இணைய இதழ் 119சிறுகதைகள்

பிளாக் அண்ட் ஒயிட் நாய்குட்டிகள் – அமிர்தம் சூர்யா

சிறுகதை | வாசகசாலை

நேற்று நள்ளிரவு இரண்டு மணி வரை என்ன பேசினோம் என்பது அருள் செல்வத்திற்கு துல்லியமாக நினைவில்லை. ஆனால், தான் தேம்பித் தேம்பி அழுததும் எம்.ஆர்.எம் ஸார் தம் மார்போடு தன்னை அணைத்து தலைக் கோதி விட்டது மட்டும் புத்தியில் பதிந்து போயிருந்தது. அந்த உணர்வை அன்றிரவு அருந்திய அதீத ஆல்கஹால் அழிக்காமல் இருக்கிறது. சில நேரங்களில் காவியமாகப் பெருக்கெடுத்து ஓடும் ஆறுதல் வார்த்தைகளை விட ஒரு சிறு அணைப்பு அந்த துக்க நெருப்பை அணைக்க போதுமானதாயிருக்கிறது என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

ஒருவன் துக்கத்தில் குடிப்பது எதுக்கு? சதா தன்னை அறுத்துக் கொண்டிருக்கும் துக்கத்தை அகற்ற தெரியாமல், ஒரே நேரத்தில் தன்னை மாய்த்துக் கொள்ள முடியாத கோழைதான் தவணை முறையில் தன்னைத் தற்கொலை செய்துக் கொள்ள இந்தக் குடியைத் தேர்வு செய்கிறான். அப்படியானவர்களுள் அருள் செல்வமும் ஒருவன்

நேற்றிரவு தன்னோடு இருந்த அதே மூவர் இப்போது போதை தெளிந்து மெளனம் போர்த்தியபடி அமர்ந்திருந்தனர். மேசை மேல் இருந்த அருள் செல்வத்தின் போன் ஆழினி என்ற பெயரை ஒளித்து ஒலித்தது. அவன் அந்த அழைப்பை அணைத்தான். இப்போது போனில் பத்து வயசு சிறுவன் ஒரு கருப்பு நாய்குட்டியை அணைத்தபடியிருந்த போட்டோ ஒளிர்ந்தது

எம்.ஆர்.எம், அருளின் முகவாயை தன் ஆட்காட்டி, கட்டைவிரலால் அம்பை நாணிலிருந்து இழுத்து விடுவதைப் போல குனிந்திருந்த  அருள் செல்வத்தின் மோவாய் கட்டையை பிடித்து மேலே நிமிர்த்தினார். அவன் கண்கலங்கிருந்தான். அவர், ‘குச்சின் நிரைத்த குரூ உமயிர் மோவாய்’ என்றபடி அவனின் கண்ணை தன் கண்ணோடு நேர் கோட்டில் நிறுத்திப் பேச ஆரம்பித்தார்.

*****

அருள் செல்வம் சாமானியன் அல்ல. தொடர்ந்து சினிமாவில் இயங்குபவன் மன்னிக்கவும் இயங்கியவன். வெற்றி பெற்ற படங்களில் இவனின் வசனமும் ஒரு காரணம். அவ்வப்போது சில காட்சியில் தன்னை வெளிப்படுத்தி நடிகனாகவும் அறிமுகப்படுத்திக் கொள்பவன். சினிமா வட்டாரத்தில் அருள் செல்வத்துடன் படித்த பலர் இயக்குநராகியிருப்பது இவனுக்கான வரம் எனலாம். வசன வாய்ப்பை வழங்க முடியாத நட்பின் இயக்குநர்கள் அதற்கு பதிலாக ஒரு முக்கிய காட்சியில் அவனை நடிக்க வைத்து அந்த பணத்தை பதிலீடு செய்து விடுவர். அந்த அளவு நட்பின் பாக்கியவான்தான்!

