இணைய இதழ் 120சிறுகதைகள்

டென்னிஸ் பந்து – படிப்பகத்தான்

சிறுகதை | வாசகசாலை

வார இறுதியைக் கொண்டாடும் விதமாக போத்தல் விஸ்கி, கண்ணாடி குவளை, கொஞ்சமாக திராட்சை மற்றும் தர்பூசணியுடன் சோஃபாவில் அமர்ந்தாகி விட்டது. தனிமை என்பதால் இதனுடனான ஒரு திரைப்படம் தவிர அதற்குமேல் எதும் வேண்டியிருக்கவில்லை. அப்படியாக இன்று “லப்பர் பந்து”.

நல்ல ஒரு திரைப்படம் எனில் முதல் இரண்டு நாட்களுக்குள் திரையில் பார்த்துவிட வேண்டும். இல்லையெனில் விமர்சனம் என்ற பெயரில் நிகழும் பிரேத பரிசோதனைகள் முடிந்து ஓய்ந்த ஒரு அமைதியான நாளில் காண வேண்டும். இதற்கு இடைப்பட்ட நாட்கள் ஒருபோதும் பார்க்கத் தூண்டுவதில்லை, தூண்ட விடுவதில்லை இவர்கள். இன்று மிகவும் அமைதியான நாள்.

விளக்குகளை அணைத்துவிட்டு விஸ்கியுடன் திரைப்படத்தை ஆரம்பித்தேன். தியேட்டர் உணர்வுகளை சிறிதளவேணும் பெற விரும்பி ஒருபோதும் வெளிச்சம் விரும்புவதில்லை.

நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது, ட்ராக்டரில் வந்திறங்கிய யசோதை, பின் டிராக்டரின் கலப்பை முனையால் மைதானத்தை சுக்கு நூறாக்காத வரை. அந்த நொடிப்பொழுது காட்சியில் பற்கள் நறநறவென கூசத் துவங்கி, மூளை நரம்புகளில் ஒருவிதமான குளிர் பரவ, டிவியை அணைத்து விட்டேன். குடிகொண்டிருந்த சிறுவெளிச்சமும் நின்றுபோன அந்த கும்மிருட்டு அறையில் இப்போது “பூச்சை” அண்ணனும், சிவந்த மண் புழுதியும், கலவரங்களும் நிறைந்து கொண்டன.

பள்ளிக்கூட வாயிலைத் தாண்டிவிட்டால் ஆறும், கடலும், கிரிக்கெட்டும்தான் அன்றாடம் என்றிருந்த காலம். ஏன் பள்ளிக்கூடத்திலும் கூட. ஆரம்பப்பள்ளியில் நீலமும் வெள்ளையுமான பேட்டா செருப்புகள்தான் பேட். காகிதத்தை இறுக்கிக் கசக்கி உருட்டி, சணல் கயிறு சுற்றிவிட்டால் பந்து. சுற்றுச்சுவர் ஒட்டி வரிசையாக நின்றிருக்கும் தென்னை மரங்களில் ஸ்டம்புகளுக்கான கோடுகள் வரையப்பட்டிருக்கும். மதிய உணவு இடைவேளைகளில் தென்னை மரங்களை கைப்பற்றி ஆட்டம் ஆரம்பிப்பதற்குள் போர்க்களமாகி விடும்.

உயர் நிலைப்பள்ளியில் கைப்பந்து கம்பத்தில் ஸ்டம்ப் உயர கோடு வரையப்பட்டிருக்கும். சத்துணவுக் கூடத்திற்கு எரிபொருளாய் வரும் தென்னை மட்டைகள்தான் பேட். மதிய உணவு இடைவேளைகளிலும், மாலையிலும் ஸ்டம்பர் பந்து நாலாபுறமும் பறந்து கொண்டிருக்கும். அவ்வப்போது உடைபடும் ஜன்னல் கண்ணாடிகளை கணக்கில் கொண்ட கணித ஆசிரியை, “எல்லாத்தையும் தவுடுபொடி ஆக்கவால ஸ்கூலுக்கு வாரீங்க, தவுடுபொடி கூட்டம்” என்று திட்ட ஆரம்பித்து, அட நல்லாருக்குதே என்று “தவிடுபொடி பாய்ஸ்” என்று பெயர்சூட்டு விழா நடத்தி கிறிஸ்துமஸ்க்கு அதேபெயரில் கிரிக்கெட் ஜெர்சியும் அணிந்து கொண்டாடி முடிந்தது.

