
“குடிக்கிற பழக்கம் இருந்தாலாவது, குடிச்சிட்டு, உளறிட்டு, வாந்தி எடுத்துட்டு அடுத்த வேலைய பாக்கப் போயிடுவேன். அந்த எழவு இல்லாததால எல்லாத்தையும் மண்டைக்குள்ள வச்சுக்கிட்டு லோல்படுறேன்” என்று மணியிடம் புலம்பிவிட்டு, மொபைலில் மீண்டும் மீண்டும் டயல் செய்துகொண்டே இருந்தான் ரகு.
இன்று தருவதாய் சொல்லி நண்பர்களிடம் வாங்கிய கடன் அப்படிச் செய்ய வைத்தது. அந்தப்பக்கம் முழுதாய் ரிங் போய் எடுக்கப்படாமல் இருந்தது.
“டேய், அவன் எடுக்கமாட்டான்டா. போய்ச் சாப்பிட்டு வரலாம் வா” என்று சட்டையை மாட்டிக்கொண்டே சொன்னான் மணி.
“வேல பாத்த காச கொடுக்க அந்த …க்கு என்னடா? கடன் வாங்கி EMI கட்டி இருக்கேன். நாளைக்குத் தரேன்னு சொல்லி வாங்கினவங்கிட்ட என்னனு சொல்லுவேன்?”
மணி பேசாமல் சில நொடிகள் ரகுவைப் பார்த்தான். “சரி, அப்போ வா, சாப்பிட்டு நேர்ல போய்ப் பாத்து கேட்டுட்டு வருவோம்”
ரகு எதுவும் பேசாமல் எழுந்தான். முதல் மாடியிலிருந்து கீழே வந்தார்கள், இருளைத் தவிர இரவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லை. இருளையும் தெரு விளக்குகள் இல்லாமல் செய்திருந்தது.
பார்க்கிங்கில் இருந்த வண்டியை எடுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் தள்ளி இருந்த வண்டிகடை அருகே வந்தார்கள்.
இருவரும் சாப்பிட்டார்கள். கை கழுவி முடித்துவிட்டு, “இப்போ கொஞ்சம் பரவல்லயா ரகு?”
ரகு எதும் பேசவில்லை. “பசிக்கிறப்போ கோவம் அதிகமா வரும், அப்போ ஏத யோசிச்சாலும் மனசு பதட்டமாதான் இருக்கும், வயிறு ரொம்பிட்டா…”
“வண்டி சாவி கொடு” என்றான் ரகு.
“வேணாம் ரகு, அவனும் நம்மள மாதிரி சம்பளத்துக்கு இருக்கவன்தானே?”
“உனக்கு 1-ஆம் தேதி சம்பளம் வருதுல்ல, அப்படித்தான் பேசுவ. என்னை மாதிரி காண்ட்ராக்ட்ல வேலை பாத்து, சம்பள தேதியன்னைக்கு சம்பளம் வராம நாலு பேருகிட்ட பிச்சையெடுத்துப் பொழப்பு நடத்தினா தெரியும்! அவனும் நம்மள மாதிரி சம்பளம் வாங்குறவன்தான், ஆனா, சம்பளம் எப்போ வரும்னுகூட சொல்ல வலிக்குமா? அவன் வேலையே அதுதானே. அவன் போன புடுங்கிட்டு வந்துடணும். இல்லையா, அவன் பொண்டாட்டி செயின புடுங்கிட்டு வரணும்” எனப் பேசிவிட்டு நகர்ந்தான். அவன் கோபம் கண்டு அவனைக் கட்டுப்படுத்தவேணும் தான் உடனிருக்க வேண்டும் என்றெண்ணி, அவன் கையைப் பிடித்து நிறுத்தி, “போலாம் வண்டில ஏறு” என்று வண்டியில் ஏறிக் கிளப்பினான் மணி.
குடியிருப்பு பகுதியின் வாசலுக்குள் அவர்கள் நுழைய, தடுத்து நிறுத்தி விசாரித்தார்கள் வாயில் காவலர்கள்.