ஆனால் இன்று சினிமா துறந்து, மனைவி மறந்து நாடோடி போல் ஊர் ஊராக சுற்றி கால் போன வழியில் சில நண்பர்களை தேடி வந்து அவர்களை சந்தித்து அவர்களுடன் குடித்து மனம் விட்டு பேசி தன் மனப்பாரத்தை, குடியில் உளறுறான் என்ற மாயப்போர்வையில் துக்கத்தை கொட்டி அடுத்த நாள் வேறு ஊரணிக்கு செல்லும் துக்கப்பறவையாகியிருந்தான்.

பெங்களூர் அருகே சிக்கபல்லாப்பூரில் ஒரு ரெஸ்ட்ராண்ட் – காட்டுக்கு நடுவில் எவனோ ஒரு பணக்காரன் பார் அமைச்சிருக்கான்.அங்கேயே தங்கிக்கொள்ளலாம் என்ன கத்தினாலும் எவனும் கேட்க மாட்டான் துக்கமும் சந்தோசமாக மாறி காற்றில் இடரின்ப பேரலை பரவி விடும்.. மரத்தில் பறவைகளின் கீச்சொலியும் உளறல் போல தோன்றும்.தூரத்திலிருக்கும் மலை, இருளில் ஒரு டிடெக்டிக் அரக்கன் போல நம்மை வேவு பார்ப்பதாக காட்சியளிக்கும்.நேற்று எம்.ஆர்.எம்,, கர்நாடக இயக்குனர் குரு நாணய்யா, அருள் செல்வம் சேர்ந்து குடித்த தருணம் சுவாரஸியமானது

விஸ்கியை தவிர வேறு ஏதும் தொடாத அருள் செல்வத்துக்கு முன்.. பிளாக் அண்ட் ஒயிட் விஸ்கி நின்றிருந்தது.அந்த பாட்டிலின் லேபிளிலிருந்த  கருப்பு வெள்ளை நாய் குட்டிகளை பார்த்ததும் கண்கலங்கி போனான். அருள் என்னப்பா என்று எம்.ஆர்.எம், அவன் தோளில் தட்டி கோப்பையை அவன் கையில் திணித்ததும் தான் தாமதம் அருள் பேசத்தொடங்கி விட்டான். நிச்சயம் குடித்த ஐந்து நிமிடத்தில் போதை ஏறியிருக்காது.குடி ஒரு சாக்கு அவ்வளவுதான்.

நீண்ட வெள்ளையும் கருப்பும் பாதிக்கு பாதி கலந்த தாடியும் மீசையும் அடர்ந்த முகத்தில் இரண்டு புருவங்களையும் ஏதோ ஒரு கருப்பு சாந்தை இட்டு இணைத்திருக்க நெற்றியில் மூன்று சுருக்கங்கள் பளிச்சென்று தெரிய முகத்தில் ஒரு வசீகர சக்தி கொண்டவராக ஒரு நடுத்தர வயது சாமியாரின் தோற்றம் இருந்தாலும் அவர் அணிந்திருந்த டி சர்ட்டும் ஜீன்ஸ் பேண்ட்டும் அப்படி இல்லை என்று மறுப்பும் சொல்லியது சிக்கபல்லாப்பூரில் அவர் பிரபலமானவர்.கவுசிலிங்கில் கில்லாடி. அருள் செல்வத்துக்கு அதிக பழக்கமில்லை அவனுக்கு பெங்களுர் டைரக்டர் குரு நாணய்யா தான் பால்ய சினேகிதன் அவனை பார்க்கவந்தபோது தான் இன்று இவர் இந்த மது விடுதியில் பழக்கம்.

அருள் பேசத்தொடங்கினான். ஸார் அது என்ன எம் வி எம்? இன்சியலே பேரா? இல்ல பேரின் சுருக்கமா?

இல்லை நண்பா.என் பேரு மகேஷ். மகேஸ்வரன். நம்ம நண்பர்கள் மனதை வாசிப்பவன் அதாவது மைண்ட் ரீடிங் மகேஷ் என்று கிண்டலா வெச்ச பேர். எம்.ஆர்.எம் னு வெச்சிட்டான்க நானும் மறுக்கல என்றார். இரண்டாவது பெக் உள்ளே போனது.

