
ரெஸ்டாரண்டில் அலுவலக மேலதிகாரிகளுடன் சாப்பிட உட்காரும் போது, பயங்கரமாகப் பசித்தாலும் ஆர்டர் செய்த ‘ஹாட்- டாக்’ பன்னை ஸ்டைலாக பிடித்து மெதுவாக அழுத்தி வாய்க்குள் நுழைப்பது மாதிரி மிக மெதுவாகத்தான் ஹார்ன் பட்டனை அழுத்துவார் பால்காரர் முனியாண்டி. ஹார்ன் சத்தமும் அதுக்கேத்த மாதிரி மென்மையாகத்தான் வெளிவரும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் அந்தச் சத்தம் ஐம்பது டெசிபலைத் தாண்டினாலே அபூர்வம்தான். ஆனாலும் தெருவில் உள்ளவர்களுக்கு அவர் வரும் நேரம் தெரியும் என்பதால் பலதரப்பட்ட இரைச்சலிலும் இவரது ஹார்ன் சத்தத்தை துல்லியமாக சலித்தெடுத்து புரிந்து கொண்டு வெளியே வந்து விடுவார்கள்.
அன்றும் அப்படித்தான், வீட்டு முற்றத்தில் காலை எட்டு மணி வெயிலில் வடகம் காய போட்டுக் கொண்டிருந்த பார்வதி, ஹாரன் சத்தம் கேட்ட உடனே வீட்டுக்குள் சென்று பால் சொம்பை தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.
பால்காரர் எப்பவும் போல அரை லிட்டர் அளந்து ஊற்றப் போகும் போது, “இன்னும் ஒரு அரை லிட்டர் கிடைக்குமா?, வீட்டுக்கு விருந்தாட்கள் வர்றாங்க” என்றாள்.
“தர்றேம்மா, நெறைய பால் இருக்கு”
அப்போதுதான் ஓடையில் குளித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த நடராஜன், “என்ன வோய், கேட்ட வொடனே நெறைய பால் இருக்குனு சொல்றியரு, அதிகமா தண்ணி சேக்குறீயரா?” என்றவர், பதிலை எதிர்பார்க்காமலேயே வீட்டுக்குள் சென்று விட்டார்.
அதைக் கேட்டவுடன் பால்காரருக்கு முகம் சுருங்கி விட்டது.
“அப்படியெல்லாம் நான் தண்ணீ சேக்குறதில்லம்மா”. அவர் சொன்னதைக் கேட்ட பார்வதிக்கு பரிதாபமாக இருந்தது.
“அடுத்தவங்க மனச சர்வ சாதாரணமா காயப்படுத்தறத நிறுத்துங்கன்னு எத்தன தடவ உங்ககிட்ட சொல்லி இருக்கேன்?” கோபத்தில் தடவிய வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தவள், காஃபி போட பாலை அடுப்பில் பாத்திரத்தில் ஊற்றி வைத்தாள்.
சிறிது நேரம் இருவரிடமும் போய்வர வழி தெரியாமல் வாய்க்குள்ளேயே திணறிக் கொண்டிருந்தது பேச்சு.
நடராஜன் தான் அமைதியை விலக்கினார், “என் யூனிபாஃர்ம் சட்டய எங்க?”
“நான் சொல்றத என்னைக்காவது கேட்டிருக்கீங்களா?” என்று முணுமுணுத்துக் கொண்டவள், “அங்கதான் ஹேங்கர்ல கெடக்கும், கொஞ்சம் நல்லா தேடிப் பாருங்க. நான் அதுக்குள்ள காப்பி போட்டுருவேன். இட்லி ரெடியாதான் இருக்கு” என்றவள் தொடர்ந்தாள்.
“என் அக்காவும் அத்தானும் புது வீடு பால் காய்ப்பு கார்டு கொண்டுட்டு வர்றாங்களாம், வேலைக்கு கொஞ்சம் நேரம் பிந்தி வாரேன்னு போன் பண்ணுங்க” என்றாள்.
