
தனஞ்செயன் வீட்டின் கொல்லைப் புறமிருந்த இந்தியக் கழிவறையில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீரும் மலமும் மூத்திரமுமாய் தேங்கி, கால் பதித்து அமரும் கற்களும் மூழ்கிக் கிடந்தது. அந்தக் கழிவறையின் கதவைத் திறந்தாலே மல நாற்றம் குடலைப் புரட்டியது. கழிவறையைப் போலவே, அந்த வீட்டில் இருந்த நான்கு பேரின் வயிரும் இப்போது மலத்தால் நிரம்பியிருந்தது. அதைக் கழிப்பதற்கு வேறு இடமின்றித் தவித்துக் கொண்டிருக்கையில். வீட்டின் உரிமையாளர், தனஞ்செயன் அவசரமாய்ப் போய் அஞ்சானை அழைத்து வந்தார்.
கொல்லைப் புறமாக வந்து கழிவறையைப் பார்த்த அஞ்சான், “ஐயா, உள்ள கொழாயிலதான்யா அடப்பு இருக்கும். கொழாயத் தோண்டிப் பாத்தா அடப்ப எடுத்துடலாம்.” என்றார்.
“ஏதோ ஒன்ன சீக்கிரமா பண்ணித் தொல. ரொம்ப நேரம் அடக்கிட்டு இருக்கோம்.” என்று தன் அவசரத்தைக் கோபமாகக் காட்டினார் தனஞ்செயன்.
“இந்தா எடுத்துர்றேன்யா. நீங்க ஏன் அதுவரைக்கும் அடக்கிக் கிட்டு இருக்கணும்? அந்தால கருவக்காட்டுல போயி, போய்ட்டு வந்துடுங்களேன்.” என்று அஞ்சான் சொல்லியதும் தனஞ்செயனுக்குப் பொறுக்க முடியாத கோபம் வந்தது.
“அடேய், எங்குடும்பத்தயாடா உன்னாட்டொம் கருவக்காட்டுல பேளச் சொல்ற? அளவோட பேசு. அங்க மேயிற உன் பன்னிவளுக்குத் தீனிக்கு ஆவும்னு பாக்குறியா? அடப்ப எடுக்குற வேலய மட்டும் பாரு.”என்றார் தனஞ்செயன்.
“ஐயா… இப்ப நா என்ன சொல்லிப்புட்டேன்! முடியலன்றீங்களேன்னு சொன்னேன். தப்புன்னா மன்னிச்சிடுங்கய்யா.” எனச் சொல்லிக் கொண்டே மண் வெட்டியை எடுத்து, கழிவறைக்குப் பின்னாலிருந்த மண்ணைத் தோண்ட ஆரம்பித்தார் அஞ்சான். குழாய் கண்ணில் பட்டது. கழிவறையிலிருந்து கழிவுத்தொட்டி வரை சென்ற அந்தப் பீங்கான் குழாயை, முழுவதுமாக வெளியே எடுத்தார். வெளியில் எடுத்தவுடன், கழிவறைப் பக்கமிருந்து உருவப்பட்ட குழாயின் வாய்ப் பகுதி வழியாக மலத்தோடு நீர் கொப்பளித்து வெளியேறியது. இதைப் பார்த்த தனஞ்செயன் மூக்கை மூடிக்கொண்டு வீட்டிற்குள் ஓடிவிட்டார்.
அந்தக் குழாய் எட்டடிக்கு மேல் நீளமிருக்கும். அதன் ஒரு முனையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அதன் வழியாக, தன் கையிலிருந்த மெல்லிய மூங்கில் கழியை உள்ளே நுழைத்தார் அஞ்சான். கழி நான்கடி உள்ளே போனதும் எதிலோ இடித்து அப்படியே நின்றது. அஞ்சான் தன் பலத்தை முழுவதுமாகப் பிரயோகித்து இடித்துத் தள்ளவும், ஒரு மஞ்சள் நிறப் பந்து மலத்தோடு மறுமுனையில் வந்து விழுந்தது. அது மலத்தின் சேர்க்கையால் நேர்ந்த நிறமா? பந்தின் பழைய நிறமா? என்று அருதியிட்டுச் சொல்வதற்கில்லை.
“ஐயா… ஐயா…” என்று வீட்டை நோக்கி அஞ்சான் அழைத்ததும் ஒரு துண்டால் மூக்கைப் பொத்தியபடியே வெளியே வந்தார் தனஞ்செயன்.
“ஐயா, நம்ம தம்பி பந்து வெளாண்டுருப்பாரு போலய்யா… அதுதான் உள்ள உழுந்து அடச்சிருக்குது. அடப்ப எடுத்துட்டேன். இந்தா மறுபடி பதிச்சி மூடிர்றேன்.” என்றபடி குழாயைக் குழியில் வைத்து அதன் இருமுனைகளையும் சிமென்ட்டால் அதக்கி விட்டு மண்ணைத் தள்ளி மூடினார் அஞ்சான்.
அஞ்சானின் கை முழுவதும் மஞ்சள் மஞ்சளாக மலம் அப்பியிருந்தது. “எவ்ளோ வேணும் சொல்லுடா?” என்றார் தனெஞ்செயன். மூக்கை மூடியபடியே.
“முன்னூறு ரூவா குடுங்கய்யா போதும்.” என்றார் அஞ்சான்.
“எது… இந்த வேலக்கி முன்னூறா? எரநூறுதான் தருவேன்.”
“ஐயா, நான் கேட்டதே கம்மிதான். அதக் குடுத்தா குடுங்க. இல்லேன்னா காசே வேண்டாம். நான் கெளம்புறேன்.”
அந்த நேரத்தில் வீட்டற்குள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. “ஏங்க… மனுசங்க அவஸ்த புரியாம நேரங்கெட்ட நேரத்துல நின்னு பேரம் பேசிக்கிட்டு இருக்கீங்க! அவன் கேட்டத குடுத்து அனுப்புங்க மொதல்ல.”
இந்தக் குரலாலும் வயிறு முட்டிக்கொண்டிருந்தபடியாலும் அதற்குமேல் வாக்குவாதம் செய்யவியலாமல் முன்னூறு ரூபாயை பக்கத்திலிருந்த கல்லில் வைத்துவிட்டு கழிவறைக்கு ஓடினார் தனெஞ்செயன்.
காய்ந்த மண்ணை அள்ளி கையில் தேய்த்து, ஒட்டியிருந்த மலத்தைச் சுத்தம் செய்துவிட்டு, பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார் அஞ்சான்.
ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக ஒரு முள்காட்டுக்குள் இருந்தது அஞ்சானின் வீடு. அந்தக் காட்டிற்குள் அஞ்சான் வீட்டையும் சேர்த்து மொத்தம் ஐந்து வீடுகள் இருந்தன. எல்லோரும் அஞ்சானின் உறவுமுறைதான். அத்தனைக் குடிசை வீடுகளும் நெருக்கமாக இருக்கும். அந்தக் காட்டிற்குள் இருந்த ஐந்து குடும்பங்களுக்கும் அவர்கள் மட்டும்தான் துணை. ஊருக்கு மின்சார வசதி வந்து சேர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும், இந்தக் காட்டிற்குள் இருக்கும் இவர்களின் வீட்டிற்கு மட்டும் மின்சாரம் இன்னும் வந்து சேரவில்லை. மின்சாரத்தை விடுங்கள், இன்னும் அங்கு சாலை வசதி கூட கிடையாது. அவர்கள் நடந்து நடந்து சென்ற இடத்தை, புற்கள் அவர்களுக்காக ஆக்கிரமிக்காமல் விட்டிருந்த ஒற்றையடிப் பாதைதான் அவர்களின் சாலை.
