
மருத்துவர் தனது மூக்குக் கண்ணாடியை நடுவிரலால் சரிசெய்துகொண்டு கையிலிருந்த அறிக்கையை ஆழமாக மீண்டுமொருமுறை புரட்டிப் பார்த்தார். அவருடைய புருவங்களின் மையம் அடர்த்தியான முக்கோண வடிவமாவதைக் கண்டு பயந்து என் மனைவியின் கைகளைப் பற்றினேன். ஏசி குளிர் தாளாமல் தன்னையே அணைத்து அமர்ந்திருந்த அவளை வெளியே இருக்கச் சொல்லி வலியுறுத்தினேன். அறிக்கையின் முடிவுகள் தெரியாமல் நகர்வதாய் இல்லையெனப் பிடிவாதமாய் இருந்தாள்.
மருத்துவரின் முதல் சொல்லுக்காக ஏங்கிக் கிடந்தோம். அறிக்கைத் தாளின் ஒவ்வொரு பக்கங்களைத் திருப்பும்போதும் யோசனைகள் தீவிரமடைந்தவராய் ஆனார். உடலில் படிந்திருக்கும் சேற்றை உதறும் பிராணியைப் போல அதுவரை இருந்த தீவிரத்திலிருந்து விடுபட்டவராய் அறிக்கையை மூடிவைத்து எங்களைப் புன்னகையுடன் கண்டார்.
“பயப்படுற மாதிரி ஒன்னுமில்ல. சாதாரண வைரல் ஃபீவர்தான். டயர்டா இருந்தா வேலைக்குப் போக வேண்டாம். என்ன வொர்க் பண்றதா சொன்னீங்க?” என்று என் மனைவியிடம் கேட்டார்.
“ஐடி”
”ஒகே. நோய்களை ரொம்ப ஈஸியா ஈர்க்கிற உடம்பு உங்களுக்கு. ரெண்டு முறை கொரோனா வந்திருக்கிறதா சொன்னீங்க இல்லையா? கொஞ்ச நாள் உடம்பு ரொம்ப டயர்டா இருக்கும். வேலைக்குப் போக வேண்டாம். லாங் லீவ் சொல்லிட்டு வீட்ல நல்லா படுத்துத் தூங்குறது பெட்டர். மத்தபடி கவலைப்பட ஒன்னுமில்ல” என்றார் மருத்துவர்.
விடைபெற எழ முனைந்தபோது என்னை மட்டும் தடுத்து நிறுத்தினார். மருந்து, மாத்திரைகளின் சுழற்சியை விளக்குவதற்காக என்னைச் சிறிது நேரம் காத்திருக்கும்படி கேட்டுக் கொண்டார். அவளைக் காத்திருப்பு அறையில் அமரும்படி சொன்னேன். உஷ்ணத்தை மூச்சாய் விட்டபடி மெல்ல நகர்ந்தாள்.
“உங்க மனைவி CJD நோயால பாதிக்கப்பட்டிருக்காங்க” என மெல்லிய குரலில் சொன்னார் மருத்துவர்.
“அப்படீன்னா டாக்டர்?”
“மூளைல இருக்கிற ப்ரியான்ஸ்… அதாவது ப்ரோட்டீன்ஸ்லாம் பாதிக்கப்பட்டிருக்கு”
“அதனால என்ன பாதிப்பு டாக்டர்? பயப்படுற மாதிரி…” என்றேன் வியர்வையைத் துடைத்தபடி.
“பிஹேவியர்ல கொஞ்சம் வித்தியாசம் தெரியும். நீங்கதான் பாத்துக்கணும்”
“டாக்டர்… மூளை… மூளை வளர்ச்சி குறைஞ்சுடுமா?” என பயந்து கொண்டே கேட்டேன்.
“அப்படி நேரடியா சொல்ல முடியாது. அவங்க மூளைல இருக்கிற கமேண்டிங் சிஸ்டம்ல பாதிப்பு ஏற்பட்டிருக்கு. சரி, தப்பைப் புரிஞ்சுக்க முடியாது”
“புரியல டாக்டர்”
“உங்க வைஃப் ஒரு ட்ரெடீஷனலான பெண்ணுங்கிறதால சொல்றேன். அவங்க ஒரு ட்ரெஸ் போடுறாங்கன்னா ப்ரைவேட் பார்ட்ஸ் எக்ஸ்போஸ் ஆகக்கூடாதுங்கிற கான்ஷியஸ்னஸ் இருக்கும், இல்லையா? அது இனி இருக்குமான்னு உறுதியா சொல்ல முடியாது. இதை ஜஸ்ட் ஒரு உதாரணமாத்தான் சொல்றேன். இந்த மாதிரி வேற விஷயத்துலகூட நடக்கலாம்” என்றார்.