“அது முடியாதுன்னுதான இப்ப கெளம்புறேன், நான் சகல கிட்ட பெறவு பேசிக்கிறேன், சீக்கிரம் சாப்பாடு எடுத்து வை” என்றவர் ஹாங்கரில் இருந்த சட்டையை போட்டுக் கொண்டு சாப்பிட்டு விட்டுக் கிளம்பினார்.
கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் என வடசேரி பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பேருந்து நிலையத்துக்குள் இருந்த அரசு போக்குவரத்து அலுவலகத்துக்குள் சென்று ‘சார்ட்’ பார்த்துவிட்டு தன்னுடைய ‘பார்வதிபுரம் டூ பார்வதிபுரம்’ பேருந்தை நோக்கி வந்தார் நடராஜன். கீழே நின்று கொண்டே உள்ளே முன்பக்கத்தை பார்த்தவர், “உள்ள அவ்வளவு எடம் இருக்கு, படில நின்னுட்டு இருக்குறியேம்மா, கொஞ்சம் உள்ள தள்ளி போங்க” என்றார். யாரும் அசைவது மாதிரி தெரியவில்லை. “ஏம்மா, உன்னத்தாம்மா, கொஞ்சம் உள்ள போ” கோபம் காரணமாக அவரின் பேச்சு மரியாதை இழந்திருந்தது.
வயிறு முட்ட இரை எடுத்த பாம்பு, மெதுவாக நகர்வது மாதிரி நின்று கொண்டிருந்தவர்கள் மெதுவாக நகர்ந்து உள்ளே சென்றனர். டிரைவர் கோபால் முன்பக்கம் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்ய நடராஜன் பின்பக்கம் ஏறி டிக்கெட் கொடுத்தபடி முன்னேறினார்.
ஆகஸ்ட் மாத வெயில், வியர்வையை தாராளமாக வழங்கிக் கொண்டிருந்தது.
“என்னா வெக்கையா இருக்கு, இந்த ஜன்னல தொறக்கலாம்னு பாத்தா அதுவும் முடியல” – ஜன்னல் பக்கம் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் பரிதாபமாகச் சொல்ல, அதைக் கேட்ட நடராஜன், “மேல்பக்கமா லேசா அடிச்சிட்டு தொறங்க” என்றார். “எல்லாம் பண்ணிப் பார்த்தாச்சு” என்ற பெரியவரின் பேச்சில் சலிப்புத் தெரிந்தது. ‘என்னய்யா வண்டி வச்சிருக்கீங்க, மழ பெய்தா வண்டி ஒழுவுது, வெயில் அடிச்சா ஜன்னல தொறக்க முடியல” அருகிலிருந்த கரை வேட்டிக்காரர் தன் இருப்பைக் காட்டினார்.
கரைவேட்டிக்காரருக்கு என்ன பதில் சொல்வது என்ற தடுமாற்றம், லேசான கோபத்தை நடராஜனுக்குள் சொருகியது. சிறிய எரிச்சலுடன் “கொஞ்சம் தள்ளுங்க” என்று நின்றிருந்தவர்களை ஒதுக்கிவிட்டு அருகே வந்த நடராஜன், கண்ணாடி ஜன்னலை லாவகமாக தட்டி மேலே தூக்கித் திறந்தார். பெரியவருக்கு நிதான மூச்சு வந்தது.
மீண்டும் ‘டிக்கெட்……. டிக்கெட்’ என தன் கடமைக்குள் நுழைந்து விறுவிறுப்பாக டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார் நடராஜன்.
ஆண்கள் பகுதியைத் தாண்டி பெண்கள் பக்கம் செல்லும் போதுதான் அவர் அதைக் கேட்க நேர்ந்தது.
“மக்கா, என்னா வேர்வ வாடை, வேலைக்கி வரும்போது நல்ல சட்டய போட்டுகிட்டு வரமாட்டாரு போலுக்கு” அந்தக் கல்லூரி மாணவன் தன் நண்பனிடம் சொன்னது நடராஜன் காதுக்கும் கேட்டது.
‘இவன் யாரைச் சொல்கிறான்? என்னையா அல்லது பக்கத்தில் இருப்பவரையா?’ என்று மனம் யோசித்தாலும் அவரை அறியாமலேயே தலையைத் திருப்பி சட்டையின் காலர் பக்கம் மெதுவாக முகர்ந்து பார்த்தார்.
