
[1]
மணிமேகலை கணவனின் அதிகாரத்திலுள்ள அரசாங்க வாகனத்தில் ஆவுடை ஆச்சி வீட்டுக்கு வந்திறங்கினாள். அவள் நினைத்திருந்தால் வேறொரு வாகனத்திலேயோ அல்லது பொடிநடையாக கூட இந்தக் கோட்டை வீட்டிற்கு வந்திருக்கலாம். ஏனெனில் இரண்டு தெரு தள்ளிதான் வீடு. ஒருவகையில் ஆச்சிக்கு தூரத்து சொந்தமும் கூட. அந்த வாகனத்தில் பதிக்கப்பட்டிருந்த ‘G’ ஆச்சி வீட்டிற்கு வெளியே அரசமரத்தின் நிழலில் அதிகார தொனியோடு நிற்பதை யார்தான் அறியக் கூடும் ?
மெல்லிய அலங்காரத்தில் நெற்றிவகிடில் குங்குமம் வைத்து கண்ணுக்குள் மை வரைந்து தலை நிறைய மலர் சூடி வசீகரத்துடன் ஆச்சி வீட்டுக்கு வந்திருந்தாள். இத்தனை அலங்காரத்துடன் நிற்பவளைக் கண்டு சுசீலாவுக்கும் பிருந்தாவுக்கும் மலைப்பாக இருந்தது. மணிமேகலை உள்ளுக்குள் புன்னகைத்து அதை வெளியே காட்டாமல் அவ்விருவரின் கைகளைப் பற்றிக் கொண்டாள். சுருட்டு மணம் அவள் நாசியில் ஏறியதும் இருமினாள். அது ஆச்சிக்கு கேட்டு விடுமோ என அஞ்சி சட்டென்று அடக்கிக் கொண்டாள்.
வீட்டுத் தாழ்வாரத்தில் அமர்ந்துக்கொண்டு வழமையாக புகைக்கும் சுருட்டை ஆச்சி கண்மூடி லயித்து இழுத்துக் கொண்டிருந்தாள். அப்புகை காற்றில் தவழ்ந்து வாசலுக்குச் சென்று அவளை வரவேற்பது போல அங்கேயே சுற்றியது. நினைவு வந்தவள் போல ஆச்சி சோழிகளை உருட்டி எறிந்தாள். தரையில் விழுந்த சோழிகளில் ஆறு ஆகாயம் பார்த்து மல்லாந்து கிடந்தன. அது நல்ல சகுனமாகத் தோன்றவில்லை.
தாழ்வாரத்தின் செங்குத்தான கோணத்தில் ஆச்சியை பார்த்தவாறே மணிமேகலை மிடுக்குடன் நடப்பதை வீட்டிலிருந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர். தாம்பாளத் தட்டில் கொஞ்சம் கனி வகைகள் பரப்பி வைத்து சிரிப்பு மாறாமல் பட்டுப் புடவைச் சரசரக்க வீட்டின் உள்ளே வந்தவள் அப்படியே ஆவுடை ஆச்சியின் கால்களில் விழுந்து வணங்கினாள். அவள் எழுந்தபோது ஆச்சியின் முகம் முந்தைய நாளின் முகத்தை போல் அல்லாது மெய் மறந்திருந்தது.
ஆச்சி பற்றி நன்கு தெரிந்திருந்ததால் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து சீக்கிரம் கிளம்பி இருந்தாள். எப்படியோ நேரம் கடந்து விட்டிருந்தது. இருந்தாலும் உறவுக்காரியும் அதிகாரியின் மனைவியுமான தனக்கு ஆச்சி தனித்த இடம் கொடுப்பாள் என நம்பி இருந்தாள். பூதங்கள் காத்து வருவதாகச் சொல்லப்பட்ட நகைப்பெட்டியில்தான் மணிமேகலை வந்த காரியம் அடங்கி இருந்தது. சிவப்பு முத்துக்கல் பதித்து இரு பக்கவாட்டிலும் நெளிவு அலை கொண்ட ஆபரணக் காப்பில் அவள் தன்னை இழந்திருந்தாள். அதே போன்றதொன்று தனக்கும் வேண்டுமென ஆசாரியிடம் விஷயங்களைச் சொல்லி தயார் செய்தாகி விட்டது. ஆனால், அதற்கு மாதிரி வேண்டுமே..! எனவே புகைப்படம் எடுத்துச் செல்ல முடிவெடுத்தாள்.