பெங்களூரில் ஒருவர் நண்பா என்று பாரில் அழைப்பது விஸ்கியை விட கிக்கா இருக்கு ஸார்.உண்மையிலேயே நீங்க மனசை வாசிப்பீங்களா எங்க வாசிங்க பார்க்கலாம் என்று சட்டென சட்டையின் மூன்று பட்டன்களை திறந்து ஆஞ்சநேயர் போல காட்டி நின்றான் அருள்.

குரு நாணய்யா, அருள் செல்லவத்தை சாந்தப்படுத்த, ஏ மாமா தும்பா அவசர படுபேடா. கொனெகே நாவெல்லா ஒந்தில்லா ஒந்து தினா ஹோகலே பேக்கு. அந்த்யா கெ ளவரிகே பேக பரத்தே கெ ளவரிகே நிதானவாகி பரத்தே.தயபிட்டு சும்னே கூத்கோ…என்று கன்னடத்தில் சொல்லி அருளை சாந்தப்படுத்த பார்த்தான் அங்கு மூவருக்கும் மூன்று மொழிகள் தெரியும் என்பதால் உரையாடலுக்கு மொழி ஒரு ஸ்பீட் பிரேக்காக இல்லை.

நான் அவசரப்படலடா. எல்லா முடிவை தேடி தான்டா போறோம் சீக்கிரம் கிடைக்குது லேட்டா கிடைக்குதுன்னு இல்ல என்ன முடிவு அதான் வேணும் நீ கன்னடத்துல சொன்னாலும் எந்த மொழியில சொன்னாலும் வாட் ரிசல்ட்?உனக்கு கீழே உள்ளவர் கோடி -நினைத்து பார்த்து நிம்மதி நாடுன்னு சொல்றது சுலபம் டா.. சொல்லுங்க எம்வி எம் நான் இந்த பாட்டிலை பார்த்ததும் ஏன் தடுமாறினேன் சொல்லுங்க என்றான்

எம்ஆர்எம், நண்பா.. நீங்க இந்த பாட்டிலின் லேபிளில் இருந்த நாய்குட்டிகளில் இருப்பதைப்போல் ஒன்றை வளர்த்து இழந்திருக்கணும் என்று நான் யூகிக்கிறேன் என்றதும் அருள் செல்வம்,அய்யோ மகேஷ் ஸார் கருப்பு வெள்ளை.ரெண்டு நாய் குட்டியையும் தொலைச்சுட்டு நிக்கிறவன் ஸார் நான் என்று அழ அரம்பித்தான் ஓரளவு அருள் செல்வத்தின் கதையை குரு நாணய்யா மூலம் தெரிந்திருந்தாலும் ஒரு முழு சித்திரம் நோக்கி காத்திருந்தார்

எஸ் மகேஷ் ஸார் ..எஸ் எனக்கு அப்பான்னா உசுரு. பகுத்தறிவாதி தான்.ஆனா அவருக்கு ஜோஸ்யத்துல ரொம்ப ஈடு பாடு ஜோஸியத்தை  மதத்திலிருந்து தள்ளிவெச்சிதான் பாப்பாரு அப்பா கருப்பழகன்.நான் ஆழினியை காதலிச்சேன் அவ வேற சாதி. எங்க அம்மா ஜோசியம் பாத்து எங்களுக்கு புத்திர பாக்கியம் இல்ல அவளை கட்டக்கூடாதுன்னாங்க. அப்பா ஏதும் சொல்லல.அட ஜோஸ்யம் பத்தி கூட வாய திறக்கல.ஏன்னு தெரியல. அப்பா அடிக்கடி சொல்வாரு டேய் அருள் நான் அறுபது வயசு வரைக்கும் தான் இருப்பேன்ன்னு.கோவத்தில் யோவ் போயா லூசாட்டாம் பேசிட்டுன்னு சொல்லி திட்டுவேன்

அப்பாவோட நாப்பத்தொன்பதாவது பிறந்த நாள் தான் என்னோட கல்யாணம் நாள்.அப்பாவும் நானும் கூட சேந்து குடிப்போம். இப்போ கூட இங்க என் கூட அவர் நின்னுட்டு இருக்கலாம். சரியா ஒரு வருடம் தான் இருந்தார்.அவரோட ஜோஸ்யம் பொய்யா போயிடுச்சி அறுபது வயசு வரை இருப்பேன்னு சொன்ன மனுசன் ஒரு ஆக்ஸிடெண்டில அம்பது வயசில போய் சேந்துட்டாரு..என்று கேவி அழ ஆரம்பித்தான் அருள்.