“பேரு கோபி, இந்தியன் காண்ட்ராக்ட்ல HR-ஆ இருக்காரு”
“ஓஹோ, அவங்க வீடா, இப்போதான் அவரும் போறாரு. சீக்கிரம் போங்க” எனப் பதட்டமாய் அனுப்பி வைத்தார்கள். இருவரும் புரியாமல் உள்ளே செல்ல, அவர்கள் பிளாட் வாசலில் கொஞ்சம் கூட்டம் நிற்க, ஒரு வயதான அம்மாளைக் காரில் ஏற்றிக்கொண்டிருந்தான் கோபி.
வண்டியை நிறுத்தி அருகே செல்ல, அந்த அம்மாள் மூச்சுவிடச் சிரமப்பட்டு கொண்டிருந்தது தெரிய, அருகில் இன்னொரு பெண் அழுது கொண்டிருந்தாள். ரகு வேகமாய் அருகில் ஓடினான். “ரகு, கதவத் திறந்து புடி” என்றான் கோபி.
ரகு கார் கதவைப் பிடித்துக் கொண்டான். சிரமப்பட்டு அந்த அம்மாள் அமர்ந்து கொண்டாள்.
“எங்க கூட்டிப் போறீங்க?” யாரோ கேட்டார்கள்.
“குளோபல்…”
“அங்க போக லேட்டாகும், சிறுசேரி சிப்காட் பஸ் ஸ்டாப்ல இருக்க காமாட்சிக்கு கூட்டி போங்க. இவருக்குக் கார் ஓட்டத் தெரியுமா?” என்று ரகுவைக் காட்டிக் கேட்க, அவன் தயங்கி நின்றான். மணி அருகில் வந்து “நான் ஓட்டுறேன், ரகு, நீ வண்டி எடுத்துட்டு வா”
“பதட்டத்துல கார் ஓட்டினா கஷ்டம், அதுக்காகத்தான் சொன்னேன். நானே வருவேன், பாப்பா அழுவா” என்று மணியிடம் சுய விளக்கம் கொடுத்தார் ஒருவர்.
கோபியின் மனைவி, “கவின பாத்துக்கோங்க தன்யாம்மா” என்று ஜன்னல் வழியே இன்னொரு பெண்ணிடம் சொன்னாள்.
“நீங்க ஆன்ட்டிய பாருங்க, நாங்க பாத்துக்கறோம்”
கோபிக்கும், மனைவிக்கும் இடையில் அவன் அம்மா மூச்சுவிடச் சிரமப்பட்டு கொண்டிருக்க, கார் கிளம்பியது.
“செம்மஞ்சேரி வழியா OMR போயிடலாம்” என்றான் கோபி. கார் நாவலூரைக் கடந்தபோது மூச்சு திணறல் அதிகம் ஆனது, கோபியின் சட்டையை இறுக்கமாகப் பிடித்து மூச்சுவிட்டுத் தளர்ந்தாள். கோபி கதறி அழுதான். “அம்மா… அம்மா, ஒன்னுமில்லம்மா ஆஸ்பத்திரி வந்துடுச்சு பாரு” எனக் கதறினான். மணிக்கும் அழுகை வந்தது.
சில நிமிடங்களில் கார் மருத்துவமனைக்குள் நுழைந்தது. மணி ஹார்ன் அடித்துக் கொண்டே உள்ளே போனான். வாயில் அருகில் நிறுத்தி வேகமாய் இறங்கி ஓடினான். “எமெர்ஜன்சி எமெர்ஜன்சி” எனக் கத்தினான்.
வீல் சேரோடு நர்ஸ்கள் வந்தார்கள். கோபியின் அம்மாவைச் சிரமப்பட்டு வெளியே கொண்டு வந்தார்கள். உட்காரவைக்கும் நிலையில் அந்த அம்மாள் இல்லை என்பதை உணர்ந்து ஸ்ட்ரக்சர் கொண்டுவரப்பட்டு கோபியின் அம்மாவைப் படுக்க வைத்து கொண்டு போனார்கள். மணி காரை எடுத்துக் கொண்டு பார்க்கிங் போனான். ரகு பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு எதிரே ஓடி வருவது தெரிந்தது. மணி ‘முடிஞ்சுது’ என்று கைகளால் சைகை செய்தான்.
ரகு ஐசியூ வராண்டாவிற்கு வந்தபோது கோபி இன்னமும் அழுது கொண்டு இருந்தான். அவன் மனைவி விசும்பிக் கொண்டு இருந்தாள். கோபியின் தோள் தொட்டான் ரகு. கோபி அழுதுக்கொண்டே ரகுவைப் பார்த்தான். “இங்க சொந்தக்காரங்க யாரும் இல்லைங்களா?”
