
தூக்கம் தெளிந்தா போதை தெளிந்தா எனத் தெரியவில்லை, எழுந்தார் மருதப்பன்.
“ந்தா… வெந்நீர் போட்டியா?”
காலைக் கடன் என்பதன் அர்த்தம் எல்லோருக்கும் ஒன்றல்ல. பல பெண்களுக்கு, அது வேறு. காலையில் எழுந்து சாணமெடுத்து வாசல் பெருக்கி கோலமிட்டு எழப்போகும் கணவன் மருதப்பனுக்காக விறகடுப்பில் அலுமினியப் பானையில் வெண்ணீர் போட்டுவிட்டு இன்னோர் அடுப்பில் சமையல் வேலைகளையும் ஒருசேர செய்து கொண்டே, ‘அதெல்லாம் போட்டு கொதிச்சி கெடக்கு, எந்திரிச்சி போய் குளி, போ.” என்றாள் மங்கம்மா.
மருதப்பன் அவசர அவசரமாக காக்கா குளியல் குளித்துவிட்டு, ஆடைகளை மாற்றியபடியே அமர்ந்து மூன்று இட்லிகளை வைத்து, தக்காளிச் சட்டினியோடு குழைத்து வாயில் அதக்கிக் கொண்டே கேட்டார், “யான் மங்கம்மா… புள்ள இன்னுமா தூங்குது? எழுப்பி உடு.”
“சும்மா கெட, அதுவே ராப்பூரா படிச்சிப்புட்டு அசதியா படுத்துருக்கு… காலிஜ்ஜிக்கு இன்னும் நேரம் கெடக்கு. நீ திண்ணுட்டு கெளம்பு.”
“இல்ல மங்கா, புள்ள நல்லா படிக்கனும் மங்கா. நேரத்துக்கு சோத்த போட்டு காலிஜ்ஜிக்கு அனுப்பிப்புடு. எம்பொழப்புதான் பொணத்தோட கட்டிப் பொறள்றதுலயே போச்சி. புள்ளயாவது நர்சாகி நாலு உசுரக் காப்பத்துட்டும்.”
“அய்யய்ய… ஏன் எப்போ பாத்தாலும் இதையே சொல்லி பொளம்பி தள்ற. எல்லாம் எனக்குத் தெரியும். புள்ள பண்ணெண்டாவதுல நல்ல மார்க்கு எடுத்ததாலதான இவ்ளோ கம்மி காசுக்கு நர்சு படிப்புல எடம் கெடச்சிது. அப்டிப்பட்ட புள்ளக்கி படிக்கத் தெரியாதா? அதெல்லாம் நல்லா படிச்சிடும். உனக்கு நேரமாகுது பாரு நீ மொத கெளம்பு.”
சாப்பிட்டு எழுந்த மருதப்பன் சுவற்றில் மாட்டியிருந்த சைக்கிள் சாவியை எடுக்கும் போது பக்கத்தில் மாட்டியிருந்த மகளின் வெள்ளைக் கோட்டைத் தொட்டுப் பார்த்துவிட்டு அப்படியே திரும்பி, தூங்கும் மகளைப் பார்த்தார். மனதுக்குள் எதையோ நினைத்துக் கொண்டே புறப்பட்டார்.
*
அரசு மருத்துவமனையின் வாசலில் ஒரு குடும்பமே நின்று அழுது கொண்டிருந்தது. சைக்கிளை மிதித்தபடி அவர்களைக் கடந்து உள்ளே போனார் மருதப்பன். “இன்னக்கி என்னயா கேசு?” என, மார்ச்சுரியின் வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்த முருகேசனிடம் கேட்டார்.
“தற்கொல கேசுயா… கல்யாணம் ஆன ரெண்டு மாசத்துல பய தற்கொல பண்ணிக்கிட்டான் போல. பய்யன் வீட்டாளுக, எங்களுக்கு பொண்ணு வீட்டு மேல சந்தேகமா இருக்குனு கேசாக்கிப்புட்டாங்க. செத்தவன் உள்ள வாய இளிச்சிக்கிட்டு படுத்திருக்கான். போய் ஒடச்சிப் போடு போ.”
“ஏய், தற்கொல கேசுன்ற, டாக்டரு வர வேண்டாமா, சும்மாவே அந்த டாக்டருக்கும் எனக்கும் ஆகாது.”
