கீர்த்திவாசன் (எ) கிளியோபாட்ராவின் தந்தை – இளஞ்சேரன் ராஜப்பா
சிறுகதை | வாசகசாலை

தாய் எடுத்துவிடும் நேர்த்தியான வகிடைப்போல் நடு மண்டை பிளந்து சிவப்பு மயிர்கள் பனிக்காற்றோடு உறைந்து போயிருக்க கண்களைத் திறந்தும் மூடியும், மூடியும் திறந்தும் இறப்பின் பீதியற்று அமர்ந்திருந்த அச்சிறுமி கிளியோபாட்ராவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
குன்னூர் அரசு மருத்துவமனை ஒருபோதும் இத்தனை நோயாளிகளுடன் காணப்பட்டதில்லை. மலைப் பிரதேசத்தவர்களுக்கு காய்ச்சல், கபம், இருமலெல்லாம் எப்போதும் அவர்களுடனேயே ஒட்டியிருக்கும் ஒரு நிலை, வியாதியல்ல. மயிலின் நியதிக்கு உட்பட்டு தோகையில் படிந்திருக்கும் நீலத்தைப்போல. எப்போதாவது விஷப்பூச்சி கடித்ததாக சில தேயிலைத் தொழிலாளர்கள் வந்து போவார்கள். ஒரு சம்பரதாயத்திற்குத்தான். சமவெளி மக்களுக்கு உள்ள பாதுகாப்பின்மை, மலையில் வாழ்பவர்களுக்கு ஏனோ இருப்பதில்லை. இயற்கை கொடுத்த துணிச்சலாக இருக்கலாம். அதனாலேயே, நேற்றுவரை ஒன்றிரண்டு மருத்துவர்களோடும் சொற்பமான நோயாளிகளோடும் இயங்கி வந்த இந்த பாசிப்பச்சையேறிய புராதன பிரிட்டிஷ் கால கட்டிடம், இன்று சிதிலமடைந்த உடல்களும், உறையப் போகும் ரத்தங்களும், பெயர்ந்து சிதறிய சதைகளுமாய் நிறைந்துள்ளது.
முகநூலில், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற ரயிலொன்று கவிழ்ந்துவிட்டாதாக தோழி பகிர்ந்திருந்த செய்தியைப் பார்த்தபோது, கிளியோபாட்ரா அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், காயமடைந்தவர்களின் கூட்டத்தில் தன் தந்தையையும் பார்த்ததாக யாரோ சொன்னபோதுதான் அடித்துப் பிடித்து இங்கு ஓடி வந்தாள். வந்தவள், வலியில் துடிக்கக் கேட்கும் கோரக் கூச்சல்களுக்கு நடுவே அப்பாவின் குரலையும் தேடியபடி நின்று கொண்டிருந்தாள். கண்முன் தெரிகின்ற காயங்கள் ஒவ்வொன்றையும், அப்பாவின் சரீரத்தின் மேல் பொருத்திப் பார்த்து கற்பனை செய்வதை அவளால் நிறுத்த முடியவில்லை.
“மொகத்த வெச்சு கண்டுபுடிக்கறதே கஷ்டமா இருக்கு. பேரு மட்டும் சொன்னா எப்படிமா?” தலையிலிருந்து பீறிட்டு வெளிவந்த சிறுமியின் ரத்தத்தை பஞ்சு வைத்து துடைத்தபடியே நர்ஸ் கேட்டார். “கொஞ்ச நேரம் இங்கியே நில்லு. பேஷன்ட்டோட பாக்கெட்ல, பர்ஸுல எதாவது நீ சொல்ற பேர் இருந்தா கூப்பட்றேன். ஆமா, என்ன பேரு சொன்ன?”
“கீர்த்திவாசன்”
“அவரு உனக்கு…?”
“அப்… அப்பா…”
வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், கிளியோபாட்ராவிற்கு தன் அப்பா மீதிருந்தது பற்றற்ற தன்மைதான். வெறுப்பிற்கும் விருப்பத்திற்கும் நடுவே உள்ள ஓர் ‘கருத்தில் கொள்ளாத’ நிலை. சதா காலமும் கோவம். தான் கோபம் கொண்டிருப்பது புரியாமல், தன்மீது அன்பைப் பொழியும் வேளையில், அப்பா மீதிருந்த கோபம் இன்னமும் பெருகும். இதெற்கெல்லாம் இந்த பத்தொன்பது வருடங்களில் எவ்வளவோ காரணங்கள் கிளியோபாட்ராவிற்கு உண்டென்றாலும், அதன் முதற் காரணம் அவள் பிறப்பதற்கு எட்டு நாட்களுக்கு முன்பே நடந்தாயிற்று.
