
“இல்ல. இப்படி நடந்துருக்க கூடாது. இவ்ளோ பெரிய ரயில்வே ஸ்டேஷன்ல, இவ்ளோ கூட்டத்துக்கு மத்தியில அவர எங்கனு போய் தேடுவேன்.” தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரம் நம்பர் ஒன்றில் நின்று கொண்டு, செழியன் தனக்கு இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் தலையை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வபோது நின்ற இடத்தில் இருந்தே எகிறி எகிறிப் பார்க்கவும் செய்தான்.
இரவு ஏழு மணி என்பதால் ரயில்வே நிலையத்தில் கூட்டம் பரபரவென இருந்தது. வேலை முடிந்து வீடு திரும்புபவர்கள்தான் அதிகளவில் இருந்தார்கள். அவர்களின் கண்களில் வீட்டிற்குச் சீக்கிரம் செல்ல வேண்டும் என்ற எண்ணமே ஓங்கியிருந்தது. ஜோடியாக இருந்தவர்கள் மட்டும் வீட்டிற்கு மெதுவாகப் போனால் போதும் அல்லது போக வேண்டுமா அல்லது இப்படியே எங்கும் போய்விடலாமா என்ற எண்ண ஓட்டத்தில் இருந்தது போல மெல்ல காலடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். பரபரவென பறந்துக் கொண்டிருக்கும் கூட்டத்தில் அவர்கள் மட்டும் மெல்ல சிறகசைத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சில ஜோடிகள் ஆங்காங்கே இருந்த பென்ச்களில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
செழியனின் பார்வை இவர்கள் அனைவரின் மீதும் விழுந்தது. குறிப்பாக ஒவ்வொரு பென்ச்களின் மீதும் விழுந்தது. “இங்க எங்கயாச்சும்தான் அவர் உக்காந்துட்டு இருக்கணும்.” முணுமுணுத்துக் கொண்டே பார்த்தான். ஆனால், அவன் கண்களில் சோர்வு மட்டுமே எட்டிப் பார்த்தது.
“ஷிட். இந்த கில்ட்டோட என்னால ரூமுக்குலாம் போக முடியாது. அவர் இப்போ எங்கதான் இருக்காரோ?” – கோபமும் சலிப்பும் அவனுக்குள் கூத்தடிக்க, செழியன் ரயில்வே ஸ்டேஷனில் இருந்த ஒரு பென்ச்சில் ஏறி நின்று சுற்றிப் பார்த்தான். பைனாகுலர் இல்லையென்றாலும் தன்னால் முடிந்த மட்டும் கண்களை சுருக்கி, விரித்து பார்த்தான். “ப்ச். அவர் எங்க போனாரோ” மனதுக்குள் வருத்தம் சூடுபிடிக்க, அவன் அங்கேயே அமர்ந்தான்.
செழியன் கிண்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட் இண்டர்னாக இருக்கிறான். இன்னும் ஒரு வாரத்தில் இண்டர்ன்ஷிப் முடியப் போகிறது. 27 வயதாகும் செழியன், அந்த வேலை. இந்த வேலை என்று எங்கெங்கோ தாவி, இறுதியாக இப்போது இங்கு வந்து சேர்ந்திருக்கிறான். என் இனிய தனிமையே என்று சுற்றிக் கொண்டிருப்பவர்களில் செழியனும் ஒருவன்.
என்றும் போலத்தான் இன்றும் அலுவலகம் முடிந்து கிண்டி ரயில்வே ஸ்டேஷேனுக்கு வந்து, தாம்பரம் செல்லும் ரயிலில் ஏறினான். லேடிஸ் ஸ்பெஷல் சென்ற ஐந்து நிமிடங்களிலேயே அடுத்த ட்ரெய்ன் வந்தது. அதனால், கூட்டம் குறைவாகவே இருந்தது.
செழியன் எப்போதும் ரயிலின் முன்பகத்தில் இருந்து வருகிற லேடிஸ் கம்பார்ட்மெண்ட்டை அடுத்து இருக்கிற கம்பார்ட்மெண்ட்டில்தான் ஏறுவான். கூட்டம் மற்ற இடங்களை விடவும் அங்கு குறைவாக இருப்பது ஒரு பக்கம் என்றாலும், தாம்பரம் இறங்கியதும் ஒரு ஹோட்டலுக்குள் புகுந்து பஸ் ஸ்டாப்பிற்கு போக அது ஏதுவாக இருக்கும் என்பது மற்றொரு முக்கிய காரணம். நம் தேவைக்கு எது ஏதுவாக இருக்கிறதோ அதன் பக்கம் சாய்வதுதானே மனித இயல்பு.