“கவர்மெண்ட்டுதான் டிரஸூ குடுக்குதே, தெனமும் தொவச்சி போட்டுட்டு வரலாந்தான?” முதலில் பேசினவனின் நண்பன் சொல்லும் போது நடராஜனுக்கு தெளிவாகப் புரிந்துவிட்டது, அவர்கள் தன்னைத்தான் சொல்கிறார்கள் என்று.
‘டிக்கெட்…..டிக்கெட்’ என்ற அவரின் குரலில் தானாக சுதி குறையத் தொடங்கியது. வேகமாக முன்னே சென்று படிக்கட்டு கம்பியில் சாய்ந்து கொண்டு பெண்களுக்கு டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார். அவரின் காலை நேர உற்சாகத்தை அந்த இளைஞர்களின் பேச்சு முழுதாக விழுங்கி விட்டிருந்தது.
‘ஸ்டேடியம் எறங்கணும்’ சத்தம் கேட்டு ஒற்றை விசில் அடித்தார் நடராஜன்.
“ஸ்டாப் வந்தவொடனே வண்டிய நிறுத்தத் தெரியாதா, எவ்வளவு நேரம் கத்துறேன்” நின்று கொண்டிருந்தவர்களின் கைகளை மாறி மாறிப் பிடித்து, படிக்கட்டுகளில் மெதுவாக இறங்கினார் ஜன்னல் பக்கம் இருந்த பெரியவர். அந்த இளைஞர்களின் வியர்வைப் பேச்சால் குறுகிப் போயிருந்த நடராஜன், தன் மனதை நிதானத்துக்கு இழுக்க ரொம்ப கஷ்டப்பட்டார். முயற்சி செய்து எதார்த்தத்திற்கு வந்தவர், உடலை வில் மாதிரி வளைத்து ஜன்னல் வழியாக பின்படிக்கட்டை எட்டிப் பார்த்து பெரியவர் இறங்கியதும் டபுள் விசில் கொடுத்தார்.
பெண்கள் பகுதியில் அனைத்து டிக்கெட்களையும் கொடுத்து முடித்து மீண்டும் தன் இருக்கைக்கு வரும் போது நடுப்பகுதியில் அந்த இளைஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகில் செல்லும் போது நன்றாக ஒதுங்கி பக்கத்தில் நின்றிருந்தவரின் மீது உரசியபடி மூச்சை நன்றாக உள்ளிழுத்து வைத்துக் கொண்டு வேகமாக தாண்டி வந்தார். வரும் போது ஓரக்கண்ணால் அவர்களைப் பார்த்தார். அவர்கள் பேருந்தின் முன்பக்கம் கைகாட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். முன்னால் பார்த்தபடி தன்னைப் பற்றி பேசுகிறார்களோ என்று அவரது மனம் மீண்டும் வியர்வையை யோசிக்க ஆரம்பித்தது.
மணிமேடை தாண்டி அண்ணா பேருந்து நிலையம் வந்ததும் முக்கால்வாசி கூட்டம் இறங்கி விட்டது. கல்லூரி செல்லும் அந்த இரண்டு இளைஞர்களும் இறங்கி விட்டனர். நாலைந்து பேர் மட்டும் இருக்கையில் அமர்த்திருந்தனர். வண்டி பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் நிலைய நுழைவாயிலிலேயே கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தது. ஒன்றிரண்டு பேர் வந்து ஏற ஆரம்பித்தனர். ஆசுவாசமாக தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் மீண்டும் சட்டையை நன்றாக முகர்ந்து பார்த்தார். ஆம், அது வியர்வை வாடை தான். முந்தைய நாள் போட்டிருந்த அதே சட்டையை மீண்டும் போட்டுக்கொண்டு வந்ததுதான் தப்பு என்று அவரின் மனம் நினைத்துக் கொண்டது.