“கீர்த்தி… டாக்டர் டெலிவரி இன்னைக்கோ நாளைக்கோங்கறாரு. இந்த நேரத்துல நீ எகிப்துக்கு போறன்னு சொல்ற? டூ யூ ஈவன் லவ் மீ?”
“எனக்கு புரியுது. ஆனா, ரெண்டு வாரத்துல விசா எக்ஸ்பயரி ஆயிடும். உனக்குத் தெரியும், எகிப்தியன் ஆர்ட்ஸ விசிட் பண்றது என்னோட வருஷாவருஷக் கனவு. என்னோட எக்ஸ்பரிமண்ட்டுக்கும் உதவியா இருக்கும். அண்ட் தோஸ் ஆர் தி மோஸ்ட் பியூட்டிஃபுல் ஆர்ட் இன் திஸ் வேர்ல்ட்”
“என்னோட சிரிப்புதான் உலகத்துலையே அழகுன்னு சொன்ன? அப்பொ அதெல்லாம் பொய்யா?”
மதியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அசடு வழிந்து கொண்டிருந்த கீர்த்திவாசனை, அன்று கிளியோபாட்ராதான் வயிற்றிற்குள் அசைந்து கொடுத்து காப்பாற்றினாள்.
“ஹே…! பாப்பா அசையறா பாரு…”
கீர்த்தி, அடி வயிற்றில் கை வைத்துப் பார்த்தான். மண்ணை முட்டி முளைக்கத் துடிக்கும் ஓர் புல்லின் பரவசத்தோடு கிளியோபாட்ரா வயிற்றுச் சதையை மோதிக் கொண்டிருந்தாள். “கண்டிப்பா நான் வந்ததுக்கப்பறம்தான் பொறக்கும். நோ வொரீஸ். அண்ட் நான் பொய் சொல்லல. உன்னோட சிரிப்புதான் உலகத்துலயே ரொம்ப அழகு”
கீர்த்தி ஓர் கட்டற்ற ஓவியன். அமைப்புகளின் கீழும் நிறுவனங்களின் கீழும் ஒரு கலைஞன் இயங்குவானேயானால் அவன் பரிதாபத்திற்குரியவன் என்றும், மூளை ஊனம் கொண்டவனென்றும் சொல்லிச் சிரிப்பான். மதி ஏற்படுத்தி கொடுக்கின்ற அனேக அலுவலக வேலைகளைக்கூட, பொருட்படுத்துவதில்லை. ஆரம்பத்தில் அவனது செயல்களை நொந்து கொண்டவள், அதன்பிறகு அதிலிருந்து வெளிப்படும் நியாய அர்த்தங்களால் சமாதானமாகிவிடுவாள். இந்த எகிப்திய பயணம்கூட, அது போன்ற ஓர் அர்த்த சமாதானம்தான். கீர்த்தியின் கனவுகளுக்குள், அவளால் கர்வமின்றி உலாவ முடியும். “ஈஃபில் டவர குப்புறப்படுத்து பாக்கணும் மதி. அண்ணாந்து பாக்கறதுல என்ன ஸ்வாரஸ்யம் இருந்தறப் போகுது?”. தர்க்கங்களை நாசுக்காக விலக்கி கனவு காணும் உத்தி கீர்த்திவாசனின் வசமிருந்தது. அவன் ஓவிய உலகின் உச்சத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால், அந்த உச்சத்தை அவனைத் தவிர வேறு ஒருவராலும் காண முடியாது. “அதனால என்ன?” கீர்த்தி சொல்வான், “மேகத்துக்கு மேல கூட்ற பறவைங்கள எல்லாராலையும் பாக்க முடியுதா என்ன…?”