ரயிலுக்குள் ஏறியதும் அவன் நினைத்தது போலவே ஆங்காங்கே சில சீட்டுகள் காலியாக இருந்தது. குறிப்பாக ஒரு இடத்தில் ஒரு ஜன்னல் இருக்கை மட்டும் காலியாக இருந்தது. அதைக் கண்டதும் ஏதோ பெரியதாக சாதித்துவிட்ட புன்னகையோடு, செழியன் ஜன்னல் இருக்கையை நோக்கிப் போனான்.
“தம்பி, அங்க உக்காராதீங்க” சட்டென ஒரு குரல் வந்தது. உடனே, செழியன் குரல் வந்த திசையை திரும்பிப் பார்த்தான். வெள்ளை நிற சட்டை, பச்சை நிற வேஷ்டியை உடுத்திக் கொண்டிருந்தவர் முகம் முழுக்க சுருக்கத்தைக் கொண்டிருந்தார். பின்னந்தலையில் மட்டுமே முடி இருந்தது. காதில் இருந்து வெள்ளை முடி லேசாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
செழியன் அவர் ஏன் அப்படி சொல்கிறார் என்று புரியாமல் பார்க்க, அவரே மீண்டும், “அந்த சீட்டு ஓரமா பாரு தம்பி..” என்றார். அவனும் பார்த்தான். சாம்பார் கொட்டியிருந்தது. செழியனின் கண்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை நோக்கிப் போனது. அவர்கள் அனைவரும் நடக்கும் எதையும் கவனிக்காதது போல மொபைலில் மூழ்கியிருந்தார்கள்.
“தேங்க்ஸ்ங்க” செழியன் மெல்ல, அந்த பெரியவர் அமர்ந்திருந்த சீட்டுக்கு அருகில் இருந்த இடத்தில் சென்று அமர்ந்தான். செழியன் அந்தப் பெரியவரைப் பார்க்க, அவரும் புன்னகைத்தார். அந்தப் புன்னகை அவரின் முக சுருக்கங்களையெல்லாம் மறைத்து அவரை மிகவும் இளமையாக காட்டியது. செழியனுக்குமே அவரின் புன்னகை பிடித்திருந்தது. ஆனால், அதை அவன் வெளியே சொல்லவில்லை.
“நம்ம உக்காரப் போற சீட்டுல என்னென்ன பிரச்சனை இருக்குனு நாமதான் தம்பி பாக்கணும். அவன் சொல்லுவான். இவன் சொல்லுவான்னுலாம் எதிர்பார்க்க முடியாது.” அந்தப் பெரியவர் புன்னகையோடு அறிவுரை செய்தார்.
“எனக்குப் புரியுதுங்க.” செழியன் சொல்ல, “சீட்டுக்கு மட்டும் அல்ல. வாழ்க்கைக்கும் அதான்” பெரியவர் சொன்னார். தலையை மட்டும் மேலும் கீழுமாக ஆட்டியவன், அவரின் கையில் இருக்கும் நைலான் பையைப் பார்த்தான். அதைக் கண்டதும் அவனுக்கும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவன் முகத்தில் சட்டென ஒரு புன்னகை தோன்ற, அதை அந்தப் பெரியவரும் பார்த்தார்.
“என்னப்பா.. என் பைய பார்த்து சிரிக்குற? பட்டிக்காட்டோடது மாதிரி இருக்குன்னா?”
“அச்சோ.. நீங்க வேற தாத்தா. அப்படிலாம் இல்ல. நான் ஸ்கூல் படிக்குறப்போ இந்தப்பையத்தான் எடுத்துட்டு போவேன். அந்த நியாபகம் வந்துடுச்சு. அதான், ஸ்மைல்”
“தம்பிக்கு எந்த ஊரு?”
“நான் செஞ்சி பக்கத்துல தாத்தா.. நீ்ங்க?”