“இதுக்கு ஆப்ரேஷன் ஏதாவது…?”
அதுவரை மருத்துவ மொழியில் சரளமாகப் பேசிக்கொண்டிருந்தவர், மேற்கொண்டு சொல்வதறியாமல் நம்பிக்கையிழந்த பார்வையுடன் திக்குமுக்காடி நின்றார்.
“சாரி, அதிகபட்சம் ஒரு வருஷம். அதுவரைக்கும் அவங்களை நல்லா பார்த்துக்கோங்க. கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுங்க. முடிஞ்ச அளவுக்கு சந்தோஷமா வெச்சுக்கோங்க. எதையும் அவங்ககிட்ட சொல்லிக்க வேண்டாம். அவங்களுக்கு ஒரு நல்ல ஃபேர்வெல் தேவை. இது கஷ்டம்னு தெரியும். இருந்தாலும் இப்போ உங்க எமோஷன்ஸை விட அவங்க சந்தோஷம்தானே முக்கியம். அவங்க சிரிக்கணும்னா கொஞ்ச நாளுக்கு உங்க அழுகைய அடக்கிக்கிறதுதான் நல்லது” என்றார்.
இறுகியுடைந்த மனதோடு அங்கிருந்து வெளியேறினேன். என் மனைவி கூட்டத்தில் ஒரு நோயாளியாய் அமர்ந்திருந்த சித்திரத்தைக் கண்டதும் அகம் விம்மியது. கடிகாரத்தில் மணித்துளிகள் நெருப்பில் விழுந்த கட்டை எறும்பைப் போல வேகமாய்த் துள்ளியடித்து ஓடிக்கொண்டிருந்தது. அன்றிலிருந்து என் மனைவியின் மரணம் ஆரம்பமானது.
*
ஒளிவுமறைவில்லாத உறவின் முதல் ரகசியமாய் அவளின் மரணச் செய்தி மனதில் அரித்தது. அடுத்த ஓராண்டுக்கு ஒவ்வொரு கணமும் அவள் மறைவை எண்ணி அஞ்சி அழுது வாழும் நரகக் காலத்தை யோசித்துத் தனிமையில் மாரடித்துக் கொண்டேன். ‘அவளுடைய புன்னகையின் பொருட்டு உன் கண்ணீரைப் பொருட்படுத்தாதே’ என்கிற மருத்துவரின் அறிவுறுத்தல் மீண்டும் நினைவைக் கிளறியது.
துயரத்தை இழுத்துப் பிடிப்பதொன்றும் புதிதல்ல எனக்கு. பிறக்கவிருந்த முதல் பிள்ளை கருவில் செத்துப் போனபோது மனைவி சோர்ந்து விடாமலிருக்க போலிப் புன்னகை ஒன்றை முகத்தில் வரைந்து கொண்டேன். சொல்ல இயலா தாபத்தால் சிலகாலம் என்னிடமிருந்து அவள் புணர்ச்சியைத் தள்ளிவைத்த சமயத்தில் பிரம்மச்சரிய சித்தருக்கு இணையான அடக்கத்துடன் ஒதுங்கியிருந்தேன். ஆகவே, வேடமிடுவது இந்நடிகனுக்கு முதன்முறையல்ல.
மருத்துவர் பேச்சைக் கேட்டு அவளாகவே தற்காலிகமாக பணியிலிருந்து விலகினாள். நாளடைவில் அவளிடத்தில் சிறு சிறு மாற்றங்களைக் காண முடிந்தது. ஒருமுறை நகைச்சுவை காட்சி ஒன்றைக் கண்டு தேம்பி அழுதாள். ‘அன்னா கரீனினா’ நாவலில் சொற்களுக்கு நடுவே பூனையை வரைந்தாள். ஒருநாள் அதிகாலை கழிவறையில் கண்ணாடி முன் எதையோ தொலைத்தவளாய் விழித்து நின்றிருந்தாள். அவள் கைகளில் பற்பசையிடப்பட்ட ப்ரஷ் இருந்தது.