நடுக்கடலில் வெட்டி வீசப்பட்ட சைரஸின் உடலுறுப்புகளை அள்ளியெடுத்து வந்து அதனை ஒரு சேர கட்டியிணைத்து, அதன் மேல் சுயபுணர்வு செய்து மீண்டும் சைரஸை தன் வயிற்றிற்குள் கருவுற வைத்த ஐசஸின் காதலைப் பற்றியும், பெண்களின் சம பெருமையை நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாடு முழுதும் சாத்தியப்படுத்திய எகிப்தியர்களின் தொலை நோக்கைப் பற்றியும், ஒருநாள் கெய்ரோவில்… மாலை தேநீர் சந்திப்பில் ஒரு வழிகாட்டி சொன்ன – எகிப்தின் ஆதிக்கடவுள் வானத்தின் மீது ஏறி நின்று சுயபோகம் செய்தார். அதிலிருந்து தெறித்த விந்துத்துளிகளின் மூலம் ஆண் கடவுளும் பெண் கடவுளும் இவ்வுலகில் தோன்றினார்கள் – என்ற வரலாற்றைக் கேட்டு, கீர்த்தியும் அன்றிரவு தான் தங்கியிருந்த விடுதியின் மொட்டை மாடிக்குச் சென்று கண்களை மூடி சுயபோகம் செய்து விந்துத் துளிகளை தெறிக்கவிட்டு ஒரு கடவுளைப்போல படியிறங்கி வந்ததைப் பற்றியும், அங்கு கிடைத்த நீலத் தாமரைகளை அளவுக்கு அதிகமாக உண்டு ஆத்மபோதை அடைந்ததைப் பற்றியும், கலாச்சார சுவரோவிய வரலாற்றுப் படிமங்களைப் பற்றியும், இன்னமும் இன்னமும் அவனடைந்த அதியற்புத அனுபவங்களையெல்லாம் மதியிடம் சொல்லித் தீர்ப்பதற்காக எட்டு நாட்கள் கழிந்து வீடடைந்தான்.
அவன் உச்சமாய் ரசித்த சிரிப்புடன் வீட்டின் முற்றத்தில் மதி அசைவற்று படுத்திருந்தாள். அதை வேறு யாரும் கண்டுணர்ந்திருக்க வாய்ப்பில்லை. அது அவனுக்கான ப்ரத்யேகச் சிரிப்பு. ஆனால், அதில் சீவனில்லை. இந்த உலகத்தில் எல்லாவற்றிற்கும் மரணமுண்டு. சிரிப்பிற்குக்கூட.
“இப்போ ஏன் எல்லாரும் அழறீங்க?”, சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்து கூச்சலிட்டான். “மதி நம்மள விட்டு போய்ட்டான்னு நீங்க சொல்றது அபத்தமா இருக்கு. இனிமே அவ மொகத்த பாக்க முடியாது. அவ்ளோதான? நான் முகங்கள நம்பறதில்ல…”
இன்னும் மருத்துவமனையின் உள்ளேயிருந்து கீர்த்திவாசனை பற்றிய எந்த தகவலும் இல்லை. மரத்தூண் அருகே போடப்பட்டிருந்த ஒரு இரும்பு நாற்காலியில் கைகளைப் பிசைந்தபடி கிளியோபாட்ரா அமர்ந்திருந்தாள். குன்னூரின் இரவுகள் எப்போதும் ரசிக்கும்படி இருப்பதில்லை. குளிர், தலையை சிலிப்பிக்கொண்டு ஊருக்குள் புகும். கடுங்கூரான ஊசிகளைத் தூவியதுபோல, காற்று உடலை நொடிக்கு நொடி பதம் பார்க்கும். இரவுக்கே உரித்தான தயையற்ற தனிமை, அந்த வராண்டாவை கொஞ்சம் கொஞ்சமாய் சூழ்ந்துகொண்டிருந்தது. திடீரென அங்கு சிலர் கேமராவோடும் மைக்குகளோடும் வந்து நின்றார்கள். வாகனச் சப்தமும் கண் கூசச்செய்யும் சன்-கன் விளக்குகளுமாய் நொடிப்பொழுதில் இடமே பரபரப்பானது. மருத்துவமனையின் உட்கட்டிடத்திலிருந்து ஒரு கூட்டம் வெளிவர, அதன் மையத்தில் காயமடைந்தவர்களைப் பார்த்து கருணையே இல்லாமல் சிரித்தபடி வணக்கம் வைத்துக்கொண்டு ஒருவர் வந்தார். கிளியோபாட்ராவிற்கு அவரைத் தெரியும். எங்கேயோ ஒன்றிரண்டு கிழியாத போஸ்டர்களில் இந்த முகத்தை அவள் பார்த்திருக்கிறாள். ரயில் விபத்தைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய தொடர் கேள்விகளை சமாளிக்க முடியாமல் தினறிக்கொண்டிருந்தவர், இறுதியாக ஒரு இரக்கத் தொனியில் “விபத்திற்கு வருந்துகிறோம்” என்றார். மேலும் “விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசாங்க நிதியில் இருந்து இருபத்தைந்து லட்சம் வழங்கப்படும்” எனக்கூறி இருட்டிற்குள் இறங்கிச் சென்று மறைந்தார்.
