இணைய இதழ் 119சிறுகதைகள்

அரபி ரப்புன் அயோத்தி ராமன் – சா.ரெடீமர்

சிறுகதை | வாசகசாலை

பாங்கொலிக்கிறது.

   ‘நாளைக்கு சாயந்திரம் ஆறு மணி வரைதான் பாடி தாங்கும். அதுக்கு மேல தாங்காது எடுத்துருவாங்க. அதுக்குள்ள நான் ஊரு போயிச் சேரனும்!’. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நேரம் அது, எவ்வித பாகுபாடும் பார்க்காமல் மனித உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருந்தது கொரோனா.

‘இப்படியே நாடுநாடா சுத்தி என்னத்த வாரிக் கட்டப் போற சாமி? ஒரு காலத்துல குந்த குடுசை இல்லாம, அள்ளித் திங்க அன்னம் இல்லாம கிடந்தோம். இப்ப என்னா இல்ல? ஒண்ட வந்த இடத்துல வூடுவாச மொதக் கொண்டு சம்பாரிச்சிட்ட. இருக்கது போதும் சாமி, ஊருக்கு வந்துருயா, நான் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த உசுர கையில புடிச்சிக்கிட்டு கிடப்பேன்? கடைசி காலத்துல இந்த கிழவியோட கொஞ்ச நாள் இருக்கப்படாதா? எங்க பாத்தாலும் சனம் கொத்து கொத்தா செத்து மடியுதாமே! புதைக்கக்கூட நாதி இல்லயாமே! தாயும் புள்ளையும் தொட்டாக்கூட நோயாமே! எதுக்கு இந்த மனுச பொறவி? வாரிட்டு போவுட்டும்.’

‘இப்புடி புலம்பாதனு நான் உனக்கு எத்தனை வாட்டி சொல்லுறது? வீடுவாச இருந்தா போதுமா? நான் என்ன இங்க சுகபோகம் அனுபவச்சிட்டா இருக்கேன்? உன்ன விட்டுட்டு நான் படுறபாடு எனக்குதான் தெரியும்..’

‘சரி சாமி, நீ அழுவாதயா, நெஞ்சு வெடிக்கிற மாதிரி இருக்கு..’

‘எனக்கு ஒண்ணும் ஆவாது அப்பாயி. நீ கவலபடாத, நான் சீக்கிரம் வந்துருவேன். இனிமே உன்னை விட்டுட்டு நான் எங்கயும் போக மாட்டேன், புரியுதா? தயவு செஞ்சி ஒப்பாரி வைக்காத, என்னால தாங்க முடியல. மணி அக்காட்ட கொடு.’

தொண்டையை சரிசெய்துக் கொண்டே போனை காதில் வைத்தாள் மணி.

‘ஹலோ அக்கா, எப்புடி இருக்க?’

‘நாங்க நல்லா இருக்கோம்டா தம்பி. நீ நல்லா இருக்கியா? எங்கள பத்தி கவலைபடாத. சீக்கிரம் வூட்டுக்கு வாற வழியப் பாரு’  

‘அக்கா, ஏர்போர்ட்ட மூடிட்டாங்க. விமான சேவை சுத்தமா இல்ல. இல்லனா எப்பவோ வந்திருப்பேன். இந்த மாச கடைசியில சிறப்பு விமானம் இயக்கப்படும்னு அறிவிப்பு வந்திருக்கு. கண்டிப்பா மொதோ ஃப்ளைட்ல வந்துருவேனு சொல்லுக்கா.’