“என்னம்மா ஆச்சு? என்ன தேடுறே” எனக் கேட்டேன்.
“என்ன பண்றதுன்னு தெரியலங்க”
“பல்லு வெளக்கணுமா?”
“அப்படீன்னா?” என்றாள்.
அப்போது அவளுக்கு ஏறத்தாழ கால் நூற்றாண்டு வயது குறைந்திருந்தது. பிரக்ஞை நிலை பிறழ்ந்தவளுக்குத் தந்தையானேன். ஒருவழியாக அந்த பாக்கியத்தை அளித்ததற்காக அவளுடைய உள்ளங்காலில் முத்தமிட்டேன். அதன் உஷ்ணம், ‘ஒரு தந்தையாக இன்னும் நீ இவளைப் பத்து மாதங்களுக்கு மட்டுமே சுமக்கப் போகிறாய்’ என நினைவுபடுத்தியது.
ஒருநாள் காலை கழிவறையிலிருந்து அவள் வெளியே வரும்போது அறையெங்கிலும் மலத்தின் துர்நாற்றம் வீசியது. கழிவறையில் ஆங்காங்கே மலக்குழம்பு வழிந்தோடியது. அவளுமே கழித்துவிட்டுக் கழுவாமல் வந்தமர்ந்தாள். அன்று அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு மொத்த வீட்டையும் சுத்தம் செய்தேன்.
உடலளவிலும் நிறையவே மாற ஆரம்பித்திருந்தாள். நடக்கும்போது அவளுடைய கைகளும் தலையும் வழக்கத்திற்கு மாறாக வெவ்வேறு திசையில் கோணலாகப் போக ஆரம்பித்தன. அதுகுறித்த எந்தப் பிரக்ஞையும் அவளுக்கில்லை. தான் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவே நம்பி வருகிறாள். மருத்துவரைக் கடைசியாகச் சந்தித்த நாளிலிருந்து அவள் இந்த வீட்டைவிட்டு எங்கும் வெளியில் சென்றதில்லை. ஆரம்ப நாட்களில் பால்கனியில் நின்று அதிகாலையின் தூய காற்றை சுவாசிப்பாள். ஆனால், அவளுடைய நடையும் பாவனையும் பிறழ்ந்து வருவதால் அதையுமே இப்போதெல்லாம் நான் அனுமதிப்பதில்லை.
மரணத்துக்கு முறைப்படி மூன்று மாதங்கள் மிச்சமிருக்கும்போது மருத்துவரிடம் சென்றிருந்தோம். அவளிடத்தில் அண்மையில் நிகழ்ந்த மாற்றங்களைக் கேட்டார்.
“நடக்கிற விதம் மோசமாகிருக்கு. சில நேரம் ட்ரெஸ்லயே யூரின், டாய்லெட் போறாங்க. எல்லா நாளும் பேட் போட்டு விட்டுட்றேன். கொழந்தைய வளர்க்கிற மாதிரிதான் இருக்கு. வளர்க்கிறேன்னு சொல்ல முடியாது. என் கொழந்தை கர சேர இதெல்லாம் பண்ணிட்டு இருக்கேன்” என்று சொன்னபோது கண்ணீர் என் முகத்தை நனைத்தது.
“கவலப்படாதீங்க. கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறாரோ?” எனச் சொல்லி என் தோள்களைத் தடவிக் கொடுத்தார். பிறகு, “அவங்களை எங்கேயாவது வெளியே கூட்டிட்டுப் போனீங்களா?” என்றார்.
“எங்கே டாக்டர்? சரியா நடக்கவே முடியல அவங்களால”
“கார்ல கூட்டிட்டு போகலாமே. இங்கேயே அவங்களுக்குப் பிடிச்ச இடம், மனுஷங்க, உணவுன்னு ஏதாவது இருக்குமே! அத நிறைவேத்தி வைங்க”
“எவனாவது என் பொண்டாட்டிய பைத்தியம்னு நினைச்சுடுவானோன்னு பயமா இருக்கு டாக்டர்”
“ஒன்னு புரிஞ்சுக்கோங்க. நமக்கெல்லாம் சாவு எப்போன்னு கடவுளுக்குத்தான் வெளிச்சம். உங்க வைஃப் விஷயத்துல அப்படியில்ல. இந்த பாக்கியம் எல்லா கணவர்களுக்கும் கிடைக்குமா? அவங்களுக்கு நல்லா வாழ்ந்துட்டு போனோம்ங்கிற உணர்வைக் கொடுக்கணும்னுதான் இத ரொம்ப அழுத்திச் சொல்றேன்” என்றார்.