“நான் உளுந்தூர்பேட்டை பக்கத்துலப்பா”
அந்தப் பெரியவர் ஒவ்வொரு முறை பேசும் போதும் புன்னகையை சேர்த்துக் கொண்ட விதம் செழியனுக்குப் பிடித்திருந்தது. அதிகம் பெரியதாக பேசாதவன், தானாக கேள்விகளை அடுக்க ஆரம்பித்தான்.
“இங்க எங்க தாத்தா?”
“என் பேர பசங்கள பாக்க வந்திருக்கேன்பா” அதுவரை அவரின் முகத்தில் இருந்த புன்னகை இப்போது மறைந்தது. செழியனுக்கு அது ஆச்சரியத்தைக் கொடுத்தது.
“பேர பசங்கள பாக்க வந்திருக்கீங்க. அத சந்தோஷமா சொல்லணும்ல?”
“எனக்கும் அப்படித்தான்பா சொல்லணும்னு ஆசை. ஆனா, என் மருமகள நெனச்சாதான்” அந்தப் பெரியவர் எச்சிலை முழுங்கினார். ‘ரைட்டு. இவர் வீட்லயும் மருமக பிரச்சனைதான் போல’ முடிவெடுத்த செழியன், “இந்த மருமகளுகளே இப்படித்தான் போல” என சலித்துக் கொண்டான்.
“ஐயோ தம்பி. நீ நெனைக்குற மாதிரி இல்ல. என் மருமகள் தங்கம். ஆனா, அவளுக்கு நான் பண்ண விஷயங்கள்தான் கொடூரம்” அவரின் முகத்தில் வருத்தமும், வார்த்தையில் குற்ற உணர்வும் மேலோங்கியது.
“என்ன சொல்றீங்க?” செழியன் ஆர்வத்துடன் கேட்டான். பெரியவர் மௌனமாக அவனைப் பார்க்க, ரயில் திரிசூலத்தில் நின்றது. சில விநாடிகளில் ரயில் தனக்கே உரிய பாணியில் ஒரு ஜர்க் கொடுத்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தது. “மூனு சமோசா பத்தே. மூனு சமோசா பத்தே” விற்பனை குரல் கேட்டது. எதிலும் கவனம் செலுத்தாமல் செழியன் அவரையே பார்த்தான். அவரும் பேச்சைத் தொடர்ந்தார்.
“பத்து வருஷத்துக்கு முன்ன ஒரு பொண்ண காதலிக்குறேன்னு வந்து என் பையன் நின்னான். எனக்கு சரியான கோபம். நான் பார்த்து வைக்குற பொண்ணதான் கல்யாணம் பண்ணனும்னு சொன்னேன். அவன் ஒத்துக்கல. என் ரெண்டாவது பையனும், என் பொண்டாட்டியும் கொஞ்சம் என்கிட்ட பேசிப் பார்த்தாங்க. நானும் சரினு கொஞ்சம் சொந்தக்காரங்க, ஊர்க்கார்ங்கனு எல்லார்கிட்டயும் பேசுனேன். என்ன மாதிரியேதான் எல்லாரும் இருந்தாங்க. முடிவா வேணாம்னு சொல்லிட்டேன்.”
அவர் முன்பு கோபமாக இருந்ததைக் கூட இப்போது மிகவும் அமைதியாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தார். “அதுக்கு அப்றம் என்னாச்சு?” செழியன் கதை கேட்பது போல கேட்டான்.
“எந்த புள்ள பெத்தவன் பேச்ச கேக்குது? அவன் வீட்ட விட்டு போய் கல்யாணம் பண்ணிக்கிட்டான். எங்க வீட்ல இருந்து யாரும் போகல. நான் யாரையும் போக விடல. என் மவன் என்ன மாதிரிதானே இருப்பான். அவனும் திரும்ப வீட்டுக்கு வரல. ஆனா, அவன் பொண்டாட்டி, என் மருமகள் வந்தா. என்ன சமாதப்படுத்த எவ்ளோவோ முயற்சி பண்ணா. ஒவ்வொரு முறையும் நான் அவள அசிங்கப்படுத்திதான் அனுப்புனேன்”
குற்றவுணர்ச்சியை லேசாக கண்ணீராக வெளிப்படுத்தினார். செழியனால் அவரின் நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. “ஏன் இப்படிலாம் பண்ணீங்க. உங்க பையனோட காதல ஏத்துக்குறதுல என்ன பிரச்சனை உங்களுக்கு” கனிவாகவே கேட்டான்.