பள்ளிக்கு பின்புறமாக ஒரு கிரிக்கெட் மைதானம் இருந்தது. ஊருக்குள் அது ஒன்று மட்டுமே கிரிக்கெட் மைதானம். St. Antony Cricket Club, ACC. வருடத்திற்கு ஒருமுறை ஜூன் மாதத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடக்கும். ஏன் ஜூன் என்றால் “மீன்பிடி தடைக் காலம்”. ஜூன் பதினைந்து முதல் ஆகஸ்ட் ஒன்று வரையிலான நாற்பத்தைந்து நாட்கள் என்பதால்.

ஒவ்வொரு வருடமும் பள்ளி ஆரம்பிக்கும் போதே போட்டிகளுக்கான வேலைகளும் ஆரம்பித்துவிடும். ஊருக்கும் “முட்டம்” எனும் பக்கத்து ஊருக்கும் இடையில் இருக்கும் “சிவந்த மண்” எனும் சிற்றூரில் இருந்து லாரிகளில் மண் ஏற்றி வந்து கொட்டி, பெரும் கற்களிலான ரோலர்களை கொண்டு தன்ணீர் தெளிக்க தெளிக்க உருட்டு வேலைகள் நடக்கும். அதைப் பார்க்கவே வகுப்புகளை புறக்கணித்து பிரம்படிகள் வாங்கியதுண்டு. பின் போட்டிகள் நடக்கும் நாட்களில் பிரம்புகள் பிய்ந்து உதிரியாகும் அளவுக்கு புறக்கணிப்புகள் இருந்துவந்தது.

ஊருக்குள்ளையே ஹெர்குலன் பாய்ஸ், சன் பாய்ஸ், குலிகிலி பாய்ஸ், லவ்லி பாய்ஸ் என்று அத்தனை அணிகளும், சலேஷ், ராபின், நவின், போஸ், எம் பி, கமல், ஆன்றோ, சுரேஷ் என்று ஏகப்பட்ட நட்சத்திர வீரர்கள் இருப்பினும் என் கவனம் ஈர்த்தவர் ஃபயர் பாய்ஸ்-இன் “பூச்சை அண்ணன்” எனப்படும் ஆன்றோ அண்ணன்.

மின்னும் பூனைக்கண்கள், வெளிர்சந்தன நிறம், தங்கமும் செம்பும் சேர்ந்தாற் போன்ற பிடரிமுடிகள். பேட்டிங், பவுலிங் என்று பாரபட்சம் இல்லாமல் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இவை அனைத்தையும் விட அவரது வெற்றிக் களிப்புகள். விக்கெட் எடுத்து விட்டால் சிங்க கர்ஜனையோடு அவரது தொடையில் ஓங்கி ‘பளார்’ என்று ஒன்று வைப்பார். பேட்டிங்கில் 50, 100-களுக்கும் அதே பளார்கள்தான். இவரை பார்த்து தான் ஷிக்கர் தவான் பழகியிருக்கக் கூடும் எனும் அளவிற்கு. ஆடுகளத்தில்தான் ஆக்ரோஷமே தவிர வேறெங்கும் சத்தமாகப் பேசியோ, சிரித்தோ கூட பார்த்திர முடியாத ஒரு அமைதியான பூனை.

ACC-இல் விளையாட டென்னிஸ் பந்துக்கு முன்னேற வேண்டியிருந்தது. ஸ்டம்பருக்கே சில்லறை தேறவில்லை எனும்போது விக்கி பால் எட்டாக்கனியாகவே இருந்துவந்தது. முழிபிதுங்கும் பரீட்சைகள், விழிபிதுங்கும் ஒருதலைக்காதல் தோல்விகளுக்கிடையில் பத்தாவது பிரியாவிடைக்கு ஒருமனதாய் முடிவெடுத்தோம். “மாப்ள, இதுக்கபிறவு நம்ம சின்ன பயிக்க இல்ல, வெளாடுனா டென்னிஸ் பால்லதான் வெளாடுதோம்”.

“எல, இது என்னா கல்ல போல கெடக்கி. ஸ்டம்பருன்னா இன்னேரோ பறந்துருக்கூ” என மெதுவாக பத்தாவது விடுமுறையில் டென்னிஸ் பந்துகளை பறக்கவிட ஆரம்பித்திருந்தோம்.

பத்தாவதுக்கு மேல் ஊரில் பள்ளி இல்லை என்பதால் ஊரைச் சுற்றி நான்கைந்து கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த நான்கைந்து பள்ளிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சேர்ந்துவிட்டாலும் சனி, ஞாயிறு தவறாமல் கடற்கரையில் மட்டையும் பந்துமாக கூடிவிடும் “தவிடுபொடி பாய்ஸ்”.