“பெரியம்மா பையன் ஒருத்தன் இருக்கான், வேளச்சேரில”
டாக்டர் உள்ளிருந்து வந்தார். “ரிலேட்டிவ்ஸ் யாரு?” கோபி எழுந்தான்.
“உயிர் போன பிறகுதான் கூட்டி வந்து இருக்கீங்க” என்று சொன்ன நொடியில் அப்படியே தரையில் வீழ்ந்து “அம்மா அம்மா அய்யோ அம்மா” எனக் கதறினான் கோபி. ரகு அவனைப் பிடிக்க முயன்றான். பின் அணைத்துக் கொண்டான். கோபி கட்டியணைத்து அழுதான். உலகின் பெருஞ்சோகத்தின் அழுகையை தாங்கிக் கொண்டிருந்தான் ரகு. அவனும் அழுதான். கோபியின் மனைவி கோபியை அணைத்துக் கொள்ள, ரகு விலகினான்.
மணி ஓரமாய் நின்று கொண்டிருந்தான். ரகு அவனருகில் சென்று நின்று கொண்டான். சில நிமிடங்கள் கடந்தது. “சார், அழுதுட்டு இருந்தா எப்படி? என்ன பண்ணலாம் இப்போ, உங்க ஊரு எது?” என்றான் மணி.
“கரூர்”
“ஆம்புலன்ஸ் வர வைக்கலாமா?”
“ம்ம்”
“ஆம்புலன்ஸ்லேயே கொண்டு போய்டலாமா?”
“ம்ம்”
“உங்க சொந்தகாரர்கிட்ட சொல்லியாச்சா?” கோபி பேசவில்லை. அவன் மனைவியிடம் கேட்டான். “சொல்லணும்!”
“சொல்லிடுங்க”
மணி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தான். “வண்டலூர்ல இருந்து ஆம்புலன்ஸ் வரணும், 1 மணி நேரம் ஆகும்”
கோபி அப்போதைக்கு சமாதானம் ஆகி, தன் ஊர் சொந்தங்களுக்குச் சொல்லிக் கொண்டு இருந்தான். அழுதான். பேசினான். பேசியதில் யாரோ டெத் சர்டிபிகேட் பற்றிச் சொல்ல, கோபி அதை ரகுவிடம் சொன்னான்.
ரகு ஒரு டாக்டரைக் காண ICU உள்ளே சென்றான். பீப் பீப் சத்தங்களும், மாத்திரை வாசனையும் அங்கே நிரம்பி இருந்தது. ஒரு டாக்டரை அணுகி, “சார், ஒரு டீடெயில் வேணும்”
“சொல்லுங்க?”
“இப்போ இறந்தாங்கள்ல…”
“ஆமா”
“அவங்க டெத் செர்டிபிகேட் எப்போ கிடைக்கும்?”
“அது நீங்க இதுக்கு முன்ன அவங்கள டிரீட்மென்ட் பண்ண ஹாஸ்பிடல்லதான் கேக்கணும்”
ரகு புரியாமல் பார்த்தான்.
“நீங்க யாரு?”
“கோபியோட ஆபீஸ்ல வேலை பாக்கறேன்”
“கோபிகிட்ட நாங்க சொல்லிடுறோம்”
ரகு எதும் பேசாமல் வெளியே வந்தான். கோபியிடம் சென்று நடந்ததைச் சொல்ல, கோபி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான்.
கொஞ்ச நேரத்தில் இன்னொரு டாக்டர் கோபியிடம் வந்தார். “ஆம்புலன்ஸ் சொல்லியாச்சுங்களா?”
“வந்துட்டு இருக்கு”
“கொஞ்சம் சீக்கிரம்”
“சார், டெத் சர்டிபிகேட் கேட்டோம்” என்றான் இடைமறித்து. ‘கொஞ்சம் வாங்க’ என ரகுவை அழைத்தான். மணியும் உடன் வந்தான்.