அந்த ஒற்றயடிச் சாலை வழியே, தன் மிதிவண்டியை மிதித்தபடி வீட்டிற்கு வந்தார் அஞ்சான். வாசலிலிருந்த பானையில் தண்ணீர் மோந்து கைக் கால்களைக் கழுவி லுங்கியில் துடைத்தபடி உள்ளே சென்று சட்டையைக் கழற்றி மூங்கில் கழியில் போட்டுவிட்டு தரையில் அமர்ந்தார்.
பழைய சோற்றையும் சின்ன வெங்காயத்தையும் எடுத்து வைத்தபடியே அஞ்சானின் மனைவி பார்வதி, “இந்தா… பன்னிவோள போய் பாத்தியா இல்லயா?” என்றாள்.
“கக்கூஸு அடப்பு எடுத்துட்டு வரவே நேரம் சரியாப் போச்சி. அந்தா அந்த சட்டையில முன்னூறு ரூவா இருக்கு எரநூறு மட்டும் எடுத்துக்க. பன்னிவள, சாயங்காலம் கோழிக் கறி கொண்டு போறப்போ பாத்துக்கலாம்.” என்றார்.
“ந்தா… பெரும் பன்னி செனயா கெடக்குல்ல.. அது குட்டி கிட்டி போட்டுருந்தா நாயி நரி தூக்கிடாதா? அதான் பாத்துட்டு வரச் சொன்னேன். என்னா ஆளு நீ?”
“இங்காரு, பெருச சும்மா நெனக்காத. அது புள்ள பெத்த அசதியில கெடந்தாலும் நாயி நரி ஒன்னுத்தயும் பக்கத்துல அண்ட உடாது. எல்லாம் சாயங்காலம் பாத்துக்கலாம்.” என்றார் அஞ்சான்.
அஞ்சானின் குடிசை இருக்கும் காடு ஊரின் தெற்குப்புறம் இருக்கிறது. பன்றிகள் இருக்கும் காடு ஊரின் வடக்குப் புறம். குடிசைகள் இருக்கும் காடு சற்று ஊரை ஒட்டி இருப்பதாலும் அங்கு குட்டைகள் எதுவும் இல்லாததாலும் பன்றிகளுக்கு அது அவ்வளவாக ஏற்ற இடமில்லை.
மாலை ஆனதும், தன் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு கடைத்தெருவில் உள்ள ஒரு கோழி இறைச்சிக் கடைக்குச் சென்றார். அங்கு நேற்று இரவு முதல் காலை வரை அறுக்கப்பட்ட பிராய்லர் கோழிகளின் குடல், தோல், இறகுகள் எல்லாம், ஒரு பெரிய டிரம்மில் போட்டு ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்தது. அதைத் தூக்கி தன் மிதி வண்டியின் பின்புறம் இரண்டுப் பக்கமும் தொங்கிய டிரம்களில் கொட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டார். அதை இரண்டு மூன்று தெருக்கள் தள்ளி, பன்றிகள் பசியோடிருக்கும் ஒரு கருவேலங்காட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு அஞ்சான் குடும்பத்தின் இருபதுக்கும் மேற்பட்ட பன்றிகள் வாழ்கின்றன. அப்படி எடுத்துச் செல்லும் வழியில் ஒரு வீட்டிலிருந்த பெரியவர் கோபமான குரலில், “ஏய்… இந்தா… நில்லுப்பா.” என்றார்.
அஞ்சான் திரும்பிப் பார்த்து மிதிவண்டியை விட்டு இறங்குவதற்குள் அக்கம் பக்கத்திலிருந்த மூன்று நான்கு வீடுகளிலிருந்தும் ஆட்கள் கூடிவிட்டார்கள்.
“இந்தாருப்பா… ஒனக்கு இவ்ளோதான் மரியாத. நாங்கள்லாம் மாமிசம் சாப்பிடாத குடும்பம். இந்தத் தெருப் பக்கமா இனி இந்தக் கருமத்தக் கொண்டாராதனு உங்கிட்ட பல மொற சொல்லிட்டோம். நீ கேக்குறதா தெர்ல. இனி உங்கிட்ட வேற மாதிரிதான் பேசனும் போல.” என்றார் அந்தப் பெரியவர்.
“வேற மாறினா.. எப்டியா பேசப் போறீங்க? இந்த வழிய விட்டா எனக்கு வேற எங்க பாத இருக்கு? நீங்க சொல்ற மாதிரி சுத்திட்டு வரனும்னா ரெண்டு ஊரச் சுத்தி வந்தாதான் முடியும். நான் என்ன உங்க வீட்டுக்குள்ளயா கொண்டாந்தேன். எம்பாட்டுக்கு இந்த ரோட்ல கொண்டு போறேன். இதப் போய் குத்தஞ் சொன்னா நான் வேற என்ன பன்றது?” என்று கோபம் கலந்து, தன் பக்க நியாயத்தைச் சொன்னார் அஞ்சான்.
உடனே பக்கத்தில் நின்ற இன்னொரு பெரியவர், “பேச்ச பாத்தீங்களா இவனுக்கு. எல்லாம் ஊராட்சித் தலைவரு குடுக்குற தைரியம். ரெண்டு மூனு தடவ இவனப் பத்தி புகார் பண்ணியும் அவரு எதுவும் கண்டுக்கலல அதான் இந்தப் பேச்சுப் பேசுறான்.” என்றார்.
