‘ஒரு காலனியில் ஒரு ராணி’ – குறுநாவல் வாசிப்பனுபவம் – கார்த்திக் வாசன்

புத்தகத்தின் தலைப்பும் அட்டைப் படமும் என்னை மிகவும் வசீகரித்தது. ராஜா ராணி என்றால் அரண்மனையில்தானே இருப்பார்கள் ஆனால் இந்த புத்தகத்தின் தலைப்பான “ஒரு காலனியில் ஒரு ராணி “என்பது காலனியில் ராணியா…! என்ற ஆச்சரியத்தையும் அதை அறிந்து கொள்வதையும் என்னுள் தூண்டியது.
பறை இசையை எல்லோரும் அனுபவிக்கிறார்கள், ரசிக்கின்றார்கள். ஆனால், அதை வாசிப்பவனை மட்டும் ஏன் தரையில் துப்புகின்ற உமிழ்நீரைப் போன்று பார்க்கிறார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. மனிதனின் வாழ்வில் ஒன்றிணைந்தது இசை. அதில் பாகுபாடு பார்க்கக் கூடாது. வேற்றுமையாக கருதக் கூடாது. பறை இசைப்பதும் ஒரு வகையான கலைதான். எல்லோருக்கும் அக்கலை எளிதில் வாய்த்திடாது.
இந்த படைப்பில் சிறப்புகளில் ஒன்றான “வட்டார வழக்கு” என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வட்டார வழக்குதான் அந்த மண்ணையும் மக்களையும் நம்மோடு ஒன்றிணைக்கும் பாலம். வட ஆற்காடு பகுதியை சார்ந்த மக்களின் மொழி இந்நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வட்டார வழக்கு படைப்புகளை வாசிப்பதன் மூலமாக நமக்குள் மறைமுகமாக அந்த ஊரின் மேலோ அல்லது அந்த மக்களின் மேலோ ஒரு மறைமுக பற்று ஏற்படுகிறது. முதல் படைப்பிலேயே வட்டார வழக்கில் எழுதி அசத்தி இருக்கிறார் ஆசிரியர்.
இது ஒரு பெண்ணின் கதை. இதுபோன்ற பெண்களை காண்பது அரிது. அந்த பெருமைக்குரிய பெண்ணின் பெயர் வள்ளி. மனதில் பட்டதை தைரியமாக பேசக் கூடியவள், சரியென நினைப்பதை தயங்காமல் செய்பவள், சாதி தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுப்பவள், சாதி தீண்டாமையை கடைபிடிக்கும் நபர்களின் குரல் வளையை நசுக்குபவள். படித்த பட்டதாரி.
முற்போக்கான சிந்தனைகள், கடவுள் மறுப்பு கொள்கை, சம உரிமை வேண்டுதல். போன்றவற்றை நிலைநாட்டுவதில் முனைப்பாக திகழ்கிறாள். தன்னுடைய தாத்தாவின் உந்துதலினால் பறை வாசிப்பின் மேல் பித்தம் கொண்டு முறையாக கற்று பிறருக்கு கற்றும் தருகிறாள்.
பறை அவளுக்கு மற்றொரு இதயம். தன்னுடன் பறைய எப்போதும் வைத்திருக்கிறாள். தன்னுடைய பாசம், கோபம், கருணை, அன்பு, வீரம் என எல்லாவற்றையும் பறையிடம் பொழிகிறாள். வள்ளியின் வீரமும் சாதி தீண்டாமைக்கு எதிராக வெகுண்டு எழுவதும் மிகச் சிறப்பான ஒன்றாகும். ஆசிரியர் சாதி வெறியர்களை மிருகம் என்று குறிப்பிடுகிறார்.உண்மையிலும் மிகச் சரியான பொருத்தமான பெயர்தான் அது. வள்ளி தனது சிறு வயது முதலிலிருந்து சாதி தீண்டாமைகளுக்கு நிறைய ஆளாகிறாள்.