மூன்றாவது ரவுண்ட்டில் பிளாக் அண்ட் ஒயிட்…கருப்பும் வெள்ளை நாய் குட்டியும் இப்போது சேர்ந்து விளையாட ஆரம்பித்தது

எம்ஆர்எம், இப்போது இன்னோரு துக்கசூத்திரத்தை அவிழ்க்க ஆரம்பித்தார்.அருள் உன் மகன் எப்போ பிறந்தான் என்றதும் , அப்பா இறந்த அடுத்த வருடமே எனக்கு மகன் பிறந்தான் ஸார்.அப்பா பேரு அகர முதல்வன்.அதை சுருக்கி அகரன்ன்னு பேர் வெச்சேன். அப்பா இல்லாத குறையை மகன் தீர்த்தான்.இப்போ ஜோஸ்யத்தை நான் வெறுக்க ஆரம்பிச்சேன் அது அபத்தம்னு தோண ஆரம்பிச்சது

ஏன் அப்படி தோண ஆரம்பிச்சது என்று மகேஷ் கேட்டதும் குரு நாணய்யா எம்வி எம் இது தேவையா என்றார்.மாமு குரு விடுடா கேட்கட்டும் நண்பன் தானே..நண்பா ஆழினி யை கட்டினா புத்திர பாக்யம் இல்லேன்னு சொல்லிச்சே அம்மா.ஆனா நான் அப்பா ஆயிட்டேனே என்றான் பெருமை பொங்க. ஆனா பொங்கிய பாலில் தெளிச்ச நீர் போல சட்டென உள் அடங்கிய பால் போல் அமைதியாகி..சென்னையிலேயே பெரிய டாப் ஸ்கூலில் சேர்த்தேன் மகேஷ். நீச்சல் குளம் யோகா கராத்தே கர்நாடக மியூஸிக் எல்லா சொல்லி தரும் ஒரு விஜபி நடிகரோட மாமியார் நடத்துன ஸ்கூல்.. செமயா படிப்பான் என் சாமி. என் செல்லம்.எனக்கு அப்படியே ஆப்போசிட்.ரொம்ப சாமி கும்பிடுவான்.அவன் அம்மா அப்படி பழக்கப்படுத்தி வெச்சிட்டா என்று சொல்லும்போதே ஆழினி போன் அந்த இரவில் ஒலிக்க தொடங்கியது அதை எடுத்து, ஆழி பயப்படாதே.பெங்களூர்ல இருகேன் குரு வீட்ல. எங்கேயும் தொலையல சரியா பயப்படாதே இங்க மனசை படிக்கிற ஒரு மனசன் கிட்டே படிய்யா படி எப்படி படிக்கிறேன்னு பார்ப்போம்ன்னு மனசை காட்டிட்டு இருக்கேன்ன்னு சொல்லி போனை கட் செய்தான் அருள் செல்வம். மகேஷை பார்த்து …