ஆனால், அதற்கு ஆச்சி சம்மதிக்கவேயில்லை. முகத்திலடித்ததுபோல வெடுக்கென்று சொன்னாள்.. “அறிவில்லியாடி … ஒரு வீட்ல நகை பார்க்க வர்ற நேரமா இது? .இப்பத்தான் லைட்டப் போட்டேன்… அதெல்லாம் சரிப்படாது… போயிட்டு நாளைக்கு வா… சாமிக்கு வௌக்கு ஏத்திட்டேன் … இனி அரங்க திறக்கற காரியம் நடக்காது… விடியட்டும்…”
மணிமேகலையின் முகம் வாடிப் போய்விட்டது. ஆனால், அது பற்றியெல்லாம் ஆச்சி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை.
சாயங்கால வேளையில் விளக்கு வைத்து விட்டால் அவ்வளவுதான். ஆச்சிக்கு எல்லா சம்பிரதாயங்களும் தலைக்கு மேலே இரு கொம்புகள் போல முளைத்து நிற்கும். அது கொஞ்சம் கூரான கொம்பும் கூட. அவளின் சம்பிரதாயங்களின் முன்பாக யாராக இருந்தாலும் கொம்பில் குத்துப்பட்டு வீழ்ந்து கிடக்க வேண்டியதுதான். ஆட்களின் தோற்றம் பிடிக்கவில்லை என்றால் பட்டப் பகலிலேயே வாசல்படியைகூட மிதிக்க விட மாட்டாத கிழம் இது.
அதைக் கொஞ்சம் சாந்தமாக இங்கிதமாகச் சொல்லியிருக்கலாம். யாரோ முகந்தெரியாத வேற்றாளிடம் எரிந்து விழுவதைப்போல சொன்னதைக் கேட்டுத் தான் அவளால் தாங்க முடிந்திருக்கவில்லை.
மணிமேகலையின் முகம் அப்படியே வதங்கிப் போய் கண்களில் ஈரம் படர்ந்து விட்டது. சுசீலாவின் நெருங்கிய அத்தையின் மகன்தான் மணிமேகலையின் கணவன். பெரிய அரசாங்க உத்தியோகத்திலிருப்பவன். ஒரு விரல் அசைவில் எதையும் சாதித்து விடும் ஆற்றல் மிக்க அதிகாரியின் மனைவி அவள். எரிச்சலும் சீற்றமுமான ஆச்சியின் அதட்டலைக் கேட்ட பின் அங்கு நிற்பதே கூசச் செய்வதாக இருந்தது. அவமானம் அவளை அங்கிருந்து விரட்டியது.
மணிமேகலையின் அந்தத் தோற்றத்தைக் கண்டதும் சுசீலாவின் மகளான பிருந்தா மெல்ல பேச்சை மாற்றினாள். ஆச்சியை முறைத்துக் கொண்டே படபடவென ஓடிப்போய் அவளது கையைப் பிடித்து அழைத்து வீட்டினுள்ளே அமர வைத்து வெவ்வேறு விஷயங்களைப் பேசி சமநிலைக்கு கொண்டு வர முயன்றாள். அது ஓரளவுக்கு பயன் அளிக்கவும் செய்தது.
ஆச்சிக்கு இங்கிதமென்பது ஒரு பத்தியத்துக்கு கூட சரிவராத சங்கதி. என்ன செய்வது வயதாகிவிட்டால் இப்படித்தானா? பிருந்தா நொந்து கொண்டாள். வீட்டுக்கு நகை பார்க்க வந்த ஒரு விருந்தாளியை இப்படியா நடத்துவது என்று தன் அம்மாவிடம் கேட்டாள்.
[2]
அப்படியென்ன விஷேசமென்று ஆவுடை ஆச்சியின் நகைகளை இத்தனை பெரிய அவமானத்திற்கு பிறகும் மணிமேகலை பார்க்க வந்தாள்? ஆச்சியின் நகைகள் எல்லாம் ரொம்பவும் பிரத்தியேகமானது. பழங்காலத்து நகைகள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கதையுண்டு.