“ஏன்யா, நம்ம டாக்டரு நல்ல மனுசந்தானய்யா, அவருக்கு உன் மேல மட்டும் அப்படி என்ன பெரிய காண்டு? வேல பாக்கும்போது மட்டுமாவது குடிக்காம இருன்னுதான சொல்றாரு, அத கேட்டாதான் என்ன ஒனக்கு? அன்னக்கி அப்டிதான், டாக்டரு கல்லீரல எடுத்து குருக்க பொளக்க சொன்னதுக்கு மண்ணீரல எடுத்து பொளந்துப்புட்டியாம். எல்லாத்துக்கும் இந்தப் பழக்கந்தான காரணம்.” என முருகேசன் அக்கரை காட்டினான்.
“யோவ்… வேலப் பாக்கும்போது மட்டுந்தான்யா நான் குடிக்கிறதே! இன்னும் சொல்லப் போனா இந்த வேலப் பாக்குறதாலதான் நான் குடிக்கிறதே! இந்த வேல கெடச்சப்போ எனக்கு 26 வயசிருக்கும். அதுக்கு முன்னாடி வர எனக்கு எந்தப் பழக்கமும் கெடயாது. வேலக்கி சேந்த மொத நாளே ஒரு கொலக் கேசு வந்துச்சி. செத்து மூனு நாள் கழிச்சு கெடச்ச ஒரு பொம்பள பொணம். உள்ள டைல்சு கட்டையில படுக்க வெச்சிருக்காங்க. ஒடம்பு உப்பி பெருத்து டைல்சு பூரா சாந்து கலர்ல திக்கான தண்ணியா ஓடுது. கட்ட பூராவும் புழுவா நெளியுது. நாத்தம் இங்கேருந்து OP வார்டு வரைக்கும் வீசுது. எனக்குக் கொடலப் பெறட்டிக்கிச்சி. இருந்தாலும் வேற வழியில்லாம மனசக் கல்லாக்கிட்டு அவங்க சொல்ல சொல்ல, பூராத்தயும் அறுத்துத் தச்சேன். வேலய முடிச்சிட்டு ராத்திரி வீட்டுக்குப் போனா அந்த நாத்தம் மண்டய விட்டுப் போகவே மாட்டேங்குது. நல்லா மூக்குலேருந்து மூள வரைக்கும் அந்த நாத்தம் ஏறி அடச்சிப் போச்சி. சாப்புட உக்காந்தா சோத்துல ஊத்துற கொழம்பு கூட அந்தத் கவுலுத் தண்ணியாத்தான் தெரியிது. பொண்டாட்டிக்கிட்ட நெருங்குனா கூட பொணத்து நியாபகந்தான் வருது. இத்தனக்கும் கல்யாணம் ஆன புதுசு வேற! நாலு நாளா அந்த நாத்தமும் காட்சியும் என்ன விட்டுப் போவே இல்ல. அப்பதான் இந்தப் பாட்டில கைல எடுத்தேன். இதுதான், எம்மூளக்குள்ள பூந்த அழுக்கயெல்லாம் வெளியில வெறட்டுச்சு. இனி நான் இத உடுனும்னா ஒன்னு, யேன் வேலய உடுணும் இல்ல, யேன் உசுர உடுணும்.” என்று சொல்லிவிட்டு முருகேசனின் எதிர்ப்பேச்சுக்காகக் காத்திராமல் விருட்டென உள்ளே சென்று கத்தி, சுத்தி, ஊசி, நரம்பு, பஞ்சு என எல்லா பொருட்களையும் எடுத்து பிணத்தின் அருகே வைத்துவிட்டு, இடுப்பில் செருகியிருந்த ஒரு பாட்டிலை எடுத்து மடக் மடக்கென பாதியைக் குடித்துவிட்டு மீதியை மீண்டும் இடுப்பில் சொருகிக் கொண்டார்.
டாக்டர் வந்தார். அவருடன் இன்னோர் நபர் கேமராவோடு வந்தார். மூன்றாவதாக இன்னொருவர் அழுத தன் கண்களைத் துடைத்துக் கொண்டே உள்ளே வந்தார். டாக்டர் மருதப்பனைப் பார்த்து, “இங்காருயா இவரு எறந்தவரோட சொந்தம். போஸ்ட் மார்ட்டம் நடக்கும்போது அவங்க ஆள்ல ஒருத்தர் கூட இருக்கனும்னு சொல்லி அனுமதி வாங்கிருக்காங்க. சட்டுனு வேலய ஆரம்பி.” என்றார்.