நாவலின் தொடக்கத்திலேயே தொடர் மழையின் காரணமாக சரிந்து விழுந்த மின் கம்பத்தை சரி செய்து கொடுக்கச் சொல்லி முறையிடுவார்கள். அந்தப் பிரச்சனைகளின் மூலமாகவே அந்த ஊரில் சாதி தீண்டாமை எந்த அளவுக்கு தலைத்தூக்கி இருக்கிறது என்பதை நன்றாகவே தெரிந்து கொள்ளலாம்.
சுடு காட்டுக்கு செல்லும் புறம்போக்கு வழித்தடத்தை காலனிக்காரர்கள் சுத்தம் செய்து சுடுகாட்டுக்கு போய் வருகின்ற வழியாக அமைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அந்த நிலத்தையும் அவர்களிடமிருந்து பிடுங்கி மேல் தெருக்காரர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். அரசு அதிகாரிகளும் இந்த விஷயத்தில் மேல் தெருக்கார்களுக்கு சாதகமாக இருக்கிறார்கள் பிணத்தைக் கூட அந்த வழியில் செல்ல விடாமல் சுத்திக்கொண்டு செல்லுங்கள் என மேல் தெருக்காரர்கள் கூறுகிறார்கள். இங்கு பிணம் கூட சாதி தீண்டாமைக்கு ஆளாகிறது என்பதுதான் நகைப்புக்குரியதாக இருக்கிறது.
தனது காலுக்கு கீழே அடிமையாக இருக்கின்ற மக்கள், அவர்கள் சாகும் வரை அடிமையாக தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற மக்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். மேற்கூறியது போன்று நினைக்கின்ற நிறைய மக்கள் இந்த நாவலில் உலாவுகின்றார்கள்.
காலனிக்காரர்களின் ஒருத்தன் தனது சொந்த உழைப்பினால் சுய சம்பாத்தியத்தினால் தனது ஓலை வீட்டை மாற்றிவிட்டு கான்கிரீட் போடலாம் என முடிவு செய்கிறான். ஆனால், அவன் தனக்கு சமமாக வந்து விடுவானோ என எண்ணி அதையும் தடுக்கிறார்கள் மேலத்தெருக்காரர்கள். எவ்வளவு வன்மம் நிறைந்த மக்கள்.
தனது சக பள்ளி மாணவன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவனை தனது சைக்கிளில் வைத்து அவனது வீட்டில் விட்டு வருகிறாள் வள்ளி. ஆனால், அவள் வீட்டில் அவனை விட்டு வரும்போது மிகவும் துக்கத்தோடுதான் வீடு திரும்புகிறாள். ஏனென்றால் அவனது வீட்டில் அவளுக்கு சாதி தீண்டாமை நடந்திருக்கும். அவளை யாரெனவும், எந்த ஊர் எனவும், குல தெய்வத்தின் பெயர் என்ன எனவும், குலத்தொழில் என்ன எனவும் என அவளுடைய சாதியைத் தெரிந்து கொள்வதற்காக பல்வேறு வண்ணம் மறைமுக கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பாள் அந்த மாணவனின் பாட்டி.
தான் செய்த உதவியை மறந்துவிட்டு தான் நின்ற இடத்தில் தண்ணீர் ஊற்றிக் கழுவுமாறு தனது மருமகளுக்கு ஆணையிடுகிறாள் கிழவி அதைக் கேட்கும் போது வள்ளி மிகவும் மனதளவில் நொந்து போகிறாள். கிழவியை எதிர்த்து ஒரு சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு துக்கத்தோடு வீடு திரும்புகிறாள். உதவி செய்வதற்கு கூட இங்கு சாதி தேவைப்படுகிறது.
கருப்பனை சுடுகாட்டில் புதைப்பதற்காக சென்று கொண்டிருக்கும் பொழுது மேல் தெருக்காரர்கள் கல்விச்சு தாக்குதல் செய்து அவர்களை அங்கிருந்து விரட்ட முயற்சி செய்கிறார்கள். ஆனால், வள்ளியின் பெரும் கோபமும் வீரமும் அந்த இடத்தில் வெளிப்பட்டு, மேல் தெருக்காரர்களை அரிவாளால் வெட்டுவதற்கு கல் அடிப்பட்டுக் கொண்டே ரத்தம் வழிய வழிய முன்னேறுகிறாள்.