உடனே அந்த முதியவரின் மனைவி குறுக்கிட்டு, “ஏங்க, நீங்க யாங்க இவங்கிட்டலாம் போய் பேசிட்டு இருக்கீங்க. ஊரக் கூட்டிப் பெருக்க, மருந்து அடிக்கல்லாம் என்னமோ இவன விட்டா வேற ஆளே இல்லாத மாதிரி ஊராட்சித் தலைவரு இவன நத்திக்கிட்டு இருக்காரு. அப்பப்போ ஊராட்சித் தலைவரும், யாருக்குந் தெரியாம அந்தக் கருமம் புடிச்ச பன்னிக் கறிய அவுரு காட்டுல வெச்சி ஆக்கித் திங்கறதாவும் கேள்வி. இதுல அவர நம்புனா வேலக்கி ஆவாது. இவன் வளக்குற பன்னிகளால ஊர்ல நோய் பரவுது. அதக் கடிக்கிற கொசு மனுசனையும் கடிச்சி பன்னிக் காய்ச்சல் மாதிரி கண்ட நோய்லாம் வருது. இவன் போடுற இந்த அழுகுன கறியால ஊரே நாறுது. நாளக்கி இதனால ஊர்ல ஒரு சாவு உழுந்துப் போச்சின்னா யாரு பொறுப்புன்னு ஒரு மனுவ எழுதி கலெக்டரு ஆபீஸுல போய் எல்லாருமா குடுத்துட்டு வாங்க. அவங்க வந்து பன்னியெல்லாம் புடிச்சிட்டுப் போனாதான் இவன் அடங்குவான்.” என்று பேசி முடித்தாள்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த அஞ்சான், எதுவும் பேசாமல் கோபமாக மிதிவண்டியை மிதித்து காடு நோக்கிச் சென்றார். காட்டிற்குள் மிதிவண்டி வரும் சத்தம் கேட்டதும் பன்றிகளெல்லாம் வீர் வீர்ரென கத்தியபடி ஓடி வந்தன. காட்டின் உள் பக்கமாய் இரண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்த லாரி சக்கரங்களில் அந்தக் கறிக் கழிவுகளை அவர் கொட்டியதும் அனைத்துப் பன்றிகளும் ஆவலாய்த் தின்றன. அவைகளைத் தடவிக்கொடுத்தபடி, “நீங்கதான பிள்ளைகளா எஞ்சொத்து. எனக்கென்ன சொந்த நெலமா இருக்கு. அப்பிடி இருந்தா கூட இவங்க கண்ணுல படாம உங்கள அதுல வச்சு வளத்துப்பனே. எஞ்சொத்த பறிக்கப் பாக்குறாங்களே இந்த ஊரானுங்க.” என்று புலம்பியபடி அவைகள் சாப்பிடுவதைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார், அப்போது அந்தக் கூட்டத்தில் பெரிய சினைப் பன்றியைக் காணவில்லை என்பதைக் கவணித்த அஞ்சான் தூரத்தில் இருந்த ஒரு பெரிய கருவேல மரத்தடியில் பள்ளம் பறித்து அது படுத்திருப்பதைப் பார்த்தார். அது மிகவும் சோர்வாகவும் எழுந்து நடக்கவியலாமலும் திணறிக் கிடந்தது. உடனே கொஞ்சம் கறித்துண்டுகளை அள்ளி அதன் அருகில் சென்று போட்டார். அதுவும் சற்று நிமிர்ந்து, படுத்தபடியே தின்றது. இன்று இரவுக்குள் குட்டி போட்டுவிடும் என்று எண்ணிக்கொண்டு புறப்பட்டு வந்தார்.
வீட்டிற்கு வருவதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. ஐந்து குடிசை வீடுகளிலும் மண்ணெண்ணை விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அஞ்சானின் மிதிவண்டிச் சத்தம் கேட்டு பார்வதி வெளியே வந்தாள்.
மிதிவண்டியை நிறுத்திவிட்டு அதன் இருக்கையில் ஓங்கி ஒரு தட்டுத் தட்டி, “ஏலே… எல்லாரும் வெளிய வாங்கடா…” என்று கத்தினார் அஞ்சான். அவரின் பேச்சில் சாராய நெடி அடித்தது. குடிசைகளுக்குள் இருந்த பெருசுகள் சிறுசுகள் எல்லாம் வெளியே வந்து நின்றார்கள்.
பார்வதி எப்போதும் போல தன் கணவன் குடித்துவிட்டு வந்து ஏதோ பிரச்சனை செய்யப்போகிறார் என்று நினைத்து, “ந்தா… என்ன ஊரக் கூட்ற.. உள்ள வா.” என்றாள்.
“ஏய் இன்னிக்கி நான் போதைல இருந்தாலும் தெளிவாத்தான் இருக்கேன்… ஏய் எல்லாரும் கேளுங்கடா. நம்ம பன்னிவளுக்கான கறிய, காரத்தெருப் பக்கமா இனிமே எடுத்துட்டுப் போகக் கூடாதாம். தெருவே கூடி இன்னிக்கும் பிரச்சன பன்னிப்புட்டாய்ங்க.”
கூட்டத்திலிருந்த அஞ்சானின் மாமா வெற்றிலைப் பாக்கைக் குதப்பியபடி, “ஏய், என்னா மாப்ள எதோ புதுசா நடக்குற மாரி சொல்ற. அவெய்ங்க அப்போத்துலேருந்து இதத்தான சொல்றாய்ங்க. அவெய்ங்க சொல்லிட்டே போவட்டும், நாம நம்ம சோலியப் பாப்போம்னு போவியா. இந்தா பாருவதி உள்ள கூட்டியோயி சோத்த வய்யி அவனுக்கு.” என்றார்.
“ஏய், இந்தாரு யா மாமா… நீ நனக்கிற மாரி இல்ல. இதுவரைக்கும் நம்ம ஊராச்சித் தலிவரு கிட்டதான் புகாரு போச்சி. அவரு நல்ல மனுசன் அதப் பெருசா கண்டுக்கெடல. ஆனா இப்போ கலிக்டருக்கிட்ட போவப் போறாங்களாம். அவருக்கு நம்மள பத்தி என்னா தெரியும்? எல்லாம் பணம் உள்ளப் பக்கந்தான நிப்பாய்ங்க.” என்றார் அஞ்சான்.
கூட்டம் சற்று அமைதியாய் இருந்தது. அஞ்சானின் தாத்தா தருமன், ஒரு கேள்வியால் அந்த அமைதியைக் கலைத்தார். “என்னான்னுப்பா புகாரு குடுப்பாய்ங்களாம்?”
“ம்… நம்மலாலதான் ஊரே நாறுதாம். பன்னிவளால ஊர்ல கண்ட நோய்லாம் பரவுதாம். நாளிக்கி ஆராச்சொம் செத்துப் போனா என்ன பண்ணுவிய்ங்கன்னு கேக்கப் போறானுவளாம்” என்றார் அஞ்சான்.
“சிறிது நேரம் யோசனைக்குப் பின் தருமன் தாத்தா பேசத் தொடங்கினார். “ஏய் எப்பா, இது சாதாரண சேதி இல்லப்பா. இப்பிடிப் புகாரு போனா நமக்குதான் வெவகாரம் பாத்துக்குடுங்க. சர்க்காரு என்னா முடிவு எடுக்கும்னு நம்மால ஒன்னுஞ் சொல்லமுடியாது. யோசிச்சி முஞ்ஜாக்கரிதியா இருக்கனுமப்பா. நம்ம பொழப்பே பன்னிவதான். இவனுக ஊட்டு கக்கூச கழுவுறதுக்கும் ஊரச் சுத்தம் பன்றதுக்கும் இவனுகத் தூக்கிப் போடுற காசு என்னத்துக்கு ஆவும்? அவங்க புகார குடுக்குறதுக்கு முந்தி நாம குடுத்துற வேண்டியதான்.”
“ஏய், நீ என்னாயா சின்னப் புள்ளயாட்டம் பேசுற. ஊரானுகள எதுத்து நாம என்னான்னு புகாரு குடுக்குறது? யாருக்கிட்ட குடுக்குறது? அதெல்லாம் தேவயிராத வென. நாம சும்மா இருந்தா போதும். எதுவும் ஆகாது. சும்மா பிரச்சினைய இழுக்காதிய்ங்க. என்று அச்சம் கலந்த குரலில் சொன்னார் அஞ்சானின் சித்தப்பா.