‘நான் சொல்லாமயா இருக்கேன்? அது அழுதுகிட்டே கெடக்குடா தம்பி. அதுக்கு உன் மேல கவல உழுந்து போச்சு. அதுக்கு வேற ஒரு கொறையும் இல்ல. உங்க நாட்டுலதான் கொரோனா அதிகமா பரவுதாமே? நீ ரொம்ப சூதானமா இருடா.’ பக்கத்து வீட்டு மணி அக்கா பேசிட்டு இருக்கப்ப அப்பாயி அழுவுற சத்தம் கேட்டுட்டே இருந்தது. ‘சரிக்கா, நான் அப்பறம் பேசுறேன்’னு சொல்லிட்டு போன கட் பண்ணிட்டேன். அப்பாயி அழுவுறத என்னால தாங்கிக்க முடியல. இந்த உசுரு உனக்காகத்தான் ஊசலாடிட்டு கிடக்குது சாமின்னு என் காதுல விழுந்த கடைசி வார்த்தை. அந்த தழுதழுத்த குரல்ல அப்பாயி உடம்பும் மனசும் தளர்ந்து, தள்ளாடி தவிக்கிறது நல்லா தெரிஞ்சது. கடைசி காலத்துல அப்பாயிய கவனிக்க வேண்டிய கடமை, கவலை என்னை வாட்டி எடுக்குது. கள்ளங்கபடம் துளியும் இல்லாத என் அப்பாயி காலமெல்லாம் கூலிக்கு மாரடிச்சது எனக்காகத்தான். எந்த காடு கரையில கூலிக்கு மாரடிச்சதோ அதே இடத்துல அப்பாயி பேர்ல ஒரு சென்ட் நிலமாவது சொந்தமா வாங்கனும்னு வெறி. ஒரு வழியா காசு சேத்துட்டேன். ஆனா, ஊருக்கு போக வழியில்லாம மாட்டிகிட்டேன். ஊருக்கு போற நேரத்துல கொரோனா வந்துருச்சு. இன்னைக்கி, நாளைக்குனு ரெண்டு வருஷம் ஓடிருச்சு, கொரோனா அலை ஓயல.

சிறப்பு விமானங்கள் இயங்கத் தொடங்கியது. பல போராட்டத்துக்கு பிறகு கத்தார் தலைநகரம் தோஹா சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு டிக்கெட் கிடைச்சிருச்சி. திருச்சியிலிருந்து என் சொந்த ஊரான பூவை கிராமத்துக்கு போக ரெண்டு மணி நேரம். அடைக்கலம் கொடுத்த பூவை கிராமம் சொந்த ஊர் அடையாளமும் கொடுத்துருச்சி. மூணு வருஷத்துக்கு அப்பறம் ஊருக்கு போப்போறேன். பயணம் செய்ற 24 மணி நேரத்துக்கு முன்னாடி கொரோனா டெஸ்ட் எடுக்கனும், ரிசல்ட் நெகட்டிவா இருக்கனும், வேக்சின் ரெண்டு டோசு போட்டிருக்கனும் அப்பதான் ஏர்போர்ட்ல நுழைய முடியும். நான் ஏற்கனவே வேக்சின் ரெண்டு டோசு போட்டுட்டேன். காலையில நாலு மணிக்கு கொரோனா டெஸ்ட்க்கு சாம்பிளும் கொடுத்துட்டேன். ரிசல்ட் வாங்குறதுக்காக மெட் கத்தார் மெடிக்கல் சென்டரில் இப்பக் காத்திருக்கேன். என்ன மாதிரி பல வருசமா ஊருக்கு போகமுடியாத வேதனையில பல நாட்டு தொழிலாளர்களும் காத்திருந்தாங்க. அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் உறவுகளை கொரோனாவுக்கு பலி கொடுத்த பலரும் அங்க இருந்தோம். டெஸ்ட் எடுக்க, ரிசல்ட் வாங்கனு இங்க வந்து போற எல்லார் முகத்திலும் பாசிடிவ் பயம், பீதி. இந்த வருஷத்துல மட்டும் எங்க கம்பெனியில வேலை செஞ்ச எட்டு பேர் கொரோனால இறந்து போயிட்டாங்க அவங்க சடலத்தை இங்கயே புதைச்சிட்டாங்க. நாளைக்கி இந்நேரம் நான் ஊர்ல இருக்கனும். நீ கொள்ளி போட்டாதான் இந்த கட்டை வேகும் இல்லன்னா நாய் நரி, காக்கா கழுகு திங்கும்னு சாபம் போட்ட என் அப்பாயி நேத்து ராத்திரி செத்துப் போச்சு.