இரண்டு லிட்டர் 7up ல் ஆரம்பித்து, 2 விக்கி பால், 2 குரு பால், 50, 100, 200 என படிப்படியாக பெட் மேட்ச்கள் முன்னேறி வந்த தருணத்தில் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு “உள்ளூர் சாம்பியன்” கிரிக்கெட் போட்டிகளுக்கான வேலைகள் ஆரம்பமாகின. வழக்கம் போல் இல்லாமல் இந்தமுறை “Under 17” க்கென தனியாக போட்டிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. 17 ஏனென்றால் 12-ஆம் வகுப்புவரை என்பதுதான் கணக்கு. இந்த கணக்குகளெல்லாம் இருக்கட்டும், முதல்முறை ACC மைதானத்தில், ஊர்மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் ஆடப்போகிறோம் என்பதே எங்களுக்கு ஆகப்பெரும் உற்சாகம். ஊர்முழுதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக “தவிடுபொடி பாய்ஸ்” நாங்கள் இருக்க, மைதானத்தை சுற்றியே, ACC வீரர்களின் செல்லப்பிள்ளைகளாய் “ஸ்டார் ப்ளேயர்ஸ்” இருந்தனர். எங்களை விட ஒரு வயது மூத்த 17 வயது வீரர்கள். பள்ளிக்கு செல்பவர்களும், கடலுக்கு செல்பவர்களுமாக ஒரு முரட்டு அணி.

இரண்டே நாட்கள், எட்டு அணிகள், பன்னிரண்டு ஓவர்கள், அனைத்தும் வாழ்வா சாவா ஆட்டங்கள் வேறு. அணிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெருவில் இருந்து உண்டான கூட்டங்களைப் போலிருக்க, நாங்கள் ஒவ்வொரு தெருவிலிருந்தும் ஒன்றிரண்டாக இருந்தோம். எங்கள் இலக்கு போலவே முதல் இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்திருந்தோம். போலவே “ஸ்டார் ப்ளேயர்ஸ்” ம் நுழைந்திருந்தார்கள்.

“மாப்ள, அவனுவ ஹோம் க்ரவுண்ட், சுத்தி சப்போட்டுலாம் பயங்கரமா இருக்கும். அப்பேர்பட்ட எடத்துலதான் நம்ம கெத்த காட்டனும். தவுடுபொடி பேரு நிக்கனும் இந்த க்ரவுண்டுல” என்ற சபத்துடன் ஆரம்பித்து, போலவே கோப்பையையும் கைப்பற்றினோம். மூன்று விக்கெட்டுகள் மற்றும் மூன்று நான்கு சிக்சர்களுடனான ஆட்ட நாயகன் விருதை நான் பெற்றுக்கொண்டேன் என்பதை விடவும், அந்த விருதை மிகவும் சிக்கனமான ஒரு புன்னகையுடன் பூச்சை அண்ணனிடம் இருந்து பெற்றுக்கொண்டதுதான் சிறப்பே.

அந்த ஒரு வெற்றி எங்களுக்கு அளித்த நம்பிக்கைக்கு அளவே இல்லை எனலாம். கிழக்கில் கன்னியாகுமரி துவங்கி மேற்கில் நீரோடி காலனி வரையில் எந்த ஊரில் கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் கலந்துகொள்ளும் அளவுக்கான உத்வேகம். ஒன்றிரண்டு வருடங்களில் நான்கைந்து கோப்பைகளுடன் “தவிடுபொடி பாய்ஸ்” கொடி பறந்து கொண்டிருந்தது. கூடவே பள்ளிப்படிப்பும் முடிவுக்கு வந்தது.

திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சென்னை என்று ஆளுக்கு ஒருபுறமாக கல்லூரிகளுக்கு பயணப்பட, நான் ஊருக்கு அருகிலேயே ஒரு கல்லூரியில் தஞ்சமடைந்திருந்தேன். அதுவரையில் வாரம் இரண்டு நாள் என்றிருந்த கிரிக்கெட், இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என்றானது. பின் கோடை விடுமுறையில் பதினொன்று தேறினால் மட்டுமே போட்டிகளுக்கு கலந்து கொள்வது என்றாகியிருந்தது.

இரண்டாம் வருட விடுமுறை முடிந்து ஒவ்வொருவராக பெட்டியை கிளப்பும் நேரத்தில் ஆரம்பித்தேன்.

