
மெல்லிய அதிர்வு
வழக்கத்தை விட
பாட்டியின் தும்மல் சத்தம்
அதிகமாகவே கேட்டது
தாத்தா புரட்டும்
செய்தித்தாளில்
பெரியதாய் சலசலப்பு
நடந்துதான்
சென்றார் அப்பா
என்றும் இல்லாத அதிர்வு
அம்மா திட்டியது
அன்றுதான்
என் காதை கூராய்க் கீறியது
தம்பி உருட்டும்
சின்னச் சின்ன பொருளும்
திரும்பிப் பார்க்க வைத்தது
இதுவரை கவனித்ததில்லை
அக்காவின் கொலுசில்
தவழ்ந்தாடிய இசையை
இது என்ன
எதிர் வீட்டுப்
புதுமாப்பிள்ளையின்
கொஞ்சலும் கெஞ்சலும்
கூடக் கேட்கிறதே!
வியர்வை துடைத்து
மேலே பார்த்தேன்
ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது
மின்விசிறி
குளிர்சாதனப் பெட்டியிலிருந்து
நழுவிக் கொண்டிருந்தது நீர்
புரிந்து போயிற்று
இன்று மின்வெட்டு.
*
நினைவின் பள்ளங்கள்
எந்த அசைவுமற்றிருக்கும்
இந்த இரவின் கிளைகளை
உலுக்கி உலுக்கி அயர்ந்துவிட்டேன்
ஓரமாக ஒரு ஒளிக் கீறலோ
நேசமாக ஒரு கை விரலோ
மெல்லிதாக ஒரு மென்குரலோ
தூரமாக நிலவின் சாயலோ
இந்நகர்வற்ற நொடியில்
வந்திருந்தால் பிழைத்திருப்பேன்
பிரயாசைப்பட்டு அமர்த்திய நினைவுகள்
திடீரென வீறிட்டு அழுவதை
எத்துயரினால் துடைப்பேன்?
*
காலி சத்தம்
விழியின்
வதங்கிய பார்வை
உதட்டின்
வெடித்த பெருங்கோடுகள்
விரிந்த கரங்களின்
கையறு நிலை
பாதியும் நிரம்பாத வயிற்றுள்
நிரம்பி வழியும்
காலி சத்தத்தின் கூப்பாடு
யாரும் பார்க்கவில்லை
யாருக்கும் கேட்கவில்லை என்பது போல்
அவரவர்க்கு அவர் வாழ்வு
அவரவர்க்கு அவர் பசி
அவரவர்க்குள் சுருங்கிவிடும் உலகு.
*