“சார், அவங்க இறந்த பின்னாடிதான் ஹாஸ்பிடல்குள்ள கூட்டி வந்து இருக்காங்க! என்ன காரணத்தால செத்துப் போனாங்கன்னு தெரியாம எப்படி சர்டிபிகேட் தர முடியும்? அதுக்குத்தான் அவங்க முன்னாடி ட்ரீட்மெண்ட் பண்ண ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டு போகச் சொல்றோம்”
“சார், உங்களுக்கே நியாயமா இருக்கா சார்? அவங்களுக்கு இந்த ஊர்ல யாரையும் தெரியாது, எல்லாம் ஆபீஸ் பழக்கம்தான். இப்போ இப்படி அலைய விட்டா எப்படி சார்?”
“உங்க எமோஷன் புரியுது சார். ஆனா, இதுதான் எங்க ஹாஸ்பிடல் ரூல்ஸ். இங்கனு இல்லை, வேற எந்த ஹாஸ்பிடல் போனாலும் இப்படித்தான் சொல்லுவாங்க”
“பாவம் சார் அவங்க, ஏதாச்சும் பாத்து செய்ங்க. அவங்க ஏற்கனவே சோகத்துல இருக்காங்க” ரகு கெஞ்சினான்.
“இல்ல சார், முடியாது”
“சரி, அவங்க செத்துட்டாங்கன்னாச்சும் சொல்லுங்க சார்”
“அதுதான் சார் டெத் ரிப்போர்ட்”
“வேற வழியே இல்லையா?”
“லீகலா ஒரே வழிதான், இவங்கள பத்தி போலீஸ்க்கு சொல்லணும், அவங்க பாடிய ஜி.ஹெச் எடுத்துட்டுப் போய், போஸ்ட் மார்ட்டம் பண்ணி, சர்டிபிகேட் தருவாங்க, அதுதான் லீகல் ப்ரோசீஜர்”
“சார், ஊருல இப்படி செத்துப் போனா டாக்டர் வந்து பாத்துட்டு, மூச்சு திணறல்ல செத்துட்டாங்கன்னு சொல்லி சர்டிபிகேட் தருவரே சார்! அந்த மாதிரி யாரும் தருவாங்களா?”
“அது நீங்கதான் விசாரிக்கணும் சார்”
அதற்குமேல் பேசவில்லை. மணி தனக்குத் தெரிந்தவர்களைப் பிடித்து, ஊர் தலைவர் மூலம் ஒரு டாக்டரிடம் பேசி சர்டிபிகேட் தயார் செய்தான். “பேரு, அவங்க ஆதார் நம்பர், எத்தனை மணிக்குச் செத்தாங்கன்னு கேக்கறாங்க”
“நாவலூர் சிக்னல் தாண்டும்போதுதான் கடைசியா மூச்சு விட்டாங்க, அப்போ நேரம் என்ன இருக்கும்?” என்று மணியையே கேட்டார்கள்.
“9.10 இருக்கும், அந்த டைமே சொல்லிடவா?”
“சொல்லிடுங்க”
கொஞ்ச நேரத்தில் கோபியின் சொந்தம் வர, மீண்டும் அழுகை. ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்ஸ் நின்றதும் பின்பக்கக் கதவைத் திறக்கச் சென்றான் மணி.
“ப்ரோ இருங்க! பின்னாடி இல்ல, இங்க” என்று டிரைவர் சீட்டுக்குப் பின்னே கொஞ்சம் தள்ளி, சதுரமாய் ஒரு கதவைக் காட்டினான். உயரம் அகலம் 2×2 அளவில் நீளம் 6 அடிக்கு மேல் ஒரு பெட்டிபோல் இருந்தது. “இதுதான் ஐஸ் பாக்ஸ்” என்றார் டிரைவர். அதைப் பார்த்ததும் ரகுவுக்கு பகீரென்றது. ஒரு மனிதனின் வாழ்க்கை இவ்வளவுதானா?
ஸ்ட்ரெக்சரில் அம்மாளின் உடல் கொண்டு வரப்பட்டது. அதைத் தள்ளிக் கொண்டு வயதான ஒருவர் வந்தார். வாசலுக்கு வெளியே வருமுன், “சார், நகையெல்லாம் கழட்டிடுங்க” என்றார் அவர்.
மணி தயங்கினான். ரகு அருகில் சென்று கழற்றத் தொடங்கினான். அந்தப் பெரியவரும் உதவினார். “அம்மா ஆசைப்பட்டு வாங்கி போட்டியேம்மா…” கோபி முகம்மூடி அழுதான்.