கருங்கல்லில் அமர்ந்திருந்த தருமன் தாத்தா, வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டு கல்லில் கையை ஊன்றி எழுந்து நின்று கூட்டத்தைப் பார்த்து, “அப்டிலாம் ஊராய்ங்கள சாதாரணமா நெனக்காதீய்ங்க. நம்ம செனத்த ஒரு காலத்துல இவெய்ங்க எப்புடி வெச்சிருந்தாய்ங்கன்னு தெரியும்ல! இந்த எடம் இப்போவே இப்டிக் காடா கெடக்கே, அப்போ நூறு எரநூறு வருசத்துக்கு முந்தியெல்லாம் இது எப்பிடி இருந்துருக்கும்னு ரோசிச்சிப் பாருங்க. நமக்கு பகல்ல ஊருக்குள்ள நடக்க கூட அனுமதி கெடயாது. பகல் பூரா காட்டுக்குள்ளதான் கெடக்கனும். தப்பித் தவறி பகல்ல வெளில போயி யாரு கண்ணுலயும் பட்டுட்டா அவ்ளோதான். அடிச்சே கொன்னு எரிச்சுப் புடுவாய்ங்க. காட்டுக்குள்ள பகல்ல சுத்துறதும் ஆபத்துதான். ஜமீந்தாருங்க யாரும் வேட்டக்கி வந்து அவங்க கண்ணுல பட்டுடக் கூடாது. நமக்கு உண்டானது ராவுதான். செந்நாயி, நரி மாதிரி நாமளும் ராத்திரியிலதான் வேட்டக்கிப் போவனும். அப்பிடி வெச்சிருந்தாய்ங்க நம்மள. அப்பொறம் காலொம் மாற மாற நம்மலோட தேவ இருக்குன்றதாலதான் இப்போ ஊருக்குள்ளயே நம்மள உலாத்த உட்டுருக்கானுங்க. இப்போ நம்மலால ஒரு எடஞ்சன்னா நம்மள அழிக்கவும் தயங்க மாட்டானுக. இப்டி சின்ன பிரச்சனயா ஆரம்பிச்ச விசயம்தான் கொலைல்லலாம் போய் முடிஞ்சிருக்கு!” என்று அவரறிந்த வரலாற்றைச் சொல்லி முடித்தார் தருமன் தாத்தா.
“யோவ், இதெல்லாம் காலங்காலமா சொல்லி சொல்லித்தான எங்களயும் நீங்க பயமுடுத்தி வெச்சிருக்கீங்க. எதக் கேட்டாலும் ஒடனே நம்மள ஊருக்குள்ள இந்த அளவுக்கு உட்றதே பெருசுன்னு சொல்லியே அடக்கிப் புடுவீய்ங்க. சரி, இப்போ இதுக்கு ஒரு முடிவ சொல்லு.” என்றான் அஞ்சானின் சித்தப்பா மகன் சவட்டை.
“நாளக்கி போயி ஊராட்சித் தலைவரப் பாப்போம். அவருக்கிட்ட உள்ளதச் சொல்லி, ஊர்ல யாரெல்லாம் நமக்கு எதிரா இருக்கானுவளோ அவனுகள பூரா கூட்டி ஒரு பேச்சுவார்த்த நடத்திருவோம். அதுல என்ன முடிவு வருதுன்னு பாத்துடுவோம். தேவயில்லாம கலெக்டரு வரைக்கும் விசயத்த போவ உடக்கூடாதுல்ல!” எனறார் தருமன்.
“பேசுனா என்னா தீர்வு வரும்னு நெனக்கிற. அவெய்ங்க அப்டியே உன் நியாயத்த ஏத்துக்கிட்டு. பன்னிய வளத்துக்கோங்கன்னு சொல்லிடுவாய்ங்களா!” என்றார் அஞ்சான்.
“எலே பீத்தப் பயலே, எதுவுமே பண்ணாம இருந்து பிரச்சனய பெருசாக்குறதுக்கு, இதப் பண்ணிப் பாக்கலாம்ல டா. நாளக்கிக் காலைல அவங்கவங்க குப்ப அள்ளப் போங்க. சாயங்காலம் தலைவர்ட்ட பேசிக்கலாம். அவரு எப்போதும் நம்மாளுகள உட்டுக் குடுத்துட மாட்டாரு. என்ன சரிதான?” என்றார் தருமன்.
எல்லோரும் ‘சரி சரி’ என்றபடி வீட்டிற்குள் போனார்கள். விளக்குகள் அனைக்கப்பட்டன. காடு அமைதியானது. அதுவரை பக்கத்துப் பனை மரத்தில் அமர்ந்து காத்திருந்த ஓர் ஆந்தை இவர்களின் சலசலப்பு அடங்கியதும், கல்லுக்கு அடியிலிருந்து ஊர்ந்து வெளியே வந்த ஒரு தேளை, சலனம் இல்லாமல் சட்டெனப் பாய்ந்து பிடித்து மீண்டும் பனை மரத்தில் போய் தின்னத் தொடங்கியது.
அடுத்த நாள் காலை எப்போதும் போல எல்லோரும் ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்று தோட்டியையும் கூடைகளையும் எடுத்துக் கொண்டு இரண்டிரண்டு பேராய்ப் பிறிந்து ஊரின் ஒவ்வொரு தெருக்களுக்கும் சென்றார்கள். கடைத்தெருவைப் பெருக்குவது, இன்று அஞ்சான் மற்றும் பார்வதியின் பணி.
இவர்கள் பணியைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே. மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு மனு சென்றுவிட்டது. அதைப் பற்றி ஊராட்சித் தலைவரும் அறிந்திருந்தார். ஊராட்சித் தலைவர் தனது மகிழுந்தில் அலுவலகத்துக்குப் போய்க் கொண்டிருந்தார். கடைத்தெருவை மகிழுந்து கடந்தபோது சாலை ஓரமாக ஒரு காய்கறிக் கடையின் வாசலில் தூக்கியெறியப்பட்ட அழுகிய காய்கறிகளைத் தின்று கொண்டிருந்த ஒரு பன்றியைக் கடைக்காரர் ‘ச்சூ…’ வென்று விரட்ட, பன்றி மிரண்டு சாலைக்கு வந்துவிட்டது. அதே நேரத்தில் ஊராட்சித் தலைவரின் மகிழுந்தும் வந்ததால், பன்றி மகிழுந்தின் சக்கரத்தில் மாட்டி, முன் சக்கரமும் பின் சக்கரமும் வயிற்றில் ஏறி இறங்கியதில் வயிறு கிழிந்து அங்கேயே இறந்துப் போனது.
தூரத்தில் தெருவைக் கூட்டிக் கொண்டிருந்த அஞ்சானும் அவர் மனைவி பார்வதியும் பதறி அடித்து ஓடி வந்தார்கள். குடலெல்லாம் வெளியே பிதுங்கிக் கிடந்த பன்றியைப் பார்த்ததும் அதிர்ச்சியில், தன் புடவையில் வாயை மூடினாள் பார்வதி.
அஞ்சான் பன்றியை எடுத்து ஓரமாகப் போட்டார். அப்போது மகிழுந்தை விட்டு இறங்கிய ஊராட்சித் தலைவர், “ஏன்டா நாய… பன்னிய இப்டி ரோட்டுல உடாத, காட்டோட வச்சிக்கோன்னு எத்தன தடவடா உங்கிட்ட சொல்லிருக்கேன்?.” என்று கடுமையாகக் கோபப்பட்டார்.
“ஐயா, மன்னிச்சிடுங்கய்யா. காய்கறி சாப்புட்டு பழகுனதுல, இந்தக் கழுத கடத்தெருவுக்கு வந்துடுச்சு.”
“இந்தக் காரு எனக்கு எவ்ளோ இராசி தெரியுமாடா! இப்பிடிப் பன்னிய குறுக்க விட்டு, கார விக்கிர மாதிரி பன்னிட்டியேடா!”