ஒன்னு தெரியுமா மகேஷ் ஸார் நீச்சல் குளத்துல குளிக்க போன என் அகரனுக்கு என்ன ஆச்சி எப்படி நடந்ததுன்னு தெரியல.நீச்சல் குளத்துல மூழ்கி செத்துட்டான்னு சடலமா வீட்டுக்கு கொண்டு வந்தாங்க.பேப்பர் டிவி எல்லாத்திலேயேயும் வந்தது நியூஸ். விசாரணை கமிஷன்லாம் வெச்சாங்க.என் செல்லம் போனது போனது தான். நான் அவன் மேல உயிரா இருந்தேன் ஸார் டயலாக் எழுதிட்டு இருக்கும் போது கூட போன் பண்ணுவான் அப்படியே நிறுத்திட்டு அவன் கூட அந்த நைட்டுல பேசிட்டு தான் திரும்ப ஓட்டல் ரூமுக்கு வந்து டயலாக் எழுதுவேன்.சிலநேரம் ஸ்டோரி டிஸ்கஸ் நடக்கும்போது அகரன் போன் வந்தா அப்படியே அம்போன்னு விட்டுட்டு எழுந்து போய் பேச போயிடுவேன். பணம் புகழ் என்ன மயிறு? புள்ளை சந்தோசத்தை விட..ஆனா கூட பெரும்பாலும் என் ப்ரெண்ட்ஸ்ங்க் அதானே யாரும் கோவப்படமாட்டாங்க.அகரன் பேர்ல ஒரு சினிமா கம்பெனி கூட ஆரம்பிக்க பிளான் பண்ணேன். ஆனா மகேஷ் ஸார் தோ இந்த பாட்டில இருக்கிற வெள்ளை நாய் குட்டி போல தான் அவன் புசு புசுன்னு இருந்தான் என்று சொல்லி கேவி கேவி அழ ஆரம்பித்தான்

எழுந்து நின்று அருள் செல்வத்தின் அருகே சென்று எம்.ஆர்.எம் அவனை அணைத்து அவன் தலையை தன் மார்பில் சாய்ந்து அவனின் தலையை கோத ஆரம்பித்தான் அருளின் இரு கரமும் அவரை அணைத்துக்கொண்டு கதறியது. குரு நாணய்யா அந்த பாட்டிலின் லேபிளை பார்த்தான் என் அப்பா கருப்பழகன் என்று சொன்னது இப்போது லேபிளின் கருப்பு நாய்குட்டியின் மீது அவரின் பார்வை இருந்தது. பாட்டில் காலியாகியிருந்தது. கீழே அருள் செல்வத்தின் ஜோல்னா பையிலிருந்த பேப்பர் சிதரிக்கிடந்தது.அதில் அப்பாவின் போட்டோ மகனின் போட்டோ சில ஜோதிட குறிப்புகள் தாங்கிய பேப்பர். எல்லாவற்றையும் கையில் அள்ளி எடுத்துக்கொண்டார் எம்ஆர் எம்.

பாசத்துக்குரிய இரண்டு ஜீவன்களின் மரணம். குறிப்பாக புத்திர சோகம் இப்படி ஒரு கலைஞனை குடிகாரனாக மாற்றிவிட்டிருந்ததை அவரால் அவதானிக்க முடிந்தது.

*****

மிளகு கொடிகளும் வெற்றிலையும் படர்ந்திருந்த லேசான சூரிய ஒளி போராடி தரையை தொட முயன்றுக்கொண்டிருந்த அந்த மண்மேட்டின் மீதிருந்த வட்டமேசை அருகே எம்.ஆர்.எம்,, குரு நாணய்யா, அருள் செல்வம் கூடுகை. போதையற்ற ஆனால் போதை வந்து போன சுவடு தெரிந்தது போல் முகபாவனை.. சன்னமாக காட்டு சேவல் கொக்கரித்தது இல்லை அந்த இடத்தில் அது கூவியது என்றே சொல்லவேண்டும் அவ்வளவு இனிமையை அது காற்றுக்கு கடத்தியது எனலாம்.

எம்.ஆர்.எம், அருள் செல்வத்தை பார்த்து, தீர்க்கமான குரலில் அருள் செல்வம் என்னை பாருங்க என்றார்.அருள் நிமிர்ந்து அவரை பார்த்தான்.

