இணைய இதழ் 119சிறுகதைகள்

நாவினாற் சுட்ட வடு – பிறைநுதல்

சிறுகதை | வாசகசாலை

அவனுக்கு எப்படி இந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து வெளியே வருவது என்பது தெரியவில்லை. திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகியிருந்தும் இன்னும் அவனது கடன்களில் கால்பாகம் கூட அடைந்திருக்கவில்லை. அதற்குள்ளாக அவனுக்கு ஒரு மகள் பிறந்து ஆறு மாதமாகியிருந்தது. பிடித்தம் போக கைக்கு வரும் நாற்பதாயிரத்துச் சொச்சத்தில் இருபத்தைந்தாயிரம் கடன்களுக்கே கொடுத்துக் கொண்டிருந்தான். மீதமிருக்கும் பதினைந்தாயிரத்துச் சொச்சத்தை வைத்துக் கொண்டு அவனும் அவனது குடும்பமும் திருவனந்தபுரத்தில் மாதம் எட்டாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய சூழல். அவனது நிறுவனம் மிக மிகச் சிறிய தனியார் நிறுவனம். சம்பளத்தைத் தவிர வேறு எதுவும் தரப்படுவதில்லை. மாதம் அவனுக்கும் அவனது மனைவிக்கும் ஆகின்ற செல்பேசிக் கட்டணமே ஆயிரத்தைத் தாண்டும். ஒற்றை மகளுக்கு ஆகின்ற செலவுகள் மாதம் இரண்டாயிரத்தைத் தொட்டது. வண்டிக்கான எரிபொருள் தேவை மாதம் ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. மீதமிருக்கும் மூவாயிரத்துச் சொச்சத்தில் மளிகை சாமான்கள், மின்கட்டணம், கேபிள் கட்டணம், சமையல் எரிவாயு கட்டணம் என எப்படிப்பார்த்தாலும் இன்னும் பத்துப்பதினைந்தாயிரம் இருந்தாலும் பற்றாத நிலை.

   மனைவி அணிந்து வந்திருந்த நகைகளில் சிலவற்றை அடகு வைத்தாயிற்று. எஞ்சியவை தாலிக்கொடியும் மெட்டியும் மட்டுமே. பிள்ளை பிறந்து ஆறுமாதமாயிற்று, இன்னமும் ஒரு குண்டுமணித் தங்கமும் வாங்கவில்லை.

      உண்மையில் 2014-இல் அவன் வாங்கிக் கொண்டிருந்தது நல்ல சம்பளம்தான். ஆனால், அவன் செய்த பெரிய தவறுகள் இரண்டு. ஒன்று தனது மனைவியிடம் இன்னமும் அவனது உண்மையான சம்பளத்தைச் சொல்லாதது. காரணம் பெண் கொடுக்க மாட்டார்களோ என்ற பயத்தில் அவனது சம்பளத்தை அவனின் உறவினர்கள் மனைவியின் வீட்டாரிடத்தில் உயர்த்திச் சொல்லியிருந்தது. அதனை மறுத்து உண்மையைச் சொல்ல அவனுக்கு ஏனோ இன்னும் தைரியம் வரவில்லை. மற்றொன்று திருமணத்திற்காக வீடு கட்டியது. திருமண செலவுகளும் கட்டுமானச் செலவுகளும் வரம்பின்றி உறவுகளால் செலவு செய்யப்பட, இப்பொழுது கடன்களை தலைக்கும் மேலாக சுமந்து கொண்டிருக்கிறான்.

     எல்லாவற்றுக்கும் மேலாக அவனுக்குக் குடிப்பழக்கம் வேறு இருந்தது. எல்லா நாளும் குடிப்பதில்லையென்றாலும் மனைவி ஊருக்குச் செல்லும் நாட்களில், குடிக்காத நாட்களுக்கும் சேர்த்தே குடித்து விடுகிறான். விளைவு கடனட்டையின் கட்டணங்கள் கட்ட முடியாத அளவுக்கு பெருகிப்போயின.