அவரை சுற்றிலும் வியர்வைத் துளிகள் நின்று கொண்டு கைகொட்டிச் சிரித்தன. அதில் நடுவில் இருந்த வியர்வைத் துளி, கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி மற்ற வியர்வைத் துளிகளை உள்ளிழுத்து பெரிய பலூன் மாதிரி விரிந்து கொண்டே போனது. விரியும் போதே கொஞ்சம் கொஞ்சமாக மேல் எழும்பியது. நடராஜனின் தலைக்கு மேலே பேருந்தின் மேல் பகுதியைத் தொட்டவுடன் பட்டென்று வெடித்தது. அதன் சாரல் நடராஜனின் மேனி முழுக்கப் பரவியது. உடனே வியர்வை வாடை அவரின் மூக்கைத் துளைத்தது. வெளியே நின்று கொண்டிருந்த நெட்டிலிங்கமரம் வீசிய கோடைக் காற்று மெதுவாக அவரை வருட, அதுவும் அதே வாடைதான் அடித்தது. கையில் வைத்திருந்த டிக்கெட்டுகளை மூக்கின் அருகில் கொண்டு சென்றார். வலது காதில் சொருகியிருந்த பால்பாயிண்ட் பேனாவை எடுத்துப் பார்த்தார். எல்லாவற்றிலும் அதே வியர்வை வாடைதான்.
அதிலிருந்து வெளி வருவதற்காக கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டார். வண்டி புறப்பட இன்னும் கொஞ்ச நேரம் இருந்ததால் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தில் போட்டுக் கொண்டார். மனதில், நேற்று டிவியில் பார்த்த “நல்லதொரு குடும்பம்” திரைப்படத்தில் வாணிஸ்ரீயை சிவாஜி கொஞ்சும் ‘சிந்து நதிக்கரை ஓரம்…… அந்தி நேரம்…..எந்தன் தேவி ஆடினாள்’ பாடலை ஓடவிட்டார். ஆற்றங்கரையில் தன் நிழலையும் கூட்டிக் கொண்டு வாணிஸ்ரீயை நோக்கி சிவாஜி ஸ்டைலாக நடந்து வர, உடனே பாடல் மறைந்து வேறு சிந்தனை அவருக்குள் உதித்தது. ‘ஐயோ, வெயிலில் சிவாஜிக்கு வியர்க்குமே, எப்படி வாணிஸ்ரீயை கட்டிப் பிடித்தார்? வாணிஸ்ரீ ஒன்றும் சொல்லவில்லையா? சிவாஜிக்கு சங்கடமாக இருந்திருக்காதா?’ என பல எண்ணங்கள் அவருக்குள் ஓட ஆரம்பித்தன. “பால்பண்ண போவுமா?” என்ற சத்தம் கேட்டு கைக்குட்டையை கையில் எடுத்துக் கொண்டவர், “ஆமா போவும், உள்ள ஏறுங்க” என்றார்.
மனதை திசைதிருப்ப சீட்டில் இருந்தபடியே திரும்பி அண்ணா பேருந்து நிலையத்துக்குள் இருந்த மனிதர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். பேருந்துகளின் பின்னாலேயே ஓடி அதில் ஏறுபவர்கள், கடைகளில் பொருட்கள் வாங்குபவர்கள், அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து இருப்பவர்கள் என எல்லோரையும் வியர்வை வாடை துரத்திக் கொண்டிருந்தது. இது நிஜம்தானா என்று தன்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டார். ஆம், நிஜம்தான்.. கிள்ளியது வலித்தது. எங்கிருந்தோ வேகமாக வந்த தாழ்வு மனப்பான்மை, வேகமாக அவருக்குள் புகுந்து கொண்டது.
“கெளம்புவோமா நடராஜன்?” டிரைவர் கோபாலின் கேள்விக்கு தன்னுடைய டபுள் விசிலால் பதில் கொடுத்தார். அப்போது வேகமாக ஓடி வந்து ஏறிய டிப்-டாப் ஆ சாமி, முதல் படி ஏறினதுமே மூக்கைப் பொத்தினார். “வண்டில ஏதோ வாட அடிச்ச மாரி இருக்கு” என்று இவரைப் பார்த்து சொன்னதும், தாழ்வு மனப்பான்மை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த அவரின் இதயம், சடன் பிரேக் போட்டு நின்று மீண்டும் மெதுவாக துடிக்க ஆரம்பித்தது. சமாளிக்கும் விதமாக, “முன்னால எடம் காலியா இருக்கு, அங்க போய் உக்காருங்க” என்றார். ‘நம் வியர்வை வாடையைத் தான் இவர் சொல்கிறாரோ’ என்று மீண்டும் மனம் படபடத்தது. இரண்டு சீட் தள்ளி நின்று கொண்டே அவருக்கு டிக்கெட்டை நீட்டினார்.