நகைகளைக் கழற்றி “கவனமா வச்சுக்கோங்க” என்று கோபியின் கையில் கொடுத்தான் ரகு. கோபியின் கைகள் நடுங்குவது தெரிந்தது. ஆம்புலன்ஸில் உடல் ஏற்றப்பட்டது. “சார்…” என்று ரகுவை பார்த்து வணக்கம் வைத்தார் பெரியவர். ரகுவிடம் கொடுக்கக் காசில்லை. சங்கடமாய் அவரைக் கடந்தான்.
கோபியும் மனைவியும் ஆம்புலன்சில் ஏறிகொண்டர்கள். இத்தனை நாள் அம்மா இருந்த வீட்டுக்குச் சென்றுவிட்டுத்தான் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று கோபி சொன்னதால் மீண்டும் கோபி வீட்டுக்கே ஆம்புலன்ஸ் சென்றது. காரைக் கோபியின் சொந்தம் ஓட்டிக்கொண்டு வந்தது.
மணியும், ரகுவும் மீண்டும் அந்தக் குடியிருப்பு பகுதிக்குள் வந்தார்கள். “என்னாச்சு சார்?” என்றார்கள் காவலர்கள்.
“இறந்துட்டாங்கண்ணே”
ஆம்புலன்ஸ் நிற்பது தெரிந்தது. சற்று நேரத்துக்கு முன்பு அந்த அம்மாள் மூச்சுத் திணறலுடன் நின்றது நினைவில் வந்தது ரகுவிற்கு. “செத்துப் போயிடுவோம்னு தெரிஞ்சு இருக்காதுல்ல அந்த அம்மாவுக்கு, என்ன எழவு வாழ்க்கடா இது? எனச் சலித்துக்கொண்டான்.
“அட ஏன் நீ வேற, கார்ல வந்திருந்தா தெரியும், கலங்கிப் போயிட்டேன் ரகு” எனத் தன் வேதனையைச் சொன்னான் மணி.
அந்த பிளாட்டில் குடியிருந்த சிலர் வந்து பார்த்தார்கள். சிலர் எட்டிப் பார்த்தார்கள். கோபி சில சாமான்களை எடுத்துக் கொண்டு ஆம்புலன்ஸில் ஏறினான். “அம்மா…”
ஆம்புலன்ஸ் கிளம்பியது, கோபி ஜன்னல் வழியே பார்த்தான். “சார், டிரைவர்கிட்ட பேமெண்ட் சொல்லி இருக்கேன், ஏதாச்சும் பேசினா எனக்குப் போன் பண்ணுங்க” என்றான் மணி.
“ரொம்ப நன்றிங்க” என இருவரையும் பார்த்துக் கைக்கூப்பினான். கண்கள் பொங்கி கண்ணீர் வந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ” என்று சொல்லிவிட்டு ஆம்புலன்ஸைப் பின்தொடர்ந்தான் அந்தச் சொந்தம்.
மணி வண்டியில் ஏறிக் கிளப்பினான். ஆம்புலன்ஸ் இடப்புறம் சென்றது. மணி வலப்புறம் திரும்பினான். “மணி எத்தன ரகு?”
“2:15”
“ஒரு டீயப் போடலாமா?”
“ம்ம்”
சில நொடிகளில் இருவர் கைகளிலும் தேநீர் கோப்பை இருந்தது.
“ச்ச மறந்துட்டேன்” என்றான் ரகு.
“என்ன?”
“அந்த ஆளுக்குக் காசு கொடுக்கலாம்னு நெனச்சேன் பாவம்”
“யாருக்கு?
“ஸ்ட்ரெக்சர் தள்ளிட்டு ஒரு வயசான ஆளு வந்தாரே, என் மூஞ்சிய பாத்துட்டே நின்னாரு. உன்கிட்ட சில்லறை இருக்குமா?”
“இப்போ போகப் போறியா?”
“இல்ல, நாளைக்கு அந்தப் பக்கம் போனா கொடுக்கலாம்னு பாத்தேன்”
“இந்தா” ஒரு நூறு ரூவாயை ரகுவிடம் கொடுத்தான். “அவருக்கு அப்புறம் கொடுக்கலாம், நாளைக்கும் சம்பளம் வரலைன்னா இத சாப்பாடுக்கு வச்சுக்கோ” என்று வண்டியைக் கிளப்பினான் மணி. ரகு எதும் பேசாமல் ஏறிக் கொண்டான்.