பழங்காலத்து நகைகளை ஆச்சி பாதுகாத்து வைத்திருந்த அரங்கு என்பதே ஒரு அறைதான். அங்குதான் ஆச்சியின் படுக்கை. பூதம் காப்பது போல கண் துஞ்சாமலிருப்பாள். குடும்பத்தில் அவளது நடவடிக்கைகள் யாருக்கும் சகிக்கவில்லை என்றாலும் அனுசரித்துப் போவதற்கான காரணமென்ன? அந்தப் பெட்டியிலிருக்கும் நகை நட்டுகளுக்கெல்லாம் பெரிய கதைகளும் கௌரவமும் இருந்தன. ஆச்சி எப்போதுமே கடிந்து கொள்ளக் கூடியவள் அல்ல. கொம்பில்லாத தருணங்களில் அவள் ஒரு தேவதை. அப்படியான மனநிலையிலிருக்கும் போது அவளைப் புகழ்ந்து பேசி அந்த பேச்சில் அவள் லயித்த பிறகே தனது நகைப் பெட்டியை யாருக்கும் திறந்து காட்டுவாள். நகைகளின் அழகையும் வேலைப்பாடையும் வியந்து இமை கொட்டாது பார்க்காதவர்கள் எவருமேயில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அட்டிகை, நாலு சரத்தில் முகப்பு வைத்த பதக்கஞ்சங்கிலி, சடைவில்லை, ராக்கடி, மாணிக்கமும் மரகதமும் பதித்த வளையல்கள், தோளில் சேலைத் தலைப்பை குத்திக்கொள்ள பட்டாம்பூச்சி உருவத்தில் கற்கள் பதித்த ஊக்கு. ஒவ்வொன்றாக எடுத்து அவள் தனது உள்ளங்கையில் வைத்துக் கொண்டே நகைகளுக்கு பின்னால் இருக்கும் கதைகளை விரித்துக் காட்டுவாள். அக்கதைகள் அவள் நகை வைத்திருக்கும் அரங்கை விடப் பெரியவை. அவளது அப்பா, பாட்டன், பூட்டன் காலத்திற்கு அந்தக்கதைகள் இரவு பகலென நேரங்காலம் இல்லாமல் சென்று கொண்டே இருக்கும். பார்வையாளர்கள் கதைகளைக் கேட்கலாம். கண்களால் ஆபரணங்களை தரிசிக்கலாம். அதற்கு மேல் செல்ல ஒருவருக்கும் அனுமதியில்லை.
ஒவ்வொன்றையும் பரவசமான முகத்தோடு காட்டுகையில் மணிமேகலை ஆச்சியாக மாறி விடுவாள். அவள் இடத்தில் அமர்ந்தபடியே ஒவ்வொன்றாக அவற்றை அணிந்து பூரிப்புடன் இன்னொன்றை எடுப்பாள். என்றேனும் மனதில் நடந்து கொண்டிருப்பதை நிதர்சனத்தில் நிகழ்த்த வேண்டும் எனும் விருப்பம் அப்போது அவளை ஆட்கொண்டு விடும். ஆச்சி பார்க்கவில்லை என நினைத்து லேசாக தொட்டால் கூட போதும். அந்த தேவதை கண் முன்பே ராட்சசியாக மாறுவதைக் காணலாம்.
ஆச்சி நகைகள் விஷயத்தில் எப்போதும் கறாராகவே நடந்து கொண்டாள். ஊரார்களுக்கு, உறவினர்களுக்கு வீட்டில் இருப்பவர்களுக்கு என தனித்தனியாக சட்டம் இல்லை. சகலருக்கும் ஒரே மாதிரியான தடலாடி சட்டம்தான். அதை மீறுபவர்கள் எவராக இருந்தாலும் மணிமேகலைக்கு நடந்ததுதான் இம்மி பிசகாது நடக்கும்.
ஆச்சியின் இப்படியான மன அமைப்பின் காரணமாகவோ என்னவோ அவளுக்கு பிறந்த நான்குமே ஆண் வாரிசுகளாகவே இருந்தன. அவளது ஆபரணங்களுக்கான உரிமை அவளிலிருந்து உருவாகவில்லை. ஆச்சி பெண் குழந்தை பெறாமல் போனது காலத்தின் வரமா, சாபமா?