மதியம் சாப்பிட்டு கை கழுவும் போது டிரைவர் கோபாலிடம் மெதுவாகக் கேட்டார்,
“அண்ணே, என் சட்டைல வேர்வ வாட அடிக்குதானு பாருங்க”
நடராஜன் அருகில் சென்ற கோபால், “அப்படி ஒண்ணும் தெரியலியேப்பா” என்றார்.
“நல்லா பக்கத்துல வந்து சட்டய மோந்து பாருங்கண்ணே”
இன்னும் அருகில் சென்று, “ஆமா, லேசா தெரியுது” என்றவர் மேலும் தொடர்ந்தார்,
“நாம வாங்குற சம்பளத்துக்கு இதெல்லாம் பாத்தா முடியுமாப்பா, தெனமும் அயன் பண்ணுன டிரஸ் போடுறதுக்கு நாம என்ன கம்ப்யூட்டர் கம்பனியிலயா வேலைக்குப் போறோம், இந்த வெயிலுக்கு எல்லார் கிட்டயும் வேர்வ வாட அடிக்கதான் செய்யும்?” என்றார் கோபால்.
எந்த சமாதானத்துக்கும் அடிபணியாமல் நடராஜனின் மனதுக்குள் கொடி உயர்த்தி ஆட ஆரம்பித்தது வியர்வை.
சாயந்திரம் டூட்டி முடிந்து வீட்டுக்கு வந்த உடனே மனைவி பார்வதியிடம் கத்தினார்.
“துணிகள தொவச்சி போட்டா என்ன உனக்கு? நேத்துப் போட்ட சட்டய இன்னைக்கும் போட்டுட்டு போக வேண்டியதுதா போச்சி, ஒரே வேர்வை வாட” வார்த்தைகளில் கோபம் கொப்பளித்தது.
“ஒரு வாரமா அடி பம்பு ரிப்பேராயிருனு சொல்லிகிட்டு இருக்கேனே, அது ஓர்ம இருக்கா, பக்கத்து தெருவுக்கு போயி பைப்புல தண்ணீ பிடிச்சி தூக்கிட்டு வந்துதான் வீட்டு சமையல் பண்ணுறேன், இதுல துணி துவைக்கணும்னா என் இடுப்பு ஒடிஞ்சி போயிரும், மொதல்ல அடிபம்ப சரி பண்ணுங்க” பார்வதியின் வார்த்தைகளிலும் சூடு கூடியது.
“ஒண்ணு, பக்கத்து வீட்டுல போயி கத பேசுற இல்லனா வீட்ல உக்காந்து டிவி பாக்குறே, இதுக்கு பதிலா அந்த துணிகள தொவச்சி போட்டுருக்கலாம்லா “
“ஆமா, நா ஒரு வேலையும் செய்யல. அப்படியே நெனைச்சுகிட்டு இருங்க. இனி ரெண்டு நாள் சும்மா இருக்கேன், அப்போதான் நா என்னென்ன வேல செய்றேன்னு ஒங்களுக்குத் தெரியும்”
இனி பேச்சை வளர்த்தால் சண்டை பெரிதாகும் என்று புரிந்து கொண்ட நடராஜன் இரண்டு குடங்களை எடுத்துக் கொண்டு பக்கத்து தெரு குழாயடிக்குச் சென்றார். இரண்டு நடை தண்ணீர் எடுத்து வந்து பாத்ரூம் தொட்டியில் ஊற்றி விட்டு மூன்றாவது நடை இரண்டு குடங்களை நிறைத்து கிச்சனில் கொண்டு போய் வைத்தார்.
யூனிபார்மை கழற்றி சாரத்துக்கு மாறியவர் துணிகளை துவைக்க ஆரம்பித்தார். அடுத்த வருடம் யூனிபாஃர்முக்கான துணி தரும் போது பேண்ட் சட்டைதான் தைக்க வேண்டும். உள் பாவாடை தைக்க மனைவிக்கு துணியை கொடுக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டார்.