கேமிரா ஆன் செய்யப்பட்டது. உறவினர் ஒரு கையால் வாயையும் மூக்கையும் பொத்திக் கொண்டு மறு கையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிற்க, மருதப்பன் வேலையைத் தொடங்கினார்.
கழுத்தின் நடுப்பகுதியில் கத்தியால் அழுத்தி, அப்படியே மார்பு வயிறு என கத்தியை இழுத்துக் கொண்டே வந்து, முன் உடலை இரண்டாகப் பிளக்க வேண்டும். அப்போதுதான் உள் உறுப்புகளை சுலபமாக வெளியில் எடுக்க முடியும்.
அதற்காக முதலில் உடைகளைக் கத்தரிக் கோலால் கிழித்தெரிந்தார், மாரைப் பிளப்பதற்குத் தடையாக மாரோடு இறுகிக் கட்டியவாறு இருந்த இரு கைகளையும் பிரிக்க பலம் கொண்ட மட்டும் இழுத்தார். இழுத்த வேகத்தில் கை எலும்பு முறிந்து மட்டாரென பெருஞ் சத்தம் எழுந்தது.
பதறிப்போன உறவினர், “ஏங்க… என்னாங்க இப்டிப் போட்டு முறிக்கிறீங்க, கொஞ்சம் பொறுமயா பண்ணுங்க.” எனக் கோபமாய்ச் சொல்ல. உடனே குறுக்கிட்ட டாக்டர், “இல்லப்பா அது அப்படி இழுத்தாதான் பிரியும்.” என பொறுமையாகச் சொல்லி முடிப்பதற்குள், குறுக்கிட்ட மருதப்பன், “டேய்… இவன் உனக்குதான்டா சொந்தம் எனக்குப் பொணந்தான், வாய மூடிட்டு நிக்கிறதுன்னா நில்லு இல்ல வெள்ள போயிடு. வேலய தொந்தரவு பண்ணிக்கிட்டு…” என முடிப்பதற்குள் அந்த உறவுக்காரன் மருதப்பனின் சட்டையைப் பிடித்து தள்ளிக் கொண்டுபோய் சுவற்றில் அணைத்து விட்டான். பதிலுக்கு மருதப்பனும் அவன் சட்டையைப் பிடிக்க, அவன் மருதப்பன் கன்னத்தில் ஓங்கி அறைய வர, தடுக்க வந்த டாக்டரின் கன்னத்தில் விழுந்துவிட்டது அந்த அறை.
சத்தம் கேட்டு வெளியிலிருந்து முருகேசனும் ஒரு கான்ஸ்டபிலும் உள்ளே ஓடி வந்து இருவரையும் பிரித்து, அந்த உறவுக்காரனை வெளியில் இழுத்துச் சென்றார்கள். இவ்வளவு அலப்பறைகளையும் படம் பிடித்துக் கொண்டே நின்றார் கேமரா மேன்.
டாக்டர் கன்னத்தைத் தடவிக்கொண்டே, “ஏன்யா யோவ்… உனக்குலாம் அறிவே இருக்காதா, நாந்தான் பொறுமயா பேசிக்கிட்டு இருக்கன்ல, அதுக்குள்ள உள்ள பூந்து திமிருத்தனமா பேசுற…” என மருதப்பனைக் கத்தினார்.
“இங்காருங்க சார்! சும்மா எல்லாத்துக்கும் என்னயவே வெய்யாதீங்க, இந்த ஒறவுக்காரப் பயலுக எப்ப உள்ள வந்தாலும் இதே பிரச்சனதான். எவனாச்சும் இதுவர என்னய ஒழுங்கா வேல பாக்க உட்டுருக்கானா? உங்க ஆப்பரேசன் தேட்டர்ல எவனாச்சும் சொந்தக்காரன்னு சொல்லி உள்ள பூந்து உங்க வேலய கெடுத்தான்னா, அப்போ தெரியும் உங்களுக்கு!” மருதப்பன் பேசிக்கொண்டிருக்கும்போதே கதவைத் திறந்துகொண்டு வேறொரு ஆள் உள்ளே வந்தான்.
“நீ யாருயா?’” என்றார் டாக்டர்.
“சார், கோச்சிக்காதீங்க, அவன், செத்தவனோட சொந்தத் தம்பி, அதான் கோவப்பட்டுட்டான். மன்னிச்சிடுங்க சார் அவனுக்குப் பதிலா நான் நிக்கிறேன்.”