     ஒவ்வொரு முறையும் சம்பள நாளன்று மனைவி, ‘சம்பளம் வந்து விட்டதா?’ என்று கேட்கையில் அவனுக்கு எரிச்சல் வர ஆரம்பித்தது. அவள் வீட்டிற்காக கேட்பது என்னவோ வெறும் மூவாயிரம்தான். ஆனால், அதற்கே அவன் நிறைய திட்டுவான்

“ஏன் செலவுகளை ஆயிரத்திற்குள்ளாக முடிக்க இயலாதா?” என்று கேட்பான். அதற்கு மிக நீண்ட விளக்கத்தை அவள் தருவாள் அதுவும் அவள் தவறாமல் பராமரித்து வரும் வரவு செலவு கணக்குப் புத்தகத்தின் துணையோடு. செலவுகளை கட்டுப்படுத்தும் திறனற்ற அவனால் ஏனோ இதனை எதிர்கொள்ள முடியவில்லை. அப்பொழுதெல்லாம் அவன் அவளை, “சனியனே, பீட, தரித்ரம்! ஒன்னக் கல்யாணம் பண்ணதுலருந்து தாண்டி இந்த நிலைமை. ஏதாவது ஒன்னு உருப்படுதா? விடியாமூஞ்சி. எல்லாம் உன்னால தாண்டி. கடனையும் அடைக்க முடியல. வர்ற சம்பளமும் பத்தலை.” என்று கத்திவிட்டு அங்கிருந்து உடனடியாக அகன்று விடுவான்

    திருமணத்தின் பொழுது அவளின் சொந்தக்காரர்களில் யாரோ ஒரு பெண்மணி அவள் பிறந்ததிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாதவள் என்றும், அவள் ஆரம்பித்து வைத்த காரியங்கள் உருப்பட்டதே இல்லை என்றும் அவனிடம் சொல்லியிருந்தாள். அவன் அது குறித்து, அவளின் வீட்டில் விசாரித்த பொழுது அவளின் பெற்றோர் அந்தப் பெண்மணி ஏதோ காழ்ப்புணர்ச்சியில் பேசுவதாகச் சொன்னார்கள். இவனுக்கு அதிர்ஷ்டம் என்பதிலெல்லாம் அதிகம் நம்பிக்கை இல்லை என்பதால் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவன் விசாரித்தது அவளின் காதுக்குச் சென்று அவள் மனதில் தங்கி விட்டிருந்தது. அது அவனுக்கும் தெரிந்தேயிருந்தது. அதனை அவ்வப்பொழுது அவளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருந்தான். .

    அன்றைக்கும் அப்படித்தான், அவன் அவனது நண்பர்கள் குழாமிலிருக்கும் யாரோ ஒருவனின் பிறந்தநாள் விருந்துக்கு கிளம்பும் பொழுது அவள் அவனை தடுத்தாள். அவனுக்கும் அவளுக்கும் சண்டை மூண்டது. வார்த்தைகள் தடித்தன. இறுதியாக வழக்கம் போலவே இவன் அவளை ‘விடியாமூஞ்சி’ என்றும் ‘விளங்காதவள்’ என்றும் திட்டிவிட்டு அகன்றான். ஆனால், அன்றைக்கு என்னவோ விருந்தில் அவனுக்கு எதுவும் இனிக்கவில்லை. இறுதியாக கண்களில் நீர் தளும்ப நின்ற அவளின் முகமே மீண்டும் மீண்டும் மனக்கண் முன்பாக வந்து நின்றது. அன்றைக்கு வழக்கமான அளவைவிட கூடுதலாகவே குடித்தவன், எதுவும் சாப்பிடாமலேயே தள்ளாடியபடி வீட்டிற்கு வந்து சேர்ந்தான். கதவைத் திறந்தவள், அவனிடம் எதுவும் பேசாமல் சாப்பாட்டை எடுத்து வைத்தாள். அவன் நேரத்தைப் பார்த்தான்.ந ள்ளிரவு பனிரெண்டாகியிருந்தது. அவள் இன்னும் அவனுக்காக சாப்பிடாமல் காத்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்குத் தெரிந்திருக்கிறது அவன் எப்படியும் சாப்பிடாமல் வருவான் என்று. ஆனால், அவனோ அவளை ’சனியன், பீடை, தரித்திரம்’ என்று திட்டிக் கொண்டிருக்கிறான். அந்த போதையிலும் மனம் எங்கோ வலிக்க, மெலிதாக ஆரம்பித்து அவனது மனதில் அழுத்திக் கொண்டிருக்கிற கடன்களைப் பற்றியும் அதனை அடைக்கப் போதாத சம்பளத்தைப் பற்றியும் கொட்டித் தீர்த்து விட்டான். அதிலும் அடுத்தவாரம் தனது திருமணச் செலவிற்காக நெருங்கிய நண்பனிடம் வாங்கிய இலட்ச ரூபாயை திருப்பிக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தை சொல்லுகையில் அவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பாதி சாப்பாட்டிலேயே போதையில் மயங்கி சரியப் போனவனை எழுப்பி கைத்தாங்கலாக கொண்டு போய் படுக்கையில் படுக்க வைத்தாள். உச்சகட்டப் போதையிலும் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தவனை தட்டிக்கொடுத்து தூங்கவைத்தாள்.