“ஐயா, இது தெரியாம நடந்த விபத்துங்கய்யா. இதுக்குப் போய் ஏன்யா வண்டிய விக்குறீங்க. சக்கரத்துல கொஞ்சூண்டு ரெத்தம் பட்டுட்டு.. அவ்ளோதானயா! அத இந்தா நான் கழுவிப்புடுறேன்…”
“டேய் அறிவு கெட்ட முண்டம். பன்னிய அடிச்ச வண்டிய எவனாவது வெச்சி ஓட்டுவானா டா? இந்த விசயம் தெரிஞ்சா ஒரு பயலும் இத வாங்கக் கூட மாட்டான் டா. அசலூர்ல கொண்டுபோயி கொறச்ச வெலக்கிதான் விக்கனும். சக்கரத்த கழுவுறானாமா!” என்று ஊராட்சித் தலைவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கு பெருங்கூட்டம் கூடிவிட்டது. இவ்வளவு கூட்டத்தின் முன் தன் கணவன் அசிங்கப் படுத்தப்படுவதைப் பொறுக்காத பார்வதி, “இப்போ என்னா ஆயிப்போச்சின்னு இந்தப் பேச்சுப் பேசுறீய்ங்க. போன மாசம் வெளியூர்க் காரன் ஒருத்தன் இப்டிதான் பட்டம்மாவோட ஆட்டுக்குட்டிய அடிச்சுக் கொன்னுப்புட்டான். அதுக்கு நீங்கதான பஞ்சாயத்து பண்ணி கார் காரங்கிட்ட மூவாயிரம் வாங்கி அவங்களுக்குக் குடுத்தீய்ங்க! ஆட்டுக்கு ஒரு ஞாயொம்.. பன்னிக்கு ஒரு ஞாயொமா?” என்று கோபமாகக் கேட்டாள். இவ்வளவுக் கூட்டத்தின் முன் தன்னைக் அவள் கேள்விக்கேட்டதும் ஊராட்சித் தலைவருக்குக் கோபம் கொப்புளித்தது.
“டேய்… என்னடா உம்பொட்டாட்டி தராதரம் தெரியாமப் பேசிட்டு இருக்கா! அடுத்த வார்த்த பேசுனானா கொன்னு பொதச்சிருவன் பாத்துக்க. புல்லத் திங்கிற ஆடும் பிய்யத் திங்கிற உன் பன்னியும் ஒன்னாடா?”
இப்போது அஞ்சானும் ஆத்திரமானார்.
“ஆடு புல்லத் தின்னுது, எம் பன்னிவ, மனுசங்க நாம திண்ணத தின்னுது. அதத் திங்கிற என் பன்னிக் கேவலம்னா, எந்நேரமும் அந்தப் பீய கொடலுக்குள்ளயே வச்சிக்கிட்டு சுத்துற மனுசங்க நாம எம்மாங் கேவலம்? பன்னிப் பீய உட மனுசப் பீ வீச்சொம்தான்யா கொடலப் பொரட்டும்.” அஞ்சான் இதைச் சொல்லி முடித்ததும் அவர் கன்னத்தில் ‘பளார்’ என்று ஓர் அறை விழுந்தது. பார்வதி அஞ்சானைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
“பீயள்ளி வாழ்ற நாத்தம் புடிச்ச நாயிங்க நீங்க எனக்குச் சரியா நின்னுப் பேசுறீங்களாடா!” என்று கேட்டபடி அஞ்சானை அறைந்த தன் கையை இரண்டு உதறு உதறி, தன் வேட்டியில் துடைத்தபடியே வேட்டியை மடித்துக் கட்டினார் ஊராட்சித் தலைவர்.
கூட்டத்திலிருந்து ஒரு பெரியவர், “அதுக்குத்தான் அண்ணே, யார் யார எங்க வெக்கனுமோ அங்க வெக்கனும். நீங்கதான் இவங்களுக்கு ரொம்ப எடம் குடுத்துட்டீங்க!” என்றார். அவர் வேறு யாருமில்லை. தன் தெருவின் வழியே மாமிசக் கழிவுகளை எடுத்துச் செல்லக் கூடாது என்று சிலர் மிரட்டினார்களல்லவா, அந்தக் கூட்டத்தைச் சார்ந்த ஒருவர்தான்.
இப்படியே கூட்டத்திலிருந்த ஒரு சிலர், ஊராட்சித் தலைவரிடம் நற்பெயர் வாங்குவதற்காக அஞ்சானைத் திட்டினார்கள். இப்போது ஊராட்சித் தலைவர் அஞ்சானைப் பார்த்துச் சொன்னார்.
“உன் பன்னிகளால பல பிரச்சன என் காதுக்கு வந்தப்போலாம் நான் சும்மா இருந்தேன் பாரு, எனக்கு இது தேவதான் டா. இப்போ விசயம் கலெக்டர் ஆபீசு வர போயிட்டு. நான் கூட நம்ம இருக்கும்போது மனுவக் கொண்டு போயி அங்க குடுத்துட்டாங்களேன்னு இவங்க மேலதான் கடுப்புல இருந்தேன். இப்போ என்னன்னா உன் தராதரத்துக்கு நீ எங்கிட்டயே ஏறிக்கிட்டு நிக்கிற. இனியும் நான் பொறுமையா இருந்தா அது சரிப்படாது.” என்று சொல்லிவிட்டு தன் ஓட்டுனரைப் பார்த்து. “டேய்… கார, வீட்டுக்குள்ள கொண்டுபோயிடாத. கொண்டுபோயி கொளத்துல தண்ணி மோந்து கழுவி வய்யி. நாளக்கே விக்கறதுக்கு ஏற்பாடு பண்ணிடுவோம்.” என்றபடியே, சுற்றி நின்ற ஊர் மக்களைப் பார்த்து, “நாளக்கே இவம் பன்னிகளல்லாம் சுட்டுத் தள்ளிப் புடுறேன். எல்லாம் இனி நிம்மதியா இருங்க. இப்போ போய் வேலயப் பாருங்க போங்க.” என்று சொல்லிவிட்டு நடந்தே அலுவலகத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.
சுற்றி நின்ற மக்களும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்தார்கள். எல்லோரும் போகும் வரை தலையைக் குனிந்த படி நின்ற அஞ்சானும் பார்வதியும், பன்றியின் குடலை எடுத்து சுற்றி வயிற்றுக்குள் திணித்து தூக்கிக் கொண்டு போனார்கள். அப்போது பார்வதி அஞ்சானிடம் கேட்டாள், “என்னாயா இப்டி சொல்லிட்டு போறாரு.”
“வாய்க்கு வாய் பேசுனா பின்ன கொஞ்சுவாரா? நீ கொஞ்சம் பொறுமயா இருந்துருக்கலாம்ல கழுத. நீ வாயக் குடுத்ததும் அவரு உன்ன பேசிப்புட்டாரு. அது பொறுக்காம நானும் வாயாடிப்புட்டேன். ஆனா, அதுக்காகல்லாம் அப்டி ஒன்னும் பண்ண மாட்டாரு. எதோ கோவத்துல சொல்லிட்டுப் போறாரு. தாத்தா சொன்ன மாரி சாய்ங்காலம் போயி மன்னிப்பு கேட்ருவோம். அப்பறம் பிரச்சனய பத்திலாம் பேசிக்கலாம் சரிதான?” என்றார் அஞ்சான்.