“இருபத்தைந்து லட்சம்…”
“மாஸச்சூஸட்ஸ் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்க வேண்டுமென்றால் உங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தது இருபத்தைந்து லட்சமாவது இருக்க வேண்டும்” என பேராசிரியர் வகுப்பில் சொன்னது கிளியோபாட்ராவின் நினைவில் வந்தது. “ச்சே…! என்ன இது விபரீதமான யோசனை” என தலையில் அடித்துக்கொள்ளப் போனவளை, “நீங்கதான சாய்ந்தரம் மிஸ்டர் கீர்த்திவாசன பத்தி கேட்டது? உயிருக்கு பெருசா ஆபத்தில்ல. ஹெட் இஞ்சூரி. இப்போ மயக்கமா இருக்கார். நீங்க போய் பாருங்க…”
“உயிருக்கு பெருசா ஆபத்தில்ல” என நர்ஸ் சொன்னதும் தன்னை மீறி வெளிப்பட்ட அந்த அதிருப்தியை யாரும் பார்த்துவிடக் கூடாதென்பதற்காக துப்பட்டாவை தலையோடு போர்த்திக் கொண்டாள். சீதோஷனமும் அதற்கேற்றாற்போல காற்றை சற்று வேகமாக வீசிக் கொடுத்தது. உள்ளங்கை தேய்த்துவந்த அற்பகால வெப்பத்தை கன்னங்களில் ஏற்றிக்கொண்டாள். நர்ஸ் மேசை மேலிருந்த ஒரு குறிப்பேட்டை எடுத்து பேஷண்ட்டின் விவரங்களை ஒவ்வொன்றாக எழுதி, இறுதியாக பேஷண்டின் உறவினர் என்ற முறையில் கிளியோபாட்ராவின் பெயரைக் கேட்டபோது தான், அவளுக்கு அப்பா மீதிருந்த கோபம் கைமீறியது.
கழுதையின் அணுமதியில்லாமல் அதன் கழுத்தில் பொதியை ஏற்றுவதைப்போல அப்பா தனக்கிந்தப் பெயரை வைத்துவிட்டதாக அவள் நினைத்தாள். தன் பெயரை முற்றாக வெறுத்தாள். காரணம், அந்தப் பெயரை தாங்குமளவிற்கு தானொரு பேரழகியில்லை என்பதுதான். வளைந்த மூக்கும் அடர்த்தி குறைந்த புருவங்களும், ஏறிய நெற்றியும், மாநிறமுமாக ஒரு பொது-மதிப்பளவு உள்ள சராசரி இந்தியப் பெண். கல்லூரியில் “நல்லகாலம் நெஜக் கிளியோபாட்ரா உயிரோட இல்ல” என பின்வரிசை மாணவர்கள் பரிகாசம் செய்யாத நாளில்லை. அவமானம் தலைக்கேறியவளாய் ஒருநாள் அப்பாவிடம் போய் நின்றாள்.
“எனக்கு ஏம்பா கிளியோபாட்ரான்னு பேரு வெச்சீங்க..? நான்தான் அவ்ளோ அழகில்லையே? அவமானமா இருக்கு…”
“கிளியோபாட்ராவ வெறும் அழகியா மட்டும் பாக்க கூடாதுடா. அவ எகிப்தோட பெண் தெய்வம். தைரிய லட்சுமி! மனுஷ வரலாற்றுலையே வீரத்துக்காக பேர் போன முதல் பெண் அவ. எல்லாத்துக்கும் மேல கிளியோபாட்ரான்னா ‘க்ளோரி ஆஃப் ஃபாதர் – தந்தையின் பிரகாசம், தந்தையின் ஒளி’ன்னு அர்த்தம்…”
“என்ன பேர் சொன்னிங்க…?” நர்ஸ் ஆச்சர்யமாய் கேட்டார்.