“நீ செத்தவருக்கு என்ன மொற?”
“நான் மச்சினன் சார்.”
“சரி சரி, அப்டி கேமராவ மறைக்காம நில்லு.” என்று சொல்லிவிட்டு அப்படியே மருதப்பனைப் பார்த்து, “எதாவது போதைல தேவயில்லாம பேசிட்டு இருக்காத, வாய மூடிக்கிட்டு வேலய ஆரம்பி.” என்றார் டாக்டர்.
டாக்டரை முறைத்தபடியே, விட்ட இடத்திலிருந்து வேலையைத் தொடங்கினார் மருதப்பன்.
வேலை முடிந்தது. சம்பிரதாயங்களெல்லாம் முடிந்ததும் உறவினர்கள் உடலை வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள். மருதப்பன் கைகால்களைக் கழுவி விட்டு, வீட்டிலிருந்து எடுத்துவந்த மதிய உணவை எடுத்துக் கொண்டு மருத்துவமனையின் கடைக்கோடியில் உள்ள ஓர் அரச மரத்தினடியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தூரத்தில் மார்ச்சுரியின் வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. உடனே மருதப்பன், “ந்தா, அடுத்த பொணம் வந்துட்டு.” என சலித்துக் கொண்டு முகத்தைத் திருப்பியபடி சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்துவிட்டு மார்ச்சுரியை நோக்கி வந்து, “என்னயா ஆம்புலன்ஸு வந்துட்டு போச்சு, என்ன கேசு?” என வாசலில் அமர்ந்திருந்த முருகேசனிடம் கேட்க…
“ஆக்சிடண்டு கேசுயா. எதோ காலேஜ் போன புள்ள ரோட்ட கிராஸ் பன்றப்போ கார்க்காரன் அடிச்சிப்புட்டானாம். ஸ்பாட் அவுட்டாம்….” முருகேசன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மருதப்பனின் அலைபேசி ஒலி எழுப்பியது.
மருதப்பன் ஃபோனை எடுத்து, “சொல்லு மங்கா… என்ன இந்நேரத்துல…” என்றார்.
மறுமுனையில் மருதப்பன் மனைவி மங்கம்மா கதறியபடி “யோவ்… நம்ம புள்ளக்கி எதோ ஆக்சிடண்ட்டாம்ல… இப்பதான்யா எனக்கு ஃபோன் வந்துது புள்ளய GH க்குதான் கூட்டிட்டு வந்துருக்காங்களாம். சீக்கிரம் என்னானு பாருயா…”
மருதப்பனுக்கு உடல் நடுங்கியது, தொண்டை வறண்டு போனது, கண்கள் இருட்டிக் கொண்டன, காதிலிருந்து நழுவி கீழே விழுந்தது கைபேசி. வியர்த்து வெடவெடத்தபடி மார்ச்சுரியை நோக்கி நடந்தார் மருதப்பன். கதவைத் திறந்து, இருண்ட கண்களைக் கசக்கி உற்றுப் பார்த்தார். உள்ளே வெள்ளைக் கோர்ட் முழவதும் இரத்தத்தால் சிவப்பேறி விரைத்துக் கிடந்தாள் மருதப்பன் மகள்.
“அய்யய்யோ என் தங்கம் போச்சே…!” என மருதப்பன் கதறிய சத்தம் கடைத்தெரு வரை, கேட்டது. கதறித் துடித்து கதவில் தலையை முட்டி மயங்கி விழுந்தார்.
*
மயக்கம் தெளிந்து கண் திறந்தபோது மார்ச்சுரிக்கு எதிரே சிமெண்ட் தரையில் கிடந்தார். அவரைச் சுற்றி சொந்த பந்தங்களின் அழுகைச் சத்தம். அவரின் தலைமாட்டில் அமர்ந்தபடி மாரிலும் தலையிலும் மாறி மாறி அடித்து கதறிக் கொண்டிருந்தாள் மங்கம்மா. எதிரே கண்களைத் துடைத்தபடி நின்றிருந்தான் முருகேசன்.
“மருதப்பா, இருய்யா நான் போய் டாக்டர்ட பேசிட்டு வாரன்.” அழுதபடியே சொல்லிவிட்டு டாக்டரிடம் ஓடினான் முருகேசன்.