பார்வதி, ‘சரி’ என்று தலையசைத்தாள். தூரத்தில் தருமன் தாத்தாவும் சவட்டையும் இன்னும் சிலரும் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு ஓடி வந்தார்கள். அஞ்சானின் கையில், வாய் பிளந்தபடி இரத்தம் வழிய கிடந்த பன்றியைக் கண்டதும் தாத்தா பதறினார். “என்னடா, காரு முழுசா ஏறிப்புடுச்சாம்ல. இப்பதான் சுக்கன் ஓடியாந்து சொன்னான். ஐயா ரொம்ப கோவமா இருக்காரோ?” என்று பவ்வியமாய்க் கேட்டார் தருமன்.
“ஆமா… நானும் பதிலுக்கு பதிலு வாயாடிப்புட்டேன். நீ சொன்ன மாரி சாய்ங்காலம் போய் பேசிப்போம் ரெண்டு அடி அடிச்சாலும் வாங்கிப்போம்.”என்றார் அஞ்சான்.
இதைக் கேட்ட அஞ்சானின் சித்தப்பா மகன் சவட்டை, “எது அடி வாங்குவியா? ஏற்கனவே வாங்குன அற போதாதா? நம்ம பன்னிய ஏத்திக் கொன்னுப்புட்டு நம்மளையே அடிப்பாய்ங்க நம்ம வாங்கிட்டு நிக்கனுமா? வாயா பெருசு, போயி என்னான்னு கேப்போம்.” என்றான்.
“டேய், உன்னய மாதிரி துள்ளுனவனல்லாம் எப்டி காணாப் பொணமா செதச்சிப் போட்டானுங்கன்றத பாத்தவன்டா நானு. எல்லாத்தயும் சுருட்டிக்கிட்டு இருந்தாதான் உசுரப் புடிச்சி வைக்க முடியும். எல்லா ஊர்லயும் போயிப் பாரு இருக்கறதுலயே நம்ம எனத்துலதான் செனம் கொறச்சலா இருக்கும். இல்லாதவன் பூரா எதோ சீக்குல போனவன்னு நெனக்காத. சீக்குல போன உசுரு கம்மிதான்.. மத்தவன்லாம் அல்ப்பாயிசில அடி வாங்கிச் செத்தவன். ஆத்துல கொளத்துல பொணம் மெதக்கும். அடிபட்ட காயம் வெத்துக் கண்ணுக்கே தெரியும். ஆனா, குடிபோதயில கொளத்தங்கரைல பாவக்கா பறிக்கப் போயி தண்ணிக்குள்ள மூழ்கிட்டான்னு சொல்லிப் புடுவானுங்க. பாதிப் பேரு செஞ்ச குத்தத்துக்காகவும் செய்யாத குத்தத்துக்காகவும் செயில்ல கடந்து அவதிப்படரான். நம்ம புள்ளக் குட்டிகள காத்து கர சேக்கனும்னா பொச்ச பொத்திக்கிட்டு இரு.” என்று கோபமாகக் கத்தினார் தருமன்.
“ம்… அதான் பெரியவங்க சொல்லிட்டீங்கள்ல! காலத்துக்கும் ஏதோ, செனப்பன்னிய தூக்கி முதுகுல சொமந்த மாரி கூனுப்போட்டே வாந்து சாவோம்.” என்று ஆவேசமாகச் சொல்லிவிட்டு குப்பையைத் தூக்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் சவட்டை.
“அவன் எளப் பயல்ல, அப்டிதான் குதிப்பான். அவன உடு. இங்காரு, இன்னக்கி அய்யா கோவமா இருப்பாரு. இன்னக்கி சாயங்காலம் வேண்டாம். நாளக்கி காலில விடிஞ்சதுமே எல்லாருமா போயி அய்யாவ ஊட்லயே பாத்துப் பேசிக்கலாம். அவரு கோவத்த பத்தி நமக்குத் தெரியாதா என்னா! எல்லாஞ் சரியா போகும். நீ பன்னியத் தூக்கிட்டு ஊட்டுக்குப் போ. கடத்தெருவ நாங்க பெருக்கிக்கிறோம்.” என்றார் தருமன்.
அஞ்சானும் பார்வதியும் தெருவெங்கும் இரத்தம் சொட்ட, பன்றியைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றார்கள். இரவு நெடுநேரம் வரை குடிசையை விட்டு எல்லோரும் வெளியில் வந்து, நிலா வெளிச்சத்தில் அமர்ந்து, இன்று நடந்த பிரச்சனையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் அஞ்சானும் பார்வதியும் தன்னிலை விளக்கம் அளித்து முடித்ததும் உறங்கச் சென்றார்கள். அஞ்சான் வெகு நேரமாய் உறங்கவே இல்லை. அவர், ‘இது எப்படி முடியுமோ?’ என்ற கவலையோடே இருந்தார்.
அடுத்த நாள் விடிந்ததும் தூரத்திலிருந்து வெடிச்சத்தம் கேட்டது. பதறிப்போன அஞ்சான் தன் மிதிவண்டியை மிதித்து ஊரை அடைந்து, காட்டை நோக்கி வேக வேகமாய்ப் போனார். பின்னாலேயே தாத்தா உட்பட எல்லோரும் ஓடினார்கள். அவர்கள் அங்கு சென்று சேர்வதற்குள் எல்லாப் பன்றிகளும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தன. காட்டிற்குள் ஒரு சில பன்றிகளைச் சுட்டதும் தெறித்து ஓடிய பன்றிகள், தெருக்களில் வைத்துச் சுடப்பட்டு, இரத்த வெள்ளத்தில் கிடந்தன. ஊரே இரத்தக் கவுலடித்தது. பன்றிகளில் சில இன்னும் உயிர் போகாமல் வாயைத் திறந்து திறந்து மூடி தன் கடைசி மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டிருந்தன. இன்னும் சற்று உள்ளே நடந்தார்கள் அஞ்சானும் மற்றவர்களும். அதே கருவேல மரத்தின் அடியில், பெரும் சினைப் பன்றி கால்களை விரித்தபடிக் கிடந்தது. அதன் வயிற்றிலிருந்து ஆறு குட்டிகள் வெளியே வந்திருந்தன. அப்போதுதான் புதிதாகப் பிறந்த அந்தக் குட்டிகளைக் கொள்ள துப்பாக்கி இரவைகளை வீணடிக்க வேண்டாமெனக் கருதி, அருகிலிருந்த கற்களாலேயே அடித்துக் கொள்ளப்பட்டு, தலை உடலெல்லாம் நசுங்கிக் கிடந்தன அந்தப் புதுக் குட்டிகள். குட்டிப் போட்டுக் கொண்டிருந்தபோதே வயிற்றிலும் கழுத்திலும் சுடப்பட்ட தாய்ப் பன்றியின் வயிற்றைத் துளைத்து உள்ளே சென்ற இரவைகள் அடுத்து பிறப்பதற்குத் தயாராய் உள்ளே இருந்த சில குட்டிகளையும் துளைத்துக் கொன்றிருந்தது. குண்டு காயம் படாத குட்டிகளும் கூட மூச்சுத் திணறி செத்திருந்ததால் பன்றியின் வயிறு அசைவின்றிக் கிடந்தது. இந்தக் கோரக் காட்சிகளைப் பார்த்த அஞ்சான் பேச்சின்றி அப்படியே தரையில் விழுந்தார். பின்னால் பார்வதி அழுதபடி உரக்கக் கூச்சலிட்டு பல கெட்ட வார்த்தைகளை உதிர்த்துக் கதறினாள்.