“கிளியோபாட்ரா…” என இரண்டாம் முறை சொன்னதும், ஒரு குறுஞ்சிரிப்போடு நர்ஸ் அதை குறித்துக்கொண்டார். அது, தன் பெயரின் பெயரால் அவளுக்கு நேர்ந்த லட்சத்து சில்லரையாவது அவமானம். தொடர்ச்சியாக உடல்கள் கிடத்தப்பட்டிருந்த படுக்கைகளில், கீர்த்திவாசனை தேடியபடி கிளியோபாட்ரா அந்த நீண்ட நெடு அறைக்குள் நுழைந்தாள். ஒவ்வொரு கட்டிலும், காயங்களாலும் சோகங்களாலும் மூடுண்டிருந்தன. இங்கு வலியால் வேதனையுற்றிருக்கும் ஒவ்வொருவரும், சில நேரங்களுக்கு முன்பு வரை ஜன்னல் வழியே மலைக் காடுகளையும், இருப்பு பாதையின் சுரங்கங்களையும், கிளைக் குரங்குகளையும் சரிந்த மண் பரப்புகளையும் சாய்ந்து வளர்ந்த சைப்ரஸ் மரங்களையும் ரசித்துக் கொண்டிருந்திருப்பார்கள். விபத்துக்கள் ஓரவஞ்சனையற்றது. அவை குழந்தையின் குரல் வளையை நசுக்கவும் கர்ப்பிணியின் அடிவயிற்றை கிழிக்கவும் ஒருபோதும் தயங்குவதில்லை. ஆனால், கீர்த்திவாசனுக்கும் குறிப்பிட்ட இந்த விபத்திற்கும் உள்ள அந்த வினோத தொடர்பை கிளியோபாட்ரா மட்டுமே அறிவாள்.
உண்மையில் இன்றைய குன்னூர்-மேட்டுப்பாளையம் ரயிலில் கீர்த்திவாசன் பயணம் செய்யவேயில்லை. இன்னும் சொல்லப்போனால், மேட்டுப்பாளைய பேருந்து நிலையத்தில், ஒரு முழப் பூவிற்கு காசு வாங்கி ஒன்னரை முழம் அளந்து கொடுக்கும் அந்த பூக்கார கிழவியைத் தவிர – இப்போது அவள் உயிரோடில்லை – அங்கு வேறு யாரையும் அவனுக்குத் தெரியாது. அசாதாரண காட்சிகளைத் தேடிச் சென்று வேடிக்கை பார்ப்பது கீர்த்திவாசனின் வழக்கத்திலொன்று. அவை காட்சிகளில்லை, தரிசனங்கள். கணத்திற்கு கணம் மாறிக்கொண்டேயிருக்கும் முறையற்ற இயற்கையை, மனக்கண்ணில் பதித்து அதன் மேல் கற்பனையின் முலாம் பூசி வர்ணங்களோடு வார்த்தெடுப்பது கீர்த்திவாசனின் ஓவிய தந்திரோபாயங்களில் ஒன்று.
“நான் பாக்கற எந்தவொரு காட்சியையும் வரைஞ்சு முடிக்க எனக்கு ஒருநொடி போதும். ஆனா, அத இன்னொருத்தருக்கு காட்டத்தான் சில மணி நேரங்கள் தேவைப்படுது” அப்படி அவன் தனக்குள் வரைந்து வைத்திருக்கும் காட்சிகள் எண்ணற்றவை.
அப்படி எதோவொரு காட்சியை எதிர்கொண்டுதான் இன்று அங்கு அமர்ந்திருந்தான். தண்டவாளங்களின் இடைவெளியில் கொட்டிக் கிடந்த கற்கள் மீது சில பறவைகள் பிட்டங்களை பிதுக்கி மலமிட்டுக் கொண்டிருந்தன. அப்போதுதான் தடம் கவிழ்ந்து வந்த அந்த ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த கீர்த்திவாசனையும் சேர்த்து வாரிச் சுருட்டிக்கொண்டது. பறவைகள் எப்போதும்போல் பறந்துவிட்டன.
தெருவிளக்கொலியில் தெரிந்த ஜன்னலோர கட்டிலில், கீர்த்திவாசன் பாதி இமைகள் மூடி அசைவற்று கிடந்தான். அருகிலிருந்த ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியை சப்தமின்றி இழுத்து கிளியோபாட்ரா அமர்ந்து கொண்டாள். அவள் கற்பணை செய்த அளவிற்கு கீர்த்திவாசனின் உடலில் காயங்கள் எதுவும் பெரிதாயில்லை. நெற்றிப் பொட்டிற்கருகே உறைந்த ரத்தத்தோடு சிறு பொத்தலும், புறங்கையில் சில சிராய்ப்புகளும் இருந்தன. மெல்ல முன்நகர்ந்து, மூக்கிற்கு கீழ் கிளியோபாட்ரா விரல் வைத்துப் பார்த்தாள். பலமாகவே மூச்சு வந்து கொண்டிருந்தது. அந்நொடி, அந்த எம்.எல்.ஏ தன் முகத்திற்கு நேராக வந்து பல்லிளிப்பதைப்போல் இருந்தது.