அருள் நான் சாமியார் இல்ல. எந்த மதத்துலேயும் என்னை சுருக்கிக்கில. லைப் ஒரு அல்ஜிப்ரா மேக்ஸ் மாதிரி புரியாதவங்களுக்குதான் அது காப்ரா. புரிஞ்சிட்டா ஈஸியா மார்க் எடுத்திடலாம்.வாழ்க்கை கணக்கை பொருத்தவரை நாம எல்லாம் ஸ்டூடண்ட் தான்.உனக்கு உண்மையிலே புத்திர பாக்யம் இல்ல.தான். உங்க அப்பா சொன்னது மாதிரி அவருக்கு ஆயுசு அறுபது தான்.ஆனா துர் மரணம் அடைஞ்சா காலம் அவர்களை மறு படியும் பிறக்க வைக்க ஒரு சான்ஸ் கொடுக்கும். துலா லக்கினம் ஐந்தில் சனி இருந்தா பூர்வ புண்ணிய அதிபதி ஆட்சி இருந்தா போன பிறவி பலனை திரும்பவும் கொடுக்கும் என்பர் ஒருவேளை உங்க அப்பாவுக்கு அது தெரிந்திருக்கலாம். உங்க அப்பா விபத்துல சாகல. விரும்பி தான் செத்தார்.

சொல்லி முடிப்பதற்குள் அருள் செல்வம் என்ன சொல்றீங்க எம்ஆர் எம் என்று அலறி எழுந்தான். வெயிட்.. நான் இன்னும் முடிக்கல. அவர் இறந்த பிறகு தான் உனக்கு மகன் பிறக்கிறான் அது உன் மகன் அல்ல. உன் அப்பா. உனக்கு புத்திர பாக்கியம் கொடுக்க பிறந்தார்.

வியப்பின் உச்சி சிகரத்தில் நின்று அப்போ ஏன் மகன் சாகணும்? என்றான் கதை கேட்ட குழந்தை போல

அவர் ஆயுசு அறுபது.ஐம்பது வயசில் இறந்தார்.அப்போ மீதி பத்து வருடம் பேலன்ஸ் இருக்கில்ல அதை உனக்கு புத்திர பாக்கியமாக தந்து அந்த பத்து வருடம் அவர் சொன்ன வாக்குபடி உன் கூட இருந்துட்டு போயிட்டார். அவ்வளவுதான் நீ வாழ்வின் ரகசிய சூத்திரம் தெரியாம குடிச்சி குடிச்சி உன் அப்பாவையும் மனைவியையும் கலங்கடிக்கிற.உன் அப்பா உனக்கு கொடுத்த வாக்கை காப்பாத்தியது போல் உன்னை நம்பி வந்தவளை அழவிடாம காப்பாத்துறதும் உன் தர்மம் தானே.நேத்து குடிக்கும்போது நீ சொன்னியே இங்க கூட என் அப்பா இருக்கலாம்னு நீ சொன்னதில் அது மட்டும் தான் சரியானது.

எம்ஆர்எம் சொல்ல சொல்ல அருள் விக்கித்து நின்றான். ஸாரி அருள், இன்னைக்கு ஈவினிங் ஒரு வேலை இருக்கு. இன்னொரு நாள் சந்திப்போம் என்று நகரத் தொடங்க, வியந்து போன குரு நாணய்யா …அருளை விட்டு நகர்ந்து எம்.ஆர்.எம் கூடவே நடந்தபடி நீ சொல்றது எல்லாம் உண்மையா? இந்த ஜோஸ்ய குறிப்பு உண்மையா? இது பொய்யில்லையே என்று கேட்டான்

ரொம்ப சிம்பிள். அருள் குடியை விட்டுட்டு சகஜ நிலைக்கு வந்துட்டா ஜோஸ்யம் உண்மை. இல்ல பழையபடியே இருந்தா ஜோஸ்யம் பொய். அவ்வளவுதான் இதுக்கு ஏன் பட்டிமன்றம்? லைப்க்கு பைத்தியம் பிடிக்காம இருக்க கொஞ்சம் இப்படி நம்பிக்கைங்க வேணும் குரு..கறை நல்லது என்றபடி நடக்கத் தொடங்கினார் மைண்ட் ரீடர் மகேஷ்.

-karumaandijunction@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button