வெளிப்படுத்த முடியவில்லை. அப்படியே மயங்கிப் போனான்.
*****
சூறாவளியை வாசலில் நிறுத்தி இறங்கினான் சூர்யன். வாசல்படியிலேயே அமர்ந்திருந்த நட்சத்திரா சட்டென எழுந்து அவனை நெருங்கினாள்.
‘’அண்ணா என்ன ஆனது? செவ்வந்தி…’’
‘’விசாரணை முடிவில் அவள் விடுவிக்கப்பட்டாள். எனினும் இன்னும் சில நாட்களுக்கு அரண்மனைக்கு வரக்கூடாது என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். வீட்டை விட்டும் வெளியே வரக்கூடாது என்று உத்தரவு. அவள் வீட்டு வாசலில் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது’’ என்றான் சூர்யன்.
‘’அப்படியானல் முழுமையாக நம்பவில்லை. வீட்டுச் சிறை என்று அர்த்தம்? சரி மற்றவர்களை விசாரித்தார்களா?’’
‘’எவனுமே செய்யவில்லை என்று சாதிக்கிறான்கள். அவர்களுக்குச் சிறப்பு கவனிப்பு நாளையும் இருக்கும். இது நிச்சயமாக வேங்கைபுரி மன்னனின் வேலையாகத்தான் இருக்கும்’’ என்றபடி வீட்டுக்குள் சென்றான் சூர்யன்.
‘’ஏன்… உள்ளேயே இருப்பவர்களில் வேலையாகவும் இருக்கலாமல்லவா?’’ என்றபடி பின்னால் வந்தாள் நட்சத்திரா.
‘’யாரைச் சொல்கிறாய்?’’
‘’கம்பீரனையும் அந்த மந்திரி கிழவரையும் அவ்வளவு நல்லவர்களாகவா நினைக்கிறாய்?’’
‘’நட்சத்திரா… அவர்கள் நல்லவர்களில்லை… ஊழல் பேர்வழிகள்தான். ஆனால்… அரசர், அரசியைக் கொல்லும் அளவுக்குக் கொடூரம் படைத்தவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களின் ஆசையெல்லாம் பொன்னும் பொருளும் மட்டும்தான்’’ என்றான் சூர்யன்.
‘’ஓஹோ… அவர்கள் மீது கொலை சந்தேகம் இல்லை. ஆனால், உத்தமன் மீது மட்டும் உனக்கு சந்தேகம்? எனில், அவர்களைவிட உத்தமன் கொடூரமானவரா?’’ என்று கோபத்துடன் கேட்டாள் நட்சத்திரா.
‘’பைத்தியக்காரி… உத்தமனை நான் சந்தேகப்படுவது கொலைகாரனாக அல்ல… அரசனைக் காக்கும் மர்ம மனிதன் யார், ஏன் என்றுதான். புரிந்துகொள்’’ என்றான் சூர்யன்.
‘’என்ன… ஆளாளுக்கு என்னைப் பைத்தியக்காரி என்கிறீர்கள்? என் வாளுக்கு வேலை கொடுக்க வேண்டுமா?’’ என்று பொய்க் கோபத்துடன் கேட்டாள் நட்சத்திரா.
‘’ஆளாளுக்கு என்றால்..? வேறு யார் சொன்னது உத்தமனா?’’ என்று சிரித்தான் சூர்யன்.
அப்போது வீட்டு வாசலில் நிழலாடியது. திரும்பிப் பார்த்தார்கள்… குழலனின் தாய்.
‘’சூர்யா… நட்சத்திரா…’’ என்று அழைத்தார்.
‘’அடடே… வாருங்கள் அம்மா’’ என்றான் சூர்யன்.
‘’குழலன் இங்கே வந்தானா?’’ என்று கேட்டார்.
‘’அவன் அப்போதே உத்தமன் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டானே’’ என்றாள் நட்சத்திரா.
‘’இன்னும் வரவில்லை… உத்தமனிடம் போய் கேட்டுவிட்டுதான் இங்கே வருகிறேன். ஒருவேளை செவ்வந்தி விசாரணை என்ன ஆயிற்று என்பதை அறிய சூர்யன் வீட்டுக்குப் போயிருக்கலாம் என்று உத்தமன் சொன்னதால் இங்கே வந்தேன்’’ என்றார்.
‘’நான் இங்கேயேதான் இருக்கிறேன்… வரவேயில்லையே’’ என்றாள் நட்சத்திரா.
அந்த தாய் முகம் பதற்றமானது… ‘’இத்தனை நேரத்துக்கு எனக்கு தகவல் சொல்லாமல் எங்கும் தங்க மாட்டானே’’ என்றார்.
‘’அம்மா… நீங்கள் பயப்பட வேண்டாம்… தேடுவோம்’’ என்றபடி வாசலைத் தாண்டிய சூர்யன், சூறாவளியை நெருங்கி மேலே தாவினான்.
‘’சீக்கிரம் பார்த்து அழைத்து வா சூர்யா…’’ என்றார் தாய்.
சூறாவளி சட்டென பாய்ந்து சென்றது.
**************************************
தொடரும்…