“வேற என்ன.. வரட்டு கௌரவம்தான். வேற ஜாதி பொண்ணு வேற. அதனால, அவன் என்ன சொல்லுவான். இவன் என்ன சொல்லுவான். சொந்தம் தள்ளி வச்சிடும்னு யோசிச்சேன். வேணாம்னு முடிவு பண்ணேன்” செழியனின் கண்களைப் பார்த்து சொன்னார். இந்தக் காரணங்களை செழியன் எதிர்பார்த்திருந்தான். அதனால், அவனுக்கு இது பெரிய அளவில் அதிர்ச்சியாகவில்லை.
அதே நேரம், அவன் மிகவும் வியப்போடு, “நீங்க சொல்றத பார்த்தா.. பத்து வருஷமா நீங்க உங்க பேர பசங்கள பார்க்கலையா?” என்றான். “நேர்ல பார்த்தது இல்ல. என் ரெண்டாவது மருமகள் அப்பப்போ ஃபோன்ல காட்டுவா. பாக்குறப்போ ஆசையா இருக்கும். ஆனாலும், ஏதோ ஒண்ணு தடுத்துட்டே இருந்தது” சுருங்கியிருந்த அவரின் முகம் மேலும் சுருங்கியது.
“இப்போ எதுவும் உங்கள தடுக்கலையா?” செழியன் அவரின் வருத்தத்தை கண்டுகொள்ளாதபடியே கேட்டான்.
“இப்பவும் ஒரு மாதிரி இருக்குதான். ஒரு தைரியத்துல என் பொண்டாட்டிக்கிட்ட மட்டும் சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன். இருந்தாலும், ஒவ்வொரு நொடியும் திரும்பி போய்டலாம். போய்டலாம்னே இருக்கு” தனக்குள் நேரும் அவஸ்தையையும் அவர் சொன்னார்.
“உங்களுக்கே தெரியாம உங்களுக்குள்ள இருக்க சின்ன வீம்புதான் இப்படியெல்லாம் உங்கள யோசிக்க வைக்குது. உங்க பையன் வீடு எங்க இருக்கு?” செழியன் கேட்டான்.
“தாம்பரம்னு மட்டும் தெரியும். அங்க எங்க இருக்குனுலாம் தெரியாது. என் பொண்டாட்டி இந்த விலாசத்த கொடுத்தா” கைகள் நடுங்கியபடியே தன் மேல் பாக்கெட்டில் இருந்த விலாச காகிதத்தை எடுத்துக் கொடுத்தார்.
செழியனும் அதை வாங்கிப் படித்தான்.
“சேலையூரா. கிழக்கு தாம்பரத்துல இருந்து பஸ் புடிச்சா ஈஸியா போய்டலாம்.” என்றவன், “உங்க பையன் உங்கள சேர்த்துக்குவாரா? உங்க மருமக உங்கள மன்னிச்சிடுவாங்களா?” தனக்குள் இருந்த கேள்வியை அவரின் முன் எடுத்து வைத்தான்.
“எனக்கும் அதான் தெரியல. என் பொண்டாட்டி நீ போ-னுதான் சொன்னா. பார்ப்போம். கதவ திறந்தா உள்ள போக வேண்டியதுதான். இல்லைனா, அப்படியே ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான். என்னால வேற என்ன பண்ண முடியும்?” மீண்டும் புன்னகையை தன் முகத்தில் அவர் ஏற்றிக் கொண்டார்.
இம்முறை அவரின் புன்னகைக்குப் பின்னால் ஒருவித வலியும் பயமும் இருந்தது.
“உங்ககிட்ட ஃபோன் எதுவும் இல்லையா?”
“இருந்துச்சுப்பா. நேத்து மோட்டார் செட்ல குளிக்குறப்போ, விழுந்துடுச்சு. நேத்து நல்லாதான் இருந்துச்சு. ஆனா, இப்போ வொர்க் ஆக மாட்டுது” அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாம்பரம் ஸ்டேஷன் வந்துவிட்டது. ரயில் முதல் நடைமேடையில் வந்து நின்றது.
