இணைய இதழ் 121சிறுகதைகள்

ராஜராஜ சோழன் – ஆத்மார்த்தி

சித்தரஞ்சன் மெல்ல நடந்தான். இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது. மதுரை முன்பிருந்தாற் போல் இப்போது இல்லை. நிறைய மாறிவிட்டது எங்கு பார்த்தாலும் பாலங்கள். எல்லாப் பெரிய கட்டிடங்களையும் ஏற்கனவே இடித்துக் கட்டி விட்டார்கள், அல்லது தற்போது கட்டட வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஞாபகத்துக்கும் நிஜத்துக்கும் இடை வித்தியாசங்களை பிரதியிட்டபடி மனசு அல்லாடியது. ஞாபகத்தில் இருக்கும் மதுரையில் உயிரோடு இருந்த நிறையப் பேர் நிஜத்தில் இல்லை. முன்சு வாத்தியார்- பெயிண்டர் கோபி- பூக்கடை கேசவன்- நாடக மன்றம் மனோகரன் என கடந்த வருடங்களில்  நண்பர்கள் நான்கைந்து பேர் இறந்து விட்டார்கள். நசீர் போய் பதினெட்டு வருஷங்கள் முடிந்து விட்டது.

எங்கோ வெகு தூரம் போய் வேலை திருமணம் வாழ்க்கை என எல்லாவற்றையும் அமைத்துக் கொண்டு வாழ்க்கையை முழுவதுமாக திசை திருப்பி விட்ட பிற்பாடும் சொந்த ஊர் என்னும் வேரை முழுவதுமாக மனசிலிருந்து அகற்றிப் போட முடியவில்லை. மறந்தாயிற்று என்று மனம் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறது. எதை மறக்க வேண்டுமோ அதை எங்கோ அடியில் போட்டு மேலே வேண்டாத பலவற்றை கொட்டி மூடி வைத்து விடுகிறது. அங்கே எதுவுமே இல்லை என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்கிறது. மறக்க வேண்டிய எல்லாவற்றையும் மறந்தாற் போல் பாவனை காட்டுகிறது. பின்னொரு நாளில் அதே மனசு வேறு எதையோ தேடுகிற சாக்கில் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறது. மிகச் சரியாக வேண்டாத பலவற்றின் அடியில் புதைந்து கிடக்கிற அந்தப் பலான வஸ்துவை தேடிப் பிடித்து கையில் எடுத்து, ‘அட நீயா, உன்னை மறந்தே போயிட்டேனே, நீ இங்கேயா இருக்க?’ என்று நடிக்கிறது. சும்மா சொல்வதற்கில்லை. கரகோஷங்களை பெறுகிற தகுதிமிக்க நடிப்பு. மனம் என்னும் ஓரங்க நாடகத்தில் தானே வென்று தன்னைக் கொன்று, மாறி மாறி உருக்கொண்டும் அழிந்தும் பலவேசம் பூணுகிற ஞாபகம் என்பது ஒரு நன்றிகெட்ட ஜென்மம்.

‘சும்மா இரேண்டா!’ சித்தரஞ்சன் தன்னைத்தானே அதட்டிக் கொண்டான். நசீர் அடிக்கடி சொல்வான் இறைவன் சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரனாக விளங்குகிறான் என்று. சித்தரஞ்சனுக்குப் புன்னகை வந்தது. அன்பான நசீர். நியாயமான நசீர். எந்தக் காலத்திலும் மனசாட்சிக்கு விரோதமாக சிறு துரும்பைக் கூட நகர்த்திப் போடாத நசீர். போன நூற்றாண்டின் மனிதன் அல்லது ஏதோ ஒரு எதிர்காலத்திலிருந்து உட்புறம் பயணிக்கையில் மெஷின் கோளாறு ஆகி இந்த காலத்துக்குள் புகுந்து விட்டவன். என்னை விட நாராயணன் சார் வயசிலும் சீனியர். அனுபவத்திலும் அதிகமானவர். இன்னும் சில மாதங்களே பணிக்காலம் இருக்கிறது என்பதை காரணம் காட்டி அவருக்கு பதிலாக எனக்கு பணி உயர்வு தருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. வேண்டுமானால் அவர் ஓய்வு பெற்ற மறுதினம் நான் இந்த பதவியை ஏற்கிறேன். அதுவரை அவரை சீனியர் என்றும் என்னை ட்ரெய்னி என்றும் பணித்தால் நல்லது என்று தலைமை அலுவலகத்திற்கு மெயில் அனுப்பிய நசீர். சொன்ன மாதிரியே நடந்து காண்பித்த நசீர்.