அன்று மாலை அவளுக்குப் பிடித்த வீச்சு பரோட்டாவை வாங்கிச் சென்றேன். அதனுடன் நேந்திர பழ சிப்ஸையும் அடுத்த மூன்று மாதங்களுக்குச் சேர்த்தே வாங்கினேன். அவ்வப்போது அவள் கண்டு வியக்கும் யானை பொம்மைகள் சிலவற்றைப் பிரியத்தோடு வாங்கினேன். பொம்மை கடை பில் கவுன்ட்டரில் பணியாற்றிய பெண்ணிடம் புன்னகையுடன் ‘என் மகளுக்கு…!’ என்றேன்.
ஒருபோதும் அடைய முடிந்திடாத தந்தைமை உணர்வை அவளின் முன்கூட்டிய அகால மரணம் எனக்கு ஏற்படுத்தித் தந்தது. அவளுக்காக வாங்கியவற்றைக் கைகளில் ஏந்தி உற்சாகப் பெருக்குடன் வீடு திரும்பும்போது வானம் இருண்டிருந்தது.
வாசலில் காலணிகளை உதறிவிட்டு குதூகலத்துடன் வீட்டிற்குள் நுழைந்தபோது அவள் மடிக்கணினியைத் துழாவிக்கொண்டிருந்தாள். எனது இருப்பை உணர்ந்து திடுக்கெனத் திரும்பிய அவளின் கண்களில் நீர் வழிந்தோடியது.
“ஏன் இத எங்கிட்ட முன்னாடியே சொல்லல?” என்று அழ ஆரம்பித்தாள்.
கணினித் திரையை உற்றுப் பார்த்தேன். CJD குறித்த ஆய்வுக் கட்டுரைகள், செயற்கை நுண்ணறிவு தகவல்கள், யூடியூப் காணொளிகள் என வரிசையாகத் தேடிப் பார்த்திருக்கிறாள். பீரோ கதவு திறந்திருந்தது. மருத்துவ அறிக்கைகள் படுக்கையில் பரவிக் கிடந்தன. எழிலிழந்து போன வீட்டை அவளுடைய மரணத்துக்குப் பிந்தைய காலத்தில் வைத்து கற்பனை செய்தேன். ஒருகணம் அந்தியின் கடைசி வெளிச்சம் மீண்டும் தோன்றி மறைந்தது.
சட்டையைப் பிடித்து, “சொல்லு, எதுக்கு இத மறைச்சே? சோத்துல வெஷத்த வச்சுக் கொன்னிருக்கலாம்ல என்னை?” என்றாள்.
“என் இடத்துல நீ இருந்திருந்தா என்ன பண்ணியிருப்ப?”
கண்களைத் துடைத்துக்கொண்டு விடாப்பிடியாகத் துயரத்திலிருந்து தப்பியவளாய், “இன்னும் எனக்கு எத்தனை நாள் இருக்கு?” என்றாள்.
“மூனு மாசம்”
“டாக்டர் வேற என்னலாம் சொன்னாரு?”
“உன் எல்லா ஆசைகளையும் நெறவேத்தச் சொன்னாரு” என்றேன்.
வீச்சு பரோட்டாவை பிரித்துச் சாப்பிட்டாள். ருசி தெரியாத நோயாளியாய்த் தின்று தீர்த்தாள். அன்றிரவு நாங்கள் முழு நிர்வாணத்தில் புணர்ந்தோம். மிளிர்வற்ற அவளுடைய கண்கள் மேற்சுவரைக் கிழித்து சிந்தனையில் ஆழ்ந்து தொலைந்தன. கடைசி ஆசைகளைத் தேடிப் பயணித்திருக்கும் வினாச் சிந்தனை அது!
ஆசைகளை வினவியதும் சட்டெனச் சொல்ல முடியாத ஒருவளுடன் நான் வாழ்ந்திருக்கிறேன் என்பதை எண்ணவே திகைப்பாக இருந்தது. ஆசைகளே இல்லையா அவளுக்கு? அல்லது சொல்ல முடியாத ஆசைகளைக் கொண்டிருக்கிறாளா? பதிலேதும் சொல்லாமல் உறங்கிப் போனாள் அன்றிரவு!