அங்கிருந்து புறப்பட்டு எல்லோரும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குப் போனார்கள். ஊர் மக்களில் ஒரு சிலர் இதற்காகப் பரிதாபப்பட்டாலும், பல பேர் இதை இரசிக்கவே செய்தார்கள்.
அஞ்சான் உட்பட அத்தனை பேரும் ஊராட்சி அலுவலகத்தின் வாசலை முற்றுகையிட்டு கத்தினார்கள். உள்ளே அமர்ந்திருந்த ஊராட்சித் தலைவர் வெளியே வந்து, “என்னடா சத்தம்?” என்றார்.
“ஐயா, நீங்க பண்ணிருக்குற காரியம் உங்களுக்கே அடுக்குமாயா… ஒரு பன்னி காருல விழுந்து செத்ததுக்கு இப்டி எல்லாப் பன்னியயும் எரக்கமே இல்லாம கொன்னுப்புட்டீங்களே! நியாயமாயா இது?” என்றார் தருமன்.
“டேய் கெழட்டு நாயே, உன் பன்னி கார்ல விழுந்ததுக்காக ஒன்னும் கொள்ளல… ந்தா… இந்த ரெண்டு மூதியும் பேசுன பேச்சு அப்படி. அந்தப் பேச்சுக்கு இதுவே கொறச்சதான். போங்கடா போயி எல்லா பன்னியயும் பொதைக்கறதுக்குள்ள உங்களுக்கு வேண்டியத எடுத்து ஆக்கித் தின்னுப்புட்டு போயி வேலையப் பாருங்க.”
“ஐயா, நான் பேசுனது தப்புதாங்கயா. அதுக்கு என்னய தண்டிச்சுருக்கலாம்லயா. ஏன்யா அந்த அப்பாவி சீவன்களப் போய் கொன்னீங்க?” என்று கண்ணீர் ததும்பக் கேட்டார் அஞ்சான். பார்வதி எதுவுமே பேசாமல் அழுதபடி நின்றாள். அவள் கண்களில் கோபக் கனல் தகித்தது.
“நேத்து வந்த கோவத்துக்கு, உங்கள சுட்டுத் தல்லலாம்னுதான்டா வந்துச்சு. உங்கள சுட்டா அப்பொறம் நான் கோர்ட்டு கேசுன்னு அலயனுமேன்னுதான் விட்டேன். போங்க இனிமேலாவது ஒண்டிக் கெடந்து பொழக்கிற வழியப் பாருங்க.”
“எது, ஆளுகள சுடவியா? எங்க சுடு பாப்போம்.” என்று ஏறிப் போன சவட்டையை, மேற்படியில் நின்றிருந்த ஊராட்சித் தலைவர், எட்டி நெஞ்சிலேயே உதைத்தார். நிலை தடுமாறிய சவட்டை பின்னால் நிற்போரை இடித்து தரையில் விழுந்தான். விழுந்த வேகத்தில் ஆத்திரம் கொண்டவனாய் எழுந்து ஊராட்சித் தலைவரை நோக்கிப் பாய்ந்தான். சுற்றி நின்ற எல்லோரும் அவனைப் பிடித்துத் தடுத்தார்கள்.
“ஏன்டா நாய்ங்களா, இதுக்குமேல ஒங்களுக்கு இந்த ஊர்ல எடம் இல்ல. மரியாதயா ஊரக் காலி பண்ணிட்டுப் போய்டுங்க. டேய் அடிச்சு விரட்டுடா இந்தப் பீத்தின்னிவள.” என்று கோபமாகக் கத்திவிட்டு தன் காரில் ஏறிப் போய்விட்டார்.
“எப்பா, அலுவலக வளாகத்துக்குள்ள இப்டி கூட்டமா நிக்காதீங்க. வெளில போங்க.” என்றார் தலையாரி.
சவட்டை ஆவேசமாக, “போதுமாயா… இந்த அசிங்கம் போதுமா ஒங்களுக்கு? ஊராட்சித் தலைவரு பாத்துப்பாரு பாத்துப்பருன்னீயல்ல. நல்லா பாத்தான் பாருங்க அந்த ஆளு. ஏற்கனவே நாம ஊருக்கு வெளிலதான் கெடக்கோம். இதுல, ஊர உட்டு போவ சொல்லிட்டுப் போறான். இப்ப என்னா பண்ண போறீய்ங்க? ஏற்கனவே பன்னிவோள எழந்தாச்சு.. இப்ப மானத்தையும் எழந்தாச்சு.. இன்னும் இருக்கறதலாம் எழந்துட்டு கெடங்க! இதெல்லாம் ஒரு பொழப்பு மசுரு. த்த்தூ….” என்று துப்பினான்.
அதுவரை தலையைத் தொங்கப் போட்டு நின்ற தருமன், ஆவேசம் வந்தவராய்க் கத்தினார், “டேய்… எல்லாரும் வெளிய வாங்கடா. ரோட்ட மறிச்சி உக்காருங்கடா. இன்னக்கி ஒரு முடிவு தெரியாம ரோட்ட உட்டு ஒருத்தனும் எந்திரிக்கப்படாது. மொத்த உசுரும் ரோட்டுல போனாலுஞ்சரி,” என்றபடி முதல் ஆளாய் தார்ச் சாலையில் அமர்ந்தார். அவரைப் பின் தொடர்ந்து எல்லோரும் அமர்ந்தார்கள். அது, இரு நகரங்களை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் சிறிது நேரத்தில் இரு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கூட்டம் திரண்டுவிட்டது.
ஊராட்சித் தலைவருக்கு இந்தச் செய்தி அலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே, “ஓ… அந்தளவுக்கு ஆயிப்போச்சா அவனுகளுக்கு!” என்றபடி காவல்துறைக்குத் தெரிவித்தார். பக்கத்து ஊரிலிருந்து காவலர்கள் நான்கு பேர் வந்தார்கள். காவல் ஆய்வாளர், கூட்டத்தை விளக்கிக்கொண்டு உள்ளே வந்து, “ஏய்… என்னாத்துக்கு இப்டி ரோட்ட மறச்சி கெடக்கீங்க. மரியாதயா எந்திரிங்க.” என்று மிரட்டினார். யாரும் எதுவுமே பேசவில்லை. நேரமாகிக் கொண்டே போனது. பக்கத்து ஊர் தாண்டிக் கூட வாகனங்கள் நகர இயலாது நின்றன. காவல் ஆய்வாளரும் உதவிக் காவல் ஆய்வாளரும் என்னவெல்லாமோ பேசிப் பார்த்தனர். அவர்கள் நகருவதாய் இல்லை. உடனே ஆய்வாளர் ஊராட்சித் தலைவருக்கு அழைத்து தகவல் சொன்னார்.
ஊராட்சித் தலைவர், “சார்… என்ன அவனுங்கள்ட்டல்லாம் பேசிட்டு இருக்கீங்க. அடிச்சுத் தூக்கிப் போடுங்க அந்த நாய்ங்கள. நான் ஒரு சொந்த வேலயா வெளிய போய்ட்டுருக்கேன். இல்லாட்டி நானே வந்து மிதிச்சிப் போடுவேன். நீங்க அடிச்சித் தொரத்துங்க சார். எதுவா இருந்தாலும் நான் பாத்துக்குறேன்.” என்றார்.