லட்சியம், கனவு, அது இதுனு சுத்தி திரிஞ்ச நான் எப்படியாவது அப்பாயி முகத்தை கடைசியா ஒரு வாட்டி பாக்கனும். நாளைக்கு சாயந்திரம் ஆறு மணி வரைதான் பாடி தாங்கும் அதுக்குமேல தாங்காது எடுத்துருவோம்னு மணி அக்கா சொல்லிருச்சு அதுக்குள்ள நான் ஊரு போயிச் சேரனும். இத்தனை காலம் நான் காக்கவச்ச பாவத்துக்கு இப்ப என்னை காக்கவச்சு தண்டிக்கிது அப்பாயினு புலம்பிட்டு கிடக்கேன்.

‘எக்ஸ்கியூஸ் மீ’ சத்தம் கேட்டு முகக்கவசத்தை சரிசெய்து கொண்டே எந்திரிச்சேன்..’

‘சாமி தானே?’

‘எஸ் மேம்’

‘சாரி சார், ரிசல்ட் இன்னும் வரல பத்து மணிக்குத்தான் வரும்’ சொன்னதும் தொண்டை அடைக்கிது பேச முடியல. அந்த இலங்கை தமிழ் ரிசப்ஷனிஸ்ட் ‘உங்களுக்கு எப்ப பிளைட்?’ ‘காலையில நாலு மணிக்கு இன்னைக்கி நைட் பன்னிரெண்டு மணிக்கு நான் ஏர்போர்ட்ல இருக்கனும்’

‘மிஸ்டர் சாமி, ரிசல்ட் வந்ததும் நான் உங்களுக்கு கால் பண்ணுறேன்’ சொன்னதும் நடக்க ஆரம்பிச்சிட்டேன் அதுக்கு மேல என்னால அங்க இருக்க முடியல. எல்லாரும் என்ன ஒரு மாதிரி பாத்தாங்க. யூனிவர்சல் சிட்டி டவரில் இருக்கும் மெட் கத்தார் மெடிக்கல் சென்டரிலிருந்து வெளியேறி தி கிரேட் கேபிட்டல் ஷாப்பிங் மால் வழியா பிரதான சாலையை நோக்கி நடந்தேன். எது சுவர்? கதவு? கண்ணாடினு தெரியல பிரமாண்டமா இருந்தது. இங்க இல்லாத பொருளே இல்ல, தற்கொலை மெஷின் கூட இருக்கு. சும்மா சுத்தி பாத்துட்டு போக முடியாது எதையாவது வாங்க வைத்துவிடும், யாரும் தப்ப முடியாது. அப்படியொரு வசியம் கொண்டது இந்த மால். இந்த ரெண்டு மூணு வருஷமா வாங்கி வச்ச அத்தனையும் அப்புடியே கிடக்குது. அப்பாயிக்கு பிடிச்ச ரோஸ் கலர் பட்டுப் புடவையும் கிடக்குது. எதைஎதையோ நினைச்சி புலம்பிட்டே மெயின் ரோட்டுக்கு வந்துட்டேன். எந்நேரமும் கார், பஸ், லாரினு பரபரப்பா இருக்க ரோடு வெறிச்சோடி கிடந்தது. ஆகாய மார்க்கத்துல அப்பப்ப ராணுவ ஹெலிகாப்டர் பறந்தது. வேற்றுக் கிரகவாசி போல முகக்கவசம், கையுறை, காலுறையணிந்த அயல் நாட்டு தொழிலாளர்களின் நடமாட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. அவசியம் இல்லாம வெளியில் வரக்கூடாது, பாஸ் கட்டாயம், கூட்டம் சேரக்கூடாது, சமூக இடைவெளி கடைபிடிக்கனும், முகவசம், கையுறை கட்டாயம் அணியனும் பல கட்டுபாடுகள். நம்ம ஊரு மாதிரி நான் அவன் இவன் இந்த ஜோலிக்கெல்லாம் இங்க வேலை இல்ல. சிக்குனா சிறை, தண்டனை, அபராதம்.