நாட்கள் தீர்ந்து கொண்டிருந்தன. ஆசைகள் எஞ்சியிருந்தன. வெறுங்கால்கள் கடற்கரை மணலில் படுவதை விரும்புவாள் அவள். ஒவ்வொரு மாலையும் கடலுக்குச் சென்று வந்தோம். எல்லா வகை மீன் வறுவல்களையும் சுவைத்தோம். படகில் நடுக்கடலில் பௌர்ணமி நாளின் சந்திர வெளிச்சத்தில் முத்தமிட்டுக்கொள்ளும் ஆசை நீண்ட காலமாகவே அவளுக்கு இருந்தது. மரணம் கதவைத் தட்டுவது புலப்படும் அற்புத வேளையில் மட்டுமே ஆழ்மனம் இதுபோன்ற ஆசைகளைக் கிளறி முயன்று பார்க்கச் சொல்லும். அவளுடைய மற்றொரு ஆசை அன்றைய நள்ளிரவில் நடுக்கடலில் கிளர்ந்து வெளிவந்தது.
இதேபோலானதொரு முழுநிலவு நாளில் அவள் தன் முன்னாள் காதலனுடன் ஓரிரவு முழுவதும் இப்படிப் படகில் பயணிக்க விரும்பினாள். இதை அவள் சொல்லிக் கேட்டதும் நீலத்திமிங்கலத்தின் பற்கள் பிறாண்டியதைப் போல் உணர்ந்தேன். அதிர்ச்சியில் எழுந்து நின்றபோது என் எடை தாங்காமல் படகு அங்குமிங்குமாய் ஆடியது. காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியதால் கரைக்குத் திரும்பினோம்.
வீடு திரும்பும்வரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை. விருப்பக் கோரிக்கை பிணங்களின் முன் ஓலமிடும் கிழவிகளின் கதறலாய்க் கேட்டது. மரணத்துக்கு முன் கடைசி ஆசையென அவள் விரும்புவதெல்லாம் இதைத்தானா? அவனைத்தானா? அவனை ஒருமுறை பார்த்திருக்கிறேன். எங்கள் திருமணத்திற்கு வந்திருந்தான். கட்டியணைத்து எங்களை வாழ்த்தியபோது அவள் தன் சித்தியிடம் கைக்குட்டை தருமாறு கேட்டாள். நான் காண விரும்பாத கண்ணீர் அது!
காரில் நிசப்தமாய் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். அவளுடைய விருப்பத்திற்கு நானளிக்கும் பதிலைத் தவிரப் பேசுவதற்கு ஒன்றுமில்லை எங்களுக்குள். ஆனால், என்ன பதில் சொல்வது? என் ஆழ்மனம் அவளது கோரிக்கையை மறுக்கவே செய்தது. கைகள் அவளை அடிக்கத் துடிக்கின்றன. கத்திக் கூப்பாடிட குரல் எழுகிறது. காறி உமிழச் சுரக்கின்றன எச்சில். வீட்டுக்குச் சென்றதும் பக்குவமாக எடுத்துச் சொல்லி மறுக்க நினைத்தேன். ஒருவேளை அவளின் ஆசைகளை மறுத்துவிட்டால் மோசமான கணவனாகிவிட மாட்டேனா? இன்னும் சில நாட்களில் மரணமடையப் போகிறவளை உடைமைப்படுத்தி எதை சாதிக்கப் போகிறேன்? என்ன செய்ய வேண்டுமெனக் குழப்பத்தில் தவித்தேன். என்னிடம் அப்படிக் கேட்ட கணத்திலேயே அவள் ஆன்மா மரணமடைந்துவிட்டது.
“உனக்கு என்ன விருப்பமோ அதையே செய். அவன்கூட இருக்கணும்னா இரு. ஆனா, எனக்கு அது தெரியக்கூடாது. இந்த நாள்ல இந்த நேரத்துல இந்த இடத்துலதான் நீங்க சந்திக்கப் போறீங்கன்னு எனக்குச் சொல்லாத. பொய் சொல்லிட்டுப் போ. எனக்குத் தெரியாம அந்த சந்திப்பு நடந்துக்கட்டும்”
“ஏன் அப்படி?”