உடனே அங்கிருந்த காவலர்கள் எல்லோரும் சேர்ந்து அஞ்சானையும் மற்றவர்களையும் வலுக்கட்டாயமாகப் பிடித்துத் இழுத்துத் தாக்கினார்கள். அவர்கள் எழ மறுத்ததால் சில தடியடிகளும் விழுந்தன. அதற்குள் அங்கே புகைப்படக் கருவிகளோடு பத்திரிகைக்காரர்கள் வந்துவிட்டார்கள். அவர்களைக் கண்டதும் காவலர்களின் தாக்குதல் நின்றது. சவட்டை, பத்திரிகைக்காரர்களிடம் விவரத்தைச் சொன்னான். அது, எல்லா ஊடகங்களிலும் ஒளிபரப்பானது. சிறிது நேரத்தில் அந்தப் போராட்டக் களத்திற்கு மாவட்ட ஆட்சியர் வந்துகொண்டிருப்பதாகச் செய்தி வந்தது. இந்தத் தகவலைக் கேட்ட ஊராட்சித் தலைவர் திடுக்கிட்டுப் போனார். அவரின் பயணத்தை நறுத்திவிட்டு உடனே திரும்பினார்.
மாவட்ட ஆட்சியரின் வாகனம் வெகு தொலைவிலேயே நிறுத்தப்பட்டது. அவர், மற்ற அதிகாரிகளின் புடை சூழ நீண்ட தூரம் நடந்தே வந்தார். அதே நேரத்தில் ஊராட்சித் தலைவரும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.
ஊராட்சித் தலைவர், மாவட்ட ஆட்சிரைப் பார்த்து “வணக்கம் சார்” என்றார். ஆட்சியர் அவரைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு போராட்டக்காரர்களிடம் சென்றார். அவர்களைப் பார்த்து, “உங்க நெலம எனக்குப் புரியுது. இப்டி இவங்க பண்ணிருக்கக் கூடாது. நான் கண்டிப்பா நடவடிக்க எடுக்குறேன். ஆனா, நீங்களும் அதுக்காக இப்டி ரோட்ட மறச்சி எல்லாரையும் கஷ்டப்படுத்த கூடாது. இப்போ கலஞ்சிப் போங்க.” என்றார். யாரும் பதில் பேசவில்லை அப்படியே அமர்ந்திருந்தார்கள்
அதற்குள் ஊராட்சித் தலைவர், தலையாரியிடம், “என்னய்யா கலெக்டரு அவங்களுக்கு சாதகமா பேசறாப்ல தெரியுது.” என்றார். “அட நீங்க வேற. கூட்டத்த கலைக்க இப்டிதான் நாசூக்கா பேசுவாங்க.” என்றார் தலையாரி.
உடனே உத்வேகமடைந்த ஊராட்சித் தலைவர், “சார், இவனுங்க இப்டி பேசுனாலாம் நகர மாட்டானுங்க சார். போலீச விட்டு அடிச்சு வெரட்ட சொல்லுங்க.” என்றார்.
மாவட்ட ஆட்சியர் கடுமையான முகத்தோடு, “நீங்க யாரு சார்?” என்றார்.
“சார், இவருதான் சார் ஊர் பிரசிடென்ட்.” என்றார் தலையாரி.
“இந்தப் பதில சொன்னதுக்காகவே உங்களத் தூக்கி உள்ள போடனும். ஊராட்சித் தலைவர் இவரா இவரு வைவ்ஃவா? வீட்டுப் பொண்ணு ஊராட்சித் தலைவியா இருக்கும்போது இப்டி வீட்டு ஆம்பளங்க வந்து அடாவடி பண்ணா அவங்களோட ஊராட்சித் தலைவர் பதவியே பறிபோய்டும் தெரியும்ல? சரி, பன்னிங்கள எதுக்கு சுட்டீங்க?”
“சார்… ஊருல அதுங்க அராஜகம் தாங்கல சார். அதால நெறய நோய்லாம் பரவுச்சி. அதான் சுடச்சொன்னேன்.”
“நோய் பரவுச்சா. அதுக்கு உங்கள்ட்ட எதாவது எவிடென்ஸ் இருக்கா? சரி அப்படியே பரவியிருந்தாலும் அத சுட்டுக் கொல்ல யார்ட்ட பெர்மிஷன் வாங்குனீங்க? தெரு நாயக் கொலறதுக்குக் கூட யாருக்கும் உரிம கெடையாது. நீங்க இன்னொருத்தர் வளக்குற பன்னிய இஷ்டத்துக்கு சுட்டுக் கொன்னுருக்கீங்க. இதுக்குமேல நீங்க என்கிட்ட எதுவும் பேச வேண்டாம். எதா இருந்தாலும் கோர்ட்ல பேசிக்கோங்க. என்று சொல்லிவிட்டு, அஞ்சானைப் பார்த்து, நீங்க ஸ்டேஷனுக்குப் போய் ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக் குடுங்க. இறந்த பன்னிகளுக்கான பணம் உங்களுக்கு கெடைக்க நான் ஏற்பாடு பண்றேன்.” என்றார்.
நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தருமனுக்கும் மற்றவர்களுக்கும் இப்போது நம்பிக்கை வந்திருந்தது.
“ஐயய்யோ ஐயா, நீங்க இவ்ளோ சொன்னதே போதுங்கய்யா. இவ்ளோ நடந்ததுக்கப்பறம் நாங்க இந்த ஊர்ல இருந்தோம்னா எங்க புள்ளக் குட்டிக உசுருக்கு உத்தரவாதம் இல்ல. நாங்க ஊர விட்டு போறோம்யா. செத்துப் போன பன்னிகளுக்கு மட்டும் ஒரு நியாயத்தச் சொன்னீங்கனா போதும்யா.” என்றார் தருமன்.
மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தி, அங்கேயே காவல்துறையை வைத்து புகாரை எழுதி வாங்கிக்கொண்டார். கூட்டம் கலைந்தது. ஊராட்சித் தலைவரின் கணவர் தன் வீட்டில் வழக்கறிஞரிடம் பேச்சுவார்த்தையில் இருந்தார். “கேஸ் மட்டும் முடியட்டும் இந்த ஊத்த நாய்ங்க எந்த ஊர்ல போய் ஒளிஞ்சிருந்தாலும் கண்டுபுடிச்சிப் போயி அத்தன பேத்தையும் கொளுத்தி விட்டுடுறேன்.” என்றார்.
அன்று இரவே அஞ்சான் உட்பட அவர்கள் அனைவரும் ஊரைக் காலி செய்து வேற்றூர் நாடிச் சென்றார்கள். நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டே……….. இருந்தது.
சில மாதங்கள் கழிந்தன. கோழிக் கடைக்காரர் கழிவுகளையெல்லாம் கருவேலங்காட்டில் கொட்டினார். கழுகுகளும் நாய்களும் பூனைகளும் பெருச்சாளிகளும் தின்றது போக மீதச் சதைகள் அப்படியே அழுகின. குப்பை அள்ள ஆள் இன்றி, ஊர் முழுக்க குப்பைக் காடானது. இதனால் ஊரே நாற்றமெடுத்தது! இப்போது இந்த நாற்றத்திற்கு யாரைக் குறை கூறலாமென்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தனர் ஊரார்.