துணிகளை துவைக்கும் போதும் அந்த இளைஞர்கள்தான் மனக்கண்ணில் வந்து போயினர். துணிகளுக்கு சோப்பு போட்டுக் கொண்டே தன் அக்குளை முகர்ந்து பார்த்தார். ‘அப்படி ஒன்னும் பெரிய வாடை அடித்த மாதிரி இல்லையே’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டார். நேரம் போகப் போக, மனம் பழைய நிலைக்கு மெதுவாகத் திரும்ப ஆரம்பித்திருந்தது.
வெளியே கட்டியிருந்த கொடியில் துணிகளை காயப் போட்டு விட்டு வீட்டுக்குள் வந்தவரிடம், “சாயந்திரத்துக்கு சப்பாத்தி போடப் போறேன், அரக் கிலோ சிக்கன் வாங்கிட்டு வந்தீங்கன்னா உங்களுக்கு கூட்டு வச்சிருவேன்” என்றவளின் பேச்சில் இன்னும் கோபம் குறைந்த மாதிரித் தெரியவில்லை.
சிறிது நேரத்தில் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, டிவியை ஆன் செய்து விட்டு, “நா வீட்ல சும்மா தான இருக்கேன்னு சொன்னிய, அப்படியே இருக்கேன், நீங்களே இன்னிக்கி சப்பாத்தி போட்டுக்குங்க” என்றாள்.
தன் கோப வார்த்தைகள் மனைவியை ஆழமாக காயப்படுத்தியிருப்பது புரிந்தது நடராஜனுக்கு. இன்னும் அவளின் கோபத்தைக் கூட்ட விரும்பாமல் அமைதியாக சிக்கன் கடைக்கு கிளம்பினார். தெருவைக் கடந்து ரோட்டில் ஏறுகிற இடத்தில் யாரோ இறந்த பெருச்சாளியை போட்டிருந்தார்கள். எலி மருந்து வைத்துக் கொன்றிருப்பார்கள் போலும். வாயில் ரத்தம் வடிந்திருந்தது. வயிற்றைக் கொத்திய காகங்கள் பாதி குடலை உருவியிருந்தன. தெருவில் நடந்து செல்பவர்கள் எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொண்டு செல்கிறார்களே ஒழிய யாருக்கும் அதைக் குழி தோண்டிப் புதைப்போம் என்ற எண்ணம் வரவில்லை.
அருகில் சென்ற நடராஜனுக்கும் அதே வாடை அடித்தது. பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை எடுக்கும் போதுதான் கவனித்தார். எதிரே அந்த இரண்டு இளைஞர்களில் ஒருவன், பேக்கரியில் ‘கேக்’ பார்சல் வாங்கிக் கொண்டு பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தான். டக்கென்று திரும்பிக் கொண்டார். பைக் அவரை கிராஸ் செய்து போனதும்தான் நிதானம் வந்தது. ஆனால், இப்போது அவருக்கு வேறு ஒரு வாடை தெரிந்தது. அது இறந்து கிடந்த பெருச்சாளி வாடை மாதிரி தெரியவில்லை. மாறாக வியர்வை வாடை. அது எப்படி பெருச்சாளி வியர்வை வாடை அடிக்கும்? நன்றாக மூச்சை உள்ளிழுத்து அந்த வாடையை உள்வாங்கினார். சந்தேகமே இல்லை, அது வியர்வை வாடைதான். இத்தனை வருட அனுபவத்தில் முதன் முறையாக பெருச்சாளிக்கு வியர்வை வாடை. இது உலக அதிசயமா அல்லது என் மூக்கில் ஏதேனும் கோளாறா? கண்டிப்பாக அதிசயமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் மற்றவர்கள் எல்லோரும் மூக்கைப் பொத்தி கொண்டு செல்கிறார்களே, வியர்வை வாடை என்றால் யாரும் மூக்கைப் பொத்துவார்களா? யோசித்தவருக்கு விடை எதுவும் கிடைக்கவில்லை.