“இருபத்தைந்து லட்சம்…”
சிறுநீரும் கிருமிநாசினிகளும் கலந்த ரத்தநெடி. காயப்பட்டவர்களின் வலி முனகல்கள் அந்த வளாகம் முழுவதும் அபஸ்வரமாய் ஒலித்துக் கொண்டிருந்தன. உடன் இருப்பவர்களின் விசும்பல்கள். நூற்றாண்டு பழமையான மின் விசிறியின் ஓயாத கிறீச்சல். பக்கத்துக் கட்டில் கிழவியொருத்தி உட்கூரையைப் பார்த்து ஏதோ அனத்திக் கொண்டிருந்தாள். வாழ்நாளில் இதுபோன்ற ஓரிரவை கிளியோபாட்ரா கழித்ததில்லை. பதட்டமும் பயமும் ஒருசேர, இப்போது பசிக்க ஆரம்பித்தது.
“சோகமோ… மோகமோ… எது தல தூக்குனாலும் சாப்பாட்டக் கொண்டு அதை ஓரளவுக்கு சமாளிச்சுட முடியும்…” என்றோ ஒருநாள் கீர்த்திவாசன் சொன்னது, இப்போது அவள் நினைவில் வந்தது. ஆனால், அப்பாவின் மேற்கோள்களை அவள் ஒருபோதும் கருத்தில் கொண்டதில்லை. தத்துவங்களை ஏற்பது என்பது அதைச் சொல்பவர்கள் மீதுள்ள விருப்பு வெறுப்பைப் பொறுத்தது. கிளியோபாட்ராவிற்கு ஃபலூடாவும் முட்டை பப்ஸும் சாப்பிட வேண்டும் போலிருந்தது. அது அவளது கேன்டீன் ஸ்பெஷல். உயிர்கள் ஓயாமல் துடித்துக் கொண்டிருக்கும் இடத்தில், எப்படி தன்னால் முட்டை பப்ஸைப் பற்றி நினைக்க முடிகிறதென யோசித்து பார்க்க அவளுக்கு சிரிப்பு வந்தது. அறையின் மறுகோடியிலிருந்த ஒரு சில்வர் அண்டாவில் தண்ணீர் மோந்து குடித்தாள். பின்னிரவு காற்றில் சற்று கூடுதலாகவே ஈரப்பதம் ஏறியிருந்தது. கைகளை ஆடைகளுக்குள் மறைத்துக் கொண்டாள். அப்போது காதருகே ரீங்கரித்த ஒரு ராட்சதக் கொசு, அவள் கையசைவிலிருந்து தப்பித்துப்போய் கீர்த்திவாசனின் கால் கட்டைவிரலில் அமர்ந்து கொண்டது. நேரம், ஒரு துரிதமே இல்லாமல் சாவகாசமாய் நகர்ந்து கொண்டிருந்தது. காலத்தைக் கொல்வது என்பது இந்த கொசுவைக் கொல்வததைப் போல அவ்வளவு எளிதான காரியமல்ல. திடீரென கிளியோபாட்ரா தன் கைபேசியை எடுத்து கொசுவின் சராசரி ஆயுட்காலத்தை இணையத்தில் தேடிப் பார்த்தாள். ‘ஏழு நாட்கள்’ என்றிருந்தது. அப்படியென்றால் இதன் ஆயுட் காலத்தின் எத்தனாவது நாளாக இன்று இருக்கும்? இதெல்லாம் வெறும் புள்ளியியல் கணக்கு. மனிதனின் உள்ளங்கை, தலையில் வேகமாகப் படும் வரைதான் அதன் ஆயுட்காலம். ஒரு சாதாரண கைத்தட்டலில் தன் மொத்த ஆயுளையும் இழந்துவிடக்கூடிய ஒரு துரதிருஷ்ட பூச்சியாய் அது அவள் கண்களுக்கு தெரிந்தபோது, கீர்த்திவாசன் தன் கால் கட்டை விரலை ஒரு குழந்தை அமர்ந்திருக்கும் ஊஞ்சலுக்குரிய கவனத்தோடு, முன்னும் பின்னுமாய் மெல்ல அசைத்தான். கிளியோபாட்ரா நினைத்துக் கொண்டாள், ‘ஒருவேளை மயக்கத்திலில்லாமல் இருந்திருந்தால்கூட அப்பா இந்த கொசுவைக் கொன்றிருக்க மாட்டார்.’
அன்று மாலை வாசலில் அமர்ந்து கீர்த்திவாசன் அழுது கொண்டிருந்தான். ஏறக்குறைய பொம்மையைத் தொலைத்த ஓர் குழந்தையின் அழுகையது.
“பா… என்னாச்சு…?”