ஆச்சியின் நகைகளுக்கான கணக்கு வீட்டில் யாருக்கும் தெரியாது. ஆனால், வீட்டினர் அனைவருக்கும் அந்த ஆபரணங்கள் மீது தனிக்கண். அவை ஒன்றிரெண்டு கிலோவாகக் கூட இருக்கலாம். ஆச்சிக்கு கொம்பு முளைக்காத நேரங்களில் எடுத்துக் காட்டியது போக பதுக்கி வைத்திருக்கும் நகைகள் வேறு ஏதேனும் இருக்கிறதா என்று கூட யாருக்கும் தெரியாது.
சுசீலா உள்பட நான்கு மருமகள்களுக்கும் ஆச்சி நகைகளைக் காட்டுவாள். ஆனால், அவர்கள் அதற்கு உரிமை கோரி விட முடியாது. சுசீலாவின் கணவன் ஆச்சியின் இளைய மகன். மற்ற மூவரும் தனிக்குடித்தனம் போய்விட்டிருந்தனர். அவர்கள் எப்போதேனும் வீட்டிற்கு வந்தாலும் கூட ஆச்சியிடம் பெரிதாக எந்த ஒட்டுதலும் வைத்துக் கொள்வதில்லை.
ஆச்சியின் நகைப் பெட்டியிலிருந்த அந்த சிகப்புக் கல் வளையலை மணிமேகலை முன்பொருமுறை புகைப்படத்தில் பார்த்திருந்தாள். அதன் பிறகே அவளுக்கு அந்த வினோத ஆசை பிறந்தது. ஆபரணத்தை அணிந்தவாறு ஆச்சி பிருந்தாவை மடியில் வைத்திருக்கும் புகைப்படம் அது. அதன் நேர்த்தியான அழகில் மயங்கி அதுபோல தனக்கும் ஒன்று செய்ய வேண்டுமென்ற விருப்பத்தை சுசீலாவிடம் சொல்லியே விட்டாள். யாரும் சட்டென கவனிக்காத படத்தில் ஆச்சியின் கையில் கிடந்த அந்த காப்பு மணிமேகலையின் கண்களில் பட்டது எப்படியென வீட்டில் எல்லோருக்கும் மலைப்பாகத்தான் இருந்தது.
தனக்கும் அதுபோல் செய்து தர இயலுமா என்று கேட்க மாணிக்கம் ஆசாரியிடம் மணிமேகலை வந்திருந்தாள். எல்லா வகையிலும் விளக்கிய போதிலும் ஆசாரி, ஒரு புகைப்படம் இருந்தால் கூடுதல் விவரமாக இருக்கும் என்றார். இந்த விவரத்தை மணிமேகலை சுசீலாவிடம் சொன்னதும் ஆவுடை ஆச்சியின் கொம்பு நினைவுக்கு வந்து தயங்கினாள். பின்பு வேறு வழியின்றி சுசீலாவே ஆச்சி வீட்டுக்கு வரச்சொன்னாள்.
“அதனாலென்ன… எடுத்தா போச்சு…”
சுசீலாவும் மணிமேகலையின் குலப்பெருமை அருமைகளை எல்லாம் ஆச்சியிடம் சொல்லி ஆச்சியை சரிக்கட்டி வைத்துவிட்டுதான் மணிமேகலையை வீட்டுக்கு நேற்று முன்தினம் வரச் சொல்லியிருந்தனர். அவள் வந்து சேர்ந்த நேரத்துக்கு சற்று முன்தான் ஆச்சி வீட்டின் முன் அறையில் லைட்டைப் போட்டபடி சாமி படங்களுக்கு விளக்கேற்றி கும்பிட்டிருந்தாள். கணக்கு எப்படியோ தவறி விட்டது.
ஆச்சிக்கு விளக்கு வைத்த பிறகு எதனையும் வீட்டிலிருந்து வெளியே கொண்டு போகக்கூடாது. தாகத்தில் யாராவது சாகக்கிடந்தாலும் கூட நீர் தராத ரகம் அவள்.
மணிமேகலை முகம் வாடிப் போயிருந்தாலும் அவள் இங்கிதமானவளாக இருந்ததால் காட்டிக் கொள்ளாமல் சமாளித்துப் பேசிக் கொண்டிருந்தாள். சுசீலாவும் பிருந்தாவும் அவளைத் தாங்கித் தாங்கிப் பேசினார்கள். ஒரு சொல்லளவு சுற்றில் அகன்ற சொந்தக்காரி என்பதால் உரிமையோடு வந்த இடத்தில் இனி அவமானமாக வெளியேறிப் போனதுபோல இருக்க வேண்டாமென அவளும் சமாளித்து உரையாடினாள்.