“மாப்ள, இப்டியே இருந்தா வாச்சாது. அடுத்த லீவுல நம்ம நடத்துவோம் ஒரு மாவட்ட அளவு டூர்னமண்ட்”

“உனக்கு என்னா, ஊர்லயே இருக்க, இதுவும் சொல்லுவ, இதுக்கு மேலயும் சொல்லுவ”

“எல, லீவுக்கு வரதான போற, இதுக்குனு ஒன்ன லீவு போட்டுட்டா வரச் சொன்னோ”

“சரி உடு, வருசம் கிடக்கே. கிறிஸ்மஸ் லீவுல வரப்போ கன்பார்ம் பண்ணுவோம்”

“இப்டி பேசு. ஊர்ல உள்ள வேலையெல்லாம் நான் பாத்துகொள்ளுதேன். நீவ எல்லாம் ஒழுங்கா வந்து சேந்தா போதும்” என திரியை பற்றவைத்து அனுப்பினேன்.

மாதங்கள் கழிந்து நண்பர்கள் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ஊருக்கு வந்ததும்

“தவிடுபொடி பாய்ஸ் நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி. ஸ்பீக்கர்ல ஊர் மொத்தமும் சத்தமா எக்கோ அடிச்சுட்டே கேக்கும் போது எவ்ளோ சூப்பரா இருக்கும்” என்று வெறியேற்றியவாறே கையோடு அழைத்துக்கொண்டு ACC-இல் போய் நின்றேன்.

“என்னா, இங்க வருசாவருசம் நடத்துறது தெர்லியோ, உன்வளுக்கு என்னா புதுசா” என எழுந்த சலசலப்பை, “நமக்கு ஜூன்லதான நடத்துவோம், அவனுவ மேல நடத்திட்டு போட்டு” என்று ஒரே வாக்கியத்தில் முடித்து வைத்தார் பூச்சை அண்ணன்.

“நடத்துறதெல்லாம் சரி, எதாது பிரச்சனை கிச்சனை ஆச்சு, அதும்பெறவு ஒருத்தன் க்ரவுண்டு பக்கம் வரமுடியாது” என்ற சுரேஷ் அண்ணனின் அன்பு கட்டளைகளுடன் விடைபெற்றுக்கொண்டோம்.

நாட்களை எண்ணியவாறே ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என்று ஒவ்வொரு மாதங்களாக தவழ்ந்து ஏப்ரலை அடைந்திருக்கையில் அந்த பெருந்துயரமான அறிவிப்பு வெளியானது. ACC மைதானத்தில் அந்தோணியாருக்கென ஆலயம் ஒன்றை கட்டியெழுப்ப போவதாகவும், மே 1 சூசையப்பர் தினத்தில் அடிக்கல் நாட்டப்படும் என்றும். பதறியடித்துக்கொண்டு மைதானத்தை நோக்கி நடையைக் கட்ட, மைதானம் களேபரமாக காட்சியளித்தது.

“எந்தப் ****வன் உங்கட்ட கோயில் கேட்டான். வெளாட இருக்க ஒரு க்ரவுண்டையும் இல்லாம ஆக்குண்டு அப்டி என்ன கடவுளு வேண்டிகிடக்கி உன்வளுக்கு. எந்த கடவுள் ****வன் உங்கட்ட வந்து எனக்கு கோயில் கட்டுங்கனு கேட்டான்” – நாக்கை துருத்திக்கொண்டு, பற்களை கடித்துக்கொண்டு, பூச்சை அண்ணனா இது என்று நான் மட்டுமல்ல, “இந்த பயலுக்கு பேச தெரியுமோ என்னவோன்னு நெனச்சா, ஃபாதரையே இப்டி கிழிச்சுதான்” என்று ஊர்மொத்தமும் திகைப்பில்தான் இருந்தது.

அத்தனை ஆசையிலும் மண்ணள்ளிப் போட்டுவிட்டனர் என்றிருக்க “சிவந்த மண்” ணில் மைதானம் இருப்பதாகவும். அங்கிருக்கும் சிலர் என் நண்பர்கள்தான் எனவும் கூறினான் நண்பணொருவன்.

“வெளியூர்ல போய் எப்டில” என்று இழுக்க, “ஊர்லயே மொத்தம் அவனுவ ஒரு டீமுதான், நம்மட்ட எல்லாம் ஒன்னும் காட்டமாட்டானுவ. நான் பேசுதேன்” என்று முடித்தான் நண்பன்.

இரண்டு குட்டி யானைகளை பிடித்து ஒன்று கிழக்காகவும், ஒன்று மேற்காகவும் என கன்னியாகுமரி முதல் நீரோடி காலனி வரையில் இரவோடு இரவாக சுவரொட்டிகளை ஒட்டி, பந்தல் அமைத்து மைக் செட்டுகள், ஒலிக்குழாய்கள் என அமோகமாக ஆரம்பமானது போட்டிகள். அத்தனை வித உதவிகளையும் செய்து குடுத்த சிவந்த மண் நண்பர்கள் “ரெட் ராக்கர்ஸ்” என்ற பெயரில் ஒரு அணியாகவும் பதிவு செய்திருந்தனர்.

