
“ஏய் ராதி… , எண்ண வாங்கணும் டி…. கடலெண்ண…” என்று கத்தினாள் அம்மா.
காலை செருப்புக்குள் நுழைத்துக் கொண்டு மிக அவசர கதியாக வீட்டை விட்டு ஓடிக் கொண்டு இருந்த ராதா காதில் விழுந்தது.
அவள் பதில் ஏதும் சொல்லவில்லை.
அவள் கவனம், அந்த ஓண்டுக்குடித்தன வளாக வாகனங்கள் , குடங்கள் தொட்டிகளில் இடித்து கொள்ளாமல் பஸ்ஸை பிடிக்க ஓடுவதில் இருந்தது.
இடித்து நெருக்கி பஸ்சில் பயணித்து , அலுவலக அவசர வேலைகளைக் கவனித்து , ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு, ராதா தன் கைப்பையை எடுத்து எவ்வளவு பணம் இருக்கிறது எனச் சரிபார்த்தாள்.
இன்று வெள்ளிக்கிழமை. யாரும் கடன் தர மாட்டார்கள். இருக்கும் பணத்துக்கு அரை லிட்டர் வாங்கிக் கொண்டு போகலாம் என நினைத்துக் கொண்டாள்.
மேனஜர் ரூமில் இருந்து திரும்பிய சரளா, “ராதா, கேன்டீன் போலாமா? என்ன காசை எண்ணிகிட்டு இருக்க?” என்றாள்.
டீ மட்டும் குடித்தாள் ராதா. வடையும் டீயுமாக சரளா , ஒரு போன் காலில் ஆழ்ந்தாள். ராதா தனக்குள் ஆழ்ந்தாள்.
ராதாவின் அப்பா வேலை செய்த கம்பெனி திடீரென மூடிவிட்டதால், டிப்ரெஷன், குடி என்று ஒரு உதவாத மனுஷன் ஆகி விட்டார். ராதா மூத்தவள், அடுத்து துர்கா, பிறகு ரகு, கடைக்குட்டி திவ்யா. ராதாவின் அம்மா சமையல் வேலை, முறுக்கு, அதிரசம், ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினாள். ராதா பல இடங்களில் உதவி பெற்று தன் படிப்பை முடித்து வேலையில் அமர்ந்திருக்கிறாள்.
இன்னமும் ’இல்லை’ பாட்டுதான். தினமும் மோர் சாதமோ தக்காளி சாதமோதான் காலையிலும் மதியமும். தன் வறுமையைப் பற்றி ராதா என்றுமே வருந்தியதில்லை. ஆனால், சில நாட்களாக அவளுக்கு வீட்டின் சூழல் பிடிக்கவில்லை.
“என்ன ராதா டல்லா இருக்க? உடம்பு சரியில்லயா?” சரளா போனில் இருந்து மீண்டு, ராதாவின் பக்கம்.
“காலைல பஸ் ரொம்ப கூட்டம், கொஞ்சம் எரிச்சலா இருக்கு”.
“ம்ம் ,லன்ச் டைமில் எனக்காக வெயிட் பண்ணாத. பசிச்சா சாப்பிடு” என்று சொல்லி விட்டு, சரளா நகர்ந்தாள்.
தன் வேலைகளை பார்த்துக் கொண்டே, நினைவுக்குதிரையையும் தட்டி விட்டாள் ராதா.
நேற்று, ரகு ஸ்கூல் டூர் போக வேண்டும் என்று சொன்னான். உடனே பர்மிஷனுடன் பணம் கொடுத்து விட்டாள் அம்மா. ஆரம்பம் முதலே , ரகுவுக்கு கூடுதல் சலுகை உண்டு. அவன் அழுகை, கோபம் எல்லாவற்றுக்குமே பவர் ஜாஸ்தி.
“வீட்டுக்கு ஒத்த பிள்ளடி” என்ற ஒரே ஆர்க்யூமென்ட்டில் வாயை அடைத்து விடுவாள் அம்மா.
சின்ன சின்னச் செல்லங்கள் தனி ரகம். ஆனால், இத்தனை செலவு செய்து டூர் அனுப்பனுமா? இரண்டாயிரம் ரூபாய். தவிர, ட்ரெஸ், சில பல பொருட்கள் வாங்க 1000. வழிச்செலவுக்கு தனி !