தாம்பரத்தை பொறுத்தவரையில் ரயிலில் இருந்து இறங்குபவர்கள் இரு பக்கம் செல்லலாம் ஒன்று. மேற்கு தாம்பரம். மற்றொன்று கிழக்கு தாம்பரம். கிழக்கு தாம்பரம் வழி சென்றால் சேலையூருக்குச் செல்லலாம். அதற்கு எம்சிசி பஸ் ஸ்டாப் என்று இன்னொரு பெயரும் உண்டு. இப்போது பெரியவர் அந்த வழியில்தான் செல்ல வேண்டும்.
“தாத்தா, நீங்க இந்தப்பக்கமா இறங்கி போங்க. அதான் உங்களுக்கு வசதியா இருக்கும்.” என்று சொன்ன செழியன் வலப்பக்கமாக கையை நீட்டினான். அதோடு, “எனக்கும் பஸ்ஸூக்கு டைம் ஆகுது தாத்தா. இப்போ ஓடுனாதான் பிடிக்க முடியும்” அவசரமாகப் பேசியவன் இடப்பக்கம் இறங்கி ஹோட்டலுக்குள் புகுந்து, பஸ்ஸ்டாப்பை நோக்கி விறுவிறுவென வந்தான்.
அப்போது அவனை வழிமறித்து, “தம்பி சில்ற இருந்தா கொடுத்துட்டு போ பா” என்று ஒருத்தி தர்மம் கேட்டாள். அவன் செல்லும் வேகத்திலும் தன் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு துழாவினான். அவனது முகத்தில் சட்டென அதிர்ச்சியின் அலை அடித்தது.
அவன் பேண்ட்டில் இருந்து கையை எடுத்தான். அவன் கையில் பத்து ரூபாய் தாளுடன் அந்தப் பெரியவர் கொடுத்திருந்த விலாச தாளும் இருந்தது. அதுதான் செழியனுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. கையில் இருந்த பத்து ரூபாய் தாளை பணம் கேட்டவளிடம் கொடுத்து விட்டு, வந்த வழியே குடுகுடுவென ஓடினான்.
அவர் இறங்கிய பிளாட்ஃபார்மில் சென்று தேட ஆரம்பித்தான். அங்கும் இங்குமாக தேடி முடித்து ரயில்வே ஸ்டேஷனில் இருந்த பென்ச்சில் அவன் அமர்ந்தான்.
“நம்ம அவர்கிட்ட சேலையூர்னு சொன்னோம். எப்படியும் எம்சிசி வழியா போயிருக்க நெறைய வாய்ப்பு இருக்கு. அங்க போன அப்றம் நிச்சயம் அவர அட்ரஸ் சீட்ட தேடுவாரு. சோ, அவர் அங்கேயே நிக்க வாய்ப்பு இருக்கு” என்று தனக்குள்ளாக நினைத்த செழியன், பென்ச்சில் இருந்து எழுந்து குடுகுடுவென எம்சிசியை நோக்கி ஓட ஆரம்பித்தான்.
அவன் ஓடும்போது பலரை இடித்தான். பலர் அவனையும் இடித்தார்கள். “சாரி.. சாரி” என்று சொல்லிக்கொண்டே ஓடியவன், படிக்கட்டுகளில் வேகமாக இறங்கி பஸ் ஸ்டாப்பை நோக்கி ஓடினான். அங்கும் கூட்டம் இருந்தது. அவன் கூட்டத்திற்குள் எல்லாம் புகுந்து தேடிப் பார்த்தான். ஆனால், அவரைக் காணவில்லை.
அங்கிருந்த பரோடோ பேங்க் ஏடிஎம் அருகில் இருந்த ஆட்டோக்காரர்களிடம் செழியன் விசாரிக்க ஆரம்பித்தான். அவர்கள் யாரும் பார்க்கவில்லை என்றார்கள். நேரம் செல்ல செல்ல செழியன் தன் மீதே பழிபோடத் தொடங்கினான்.
“நான் அவர்கிட்ட பேச்சு கொடுத்திருக்க கூடாது. பத்து வருஷத்துக்கு அப்றம் பேர குழந்தைகள பார்க்க வந்தவரு. இப்போ என்னால வழி தெரியாம அலையப் போறாரு. பாக்காம திரும்பி போகப் போறாரு. ச்சே. ஏற்கனவே அவர் பார்க்கலாமா வேணாமான்னு ஒரு ஆஸிலேஷன்ல இருந்தாரு. இப்போ நிச்சயம் அவர் பாக்க போறதுல்ல. எல்லாம் என்னாலதான். நான் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும். ஆஆ” என்று செழியன் தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தான்.