   ஆனால், அடுத்த நாள் அவள் எதுவும் நடந்ததாகக் கூட காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், அவனால் பல மாற்றங்களை உணர முடிந்தது. காய்கறிகளை கிலோ கணக்கில் வாங்காமல் எண்ணி வாங்க ஆரம்பித்தாள்.மீன் சல்லிசாக கிடைக்கும் என்பதால் செவ்வாய் வெள்ளி தவிர்த்து எல்லா நாட்களிலும் மீன்கறி சமைக்க ஆரம்பித்தாள். ஞாயிற்றுக்கிழமை மட்டும், அதுவும் சங்குமுகம் கடற்கரைக்கு மட்டுமே அழைத்துச் செல்லச் சொன்னாள். (அவர்களிருந்த மண்விலாவிற்கு மிக அருகிலிருப்பது கொச்சுவேலிக் கடற்கரை. ஆனால், அங்கு நுழைவுக்கட்டணம் உண்டு). அவளது செல்பேசிக் கணக்கை முன்கட்டணக் கணக்காக மாற்றிக்கொண்டாள். மாதமொருமுறை நூறு ரூபாய் மட்டும் செல்பேசி கணக்கில் ஏற்றிக் கொண்டாள். வாரந்தோறும் சங்குமுகம் கடற்கரைக்குச் செல்லும்பொழுதெல்லாம் பத்துரூபாய்க்கு வறுத்த கடலை வாங்கிக்கொண்டாள். அதுவும் மகளுக்காக மட்டும். அவனுக்கு வீட்டிலிருந்தே தின்பண்டங்களை(அவளே செய்தது) எடுத்து வர ஆரம்பித்தாள்.

    இரண்டு மூன்றுமுறை அவனிடம் சண்டையிட்டு மதுவிருந்துகளுக்கு செல்வதை மொத்தமாகத் தடுத்தாள். ஆனால், அவனின் நண்பர்கள் அனுப்பி வைக்கும் மதுப்போத்தல்களை வீட்டிற்குள் அனுமதித்து, அவற்றை வார இறுதி நாட்களில் மட்டும் அவனை அருந்த அனுமதித்தாள். அவன் மதுவருந்துகையில் தொட்டுக்கொள்ள மீன்வறுவலும் கிடைத்தது. முன்பு மாதமொருமுறையேனும் ஊருக்குச் சென்று கொண்டிருந்தவள் இப்பொழுது மொத்தமாக குறைத்துக் கொண்டாள். அவள் ஊருக்குப் போவதைக் குறைத்ததும் அவளின் பெற்றோர்களின் வருகை அதிகமானது. அவர்கள் வெறுமனே எப்பொழுதும் வருவதில்லை. ஒவ்வொரு முறை வரும்பொழுதும்குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கான மளிகை பொருட்களோடு வந்து சேர்ந்தார்கள். அவனது நண்பனுக்கான இலட்ச ரூபாய் கடன், அவள் கொடுத்த பணத்தால் தீர்க்கப்பட்டது. அதை அவளது தாயிடமிருந்து வாங்கியதாகவும் எல்லாக் கடனும் முடிந்தவுடன் திருப்பித் தந்தால் போதுமானது என்றதும் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தம் குறைந்து மனதில் நிம்மதி குடிபுக ஆரம்பித்தது. தனது வங்கிக்கணக்கின் கடவுச்சொல் முதல் கொண்டு அவளிடமே கொடுத்து விட்டு அவன் அவள் சொல்கிறபடியே எல்லாம் செய்ய ஆரம்பித்தான். குடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டான். மலைபோல் அவன் முன்னால் நின்றிருந்த கடன்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தன.