தான் ப்ளஸ் டூ படிக்கும் போது, பரிதாபமாக , “இந்த அறுபது ரூபால மாச ரேஷன் வாங்கிடுவேன், ராதி” என அம்மா சொல்ல, “சரிம்மா” என்றாள் ராதா. வகுப்பில் அவள் ஒருத்தி மட்டும்தான் டூர் போகவில்லை.
அன்றைய நிலமையை விட இப்போது பரவாயில்லைதான். அதற்காக, பணம் கொட்டி கிடப்பது போல், ஒரு ஏசுதல் கூட இல்லாமல் ரகு டூர் போகிறான்.
சரி, அவன்தான் ஆரம்பத்தில் இருந்தே, செல்லம். பாக்கி இருவரும்?
துர்கா இந்த தீபாவளிக்கு பட்டு பாவாடைதான் வேண்டும் என அடம் பிடித்தாள்.
சரியாகச் சாப்பிடாமல் , அழுது ஆகாத்தியம். அம்மா ஒத்துக்கொண்ட பின் , கலர், சரிகை அளவு, விலை என எல்லாம் அவள் சொன்னது போலவே.
தீபாவளி பட்ஜெட் எகிறிய போது,”துர்காவை பட்டு மாதிரி டிஸைன்ல வாங்கிக்கோன்னு சொன்னேன். கேட்கவே இல்லை”, ஏதோ பெருமையாக சொல்லிக் கொண்டாள் அம்மா.
திவ்யா பற்றிச் சொல்லவே வேண்டாம். கடைக்குட்டி என்ற சலுகை.
இப்படி தம்பி தங்கைகளுக்கான சலுகைகள் ரொம்ப நாளாக நடக்கிறது.
அம்மா, ” சிறுசுகள், விவரம் பத்தல” என்று முணுமுணுத்ததைக் கூட , உள் மனதில் வாங்கி, ராதாவும் “சிறுசுகள்” என்று நினைத்து கொள்வாள்
ஆனால், பெரிசுகள் ஆகியும் அவர்கள் அதே போக்கில்தான் இருக்கிறார்கள்.
அம்மாவும் அவர்களிடம் குடும்ப கஷ்டம் பற்றி அரற்றுவதில்லை.
தனக்கு ஒன்பது வயதில் இருந்தே புரிந்த குடும்ப கஷ்டம், தம்பி தங்கைகளுக்கு ஏன் புரியவில்லை அல்லது புரிய வைக்கப்படவில்லை?
ராதாவின் வருத்தம் தன் இளையவர்கள் பற்றி அல்ல. தன் அம்மா தன்னிடம் நடந்து கொள்வதைப் பற்றிதான்.
“எத்தனை வந்தாலும் பத்தவே இல்லை”,
“காலும் கையும் ஓஞ்சு போறது, பாத்திரம் தேய், ரசம் வை” என ஞாயிற்றுக் கிழமைகளில் இவளிடம் சொல்லுவாள் அம்மா.
துர்கா தோழியைப் பார்க்க போவாள். திவ்யா டீவி பார்ப்பாள்.
தினமும் ராதா வீடு திரும்பும் போது ஏழரை மணி ஆகி விடும். அம்மா கொடுத்த சாதம் மட்டும்தான். வயிறு கிள்ளும்.
“அம்மா சாப்பிடலாமா? என்ன நைட்டுக்கு?” எனக் கேட்டால்,
“பாக்கியம் வீட்டில முறுக்கு கேட்டிருந்தாங்க, அத செஞ்சி முடிச்சேன். பாக்கி எண்ணெயில் பசங்க பக்கோடா கேட்காங்களேன்னு இரண்டு போட்டுக் கொடுத்தேன். பசங்க இனிமே சாப்பிடாதுங்க. உனக்கு மட்டும்தான். மதிய சாதம் கொஞ்சம் இருக்கு. குழம்பு ஊத்தி சாப்பிடு” என்பாள்.
முறுக்கோ பக்கோடாவோ ஒன்று கூட இவளுக்கு இருக்காது.
மாச சம்பளத்தை அப்படியே கொடுக்கிறாள். பஸ்ஸுக்கும் டீக்கும் கொஞ்சம் வைத்து கொண்டு. தன்னைப் பற்றி அம்மா நினைக்கவில்லையே என ராதாவுக்கு வருத்தம்.
அம்மா என்பவள் தன் குழந்தை முகம் பார்த்து பசி தெரிந்து, சாப்பாடு கொடுப்பாள்.