சட்டைப்பையிலிருந்து சிறகுகள் நசுக்கப்பட்ட ஒரு பட்டாம்பூச்சியை எடுத்துக் காட்டினான். பகட்டான இளநீல வர்ணம். சிறகுகளின் ஓரங்களில் மனிதர்களின் கருவிழியைப்போல சுருள் சுருளான வடிவங்கள். படபடப்பையிழந்த அந்த பட்டாம்பூச்சி அவன் கைகளில் எழுவதும் விழுவதுமாய் தவித்துக் கொண்டிருந்தது.
“கொசு வலைக்கும் ஜன்னலுக்கும் நடுவுல இருந்திருக்கு போல. அது தெரியாம ஜன்னல இறுக்கமா சாத்திட்டேன்.”
“சரி விடுப்பா. செத்தொன்னும் போகலையே. உயிரோடதான இருக்கு..”
“இல்லடா… பட்டாம்பூச்சியோட உசுரே அதோட சிறகுலதான் இருக்கு. அது இல்லன்னா இது வெறும் புழு. இன்னும் ரெண்டு நாள்ல தன்னால பறக்க முடியாதுன்னு நெனச்சு நெனச்சே செத்துப் போயிடும்…” மீண்டும் அழுதான். அந்த பட்டாம்பூச்சி அசையாமல் அவன் ஆயுள் ரேகையில் அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தது.
“யேசுவே… உனக்கு கருணையே இல்லியா…?” திடீரென காற்றைக் கிழித்துக்கொண்டு வந்த குரலின் திசையில் கிளியோபாட்ரா திரும்பினாள். மூன்றாவது கட்டிலில் ஒரு பெண் மார்பில் அறைந்தறைந்து கதறிக் கொண்டிருந்தாள். உற்றத்தில் தொங்கிக்கொண்டிருந்த மின் விளக்குகள் ஒவ்வொன்றும் வரிசையாய் எரியத் துவங்கியது. ஒரு நொடியில் இடமே கலவரமானது. டாக்டரும் நர்ஸுகளும் எங்கிருந்தோ ஓடி வந்து, கட்டில்மேல் கிடந்த அந்த பெண்ணின் கணவனைப் பரிசோதித்து பார்த்தார்கள். கிளியோபாட்ரா அந்த டாக்டரின் முகத்தையே தீவிரமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். மணிக்கட்டுத் துடிப்புகளை உற்றுணர்ந்து கொண்டிருந்த அவர், சில நொடிகளில் நம்பிக்கை செத்த முகத்தோடு அங்கிருந்து நகர்ந்து சென்றார். அவள் தன் வாழ்வில் நேருக்கு நேராய் பார்க்கும் இரண்டாவது மரணமிது. முதல் மரணம் அம்மாவினுடையது. ஆனால், அந்த காட்சி அவள் நினைவில் இல்லை. அன்று அவள் சுயப்பிரக்ஞையே இல்லாமல் உடல் முழுதும் ரத்தத்தோடும் மலத்தோடும் இந்த உலகத்தைப் பார்த்து அழுது புரண்டு கொண்டிருந்தாள்.
பினவறைக்கு இழுத்துச் செல்லப்பட்ட தன் கணவரின் பின்னால் கைத்தாங்கலாக அந்த பெண் நடந்து போனாள். டியூப்லைட்டுகள் ஒவ்வொன்றாக அணையத் துவங்கின. மனிதர்கள் மீண்டும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டிலில் போய் படுத்துக்கொண்டார்கள். சற்று முன்பு காலியான அந்த மூன்றாவது கட்டில் மட்டும், ஒரு சமீபத்திய மரணத்தின் பிரதிநிதியாய் அமைதியாக நின்று கொண்டிருந்தது. கிளியோபாட்ரா அதில் போய் படுத்துக் கொண்டாள். இறந்துபோன கணவரின் பின்னால் அழுதுகொண்டே போன அந்தப் பெண்ணின் மீது பெரும் பொறாமையெழுந்தது. இந்த பிரிவின் வலி, அழுகை இதெல்லாம் இன்னும் ஓரிரண்டு மாதங்கள்தான். அதன்பிறகு கிடைக்கப்போகும் அந்த இருபத்தைந்து லட்சத்தை வைத்து அவள் எவ்வளவு நிம்மதியாய் வாழ்வாள்…! ‘கண்டின்யூயஸ் ஹேப்பினஸ் கேன் ரெக்டிஃபை எனி கைண்ட் ஆஃப் மிஸரி’ என நினைத்துக்கொண்டே கிளியோபாட்ரா மெதுமெதுவாய் தூங்கிப் போனாள். உற்றத்து விசிறி தாள பேதமின்றி இடையறாது சுழன்றுகொண்டிருந்தது.