“இனி நாளா இல்லை. நாளை விட்டு அதற்கடுத்த நாள் வருகிறேன். ஆச்சியிடம் சொல்லி அந்த காப்பை நான் படமெடுத்துக் கொள்ளலாம்… ஆச்சியின் தவறு ஒன்றுமில்லை… நான்தான் தாமதமாகி விட்டேன்… சரிதான் வீட்டின் ஐசுவரியம் முக்கியமானதுதானே… காலதாமதமாக இங்கு வந்து சேர்ந்தது என் தவறுதானே….”
மணிமேகலை பண்பட்டவளைப் போல உயர்ந்த நிலையில் உரையாடியதை அரங்கின் வெளிவாசலில் மரச்சாய்வு நாற்காலியில் மல்லாந்து கிடந்து கேட்டுக் கொண்டிருந்த ஆவுடை ஆச்சிக்கு மனம் கொஞ்சம் இரங்கியிருந்தது. அவ்வளவு சீக்கிரத்தில் இரங்குகிற மனமெல்லாம் இல்லாதவளிடம் முகத்தில் சாந்தம் கூடியது. அது சுசீலாவுக்கு புரிந்து போனதால் அந்த உணர்வோடே அவளிடம் பேசி மீண்டும் எல்லாவற்றையும் சரி செய்தாள்.
[3]
மணிமேகலை ரோசக்காரி. ஒரு சொல் பொறுக்கமாட்டாள். இத்தனைக்கு பிறகும் அவள் நகை பார்க்க வரமாட்டாள் என நம்பியிருந்தபோது இரண்டாவது முறையாக புதன்கிழமை காலையில் அரசாங்க வாகனத்தில் வந்திறங்கியது ஆச்சி வீட்டில் யாரும் எதிர்பார்க்காத திருப்புமுனை.
பிருந்தாவும் கூட அப்படித்தான் எண்ணியிருந்தாள். ஆச்சியின் வார்த்தைகளை விட மணிமேகலையை நோக்கிய அவளின் முகபாவனை ரொம்பவும் அவலட்சணமாக வெளிப்பட்டிருந்தது. ஆனால், ஒன்றும் பெரிதாக நடவாதது போல இந்தக் காலையில் மணிமேகலை வந்திறங்கிய விதம் வீட்டினரின் புருவங்களை உயர்த்த வைத்தன. சரி போனது போகட்டும் எதிலும் குறைவில்லாத மணிமேகலை வந்து பவித்திரமாக ஆச்சியின் காலில் விழுந்து வணங்கியது, அதீத புன்னகையோடு உறவாடியது என எல்லாம் சரியாக அமைந்த நாளாக அது இருந்தது.
வீட்டின் நடு மையத்தில் சுற்றுக் கட்டைத் தாண்டிய மேடை போன்ற ஓரிடத்தில் மணிமேகலை அமர்ந்திருந்தாள். சுசீலா சற்று தள்ளியும் பிருந்தா அந்த சுற்றுக்கட்டின் இடதுபக்கம் சமதளத்தில் ஒரு இருக்கையிலுமாக இருந்தார்கள். மணிமேகலையின் வாகன ஓட்டியும் உடன் வந்த ஒரு பணிப் பெண்ணும் வாசலுக்கு வெளியே காரினருகேதான் நின்றிருந்தார்கள்.
ஆச்சி அரங்குக்குள் சென்றாள். அரங்கிற்கு உள்ளே யாரும் அறிந்திருக்காத ரகசிய சுரங்கம் உண்டு. அது நீண்டு ஊருக்கு அப்பால் இருக்கும் முனியப்பன் கோயில் சுத்துக்கட்டு சுவரில் போய் முட்டும். தலைமுறை தலைமுறையாக தொடரும் ரகசியம் இது. ஆச்சிக்கு பிறகு முனியப்பன் கோயிலில் போய் முட்டும் பாதாள நடையை அவளைத் தவிர யார் அறிவார்? ஐப்பசி மாசம் அமாவாசை நள்ளிரவில் எல்லா ஆபரணங்களையும் அணிந்து, பட்டுக்கட்டி, சந்தனமும் ஜவ்வாதும் பூசி கையில் தீப்பந்தத்துடன் பாதாள சுரங்கம் வழியாக முனியப்பன் கோயில் சென்று, கோயில் திண்டில் சுருட்டுப் பிடித்தபடி மோனத்தில் ஆழ்ந்திருக்கும் ஆவுடை ஆச்சியை யார்தான் இவ்வூரில் பார்த்திருக்கிறார்கள்? குடும்பத்தினர் கூட அறிந்திராத ரகசியம் அது. ஆச்சிக்கு பின் அவரது குடும்பத்தில் யார் இந்த பாதாள சுரங்கத்தில் அமாவாசை நள்ளிரவில் வலம் வரப்போகிறார்கள்?