அவன் நின்ற இடத்தில் இருந்தே மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றி பார்த்தான். அவர் எங்கிருக்கிறார் என்றே அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்கு ரூமுக்குச் செல்ல நேரம் ஆகிக்கொண்டிருந்தது. ஆனால், அங்கிருந்துச் செல்ல மனம் வரவில்லை.
“இன்னும் அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணி பார்ப்போம். இன்னும் அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணி பார்ப்போம்” என்று நினைத்தபடியே ஒரு மணி நேரத்தைக் கடந்திருந்தான். மணி எட்டாகியிருந்தது.
அவனது கால்கள் மெல்ல ரயில்வே பிரிட்ஜை நோக்கிச் சென்றது. அவன் ஒவ்வொரு அடியையும் மிகவும் மெதுவாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். அதோடு, ஒவ்வொரு அடிக்கும் அவர் வந்து விடுவாரா? அவரை எங்கேனும் கண்டு விட மாட்டோமா என அவன் திரும்பி திரும்பி பார்த்தபடியே நடந்தான். எத்தனை முறை திரும்பிப் பார்த்தும் எந்த பலனும் இல்லை. அவன் மீண்டும் ரயில்வே ஸ்டேஷனுக்குள் வந்தான்.
செழியன் இப்போது கொஞ்சம் கணமாக உணர ஆரம்பித்தான். அவனது இதயத்தின் மீது யாரோ பெரிய கல்லை வைத்தது போல இருந்தது. அவன் மெல்ல நடந்து கொண்டிருந்தான்.
இறுதியாக ஒரு முறை அவர் இறங்கிய பிளாட்ஃபார்மை நோக்கிச் செல்லலாம் என முடிவெடுத்தவன், ரயில்வே பிரிட்ஜில் இருந்து இறங்கி பிளாட்ஃபார்மில் நடந்தான். முதலில் இருந்து தொடக்கம் வரை நடந்து கொண்டிருக்க, அப்போது இன்னொரு ரயில் வந்தது.
சரியாக அந்த நேரத்தில் அங்கு செக்கர் வந்தார். சிகரெட்டுக்கு கையை நீட்டுவது போல ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் நீட்டி டிக்கெட் என்றார். செழியன் மன்த்லி பாஸ் வைத்திருந்தான். பேகில் இருந்து அதை எடுக்க முயன்றான். அதே நேரம் அவன் பார்வை அங்கும் இங்குமாக அலை பாய்ந்து கொண்டிருந்தது.
அவன் ஒருவரை அங்கும் இங்குமாக தேடிக்கொண்டிருப்பது, அந்த செக்கருக்கு அவன் டிக்கெட் வைத்திருக்கவில்லையோ என்ற சந்தேகத்தைக் கொடுத்தது. டிக்கெட் பரிசோதகர்களின் அறை அருகில்தான் இருந்தது.
“நீங்க அங்க வெயிட் பண்ணுங்க” டிக்கெட் செக்கர் தனக்குரிய வடமொழி வாசனையோடு சொன்னார். செழியனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதே நேரம், அவன் சண்டை போடும் நிலையிலும் இல்லை. அவன் அமைதியாக டிக்கெட் செக்கரின் அறைக்கு அருகில் சென்று, அந்தப் பெரியவர் எங்கேனும் இருக்கிறாரா என்று பார்த்துக் கொண்டே இருந்தான்.
அப்போதுதான் இருளை நீக்கும் ஒளி போல, “தம்பி” என்று சோர்வோடு ஒரு குரல் செழியனின் காதுகளில் வந்து விழுந்தது. செழியன் சட்டென திரும்பிப் பார்த்தான். டிக்கெட் பரிசோதகர்கள் அறையில் அந்தப் பெரியவர் நின்று கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் செழியனுக்கு திருவிழாவில் தொலைந்து போன குழந்தை தாயைக் காண்பது போல இருந்தது. அவன் கண்களில் சட்டென கண்ணீர் பூக்கத் தொடங்கியது.
“நீங்க.. நீங்க எப்படி?” என வார்த்தைகளில் பதட்டத்தைச் சேர்த்துக் கொண்டவன், அவரை நோக்கிச் சென்றான்.