“முட்டம்” அணியினருடன் “தவிடுபொடி பாய்ஸ்” அரையிறுதிப் போட்டியில் ஜெயித்திருக்க, “சின்னவிளை” அணியினருடன் “ரெட் ராக்கர்ஸ்” அணி தோற்றிருந்தனர். அடுத்த நாள் “தவிடுபொடி – சின்னவிளை” இறுதிப்போட்டி என்றிருக்க, மாலை மயங்கும் நேரத்தில் தகவல் வந்து சேர்ந்தது.

அவரச அவசரமாக மைதானம் வந்து சேர்ந்தால் “பிட்ச்” முழுவதையும் கடப்பாறை, மம்மட்டி கொண்டு பிளந்து கூறுபோட்டுக் கொண்டிருந்தனர் ரெட் ராக்கர்ஸ் மற்றும் முட்டம் கூட்டணி.

“எங்க ஊர்ல வந்து மேட்ச் நடத்தி எங்கள எல்லாம் வெளிய உட்டுட்டு நீவ கப்பு எடுத்துண்டு போறத நாங்க பாத்துண்டுருக்கனுமோ”

“ஆளு சுத்துபோட்டுனுதான் க்ரவுண்ட கொத்துதானுவ, எடத்த காலி பண்ணுவோம்” காதில் கிசுகிசுத்தான் நோட்டமிட்ட நண்பனொருவன்.

அமைதியாக வெளியேறினோம்.

விடிந்தால் ஞாயிறு. இறுதிப்போட்டி.

“என்ன நடந்தாலும் சரி, நாளைக்கு ஃபைனல் ஆடுதோம். கப்ப தூக்குதோம்”

“எல க்ரவுண்டே இல்லாம”

வீட்டிற்கு பின்புறமாக ஒரு புது வீட்டிற்கு அஸ்திவாரம் தோண்டும் வேலை நடந்தது கொண்டிருந்தது நினைவுக்கு வர, அங்கு நின்றுகொண்டிருந்த JCB-இல் பதிக்கப்பட்டிருந்த எண்ணிற்கு அழைத்து பேசிவிட்டு, ஊரின் வடக்குப்புற எல்லைக்கு நகர்ந்தோம்.

இன்னும் மக்கள் குடியேறாத ஊரின் எல்லை அது. நிலத்திற்கு சொந்தக்காரர்கள் யார் என்ற கேள்வியோ எண்ணமோ சிறிதும் இல்லை.

தவிர, “நெலத்த இப்ப என்ன கொள்ளையா அடிச்ச போறோம். மேல இருக்க செடிகொடிவள வெட்டி, நிரப்பாக்கி அழகாதான ஆக்கப் போறோம். ஒருத்தரும் ஒன்னும் சொல்லமாட்டானுவ. மீறி எதாவது வந்தா நான் பாத்துகுறேன்” எனும் என் சமாதானங்கள் வேறு.

இரவு 9 மணிக்கு JCB உடன் வந்திறங்கியவருக்கு உணவளித்து, ஊற்றிக் கொடுத்து இரவு இரண்டு மணிவரை போராடித் தளர அதிகாலையில் “டவர் க்ரவுண்ட்” எனப்படும் புதிய மைதானம் ஊரின் எல்லையில் உருவாகி இருந்தது. மைதானத்தின் மூலையில் நின்றிருந்த செல்ஃபோன் டவரே மைதானத்தின் அடையாளமாகவும் ஆகியிருந்தது.

மைதானத்திலேயே தூங்கி எழுந்து, ஆறேழு மணிக்கு பந்தல் அமைத்து, மைக் செட்டுகள் கட்டி, தண்ணீர் தெளித்து எல்லைக்கோடுகள் வரைந்து, வீட்டிற்கு சென்று குளித்து, உணவருந்தி வந்து விளையாடி தோற்று இரண்டாவது பரிசை மனமுவந்து ஏற்றுக்கொண்டோம்.

“விடு மாப்ள, அடுத்த வருசம் பாத்துப்போம்” என்றதும் மேலும் கீழுமாக பார்த்தனர் என்னை.

“என்ன லுக்கு, ACC-ம் இல்ல சிவந்த மண்ணும் இல்ல. இனி நம்ம க்ரவுண்டு இது. எப்ப வேணா டூர்ணமண்ட் நடத்துவோ. ஒரு பய கேக்க முடியாது.