ஆச்சி அரங்கிற்குள் சென்றதும் எல்லோரும் ஆர்வமாய் வெளியில் அமர்ந்திருந்தார்கள். உள்ளே போய் கொஞ்ச நேரத்தில் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட நகைப்பெட்டியோடு வந்தமர்ந்தாள். ஆபரணங்களை உள்ளடக்கிய நகைப் பெட்டியே அவ்வளவு கலைநயம் கொண்டதாக இருந்தது.
எவருக்கும் ஆச்சியின் ஆபரணங்கள் மீது இருக்கும் ஈர்ப்பு அதன் கதைகளின் மீது கிடையாது. குடும்ப ஆட்களைக் கடந்து யாரும் அதனை நம்புவதில்லை. ஆச்சியின் முன்னோர்களுக்கு முனி கொடுத்த புதையல் என்று காத்துவாக்கில் ஊருக்குள் ஒரு கதையுண்டு. ஆவுடை ஆச்சி ஒரே செல்ல மகள் என்பதால் அத்தனையும் அவளுக்கு சீராக கிடைத்தது. ஆபரணங்களில் பதிக்கப்பட்ட கற்கள் எல்லாம் அபூர்வமான வகை. அதன் வடிவங்களும் வெளியில் யாரிடமுமில்லாத தனித்துவமானதாக ஏதோ மன்னர் காலத்தில் அரண்மனையில் ராணிகள் அணிந்த நகைகள் போல இருக்கிறது. எப்படியோ ஆச்சியின் காலத்திற்குப் பிறகு அரங்கு முழுமையாகத் திறக்கப்பட்டால் எல்லோருக்கும் பங்கிட்டுக் கொள்ள ஒரு பொக்கிஷம் இருப்பதாக குடும்பத்தின் காத்திருப்பிலும் ரசனையான பேச்சுக்கள் இருக்கின்றன.
ஆச்சியிடம் ஒரு பூதமிருப்பதாக பிருந்தா நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தால்தான் அவள் அரங்கு பற்றியோ இந்த நகைநட்டுகள் பற்றியோ சிரத்தைக் கொண்டிருக்கவில்லை. பிருந்தா மட்டுமில்லை குடும்பத்திலுள்ள பெண்கள் எல்லோரும் ஆச்சியினிடத்தில் ஒரு பூதமிருப்பதாக நம்பியிருந்தார்கள். அதனால் அரங்கு பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.
தந்தப் பெட்டியுடன் அமர்ந்திருந்த ஆச்சிக்கும் மணிமேகலைக்குமிடையே இடைவெளி நிறைய இருந்தது. ஆச்சி அந்த சிகப்பு முத்துக்கல் வளையலை தனியாகக் கொண்டு வருவாள் என எதிர்பார்த்த நிலையில் அவள் அந்த தந்தத்தாலான பெட்டியைத் தூக்கி வந்ததும் நடைமுறையில் முன்பு சாத்தியமில்லாததுதான். மணிமேகலை சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வணங்கிய தெய்வகடாட்ச மரியாதையில் ஆவுடை ஆச்சி சலனப்பட்டிருப்பாளோ என்றும் தோன்றியது. எப்படியானாலும் மணிமேகலையின் மனம் கோணாமலிருந்தால் நல்லதுதான் என சுசீலா ஆறுதல் பட்டுக் கொண்டே கவனித்தாள்.
ஆச்சியிடம் அரங்கில் இந்த தந்தப் பெட்டியைப் போல பித்தளை வேலைப்பாடுகளுடன் கூடிய பதினாறு ஆபரணப் பெட்டிகளிருப்பதாக சுசீலா வந்து பிருந்தாவின் காதில் கிசுகிசுத்துவிட்டு நகர்ந்து போனாள்.