மெயின்ரோட்டுக்கு நேரா போனா பாலைவனம். லெப்ட்ல எழுபது கிலோமீட்டர் தூரத்துல தோஹா இன்டர்நேஷனல் ஏர்போர்ட். ரைட்ல ஒரு ஐஞ்சு கிலோமீட்டர் தூரத்துல நான் தங்கி இருக்க சனாயா லேபர் கேம்ப். ஒரு ரூமுக்கு நாலு பேர், ஒரு டாய்லெட், பாத்ரூம். இங்க குந்திட்டு சத்தம் இல்லாம அழுவோம். கோடை காலம் வந்துட்டா டாய்லெட், பாத்ரூம்ல நுழையவே முடியாது நரக வெக்கை, வேக்காடு. சூரியன் உதிக்கும் போதே வெயில் உக்கிரமா இருக்கும். விடியகாலை மூணு மணியிலேர்ந்து ஐஞ்சு மணிக்குள்ள ஒண்ணுக்கு ரெண்டுக்கு போயிறனும் இல்ல சாமானியத்துல வராது. காலையில ஐஞ்சு மணி வரைதான் தண்ணீ, அதுக்கப்பறம் வெண்ணீ. ஒரு நாளைக்கு முன்னாடியே ரெண்டு வாளியில புடிச்சு ஏசி ரூம்ல ஒண்ணு, பாத்து ரூம்ல ஒண்ணு வச்சிருவோம். அடுத்த நாள் ரெண்டையும் கலந்து குளிப்போம், வெதுவெதுப்பா இருக்கும்.

வெள்ளி கிழமை எப்படா வரும்னு இருக்கும் அன்னைக்கி மட்டும்தான் லீவு. மனம்போல அழவும், சிரிக்கவும், புலம்பவும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மறைவான இடம் கண்டுபுடுச்சு வச்சிருப்போம். அந்த இடம் பெரும்பாலும் பாலைவன மரம், குப்பைத் தொட்டி, பாழடைந்த கட்டிடம், பழுதடைந்த வாகனம், இவைகளோட நிழல்.

பவர் பேங்க், மூணு வேளை சாப்பாடு, தண்ணி இன்னும் தேவையானதையெல்லாம் எடுத்துட்டு போயிருவோம். காதல், மோதல், காமம், கொஞ்சல், நல்ல காரியம், கெட்ட காரியம், பஞ்சாயத்து, பாகபிரிவினை என அத்தனையும் நேரங்காலம் பார்க்காமல் தலைமை தாங்கி நடத்தி வைப்பவர் செல்போன். சகல அந்தரங்கமும் அதுக்குதான் தெரியும்.

அப்பாயிய நினைச்சு அழாத நாள் இல்ல. இன்னைக்கி என்னமோ வாய்விட்டு கத்தி அழனும் போல இருக்கு. அதுக்கு ஏத்த இடம் தேடி பாலைவனத்தில் நடந்தேன். தரையிறங்க வழியில்லாமல் வட்டமடிக்கும் விமானம் போல எதைஎதையோ நினைச்சி சுத்திட்டு கிடந்த எனக்கு அடைக்கலம் கொடுத்தது இருளும் பனியும் படர்ந்த பாலைவனம். இந்த பாலைவனத்துல நாலு மாடி உயரத்துக்கு மணல் புயல் வீசுறத பலமுறை பாத்து பயந்திருக்கேன். இப்ப துளிகூட பயமில்ல, வா என்ன வாரிட்டு போ. இடி, மழை, பூகம்பம், பாம்பு எல்லாத்தையும் வம்புக்கு இழுத்தேன். இயற்கையும் லாக்டவுனில் கிடந்தது.

மூணு வருஷத்துக்கு முன்னாடி ஊருக்கு போயிருந்தப்ப அப்பாயி கையால வச்ச கருவாடு குழம்ப மூக்கு முட்டத் திண்ணுட்டு நடுவூட்ல படுத்துட்டு கதை விட்டேன். பேரீச்சம்பழம் எல்லாம் சும்மா ரோட்டுல கொட்டிக் கிடக்கும், பொறுக்கித் திண்ண ஒரு நாதி இருக்காது. பொரி வாங்குற காசுல பெட்ரோல் வாங்கலாம். இருபத்தி நாலு மணி நேரமும் ஏசி, இன்டர்நெட் அது இதுனு சும்ம அளந்து விட்டேன் வெளிநாட்டுல வேலை செய்யிற முக்கவாசி பேர் உருட்டுற உருட்ட நம்பி ஏமாந்த நான்.