பற்றவைத்தாற் போலவே அடுத்தவருடம் கோடை விடுமுறைக்கு ஆரம்பித்துவிட்டோம்.

“தவிடுபொடி பாய்ஸ் நடத்தும் மாவட்ட அளவிலான இரண்டாமாண்டு கிரிக்கெட் திருவிழா”. இம்முறை கிரிக்கெட் திருவிழாவுடன் ஊர் திருவிழாவும் இணைந்து கொண்டது. பத்தாவது நாள் பெரும் திருவிழாவிற்கு இறுதிப்போட்டி என அட்டவணை வகுத்திருந்தோம்.

“எதோ ஆத்திரத்துல நடந்துபோச்சு விடுங்கப்பா” என்று ரெட் ராக்கர்ஸ், முட்டம் அணிகளும் ஒருபுறம் விழாவில் இணைந்திருக்க, மற்றொருபுறம் ஸ்டார் ப்ளேயர்ஸ் முறுக்கிக் கொண்டு நின்றது பழி தீர்க்க. இம்முறை இரண்டு மூன்று மூத்த ACC வீரர்களோடு அபார வலிமையில் களமிறங்குவதாக தகவல் கிடைத்திருந்தது. போலவே சுரேஷ் அண்ணனும், பூச்சை அண்ணனும் ஸ்டார் ப்ளேயர்ஸில் இடம்பெற்றிருந்தனர்.

மட்டற்ற மகிழ்ச்சி. எவ்வளவுதான் நமக்கு முன்னோடியாக, நட்சத்திரமாக, குருவாக இருந்தாலும், போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கையில் அவர்களை வீழ்த்திவிடத்தான் மனம் துடிக்கும். முடியாத பட்சத்தில்தான் சிரித்தவாறே, “உங்களிடம் தோற்பது பெருமையே” வசனங்கள். நான் முடிவெடுத்துக் கொண்டேன், எதிர்ப்படும் வாய்ப்பு அமைந்தால் எப்படியேனும் அவர் விக்கெட்டை வீழ்த்த வேண்டும், அவர் ஓவரில் ஒன்றிரண்டு சிக்சர்கள் விளாச வேண்டும். கோப்பையை வெல்ல வேண்டும்.

எல்லாம் நல்லபடியாக ஆரம்பித்திருக்க திருவிழாவின் ஒன்பதாவது நாளில் தவிடுபொடி அரையிறுதிப் போட்டியில் சின்னவிளை அணியை வென்றிருந்தது. ஸ்டார் ப்ளேயர்ஸ் அணி குளச்சல் அணியிடம் தோல்வியடைந்திருந்தது.

விரக்தியில் மைதானத்தின் அருகிலேயே அமர்ந்து குடித்தவாறே சிகரெட்டை பற்றவைத்து இழுத்தார் பூச்சை அண்ணன்.

“இவர் எப்பல இப்டி ஆனாரு?”

“ACC க்ரவுண்டு கோவில் ஆனதுல இருந்தே இப்டித்தான். அவர் பாட்டுக்கு காலையில கடலுக்கு போனோமா, சாயங்காலம் விளையாடினோமான்னு இருந்திருப்பாரு. ஹீரோ மாதிரி”

“போதும் போதும். நிறுத்து உன் பூச்சை புராணத்த” நண்பன் எனக்கு கடிவாளமிட்டான்.

அவரை கண்டும் காணாதவாறு கடக்க முயற்சிக்கையில், “வசமா எங்கள குளச்சல் கூட போட்டுட்டோமே, நீவ எங்க கூட மோதி ஜெயிச்ச வேண்டியதுதான?” என்றார் புகைய ஊதியவாறே பூச்சை அண்ணன்.

“அப்டிலாம் இல்லண்ணே, நம்ம ரண்டு டீமும் ஃபைனல் வரட்டுன்னுதான் இப்டி போட்டது” என விளக்கம் குடுக்க முயற்சிக்கும் போதே குறுக்கிட்ட சுரேஷ் அண்ணன் “ஏய், அவன் ஏதோ கேக்குதான்னு நீ விளக்கம் வேற, கெளம்பு கெளம்பு” என முடித்து விட்டார்.

மறுநாள் ஞாயிறு, பத்தாம் திருவிழா. பத்து மணியளவில் இறுதிப்போட்டி, இரவு இன்னிசை கச்சேரி என்று காலையில் கண்முழித்தல் முதலே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆப்பம், மட்டன் என்று முழுங்கிவிட்டு எட்டு மணிக்கெல்லாம் மைதானத்தை வந்தடைந்தால். உழுதுவிட்ட வறண்ட நிலம்போல் சுக்குநூறாகக் கிடந்தது பிட்ச்.