ரோட்டை கிராஸ் செய்து இறைச்சிக் கடைக்குச் செல்லும்போது சில அடிகள் முன்பாக மூடாமல் திறந்து வைத்திருந்த கால்வாயில் சாக்கடை ஓடிக் கொண்டிருந்தது. அதில் யாரோ ஒருவர் ஹோட்டலில் மீதமான நேற்றைய சாம்பாரை ஊற்றிக் கொண்டிருந்தார். வேகமாக அடித்த காற்றில் அந்த வாடையும் நடராஜனை சுற்றிக் கொண்டது. அதுவும் கூட வியர்வை வாடை மாதிரிதான் தெரிந்தது. ‘சந்தேகமே இல்லை, என் மூக்கில்தான் ஏதோ பிரச்சினை, கண்டிப்பாக டாக்டரிடம் காட்ட வேண்டும்’ என்று எண்ணியவர், ‘அப்படியானால் காலையில் அந்த இளைஞர்களுக்கும் வியர்வை வாடை அடித்ததே.. அவர்களையும் டாக்டரிடம் போகச் சொல்ல வேண்டும், அவர்கள் மூக்கில்தான் கோளாறு’ என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார்.
இறைச்சி வாங்கி வீட்டுக்கு வந்தவர், மனைவியின் அருகில் உட்கார்ந்தார். உடனே வேறு பக்கமாக திரும்பி தள்ளி உட்காருந்தாள் பார்வதி.
“இங்க பாரு, கோவத்துல ஏதாவது சொல்றதுதான், அதுக்காக அதயே பிடிச்சுட்டு இருந்தா எப்படி, வெளியில வேலைக்கு போறவன் எப்பவும் ஒரே மூடுல இருக்க முடியுமா, நாப்பது வயசாகியும் ஒனக்கு இது புரியலியா. எனக்கு இன்னைக்கு நேரமே சரியில்ல, மனசு ரொம்ப குழப்பமா இருக்கு” அமைதியாகச் சொன்னார் நடராஜன். கண்களில் கண்ணீர் கட்டிக் கொண்டது. திரும்பி அவரைப் பார்த்தவள் வேகமாக கட்டிக் கொண்டாள். சப்பாத்தியும் சிக்கனும் அவர்களைப் போலவே சந்தோஷக் கூட்டணி போட்டன.
அதன் வெளிப்பாடாக இரவு சீக்கிரமாகவே டிவி சத்தம் நிறுத்தப்பட்டு கட்டில் சத்தம் ஆரம்பமாகியது. சந்தோஷம் ஊற்றெடுக்க ஆரம்பிக்கும்போது தெருவில் அந்தச் சத்தம் கேட்டது, ‘எனக்கு இன்னொரு ‘கேக்’ வேணும்’, பக்கத்து வீட்டு சிறுவன் தன் அம்மாவிடம் சத்தமாக கேட்டுக் கொண்டிருந்தான். நடராஜனின் மனதில் மீண்டும் வியர்வை எண்ணம் கடகடவென அனைத்து நரம்புகளிலும் இரத்தத்தின் மூலம் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. தன் இயக்கத்தை பாதிலேயே நிறுத்தி விட்டு அப்படியே படுத்துவிட்டார். கணவனைத் தொந்தரவு செய்ய விரும்பாத பார்வதியும் அப்படியே உறங்கிப் போனாள்.
மறுநாள் விடுமுறை. ‘சாதாரண ஒரு வியர்வை வாடைக்கா நேத்து அவ்வளவு குழம்பிக் கொண்டிருந்தேன்?’ என்று தன்னையே நொந்து கொண்டார் நடராஜன். ‘இது எல்லோருக்கும் உள்ளதுதானே, நான் ஏன் புலம்ப வேண்டும்?’ என்ற நிதானமான சிந்தனை அவருக்குள் தெளிவைக் கொண்டு வந்தது. போனை எடுத்து வாட்ஸ் அப்பை மேய்ந்து கொண்டிருந்தவருக்கு ஏற்கனவே பதிந்து வைத்திருந்த ஜெர்மன் நண்பரின் ஞாபகம் வந்தது. ‘ஹாய்’ சொன்னார். உடனே பதில் வந்தது. ‘எப்படி இருக்கிறே?’ என்று குசலம் விசாரித்து கடைசியில், ‘ஊருக்கு வரும்போது மறக்காம ஒரு சென்ட் பாட்டில் கொண்டு வா’ என்று முடித்தார். அவரும் “சரி” என்று சொல்ல மனதுக்கு கூடுதல் தெம்பு கிடைத்தது.