எதிர்த்து கேள்வி கேட்காமல் இருந்தாலும் “ஆமாம் சாமி” போட்டுக் கொண்டிருந்தாலும் நம்மை இன்னும் ஏறி மிதித்துக் கொண்டுதான் இருப்பார்கள். நம்மை அவர்கள் அடிமைச் சங்கிலியில் இருந்து ஒரு பொழுதும் விடுவிக்க மாட்டார்கள், அதை எதிர்த்து நிற்க வேண்டும் அநீதியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் வள்ளியின் கோட்பாடு கொள்கை எல்லாமும்.
வள்ளியின் மேல் காதல் கொண்டு ராம்குமார் அவளை பின்தொடர்கிறான். பறை வாசிப்பது மேல் இருக்கக்கூடிய விருப்பமே அவனை அவளோடு கொண்டு வந்து சேர்த்தது. ஒரு சாதாரண காதலியாக வள்ளி செயல்பட மாட்டாள். தனது மனதுக்குத் தோன்றுவதை அவனிடம் முகத்திற்கு நேராகச் சொல்லி விடுகிறாள். ராம்குமாருக்கு அவளை ஆரம்பத்தில் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனால், அவள் பால் கொண்ட காதல் அவனை கட்டுப்படுத்தி வைத்திருந்தது. வள்ளியினுடைய அம்மா மஞ்சுளா, ராம்குமாரின் அப்பா தோட்டியின் கழனியில் தான் வேலை செய்பவளாக இருப்பாள். வள்ளி ராம்குமாரை எவ்வளவுதான் காயப்படுத்தினாலும் ராம்குமார் பொறுத்துப் போகின்றனாகவே இருப்பான்.
மாட்டுக்கறி மற்றும் பன்றிக் கறி என இரண்டை பற்றியும் மிகவும் ருசிகரமாக நாவலில் பதிவு செய்திருக்கிறார். வள்ளிக்கு விருப்ப உணவாக பன்றிக்கறியும், அவளின் அம்மாவுக்கு விருப்ப உணவாக மாட்டுக்கறியும் இருக்கும். இந்த இரண்டையும் வள்ளியின் அப்பா வேல் தயாரிப்பதில் மிகவும் கை தேர்ந்தவராக இருக்கிறார். வள்ளி தனது வீட்டில் இருக்கக்கூடிய பூனை, நாய் மற்றும் கோழிகளிடம் மிகவும் பற்று உள்ளவளாக இருக்கிறாள். தன்னுடைய இன்ப துன்பங்களை அதனிடம் பகிர்ந்து கொள்கிறாள். ஊர் முழுவதும் உள்ள ஆட்களுக்கு வள்ளியிடம் பழகுவதற்கு ஒரு சில தடை இருக்கிறது. தன் மகளோ மகனோ படிப்பதை விட்டு பறை வாசிக்கச் சென்று விடுவார்களோ என்கிற பயம்தான்.
பறை வாசிப்பின் மேல் அவளுக்கு இருந்த பற்று என்பது போற்றுதலுக்குரிய ஒன்றாகும். சிறு வயது முதலே தனது தாத்தாவின் மூலமாக பறை இசை கேட்டு வளர்வதால் அவளுக்கு பறையின் மேல் ஒரு தனி கவனம் ஏற்படுகிறது. அந்த ஊரில் இருக்கக்கூடிய மற்ற பெண்களில் இருந்து முற்றிலும் வேறு பட்டவளாக வள்ளி காணப்படுகிறாள். ஒருமுறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது அருகில் வந்த அமரும் பாட்டி அவளிடம் அவளுடைய சாதியை அறிந்து கொள்வதற்காக பல்வேறு கேள்விகளை முன் வைப்பாள். இறுதியில் அவளுக்கும் அந்த பாட்டிக்கும் சண்டையில்தான் அது முடியும்.