தூக்கத்தில் ஆழ்ந்திருந்த கிளியோபாட்ராவை எதோவொன்று தொந்தரவு செய்ய, கட்டிலிலிருந்து எழுந்து கீர்த்திவாசனை எட்டிப் பார்த்தாள். உடலில் அசொளகரியமான அசைவு தென்பட்டது. ஒரு சுகவீனம். கண்கள் அதியகலமாய் விரிந்து கருவிழியிரண்டும் மேலே ஏறியிருந்தது. கை விரல்களால் கட்டிலை பிராண்டியபடி வானத்தை விழுங்கத் துடிக்கும் விந்தையான பிராணி போல, முகமளவு வாயை திறந்து வேகவேகமாய் மூச்சிரைத்துக் கொண்டிருந்தான். எண்ணங்களை வார்த்தையாக்க முடியாமல் அவன் அவஸ்தைப் படுவதை நிலைகுத்திய பார்வையோடு கிளியோபாட்ரா பார்த்துக் கொண்டிருந்தாள். நாசி துவாரங்கள் முனைப்புடன் விரிந்து உடல் முழுதும் துரித வியர்வைகள் முளைக்க ஆரம்பித்தன. கிளியோபாட்ரா அந்த அறையை சுற்றியும் ஒரு கணம் பார்த்தாள். எல்லோரும் சிலைகளைப் போல் அசைவற்று படுத்திருந்தனர். திரும்பி தன் அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். நொடிக்குநொடி அட்டகோணலாய் மாறிக்கொண்டே போனது. மீண்டும் அந்த எம்.எல்.ஏ கிளியோபாட்ராவின் முகத்திற்கு நேராய் வந்து சிரித்தார். ஆனால், இம்முறை மனிதர்களின் கைரேகை பதியாத புத்தம்புது பணக்கட்டுகளின் வாசம் அந்த சிரிப்பிலிருந்து வந்தது. மெல்ல அவள் அங்கிருந்து நகர்ந்து மருத்துவமனைக்கு வெளியே வந்தாள். கிரிக்கட் பூச்சிகளின் சப்தமும் வளர்ந்து நின்ற சோடியமும் தவிர, அந்த பனி மூடிய மஞ்சள் சாலையில் வேறு யாருமேயில்லை. கிளியோபாட்ரா தன்னந்தனியாய் நின்றுகொண்டிருந்தாள். மாஸச்சூஸட்ஸ் வீதிகள் அவள் கண் முன் தெரிந்தன. பாஸ்டன் பல்கலைகழகத்தின் ஆகப்பெரும் கட்டிடங்கள்… அதன் உச்சத்தில் அசைந்தாடும் அமெரிக்க தேசியக்கொடி… ஜான் எஃப் கென்னடியின் நூலகம்… பெட்ஃபோர்ட் அருங்காட்சியகம்… க்ரிஸ்டல் ஏரிக்கரை… எல்லா இடங்களிலும் கிளியோபாட்ரா கட்டற்ற கற்பனையில் அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். நேரம் போனதை அவள் கவனிக்கவேயில்லை; விடிந்துவிட்டதைக்கூட. மெல்ல மேலெழுந்து வந்த வெப்பம்தான் அவளை குன்னூருக்கு திரும்ப அழைத்து வந்தது. மீண்டும் மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.
தூரத்தில் கீர்த்திவாசனின் கட்டிலைச் சுற்றி, டாக்டரும் நர்ஸுகளும் இன்னும் சில மனிதர்களும் கூட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள். அந்த சலசலப்பிற்கு இடையே டாக்டரின் முகம் மட்டும் தெரிந்தது. இப்போது அப்பாவின் உடலில் எந்த நடுக்கமும் இல்லை. டாக்டர் கீர்த்திவாசனின் மணிக்கட்டை விரல் வைத்து அழுத்திப் பிடித்திருந்தார். கிளியோபாட்ரா தூரமாய் நின்று டாக்டரின் முகத்தையே தீவிரமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அவர் முகத்தில் தோன்றக்கூடிய சிறு பாவனை மாற்றம்கூட ஒரு மரணச் செய்தியை அறிவிக்கக்கூடிய வல்லமை கொண்டவை.
அப்போது, கீர்த்திவாசன் சொல்லியது காரணமில்லாமல் அவள் நினைவில் வந்தது. “கிளியோபாட்ரா என்றால் ‘க்ளோரி ஆஃப் ஃபாதர் – தந்தையின் பிரகாசம், தந்தையின் ஒளின்னு அர்த்தம்”