“எந்த *****வன் பாத்த வேல இது?”

“மாப்ள, இப்ப அதுக்குலாம் நேரமில்ல. க்ரவுண்டுக்கு என்ன பண்ண?” என மறித்தான் நண்பன்.

தூரத்தில் நின்றுகொண்டிருந்த “ரெட் ராக்கர்ஸ்” சிபு மெல்ல நடந்து அருகில் வந்தான்.

“மாப்ள, ஆளு யாருன்னுலாம் பெறவு பாப்போம். நீங்க அங்க வந்து ஃபைனல நடத்தி முடிங்க மொத” என்றவாறே பதிலுக்கு காத்திருக்காமல் அங்கும் இங்குமாக நின்றிருந்த சிறுவர்களை அழைத்து, “நீ அத தூக்கு, நீங்க ரண்டு பேரும் இத எடுங்க” என்று புறப்பட தயாராகிக் கொண்டிருந்தான்.

இம்முறையும் இறுதிப்போட்டியில் வெற்றிகரமாக குளச்சல் அணியிடம் தோற்றாகி விட்டது. இம்முறை நண்பர்களுக்கு கூறுவதற்கு என்னிடம் எந்தவொரு பதிலும் இல்லை. ஏமாற்றங்களும், ஆத்திரங்களும் மட்டுமே நிறைந்திருந்தது.

இரவு கச்சேரியில் ஆண் பெண் என பேதமில்லாது ஊர் முழுதும் இசையிலும் நடனத்திலும் மூழ்கியிருக்க, நான் கைகளை இறுக்க கட்டியவாறே பற்களை இறுக்கிக்கொண்டு நின்றிருந்தேன்.

“எல, வா. ரண்டு பீர போட்டு நாலு டான்ஸ போட்டா க்ளியர் ஆகிடும் இதுலாம். வா”

“நீவ போறீங்கனா போயிட்டு வா, என்னைய தொந்தரவு பண்ணாத” என்றேன் பற்களை கறும்பிக் கொண்டே.

சென்றவர்களில் ஒருவன் சற்று நேரத்தில், நடப்பதும் ஓடுவதுமாக வேகமாக வந்தான்.

“மாப்ள க்ரவுண்ட கொத்துனது பூச்சையும், சுரேஷும்தானாம், எல்லாம் ஸ்டார் ப்ளேயர்ஸ் வேலை”

“அவரா, எப்டி சொல்லுத” என்பதுபோல் அவன் பக்கம் ஒரு பார்வையைத் திருப்ப, “அங்க குடிச்சுத இடத்துலதான் எல்லாவனும் இருக்கானுவ. பேச்சு நடக்கி”

விறுவிறுவென நகரத் துவங்கி இடத்தை நெருங்கியபோது நண்பனொருவன் அவர்களிடம் ஏற்கனவே வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தான்.

“என்ன ***க்கு பேச்சு” என வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நண்பனின் தோள்பட்டையில் இடது கையை அழுத்தி குதித்து முன்னேற எதிரில் பூச்சையின் முகம். வலது கை முட்டியை அதே வேகத்தில் முகத்தில் இறக்கினேன். நெற்றியில் இறங்கிய அடி, இமையை கிழித்து, கண்களை பதம் பார்த்து கன்னத்தில் இறங்கியது. இமையிலிருந்து பீறிட்டு பூனையின் முகத்தை நனைத்திருந்த ரத்தம் என் மோதிரக் கையையும் சற்று சூடாக்கியிருந்தது. பூனை சுருண்டு விழவும், போர் மூண்டது. கச்சேரி அந்த நிமிடமே நிறுத்தப்பட்டு, பங்குப் பேரவை, போலீசார் என பெருந்தலையீடுகளுக்குப்பிறகு ஆளுக்கொரு பக்கமாக இழுத்துக் கொண்டு செல்லப்பட்டனர்.

அன்றோடு முடிந்த கிரிக்கெட். தினமும் சென்றுவரும் தூரம்தான் என்றாலும் கல்லூரி விடுதியிலே சேர்ந்து விட்டேன். விடுமுறைகளுக்கு கூட ஊர்வரத்துகளை குறைத்திருந்தேன். கல்லூரி முடிந்ததும் சென்னை, துபாய் என்று குடிபெயர்ந்து நான்கைந்து வருடங்கள் கழித்து ஒரு கிறிஸ்துமஸ் திருவிழாவிற்கு ஊர் வந்திறங்கினேன். வீடு, குடும்பம், நண்பர்கள் என்று கலகலப்பாக டிசம்பர் 25-ஐ நோக்கி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த பொழுது “டவர் க்ரவுண்ட்”- இல் டூர்ணமண்ட் ஏதோ நடந்து கொண்டிருப்பதாக கிசுகிசுத்தான் நண்பனொருவன்.