தம்பி தங்கைகள் அடம் பிடித்து, சாப்பிடவில்லை என்றால் அவர்களைக் கெஞ்சும் அம்மா, தனக்கு ஒரு நாள் கூட இவளுக்குப் போடுவதில்லை. ஏன் இந்த பேதம்?
அம்மாவுக்கு அனுசரணையாக இருந்தும் ஏன் இந்த அலட்சியம் ?
ராதாவின் கண்களில் இருந்து கண்ணீர் பிரவாகமாய் பொங்கியது.
அதே நேரத்தில் சரளா திரும்பி வர, “என்னாச்சு ராதா, நீ உன் மனசுல இருக்கிறதை சொல்லு” என்றாள்.
“சரளா, அம்மா என்று சொன்னால் அன்பானவங்கதானே? என் அம்மா என்கிட்ட அன்பே காட்டறதில்ல” எனத் தொடங்கி, அம்மா தனக்கு எதுவும் செய்வதில்லை, தனக்கு ஏதேனும் ஆசை இருக்கும் என நினைத்து பார்ப்பதில்லை என வெதும்பினாள்.
சரளா ராதாவைத் தேற்றினாள்.
“இது எவ்வளவோ பரவாயில்லை. சில அம்மாக்கள் தன்னுடைய சூழல் பிடிக்காமல் குழந்தைகளை அடித்து கொடுமைப் படுத்துவார்கள் .
”ஆனால், ராதா உன்னுடைய அணுகுமுறைதான் உன் அம்மா உன்னிடம் அன்பு இல்லாதவர் போல தோன்றக் காரணம்”.
“நான்தான் காரணமா?”
“ஆமாம், எந்த ஒரு உறவும் நாம் எப்படி அவர்களிடம் நடந்து கொள்கிறோம் , நம்மைப் பற்றி எப்படிப்பட்ட பிம்பத்தை உருவாக்குகிறோம் என்பதைப் பொறுத்து சுகமாகவோ சுமையாகவோ மாறும்”
“அம்மா என்பதும் ஒரு உறவுதான். ஒரு தாய் தன் குழந்தைகளுக்காகத் தன்னையே வருத்திக் கொண்டு , தியாகங்கள் செய்வாள் என்பது உண்மை.
அது போல, குழந்தைகள் வளர வளர தாய் சேய் உறவில் மாற்றம் வரத்தான் செய்கிறது.
வளர்ந்த பிள்ளைகளின் நிலைப்பாடு மற்றும் அணுகுமுறை , அம்மாவின் அணுகுமுறையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.”
ராதா , நீ ஒரு மெச்சூர்டு , அண்டர்ஸ்டான்டிங் பெண் என்ற பிம்பத்தைதான் எல்லோருக்கும், உன் அம்மாவுக்கும் சேர்த்து, கொடுக்கிறாய்.
நீ அல்ப சந்தோஷத்தில் நாட்டமில்லாதவள் என நினைத்து உன் அம்மா உனக்கான சிறிய சந்தோஷங்களை ஒதுக்கி இருக்கலாம்”.
“நீ சொல்வது சரிதான், சரளா”
“நீ உன் அம்மாவிடம் , அவள் கன்னத்தைப் பிடித்து , நீ பண்ற முறுக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். அடுத்த முறை எனக்கு ஒரு முழு முறுக்கு வை” என்று சொல்லிப் பார்.
ராதாவின் முகத்தில் தெளிவு.
“அம்மா மட்டும்தான் நமக்கு கெடுதல் நினைக்காத உறவு.”
“உன் அம்மாவே அவர்கள் கஷ்டத்தில் இருந்து வெளி வந்து கலகலப்பாக இருக்கிறார்கள்.
அந்த கலகலப்பை உன் தம்பி தங்கைகள் எதிரொலிப்பதால், உன் அம்மா அதற்குத் தகுந்தபடி இருக்கிறார்கள். நீ இன்னும் உன் மன உளைச்சல், சுய பச்சாதாபம், அதிக பொறுப்புணர்வு இதிலிருந்து விடுபடவில்லை. அம்மாவிடம் பிடித்ததைக் கேள். நீ என்ன நினைக்கிறாய் எனச் சொல். அவங்க உனக்காக, உன் விருப்பபடி செய்ய முயற்சிப்பாங்க”
சரளாவின் நீண்ட கலந்தாலோசனை பயனுள்ளதாக அமைந்தது.
ராதா அம்மாவுடன் புதிய உறவைக் தொடங்கினாள்.