“டிக்கெட் இல்லைனு இங்க நிக்க வச்சிட்டாங்க தம்பி. 250 கொடுத்துட்டு போக சொல்றாங்க.” இயல்பாகவே சொன்னார். அவரின் முகத்தில் கொஞ்சம் கூட பதட்டம் இல்லை. அவரிடம் விலாசம் இல்லை என்பதை அவர் உணரவே இல்லை என்பது செழியனுக்குப் புரிந்தது. அப்போது சரியாக அங்கு வந்த டிக்கெட் செக்கர் செழியனைப் பார்த்து, “உங்க டிக்கெட் எங்க?” என்று கேட்டார்.
செழியன் இப்போது நிதானத்துக்கு வந்தான். அவன் பேகில் இருந்த டிக்கெட்டை எடுத்து நீட்டியபடியே அந்தப் பெரியவரைப் பார்த்தான்.
“நானும் டிக்கெட் எடுத்தேன் தம்பி. ஆனா, எங்க வச்சனுதான் தெரியல” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க, செழியனின் கண்கள் அவர் வைத்திருந்த நைலான் பையை நோக்கிச் சென்றது. அந்தப் பையின் ஓரத்தில் டிக்கெட் இருக்க, செழியன் குனிந்து அதையும் எடுத்துக் கொடுத்தான்.
“ரெண்டு பேரும் டிக்கெட் வச்சிட்டுதான் இருந்திருக்கீங்க. அப்றம் ஏன் ஒரு மாதிரி இருந்தீங்க?” என்று மீண்டும் வடமொழி வாசனையோடு பேச, “அதான் தெரியல” என்று பெரியவர் சொன்னார். இதையடுத்து அவர்கள் இருவருமே அங்கிருந்து கிளம்பினார்கள்.
“நன்றி தம்பி. நீ வரலைனா, இன்னும் எவ்ளோ நேரம் இங்க இருந்திருப்பன்னு எனக்குத் தெரியாது” சுருக்கங்களை விரட்டியடிக்கும் புன்னகையோடு சொன்னார். “அதுலாம் இருக்கட்டும் தாத்தா. நீங்க வாங்க. நான் உங்கள உங்க பையனோட வீட்ல விட்டுட்டு போறேன்.”
“உனக்கு எதுக்குப்பா சிரமம்?”
“சரி. நீங்களா எப்படி போவீங்க?” செழியன் மர்மப் புன்னகையோடு கேட்டான்.
“என்கிட்டதான் அட்ரஸ் இருக்கே” தன் மேல் பாக்கெட்டைத் தொட்டார். அப்போதுதான், அவருக்கு தன்னிடம் அட்ரஸ் இல்லை என்பதே தெரிந்தது. செழியன் புன்னகையோடு அட்ரஸ் பேப்பரை நீட்டினான்.
இருவரும் ஒருவரை பார்த்து ஒருவர் புன்னகைத்தார்கள். செழியன் அவரை அழைத்துக் கொண்டு பேருந்தில் ஏறினான். “தாத்தா, பத்து வருஷமா இங்க வரணும்னு தோணல. உங்க மகனோட குடும்பத்த பார்க்கணும்னு தோணல. இப்போ திடீர்னு ஏன் இந்த சேஞ்ச்?” செழியனின் கண்கள் பெரியவரை குறுகுறுவென பார்க்க, அவரும் அவனைப் பார்த்தார். பின்னர், மெல்ல ஜன்னல் பக்கம் திரும்பினார்.
“தாத்தா?”
“ஒருவேள நான் அவுங்களோட தாத்தான்றதாலயா இருக்கலாம். என் புள்ளையோட அப்பான்றதாலயா இருக்கலாம்” சொல்லிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் தலையைத் திருப்பினார். செழியனுக்கு இந்தப் பதில் போதுமானதாக இல்லை.
“இது சரியான பதில் இல்லையே” செழியன் குழம்பினான். “ சில நேரம் சில விஷயத்த நாம புடிச்சு தொங்கு தொங்குனு தொங்குவோம். காலம் போக போகதான்.. அதெல்லாம் ஒரு விஷயமே இல்லைனு தோணும். அப்படி தோன்றப்போ நம்ம எவ்ளோ முட்டாளா இருந்தோம்னு தெரியும்.” என்றார், பெரியவர்,
“உங்களுக்கு எப்போ அப்படி தோணுச்சு?”