இருவரின் வீட்டுக்கும் தெரியாமல் வள்ளியும் ராம்குமாரும் காதல் புரிகிறார்கள். இதற்கிடையே வள்ளி மிகப்பெரிய துரோகத்தால் சூழ்ந்து கொள்ளப்படுகிறாள். துரோகத்திற்கு உண்டான விளக்கத்தை கொடுத்து ராம்குமார் வள்ளியிடம் மீண்டும் சரண் அடைகிறான். வள்ளி என்ன ஆனாள்? அவர்களுடைய காதல் நிறைவேறியதா? அவர்கள் காதல் திருமணம் புரிந்து கொண்டு ஊரில் வசித்தார்களா? ஊரில் அவர்களுடைய காதலுக்கு ஏதேனும் எதிர்ப்பு ஏற்பட்டதா? எந்த மாதிரியான எதிர்ப்பு ஏற்பட்டது? வள்ளிக்கு என்ன துரோகம் நேர்ந்தது? என்பதே நாவலின் சுவாரசியமான முடிவு. இன்றும் பெண்களை காகிதத்தை போல் கசக்கி எறிகின்ற மிருகங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நாவலில் வரக்கூடிய மணி என்கின்ற கதா பத்திரம் மிகச்சிறந்த ஒரு கதாபாத்திரம். இது போன்ற ஆட்களை நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். நம்மோடு அவர்கள் பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உதவி கேட்டு வரும் வள்ளிக்கும் ராம்குமாருக்கும் எந்த விதமான ஆட்சேபனையும் தெரிவிக்காமல் உதவி புரிவான். அம்பேத்கர் சிலையின் முன்பாக இருவருக்குமான திருமண ஏற்பாடுகளையும் மணியே செய்து வைப்பான். மணியைப் போன்ற நபர்கள் நமது மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஊரிலிருந்து வருபவர்களை வரவேற்க விடியற்காலை மூன்று மணியிலிருந்து பேருந்து நிலையத்தில் காத்திருப்பான் மணி.
தனது காலனி பகுதியில் திறக்க இருக்கும் நியாயவிலை கடைக்கு “காலனி நியாய விலை கடை” என பெயரிடுவார்கள். அதை பெயர்ப்பலகையில் எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே காலனி நியாய விலை கடை என ஏன் பெயர் வைக்கிறீர்கள் என்று சண்டையிடுவாள் வள்ளி. அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்ற குணம், அவளுடைய போராட்ட குணத்திலிருந்து தெரிந்து கொள்ளப்படுகிறது. பறையை தன்னுடன் எப்பொழுதுமே வைத்துக் கொண்டிருக்கிறாள். அநியாயத்துக்கு எதிராக ஒலிக்கும் குரலாக பறை இசையை வள்ளி கருதுகிறாள்.
பெண்களை காதல் என்று பெயரில் அவர்களின் உடலை மட்டும் பயன்படுத்திக் கொண்டு அவர்களை தூக்கி எறிகின்ற மிருகங்கள் இன்னும் இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதுபோன்ற மிருகங்களின் மூலமாக பெண்கள் தங்களுடைய காதல் மீதும் அதனுடைய வலிமையின் மீதும் இருக்ககூடிய நம்பிக்கையை இழந்து விடுகின்றார்கள்.
எவ்வளவுதான் சமூகப் போராளியாக இருந்தாலும், சமூகத்தில் ஏற்படும் அநீதியை எதிர்க்கும் குரலாக இருந்தாலும், அடிப்படையில் அவர்கள் பெண்கள்தானே என்கிற ஏளனமான எண்ணமுடைய மிருகங்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். பெண்கள் தனது பெற்றோர்களுக்கு அடுத்து எவர் மீது அதிக அன்பு வைக்கிறார்களோ அவர்களிடமிருந்து கிடைக்கும் ஏமாற்றமான செயல் பெண்களை துயரமான நிலைக்கு அழைத்துச் செல்கின்றது என்பதை மறுக்கவே முடியாது.
வள்ளியைப் போன்ற போராட்ட குணம் கொண்ட, சாதி தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்கின்ற, சமூக உரிமை வேண்டும் என நினைக்கின்ற, மனிதனாக பிறக்கின்ற எவரும் மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்க வேண்டும் எனவும், வர்ணத்திற்கு எதிராக, பாகுபாடுக்கு எதிராக செயல்படுகின்ற எவரும் வள்ளி தான். அவர்கள் காலனியில் இருந்தாலும் ராணிதான்..!
அனைவரும் வாசியுங்கள்.