அவர் இந்தியா வரும் வரை ஏன் காத்திருக்க வேண்டும், இப்பொழுதே ஒரு சென்ட் பாட்டில் வாங்கி விடலாமே என்று எண்ணியவர், வீட்டு பக்கத்தில் இருந்த சூப்பர் மார்க்கெட்டுக்குப் போய் விலை உயர்ந்த சென்ட் பாட்டில் ஒன்றை வாங்கிக் கொண்டார். லேசாகச் சட்டையில் அடித்து முகர்ந்து பார்த்தார். நன்றாக மணத்தது. சந்தோஷ உற்சாகம் மனதுக்குள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.
அடுத்த நாள் வேலைக்குப் போகும்போது யூனிபார்ம் அயன் செய்து, சென்ட் அடித்துக் கிளம்பினார். புது உற்சாகம் அவரைத் தொற்றிக் கொள்ள முகத்தில் புன்முறுவல் வந்து ஒட்டிக்கொண்டது.
வடசேரியில் ஏறி அன்றைய வேலை நாளை வழக்கம் போல ஆரம்பித்தவர், பேருந்து முழுவதும் கண்களைச் சுழல விட்டார். ‘ம்கூம்’, அந்த இளைஞர்களைக் காணவில்லை. ‘சரி, கொஞ்ச நேரம் கழித்து வருவார்கள் போலும்’ என்று எண்ணி கொண்டவர், உற்சாகமாக டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார். மனம் முழுக்க சந்தோஷம் குடியிருக்க ஒவ்வொருக்கும் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார். சில்லறைகளையும் சரியாக திருப்பிக் கொடுத்தார். வண்டி கிளம்பிய பின்னரும் அவர்கள் வரவில்லை. ‘ஒருவேளை அடுத்த ட்ரிப்புக்கு வருவார்களாக இருக்கும்’ என்று எண்ணியவர் பார்வதிபுரம் சென்று மீண்டும் வடசேரி வந்த போதும் அவர்களைக் காணவில்லை. ‘இன்று கல்லூரி விடுமுறையாக இருக்குமா அல்லது மத்தியானத்துக்கு மேல் கல்லூரிக்குச் செல்வார்களா?’ என்று எண்ணியவருக்கு மூன்றாவது ட்ரிப்பும் கை கொடுக்கவில்லை. சிறிய ஏமாற்றம் முகத்தில் படர ஆரம்பித்தது.
அந்த ட்ரிப் வண்டி ஸ்டேடியம் ஸ்டாப்பில் நிற்கும் போது இரு டிக்கெட் பரிசோதகர்கள் ஏறினார்கள். ஒருவர் முன்னால் ஏற இன்னொருவர் பின்னால் ஏறி நடராஜனிடம் சார்ட் வாங்கி டிக்கெட் எண்களைச் சரிபார்க்க ஆரம்பித்தார். முன்னவர் அனைவரிடமும் டிக்கெட் ‘செக்’ செய்து கொண்டே பின்னாலிருந்தவரிடம் வர அவரும் மீதம் இருந்த டிக்கெட்டுகளை சரி பார்த்து முடித்திருந்தார்.
கோட்டார் ஸ்டாப்பில் வண்டி நின்றது. இருவரும் கீழ இறங்கு ஆயத்தமாயினர். சார்ட் பேப்பரில் கணக்குகளைச் சரி பார்த்தவர் படிகளில் இறங்கியபடியே, “என்ன நடராஜன், அயர்ன் பண்ணுன சட்ட, அக்தர் சென்ட்- னு பெரிய லெவல்ல இருக்க, கள்ளக் கணக்கு ஏதும் எழுதுறியா!” என்றவர் மெதுவாக பால்காரர் முனியாண்டியாக மாறிக் கொண்டிருந்தார்.