“அப்படியொரு தனிமையைக் கடந்து வரும் கொடுமை உனக்குப் புரியாது” என்றேன்.
அன்றிலிருந்து நானும் அவளும் சேர்ந்தில்லாத கணங்கள் பல கடந்திருந்தன. அவளுடைய எந்த வார்த்தைகளையும், நடவடிக்கைகளையும் நான் சந்தேகிக்கவில்லை. மனப்போராட்டத்தில் சிக்க விரும்பாதவனாய் அவளை மனப்பூர்வமாய் நம்பினேன். அதையும் மீறி ஒருமுறை வெளியிலிருந்து வீடு திரும்பியபோது வாசலில் வெள்ளை நிற ஹை டாப் ஷூக்கள் இருந்ததைக் கண்டுவிட்டேன். அதைப் பார்த்ததுமே மீண்டும் வெளியே வந்து காரை எடுத்தேன்.
அப்போது அண்டை வீட்டுக்காரன், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒருத்தர் போனாரு. பார்த்துட்டீங்களா?” எனக் கேட்டான்.
“பார்த்துட்டேன்ங்க. என் மச்சினன்தான்” என்றேன்.
“அப்போனா சரிங்க. நீங்க இல்லாத நேரத்துலயா வராருங்களா. அதான் ஒரு வார்த்தை சொல்லிடலாமேன்னு.”
“நல்லதுங்க”
“அப்புறம், எங்கே?”
“மச்சினனுக்கு ஏதாவது வாங்கலாமேன்னுதான்” எனச் சொல்லி அங்கிருந்து தப்பித்தேன்.
அந்த உரையாடல் தந்த நரக வேதனையைச் சொல்லி மாளாது. முதன்முறையாக அவள் மரணத்துக்கு எஞ்சியிருக்கும் நாட்களைக் கணக்கிட்டுக் கூசிப் போனேன். பல காரணங்களுக்காகக் கதறியழ ஏங்கினேன். சரியான நாளொன்று கூடி வருமெனக் காத்திருந்தேன்.
அவள் இன்பத்தில் பூத்துக் குலுங்கினாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு கன்னக்குழி தெரிய சிரித்தாள். பறவைகளை வரைந்தாள். வாசனைத் திரவியங்களைப் பூசினாள். எல்லாப் புலன்களும் விழிப்படைந்தவளாய் புத்துயிர்ப்புடன் இருந்தாள். என்னுடன் கடைசியாக எப்போது அப்படி இருந்தாள் என்றெண்ணி சட்டென அச்சிந்தனையைக் கைவிட்டேன்.
மறுநாள் அவளை மருத்துவரிடம் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றேன். மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்துகொண்டு அறிக்கையைப் புரட்டினார். அவரின் முதல் சொல்லுக்காகக் காத்திருந்தோம். அறிக்கைத் தாளின் ஒவ்வொரு பக்கங்களைத் திருப்பும்போதும் அவருடைய முகம் அதிர்ச்சியடைந்தது. தீவிரத்திலிருந்து விடுபட்டவராய் அறிக்கையை மூடிவைத்துப் புன்னகையுடன் கண்டார்.
“மேஜிக், மேஜிக், மேஜிக். கோடில ஒருத்தருக்குத்தான் இதெல்லாம் நடக்கும். உங்க மனைவி மரணத்தை ஜெயிச்சிருக்காங்க. நீங்க ஒரு பெஸ்ட் ஹஸ்பண்ட். அன்னைக்கு நான் சொன்னதுல இருந்து நீங்க அவங்களுக்கு என்னல்லாம் பண்ணீங்கன்னு தெரியல. ஆனா, அதைத் தொடர்ந்து பண்ணுங்க. பிடிச்ச வாழ்க்கைய வாழ்ந்தா சாவையே ஜெயிச்சிடலாம்னு சொல்லுவாங்கல்ல. அதுக்கு உங்க மனைவிதான் சாட்சி. ஆல் தி வெரி பெஸ்ட்” என உணர்ச்சி பொங்கச் சொன்னார். மேலும் அவர், “அது மட்டுமில்ல. உங்க வைஃப் உண்டாயிருக்காங்க. வாழ்த்துகள்” என்றார்.
அன்றிலிருந்து என் மரணம் ஆரம்பமானது.