விளையாடுவதற்குத்தான் வழியில்லை. பார்த்துவிட்டாவது வருவோம் என்று மைதானத்தின் எல்லைக் கோட்டில் வந்து வண்டியை நிறுத்தி போட்டியை ரசிக்க, அடுத்த கிசுகிசுப்பு, “மாப்ள, பட்டுன்னு திரும்பாத. லெஃப்ட்ல பூச்சை”. நொடிப் பொழுதில் உடல் சிலிர்த்து அடங்கியது. மீண்டும் ஒரு போர்க்களத்திற்கு தயாராக இருக்கவில்லை நான். ரத்தத்தில் ஊறிக்கிடந்த பூனை முகம்தான் நினைவடுக்கில் இருந்து வெளிவந்தது எனக்கு. ஒளிந்து ஓடவும் மனமில்லை. இத்தனை யோசனைகளுக்குள் நிச்சயம் ஒருமுறையேனும் அவர் என்னை பார்த்திருப்பார். அதற்குமேலும் குழம்ப மனமில்லாதவனாய் இடதுபக்கம் மெல்லமாய் திரும்பினேன். இப்போது எனக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்திருந்தது.

முன்பைவிட இன்னும் வெள்ளையாக, இயேசுநாதர் போல் தோள்பட்டை வரையில் பொன்னிற கூந்தலுடன் என்னையே பார்த்து சிரித்தபடி வீல்சேரில் அமர்ந்திருந்தார். அவரது முதுகை ஒட்டியே ஆட்டோ ஒன்று நின்றிருந்தது. என்னை நோக்கி கையை லேசாக அசைத்தார்.

மெல்ல நடந்து அருகில் சென்று அவரது கையை பற்றினேன். அவரும் பற்றிக் கொண்டார், உடும்புப் பிடி. நெற்றியில் ஆரம்பித்த தழும்பு இமை தாண்டி, கன்னம் வரையிலும் பாய்ந்திருந்தது.

“ரண்டு மூனு வருசம் முன்ன முழுபோதையில பைக்க போஸ்டுல விட்டுட்டேன். இடுப்பு கீழ எல்லாம் போச்சு” என்றார் சிரித்தவாறே.

இதற்கு என்ன பதில் கூற வேண்டும், என்ன மாதிரியான முக பாவனையை எதிரில் இருப்பவருக்கு உதிர்க்க வேண்டும் என்பதில் என்னை விட மோசமானவனாக நீங்கள் யாரையும் பார்க்க வாய்ப்பில்லை. அவர் அதை கண்டுகொள்வதாயும் இல்லை.

“நல்லாருக்கியா” என ஆரம்பித்து வெளி நாடு, வேலை, வீடு, கல்யாணம் எனத் தொடர்ந்த பேச்சு, ஒருபோதும் பத்தாம் நாள் திருவிழாவை தொட்டுவிடாதபடி கவனமாக பயணப்பட்டு இறுதியாக கிரிக்கெட்டில் வந்தடைந்து நிற்கையில், மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போட்டிகளும் முடிந்திருந்தது. வருடத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு இப்படி ஏதாவது போட்டிகளை காண ஆட்டோவில் வருவதாகவும், மற்ற நாட்களெல்லாம் வீட்டில்தான் சிறையுண்டிருப்பதாகவும் கூறியவர், இறுதியாக மைதானத்தை விட்டு கிளம்பும் முன் அருகில் அமரச் சொல்லி காதுகளைக் கேட்டார் ரகசியமாக .

“கேக்குறேன்னு தப்பா நினச்சுக்காத, காசு எதாது கிடச்சுமா பிள்ள?” எனக் கேட்டார்.

எனக்கு என்னவோ போல் இருந்தது. பதில் ஏதும் பேசாமல் இருந்த இரண்டு இரண்டாயிரம் ருபாய் நோட்டுகளை மடித்து அவரது பாக்கெட்டில் வைத்து, ஆட்டோவில் ஏற்றிவிட்டு விடைபெற்றேன்.

ஒன்றிரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் துபாய் வந்துவிட பின்னால் செய்தியும் வந்து சேர்ந்தது. பூச்சை அண்ணன் தற்கொலை செய்து கொண்டார் என்று.

இரண்டுமுறை தூக்குக்கயிறுக்கு முயன்று தோற்றவர் இம்முறை விலை உயர்ந்த ஹேர் டானிக்குகள் நான்கு வாங்கி முழுதையும் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக செய்தி.

frompadippaham@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button