மனுச மக்க கால்ல றெக்க கட்டிட்டு பறப்பாங்க, பாரு கார், பஸ் தோத்துப் போயிரும்னு சொல்லிட்டு இருக்கும்போதே, ‘கழிச்சல்ல போவ, பாடையில போவ, கால்ல றெக்க கட்டிட்டு அப்புடி எங்க போவுது பயசி றுக்கி? சுடுகாடு ரொம்ப தூரமா? மனுச மக்கள சொல்லி குத்தமில்ல காலம் கலிகாலமா போச்சு, உலகம் கெட்டுப்போச்சு இந்த கடவுளுக்கு கண்ணு இல்ல, காது இல்ல’ன்னு அப்பாயி வாயிக்கு வந்தபடி பேசியது. மணி அக்காவும் நானும் சிரிச்சு கிடந்தோம். பாலிடெக்னிக் படிக்கிறப்ப எனக்கும், அப்பாயிக்கும் சண்டை வந்துக்கிட்டே இருக்கும். ‘போடி அனாதைக் கிழவி’ன்னு திட்டுவேன். ‘நான் இல்லனா நீயும் அனாதை பயதான், அது உனக்கு இப்ப தெரியாது’ன்னு அப்பாயி சொல்லும்.

‘நீ செத்து பாரு கிழவி அப்ப தெரியும். சத்தியமா நான் உனக்கு கொள்ளி போடமாட்டேன்’னு திட்டுவேன் கொஞ்சம்கூட மரியாதை இல்லாம கண்டபடி பேசுவேன். அப்பாயி ஒன்னு சொன்னா, பதிலுக்கு நாலு சொல்லுவேன், அழுதுட்டே உட்காந்திருக்கும். அதோட விடாது, விடிய விடிய போனதையும், வந்ததையும் சொல்லி புலம்பிட்டு கிடக்கும். அப்பாயி எப்ப தூங்கும் எந்திரிக்கும்னு தெரியாது. ஒரு நாள் தூங்குற மாதிரி படுத்துக் கிடந்தேன். திட்டிட்டு இருந்த அப்பாயி, என் தலைமாட்டில் குந்திக்கொண்டு கெஞ்சியது, கொஞ்சியது, அதோட சுயநலமில்லாத அன்பும், அக்கறையும், ஆறுதலும் என்னை தூங்க விடாமல் செய்தது. நாளாக நாளாக என்னை அறியாமலே நான் கொஞ்ச கொஞ்சமா மாற ஆரம்பிச்சிட்டேன். அப்பாயி எப்பயாவது அதிசயமா எனக்கு முன்னாடி தூங்கிரும். கண்ணீர் வறண்டு போன அதோட கண்ணுல நம்பிக்கை கரைபுரண்டு ஓடுறது தெரிஞ்சது. இந்த வாழ்க்கை, படிப்பு, வேலை, எல்லாமே அப்பாயி விதைச்சது. ஒண்டிக்கட்டையா என்னை ஆளாக்க அது பட்டபாடு சொல்லி மாளாது. அப்பாயி சொன்ன மாதிரியே அது இல்லாத இந்த உலகத்துல நான் ஒண்டிக்கட்டைதான், அனாதை பயதான், என்ன மன்னிச்சிரு அப்பாயின்னு நடு பாலைவனத்தில் கதறிக்கொண்டிருந்த நேரம் திடீர்னு புழுதி பறக்க வந்த கார் என்னை உரசியபடி நின்றது. சுயநினைவுக்கு வந்த நான் கழுத்தில் கிடந்த முகக்கவசத்தை எடுத்து வாய், மூக்கு கண்ணீரையும் சேர்த்து மறைத்தேன். ஆள்காட்டி விரல மட்டும் வெளியே நீட்டி இங்கெல்லாம் வரக்கூடாது போ கைசாடை காட்டிட்டு போயிட்டே இருந்தது கார். அது யாருனு தெரியாது ஆனா, அந்த ஒத்தை விரல்ல அப்படியொரு அதிகார மிரட்டல். மெயின்ரோட்டுல இருந்து எப்படி இவ்வளவு தூரம் வந்தேனு எனக்கே தெரியல. ஒரு ஆடம்பரமான அரண்மனைக்கு முன்னாடி நின்னேன். இந்த மாதிரி ஒரு அரண்மனையையோ, காரையோ நான் பாத்தது இல்ல. அரண்மனை ராணுவ கட்டுப்பாட்டுல இருக்கிற மாதிரி தெரிந்தது. ஆடம்பரமான வாகனங்கள் அணிவகுத்து நின்றது. உள்ள நுழைஞ்ச கார் எந்தப் பக்கம் போச்சுனு தெரியாது. அந்த ராத்திரியிலும் அத்தனை தொழிலாளர்கள் அரண்மனை உள்ளேயும், வெளியேயும் வேலை செய்துக் கொண்டிருந்தார்கள்.