‘நீ ஒரு அதிசயம்டா’ என்று சித்தரஞ்சன் வியந்ததற்கு, ‘அப்படி இல்ல மச்சி. குழந்தைகளைக் கொஞ்சுறாப்லதான் முதுமையையும் ஆராதிக்கணும். பூக்கிற பூ வாடலாம்டா. உதிரலாம்டா. அதெல்லாம் இயற்கை. அந்தப் பூவுக்கு விதித்த வடிவ மாற்றங்கள்தான். ஆனால், ஒரு பூ நொறுங்க கூடாது. மனுஷன் ரொம்ப கேவலமானவன் மச்சி. ஒரு நாள் விடிஞ்சதிலிருந்து ராத்திரி கண் மூடுற வரைக்கும் எத்தனை பேர ஒடச்சு நொறுக்கிக்கிட்டே இருக்கான்? நம்மால் அது ஆகாது நண்பா’ என்றான்.

அந்த ஹோட்டல் வாசலில் சித்தரஞ்சன் நிற்க வேண்டி வந்தது. அவனுக்கு முன்னால் நடந்து கொண்டிருந்தவர் திடீரென்று நின்றார். ஆகவே அவனும் நின்றான். அந்த மனிதர் ஹோட்டல் வாசலில் இருந்த சின்னூண்டு காங்கிரீட் சதுரத்தின் கம்பி கேட்டினுள் தென்பட்ட பிள்ளையாரைப் பார்த்துக் கும்பிட்டவாறே தன் கன்னத்தில் ரெண்டொரு முறை தப்புப் போட்டுக் கொண்டார். நின்றவாக்கில் லேசாகக் குனிந்து நிமிர்ந்து தோப்புக்கரணம் போடுவது போல் பாவனை செய்து  மீண்டும் தன் செருப்புகளை அணிந்து கொண்டார். முன்னே நடக்கலானார். சித்தரஞ்சனுக்குச் சிரிப்பு வந்தது. மிகச்சரியான ஒரு புள்ளியில் அவன் மட்டும் நின்றிருக்காவிட்டால், இந்நேரத்துக்கு அந்த மனிதனின் பின் தலையில் சித்தரஞ்சன் முகத்தால் முட்டி இருப்பான். நெற்றி புடைத்திருக்கக் கூடும் அல்லது சில்லு மூக்கு உடைந்தும் இருக்கலாம். அப்படியெல்லாம் நடந்திருந்தால் அந்த மனிதரை அவ்வளவு எளிதாக அந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்ல விட்டிருப்பானா என்ன? இதே மதுரையின் வேறொரு காலத்தில் அவன் பார்க்காத தகராறா போடாத சண்டைகளா? நின்றால் நடந்தால் உறங்கினால் எழுந்தால் எத்தனை சண்டைகள்?

சித்தரஞ்சனுக்கு ஒரு காபி குடிக்கலாம் என்று தோன்றவே அந்த மனிதரின் முதுகில் இருந்து கண்களை எடுத்து வாசற் பிள்ளையாரைத் தாண்டி அதே ஓட்டலுக்குள் நுழைந்தான். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்ததும் இடதுபுறத்தில் மிகச் சரியான இடத்தில் அமைந்திருந்தது அந்த ஓட்டல். இதற்கு முன் பலமுறை அவன் அங்கு வந்திருக்கிறான். 75 ஆண்டுகளாக அந்த ஓட்டல் மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிப் போயிருந்தது. சென்ற முறை வந்ததற்கும் தற்கணத்துக்கும் இடையில் உள் கட்டமைப்பில் பெரிதாக எந்த மாறுதலையும் காணோம். என்ன ஒன்று வழக்கமாக சாயங்காலம் நான்கு மணிக்கு ஜே ஜே என்று கூட்டம் களை கட்டும். உள்ளூர் மனிதர்களைக் காட்டிலும் வேறு பல ஊர்களில் இருந்து மதுரைக்கு வந்து செல்லும் பலருக்கும் அந்த ஓட்டல் தான் அட்சய பாத்திரம். காப்பி சொஜ்ஜி பஜ்ஜி என ரசித்து ருசித்து சாப்பிடுவதற்கு என்றே பலரும் வந்து செல்லும் இடம். இன்றைக்கு என்னவோ அவ்வளவாக கூட்டம் இல்லை. வாலிபக் காலத்தில் நல்ல உடல் கட்டைப் பேணிப் போற்றிய ஒருவன் முதுமையின் கிடுக்கிப் பிடியில் ஆட்பட்டுத் தளர்வதைப் போல் அந்த ஓட்டலின் தோற்றம் மங்கியிருந்தது. அங்கும் இங்குமாய் அந்த நேரத்தில் நாலைந்து பேர்தான் உள்ளே இருந்தார்கள்.