“கொஞ்ச மாசத்துக்கு முன்ன திடீர்னு ஒரு நாள் ஏன் என் பையனோட காதல நான் ஒத்துக்கலன்னு என்ன நானே கேள்வி கேட்டுக்கிட்டேன். அதுக்கு நானே பதிலும் சொல்லிப் பார்த்தேன். ஆனா, நான் சொன்ன எந்த பதிலும் எனக்கே சரியாப் படல. அப்பவே நான் கிளம்பி வரணும்னு முடிவு பண்ணேன். தயக்கம் இருந்துட்டே இருந்தது. இப்போ அந்த தயக்கத்தையும் கொஞ்சம் உடைச்சிட்டு வந்து நிக்குறேன்” என்றார்.
செழியன் அவரைப் பார்த்துக் கொண்டிருக்க, சேலையூர் என்று நடத்துநர் கத்தினார். இருவரும் இறங்கினார்கள். அங்கிருந்தவர்களிடம் செழியன் விசாரிக்க, அட்ரஸ் தெளிவாகத் தெரிந்தது. தெரு விளக்கின் ஒளிகளை மறைக்கும் அளவிற்கு வளர்ந்திருந்த கொடிகளைத் தாண்டி ஒரு வீடு இருந்தது. வீட்டின் சுற்றுச் சுவர் முழுக்க பூக்களால் நிறைந்திருந்தது.
அந்த வீட்டைக் காண்பித்து, “இதுதான் உங்க பையன் வீடு” என்றான். அவருக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது. அவரின் இதயத்துடிப்பு கொஞ்சம் வேகத்தைக் கூட்டிக் கொண்டது.
“எனக்கு ஒரு மாதிரி இருக்கு தம்பி” பதட்டத்தோடு சொன்னார். “நீங்க எவ்ளோ சீக்கிரம் காலிங் பெல்ல அடிக்குறீங்களோ.. அவ்ளோ சீக்கிரம் இந்த படபடப்பு போய்டும்” என்றான்.
“புரியுது. ஆனா..” பெரியவர் தயங்கினார்.
“நீங்க தயங்கி தயங்கி இருந்தது போதும். இப்போ போங்க”
“கூட நீயும் வறீயாப்பா?”
“அது நல்லாருக்காது. நீங்க போங்க. தேவையில்லாத கௌரவத்தால இழந்த வாழ்க்கைய இனியாது வாழுங்க” சட்டென செழியன் பெரியவராகப் பேசினான். அவர் சிறுவன் போல நடுங்கினார்.
செழியன் அவரின் கையைப் பிடித்து, வீட்டிற்கு முன் வரை அழைத்துச் சென்று விட்டான். அவர் செழியனைத் திரும்பி பார்த்தார். அவன் “போங்க.. போங்க” சைகை காட்டினான். தலையை மேலும் கீழுமாக ஆட்டிவிட்டு, ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்துவிட்டு கதவுக்கு அருகில் சென்றார். அவருக்கு அது சொர்க்கத்திற்கான கதவு போல இருந்தது.
செழியன் காம்பவுண்ட்டுக்கு அருகில் இருந்தான். பெரியவர் காலிங்பெல்லை அடித்தார். அவரின் உடல் பதற்றத்துடன் நடுங்கிக் கொண்டிருந்தது. செழியனும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.
மெல்லிய ஒளி வெளியே வர, கதவு திறந்தது. பெரியவர் உள்ளே போனார். செழியன் சில நிமிடங்கள் அப்படியே நின்று கொண்டிருந்தான். உள்ளே போன பெரியவர் வெளியே வந்தார். அவர் வந்ததும் செழியன் அவரை நேருக்கு நேர் பார்க்க, அவர் தன் சுருக்கங்கள் மறைய புன்னகைத்தார். அதைக் கண்டதும் செழியன் புன்னகையோடு அவரைப் பார்த்து தன் தலையை மேலும் கீழும் ஆட்டினான்.
வீட்டிற்குள் இருந்து “மாமா” என்று ஒரு பெண்ணின் குரல் வந்தது. அவர் புன்னகையோடு தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றார். குற்ற உணர்ச்சியுடன் தன் அறைக்கு செல்லப் போகிறேன் என்று பயந்து கொண்டிருந்தவன், முகம் மட்டும் அல்லாமல் மனம் முழுவதும் புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பினான்.