பகவானை தொட்டுத்தொட்டு கும்பிடும் மகா பக்தர்கள் போல அங்குள்ள தொழுகை அறையின் வெளிப்புறத்தை சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். இன்னொரு ஆளு இறுதிச்சடங்கு செய்ய தன் அம்மாவோட சடலத்தை முதலும் கடைசியுமாக கழுவும் மகன் போல ஒரு காரை கழுவிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் தள்ளி ஒரு மூணு பேர் ஒரு வேப்பமரம் நடுவது போல தெரிஞ்சது. அந்த மூணு பேருல ஒரு ஆளு ஒரு மார்க்கமாவே திரிஞ்சுகிட்டு இருந்தான். என்ன செய்றானே புரியல. முகக்கவசம் போட்டிருந்தாலும் அந்த மூணு பேரின் சாயலும் ஒரே மாதிரியா இருந்தது.

போகாத கோயில் குளம் போயும் ஒரு புண்ணியமும் கிடைக்காத பக்தன் போல நான் நின்னுகிட்டு இருந்தேன். இந்த பாலைவனத்துல பகல் முழுசும் மரண வெயில், ராத்திரி முழுசும் மரண குளிர். அரண்மனையின் ஒரு சில விளக்குகள் அணைக்கப்பட்டதும் அந்த தொழிலாளி கூட்டம் போருக்குப் போகும் ராணுவ வீரர்கள் போல வெளியே வந்தது. கேட் தானாகவே மூடிக்கொண்டது.

டிபன் பாக்ஸ், தண்ணி கேன், வேர்வை காயாத துண்டு, கப்பூஸ் ரொட்டி பாக்கெட், காய்கறின்னு சுமந்துக்கொண்டு வந்தார்கள். பதிலுக்கு “ஜெய் ஸ்ரீராம்” சொல்லி நானும் அவங்களோட சேர்ந்து கொண்டேன். ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அவங்க தங்கியிருக்க கேம்ப் இருக்காம். இவங்களை போல் இன்னும் எத்தனை பேர் இங்க வேலை செய்றாங்க? இந்த அரண்மனைக்கு இன்னும் எத்தனை கேட் இருக்கு? இது எதுவும் அவங்களுக்குத் தெரியல, எதைஎதையோ பேசிகிட்டே நடந்தோம்.

வேப்பமரம் நட்ட அந்த மூணு பேரும் அப்பா, மகன், பேரன். முகச்சாயல் இப்ப நல்லாத் தெரிஞ்சது. கல்யாணமாகி மூணாவது நாள் கத்தாருக்கு வேலைக்கு வந்து சேர்ந்த பேரன் மூன்றரை வருஷசமா இன்னும் ஊருக்கு போகல. ஹலோ.. ஹலோனு கத்திக்கொண்டே வந்த புதுமாப்பிள்ளைக்கு செல்போன்ல குடும்பம் நடத்தவும் வழியில்லை. சிக்னல் கிடைக்கல. இவங்க குடும்பம் உத்திரப்பிரதேசத்தில் இருக்காம். இந்த மொட்டை பாலைவனத்துல அரண்மனை கட்டிய ரப்புனுக்கு வேப்பமரம் வளர்க்க ரொம்ப ஆசையாம். பாலைவனத்தில் வளர எந்த வேப்பமரம் ஆசைப்படும்?.