ஆச்சி ஏதோ மந்திர உச்சாடனங்களை உரக்கச் சொல்லியபடியே ஆபரண பெட்டியைத் திறந்து சிவப்பு முத்துக்கல் பதித்த காப்பை பச்சை விரிப்பில் வைத்தாள். மனதில் மின்னிய பேராசையை மணிமேகலை சிரமத்துடன் மறைத்தாள்.
தாமதிக்காமல் ஒன்றிரெண்டு போட்டோக்கள் தனது போனில் எடுத்துக் கொண்டாள். ஆச்சியிடம் அனுமதி பெற்று காப்பை மெல்ல கைகளில் எடுத்துப் பார்த்துவிட்டு மறுநொடியே அப்படியே பச்சை விரிப்பில் வைத்துவிட்டாள். உத்தேசமாக அது ஐந்து பவுனுக்கு மேலாக இருக்கலாம்.
மாணிக்கம் ஆசாரி இதே போன்ற வடிவத்தில் மணிமேகலைக்கு ஒன்றோ இரண்டோ காப்புகளை செய்தாலும் கூட இந்த சிகப்பு முத்துக்கல் இதே வகைப்பாட்டில் அமையவே அமையாது. நகல் அசலுக்கு ஈடாகுமா என்ன? மணிமேகலை எழுந்து வணங்கி விடை பெற்றாள். அதே புன்னகை அதே பவ்யம். பிருந்தாவிற்கு வீட்டை விட்டு வெளியேறிய மணிமேகலையின் பின்னால் பூதமொன்று செல்வது போல் இருந்தது.
கோட்டை வீட்டின் முன்பிருந்து மணிமேகலையின் கார் புறப்பட்டுப் போன மூன்றாவது நாளில் ஆச்சியின் ஒப்பாரி சத்தம் கேட்டது. அது ஒரு மரண ஓலம் என்றே சொல்லவேண்டும். தலைமுறை தலைமுறையாக ரகசியப் பெட்டகமாக வைத்திருந்த கதைகளில் ஒன்றை இழந்திருந்தார்கள். அதுவொரு முக்கியமான கதையும் கூட.
அரங்கின் தந்தப் பெட்டியிலிருந்த சிகப்பு முத்துக்கல் பதிக்கப்பட்ட ஆவுடை ஆச்சியின் காப்புடன் அதில் பதிக்கப்பட்ட அரிய சிவப்பு பவளங்களுக்கு பின்னால் இருந்த கதைகளும் காணாமல் போயிருந்தன. திருட்டுக்கு இங்கு சாத்தியமே இல்லை . அப்படியானால் காப்பு எப்படி மாயமானது? ஆச்சி அரங்கில் அலசித் தேடாத இடமே இல்லை. கடைசியாக மணிமேகலை போன பிறகு ஆச்சிதான் காப்பை பெட்டியிலிட்டு மூடினாள். அவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை.
“எப்படி…காணாமல் போனது..?
ஒவ்வொருவரும் ஒவ்வொருவரையும் சந்தேகத்துடனும் பீதியுடனும் கேட்டுக் கொண்டார்கள். பிருந்தா ஆவுடை ஆச்சியைப் பார்த்தாள். முன்பு அவள் ஆச்சியில் குடிகொண்டிருப்பதாக நம்பிய பூதம் இப்போது ஆச்சியை கைவிட்டிருந்தது. மாலை கருத்தும் வீட்டில் ஒரு விளக்கையும் ஏற்றவில்லை. வீட்டின் ஒரு மூலையில் கண்ணை மூடி அமர்ந்தாள் ஆச்சி. தரையில் சோழிகளை எறிந்தாள். எல்லா சோழி முத்துகளும் அவளை பார்த்து சிரித்தன. சேலையில் முடிந்து வைத்திருந்த சுருட்டை எடுத்துப் பற்றவைத்தாள்.
ஊருக்கு அப்பால் அமாவாசை இருட்டில் ஒற்றையடிப்பாதையில் ஒரு இளம்பெண் கழுத்து நிறைய நகைகளுடன் நடந்து கொண்டிருந்தாள். அவளுக்கு முன்பாக சுருட்டு புகை முனியப்பன் கோயில் வழியை காட்டிக் கொண்டிருந்தது. இப்போது அவளால் மனதிற்கு வெளியே சத்தமாகச் சிரிக்க முடிந்தது.



