
துண்டிப்பின் தொடர்தல்
யாருமற்ற தோணி
எடை பிடித்து வைத்திருக்கிறது
இறங்கிப் போன பாதங்களின் வெதுவெதுப்பை
இல்லாமையின் ரணத்திலிருந்து
சீழ்பிடித்து வழியும் உதிரத்திற்குள்
ஏக்கத்தின் துர்நாற்றம்
தடமழித்திடும் நாவு
கழுத்து தாழ்த்தி சரணடைகிறது
கத்தரிக்கோல் விளிம்புகளின் நடுவே
தொடர்தலின் துண்டிப்பை இலகுவாக்க
போதுமானதாகயில்லை
வெறும் இரண்டு முனைகள்
முளைத்துப் பெருக வேண்டும்
எண்ணிலடங்காதவை.
****
காலத்தின் தேடல்
பூனைக்குட்டி விரல்களில்
ஒட்ட வைத்திருக்கும்
புலி நகங்களின் சுமை
மெளனமானவை
உடைந்து சிதையும்
தொண்டைக்குழியின் ஒலி
இரண்டுக்குமானது
மருண்டிருக்கும் விழியின் முன்
தோரணையெனத் திரை சூடியிருக்கும்
கம்பீரம்
விரல் தேடும் விரல் நுனி
தன் சிறை ஏற்கிறது
எதார்த்தக் கம்பிகளின் நிழலுக்குள்
உடைபட்டுத் திரளும்
அலைகளின் ஆர்ப்பரிப்பு
காலத்தின் அடியாழத்திற்குள்
காத்திருக்க… வேண்டும்
கரை சேரும் கணத்திற்கு.