   அந்த வருடம் அவனுக்கு சம்பள உயர்வு நன்றாகவே அமைந்தது. அது மேலும் அவனது கடன்களை கரைக்க உதவியது. இப்படியே சென்றால் இன்னும் ஓரிரு வருடங்களில் அவனது கடன்கள் முழுமையாக அடைக்கப்பட்டுவிடும். அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவனது மனைவியின் மேல் நம்பிக்கை வந்து, இப்பொழுது முழுவதும் அவளின் கட்டுப்பாட்டிற்குள்ளாகவே இருக்க ஆரம்பித்தான். இவளைப் போய் அதிர்ஷ்டம் இல்லாதவள், விளங்காதவள் என்று அவனிடம் சொன்ன அந்த உறவுக்கார பெண்மணியை மனதிலேயே திட்டுவான். நேரில் கண்டாலும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. ஆயினும் அவ்வப்பொழுது வரும் சண்டைகளில் அவன் அவனது ஆண் திமிரைக் காட்டவே செய்தான். கடைசியாக “உருப்படாதவள்,விளங்காதவள் விடியாமூஞ்சி” என்றே முடிப்பான். இந்த வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வரும்வரை அவனுக்கு சரிக்குச் சரியாக நின்று சண்டையிட்டுக் கொண்டிருப்பவள், இந்த வார்த்தைகள் வந்தவுடன் அப்படியே விக்கித்து நின்றிருப்பாள். கண்களில் நீர் வழிய, அவனைத் திட்டவும் முடியாமல் தன்னையும் தேற்றிக் கொள்ளாமல் அழுதவாறே இருப்பாள். அவள் அழ ஆரம்பித்ததும் அவனுக்கு ஏதோபெரிதாக வெற்றி கொண்டு விட்டதாகத் தோன்றும். உடனடியாக அங்கிருந்து உள்ளுக்குள் நகைத்தவாறே நகர்ந்துவிடுவான்.

  அவர்கள் இருந்த பகுதியில் ஸ்ரீமன் நாராயணகுரு பிறந்த நாளின் போதும், மாசி மாதம் வைக்கும் பொங்கலின் போதும், நவராத்திரியின் போதும் அன்னதானம் நடைபெறும். அவனுக்கு அன்னதானங்களில் என்றுமே விருப்பம் இருந்ததில்லை. ஆனால், அவளுக்கு அன்னதானம் கொடுப்பதும் சாப்பிடுவதும் என்றால் அலாதிப் பிரியம். அந்த வருடம் அப்பொழுதுதான் தத்தி தத்தி நடக்கப் பழகிய மகளைத் தூக்கிக் கொண்டு அன்னதானத்திற்குக் கிளம்பினாள். அவனை வருந்தி அழைத்தும் அவன் போகவில்லை. அவனுக்கும் சேர்த்து வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு, அவள் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அன்னதானம் வாங்க தெருவில் நடந்து சென்றதை விசித்திரமாக பார்த்தவன், அந்த வீதியில் வசிப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வீதியில் செல்வதைக் கவனித்ததும், ‘இங்கே அப்படித்தான் போலிருக்கு’ என்று சமாதானமானான்.

   வெகு நேரம் கழித்து அவள் மிகவும் சோர்ந்துபோய் திரும்பிவந்தாள். பாத்திரத்தில் அன்னதானம் வாங்கப்பட்ட சுவடுகள் இருந்தன. ஆனால், அவளோ மகளோ சாப்பிட்டதைப் போலத் தெரியவில்லை. அயர்ந்து அவனருகே அமர்ந்தவளின் கண்களில் மெல்ல நீர் வழிய ஆரம்பித்தது.