நாளைக்கு அரசு விடுமுறை. ஆனா, இவங்களுக்கு லீவு இல்ல. காலையில அஞ்சு மணிக்கெல்லாம் டூட்டிக்கு வரனுமாம் ரப்புன் உத்தரவு. ‘நாளைக்கு டபுள் சம்பளமா?’ன்னு கேட்க ஒரு மாதிரியாகச் சிரித்தார்கள் அதோடு வாய மூடிக்கிட்டேன். இப்ப மணி பதினொன்னு எத்தனை மணிக்கு ரூமுக்கு போயி குளிச்சி, சமைச்சு சாப்பிடுவீங்கனு கேக்கல.

மனைவிகள், மறுமனையாட்டிகள், பிள்ளைகள், மற்றும் பேரப்பிள்ளைகளுடன் இந்த அரண்மனையில் வாழ்ந்து வரும் அவங்க முதலாளிக்கு இதுபோல் இன்னும் பல அரண்மனை இருக்காம். எங்க முதலாளி ரொம்ப நல்ல முதலாளி சொன்னாங்க. அவங்க ஊருல கட்டுற ராமர் கோயிலுக்கு இந்த ஒரு வருட சம்பளத்தை நன்கொடையாக அனுப்பி வர்றாங்களாம். கோயில் கட்டி முடியும் வரை விரதம் இருந்து வரும் அந்த சின்ன ராமன்கள் இருட்டில் மறைந்து போனார்கள்.

வயசான பாட்டிதானே, என்ன பண்ணுறது செத்துட்டாங்க. இப்ப இருக்க நிலமையில ஊருக்கு போனா திரும்ப வரமுடியாது பையா. கம்பெனி அனுப்புனாலும் போகாத. இந்தியால வேலை இல்ல, வயித்து பொழப்புக்கு வழியில்ல. நாம இங்க கஷ்டபட்டாலும் நம்ம குடும்பம் அங்க சந்தோஷமா இருக்கும்னு சொன்ன புதுமாப்பிள்ளை குரல் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்த நேரம் புதுமாப்பிள்ளைக்கு கிடைக்காத சிக்னல் எனக்கு கிடைத்தது. சொன்ன மாதிரியே ரிஷப்னிஸ்ட் போன் பண்ணிட்டாங்க ரிசல்ட் வந்து விட்டது. நான் உனக்கு கொள்ளி போடமாட்டேன் சொன்னதும் நடந்து விட்டது.

என்னோட வேலை செய்ற மெக்கானிக்கல் சூப்பர்வைசர் அபுபக்கர் சித்திக் அப்பா மூணு மாசத்துக்கு முன்னாடி இறந்து போயிட்டார். கம்பெனி லீவு கொடுத்து, டிக்கெட் கொடுத்து ஏர்போர்ட் போக காரும் அனுப்பிருச்சு. அபுபக்கர், அப்பா சடலம், உறவினர்கள் எல்லோரையும் காக்க வச்சு கடைசி நேரத்துல பாசிட்டிவ் ரிசல்ட் கொடுத்து கொரோனா வார்டுல தள்ளிருச்சி கம்பெனி. ஒரே புள்ளையான அபுபக்கர் சித்திக் இல்லாம அவரோட அப்பா இறுதி சடங்கை வெற்றிகரமாக நடத்தி முடித்தது செல்போன். கொரோனா ட்ரீட்மெண்ட் முடிந்து வேலைக்கு வந்த அபுபக்கர் அப்பாவோட முகத்தைக்கூட பார்க்க முடியலனு புலம்பாத நாள் இல்ல, ஆள் இல்ல. அபுபக்கர் போல பல நாடுகளை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களை கொரோனா வார்டில் சிறை வைத்திருந்தது முதலாளித்துவம், நானும் அதில் ஒருத்தன். தூரத்தில் பாங்கொலிக்கிறது.

redeemerart2022@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button