டாக்டர் வேலை நேரம் முடிந்து வீட்டிற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
“சார்… சார்…”
“வா முருகேசா, கேள்விப்பட்டேன். மத்தியானம் வந்த ஆக்ஸிடன்ட் கேசு அந்தாளோட பொண்ணாம்ல. என்ன சோதனையா இது! ச்ச…”
“ஆமா சார்… சார், நீங்க சொல்லி கொஞ்சம் போஸ்ட் மார்ட்டம் பண்ணாம குடுக்க சொல்லுங்க சார்.”
“யோவ், என்னயா பேசுற? ஊருக்கு ஒரு சட்டம் அந்தாளுக்கு ஒரு சட்டமா? நாளக்கி நானே செத்து என்ன இங்க கொண்டு வந்தாலும் போஸ்ட் மார்ட்டம் பண்ணாம தர மாட்டாங்க. இது ஆக்ஸிடண்ட் கேசு. நாளைக்கு வேற ஏதும் பிரச்சனன்னா யார் பதில் சொல்றது?”
“சார், அதுக்கில்ல… இன்னொரு அட்டண்டரு சங்கரன் வேற ஊர்ல இல்ல சார். நெருங்குன யாருக்கோ கல்யாணம்னு மூனு நாள் லீவு போட்டு ஊருக்கு போய்ட்டான். அவன் இருந்தாலும் ஒடச்சி குடுத்துடுவான். இப்போ யாரு சார் ஒடக்க முடியும்?”
“யோவ், நான் ஒன்னும் அந்தாளு மாதிரி கல்லு மனசுக்காரன் இல்ல. பக்கத்து ஊருல, பக்கத்து மாவட்டத்துலலாம் கூட கேட்டேன். அங்கல்லாம் கேஸ் ஃபுல்லா இருக்காம் எல்லாத்தையும் போஸ்ட் மார்ட்டம் பண்ணிட்டு வாய்ப்பிருந்தா நாள மறுநாள் ஆள அனுப்புறாங்களாம். அதுக்குள்ள நம்ம சங்கரனே நாளக்கி வந்திடுவான். வந்ததும் முடிச்சி குடுத்துடலாம் கொஞ்சம் பொறுத்துக்கச் சொல்லு.”
“சார், சின்னப் பொண்ணு சார். இருக்குற ரெண்டு பிரீசர் பொட்டியிலயும் அடையாளம் தெரியாத பொணங்க கெடக்கு சார். அப்படியே நாளக்கி வர போட்டு வச்சா நாற ஆரம்பிச்சிடும் சார். கொஞ்சம் பாத்துப் பண்ணுங்க சார்.”
“என்ன என்னய்யா பண்ண சொல்ற? நாளக்கி ஒரு நாளுக்குள்ள ஒன்னும் நாறிப்போயிடாது. அப்பிடி அவசியம்னா, வெளியிலேருந்து ஃப்ரீசர் பாக்ஸ வர வைங்க. பணம் வேணும்னாலும் நான் தரேன். போய் ஆக வேண்டியதப் பாரு போ.” என சொல்லிவிட்டு நிற்காமல் சென்றார் டாக்டர்.
முருகேசன் மீண்டும் மருதப்பனிடம் ஓடி வந்தான். கனத்த குரலில், “மருதப்பா… டாக்டரு போஸ்ட் மார்ட்டம் பண்ணாம தர மாட்டேங்குறாருயா. அத பண்றதுக்கும் இப்போ ஆள் இல்ல. ஆளு நாளக்கோ, நாளக் கழிச்சோதான் வரனுமாம்யா. அதுவர புள்ளய இங்கயே போட்டு வக்க முடியாது. எனக்கு என்னம்மோ உன் மேல உள்ள கோவத்துல இப்டி பண்றாரோன்னு தோனுது. நீ போய் பேசுனா ஒத்துப்பாருன்னு நெனக்கிறேன். வாயா, அவரு பொறப்புடறதுக்குள்ள போய்க் கேப்போம்.”
மருதப்பன் சிறிது நேரம் எதுவும் பேசாது தலையைக் குணிந்தபடி இருந்தார். பிறகு கண்களைத் துடைத்துக்கொண்டு தடுமாறி எழுந்தார். சட்டையைத் தூக்கி, இடுப்பிலிருந்த பாட்டிலை எடுத்து, மீதமிருந்த சரக்கை ஒரே மடக்கில் குடித்து முடித்து பாட்டிலைக் கீழே போட்டுவிட்டு வேகமாக நடந்தார், மார்ச்சுரியை நோக்கி.