அவன், “ஏய், என்னாச்சி? ஏன் அழுவுற?” என்று கேட்டான். அவள் மெதுவாக ஆரம்பித்தாள்

“அன்னதானம் ஒங்களுக்கும் சேத்துத்தாங்க வாங்குனேன். சோறு, அவியல், தோரன், சாம்பார் வாங்கி அந்த அரச மர மேடை இருக்குல்ல, அதுமேல வச்சிட்டு பாப்பாவை பக்கத்துல உட்கார வச்சிட்டு, கடைசியா பிரதமன் ரெண்டு காகிதக் கப்புல வாங்கிட்டு வர்றதுக்குள்ள, பாப்பா… சாப்பாட்டைத் தெரியாமத் தட்டி உட்டுருச்சி. மொத்த சோறும் கறியும் அப்படியே மேடைக்கு கீழ, மணல்ல கொட்டிப் போச்சி…..சோறு கொட்டுதேன்னு வேகமா நான் ஓடுனதுல கால் தடுக்கி ஒரு கையில இருந்த பிரதமனும் தவறி விழுந்துரிச்சி. இன்னொரு கையில இருந்த பிரதமன மட்டும் பாப்பாவுக்கு ஊட்டிவிட்டு கூட்டியாந்தேன்” என்றாள்.

“ஏன் திரும்பவும் வரிசையில நின்னு வாங்க வேண்டியதுதான?”

“இல்லங்க, நான் போய் கடைசியிலதான் நின்னேன். எனக்குப் போடும்போதே சோறு கொஞ்சம்தான் இருந்தது. சாப்பாடு கொட்ன ஒடனே திரும்பிப் பாத்தப்ப சோறு காலியாயிருச்சி, அன்னதானம் முடிஞ்சிருச்சின்னு சொல்லிட்டாங்க”

“சரி உடு. அதுக்கு ஏன் அழுவுற?! நான் போய் ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வாரேன்” என்றவாறே அவளை சமாதானப்படுத்த முயன்றான். அவள் மேலும் விசும்பியபடியே, “ரெண்டு பேரு வயிறார சாப்பிட வேண்டிய ஒரு வேளை சோறு! இந்த ஒரு வேளை சோத்துக்காகத்தானே மனுஷங்க இந்தப் பாடு படுறாங்க. ஊரு விட்டு ஊரு வந்து, நாடு விட்டு நாடு போயிலாம் கஷ்டப்படுறாங்க. அதப்போய் ஒண்ணுக்கும் ஆகாம மண்ணுல கொட்டிட்டு வந்துருக்கேனே??! …ம்… நான் என்ன மாரியான ஆளு? சின்ன வயசுல எதோ நடந்துச்சுன்னு நெருங்குன சொந்தக்காரங்க எல்லாரும் சொன்னப்பக்கூட நான் நம்பல. ஏன்னா,எங்க அப்பாம்மா ஒரு நாளும் என்னைய அப்படிச் சொன்னதில்லை…. ஆனா, இப்ப… நீங்க சொன்ன மாரி நான் வெளங்காதவதான் போல. விடியாமூஞ்சிதான் போல. சாமியோட பிரசாதம்தான் அன்னதான ரூபத்துல கிடைக்குதும்பாங்க. ஆனா, அந்த பிரசாதமும் கைக்கெட்டி வாய்க்கெட்டாம போற அளவுக்கு நான் சனியன்தான். தரித்திரம்தான். என்னால இங்க எதுவும் உருப்படாது போல” என்றவாறே வெடித்து அழ ஆரம்பித்தவளை வெறுமனே  பார்த்தவாறே விக்கித்து உட்கார்ந்திருந்தான் அவன். தான் தனது இயலாமையினை மறைத்துக் கொள்ள, ஆணென்ற திமிர்த்தனத்தைக் காட்ட, தனது கோபத்திற்கான வடிகாலாய் கொட்டிய வார்த்தைகள், மனைவியின் மனதில் தைத்திருக்கும் ஆழத்தினை உணர்ந்தவன், செய்வதறியாது அவளைத் தேற்றவும் இயலாமல் அப்படியே சமைந்திருந்தான்.       அதன்பிறகு மறந்தும்கூட அந்த வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வருவதில்லை.

chanbu_sp@yahoo.co.in

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button