நெற்றியில் பெரிய தழும்போடு ஒரு பருத்த மனிதர் கை கழுவச் சென்றார். சப்ளையர்களில் பழையவர்கள் யாரையும் காணோம். புதிய சர்வர் ஒருவர் வந்து இவனிடம் ஆர்டர் எடுத்தார். அழுதுவழியும் அந்தக் குரலை சித்தரஞ்சன் பெரிதும் வெறுத்தான். ‘சீனி கம்மியா ஒரு காஃபி’ என்றான். அந்த சப்ளையர் அசுவாரசியமாக ‘வேற?’ என்றார். இவன் ‘போதும்’ என்ற பின்னும் மனம் தளராதவராய், ‘பஜ்ஜி, வடை, வெள்ளையப்பம், கேசரி எதாச்சும் வேணுமா?’ என்றான். இவன் மீண்டும் ‘எதும் வேணாம், ஒரே ஒரு காஃபி சர்க்கரை கம்மியா’ என்றதை ரசிக்காமல் இருந்த இடத்திலிருந்தே ‘ஒரு காப்பி… வட்டால.. ஆஃப் சுகர்’ என்றவாறே உட்பக்கம் நடந்தான்.

சித்தரஞ்சனுக்குப் பின்னால் இரண்டு பேர் வந்து அமர்ந்தார்கள். முன்பே அப்படி இருவர் அமர்ந்திருந்தால் அவன் இன்னும் தள்ளினாற் போல் சென்று இருப்பான். இப்போது காபி ஆர்டர் செய்துவிட்டு வேறு இடத்துக்குச் சென்று அமர்ந்தால் அத்தனை நளினமாக இருக்காது என்று அமைதி காத்தான். பின்னால் வந்து அமர்ந்த இருவரில் அந்தப் பெண் எதையோ சொல்ல, சற்றே சன்னமான குரலில் ஆடவன், ‘என்னை நம்பு, நம்ம காதலுக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். தயவு செஞ்சு என்னை சந்தேகப்படாதே. உன்னை தவிர எனக்கு யாருமே இந்த உலகத்தில் முக்கியமில்லை’ என்று சொல்லச் சொல்ல, அவள் இந்த உலகத்தின் ஒன்றாம் தர நகைச்சுவை கேட்டாற் போல் சத்தமிட்டுச் சிரித்தாள். ‘ஏன் சிரிக்கிற? சொல்லு… ஏன் சிரிக்கிற? என்னை நம்பலையா? இந்த பாரு ராணீ.. ஒரு கத்தி எடுத்து என்னக் குத்து. சந்தோஷமா சாவுறேன். சந்தேகப்படாதே. ப்ளீஸ்’ என்றான்.

சித்தரஞ்சனுக்கு எரிச்சல் மண்டிக் கொண்டு வந்தது. எழுந்து சென்று அந்தப் பயலின் சட்டையைப் பிடித்து ஓங்கி ஒரு அறை, கன்னம் பழுத்தாற் போல் அறைய வேண்டும் என்று ஆத்திரமாய் வந்தது. தன்னை அடக்கி கொண்டான். எல்லாம் கொஞ்ச நாளைக்குதான் தம்பி. அப்புறம் இத்தனை டயலாக்கும் மாறி போகும். ஏன்டா இப்படி எல்லாம் பேசினோம்? என்று உன்னையே நீ நொந்து கொள்வாய். நீ என்று இல்லை. இவள் என்று இல்லை. யாராக இருந்தாலும் மறுபடியும் சொல்லுகிறேன் யாராக இருந்தாலும் நீ பேசிய வசனங்களுக்கு தகுதியான ஆள் இந்த உலகத்தில் இல்லவே இல்லை. அப்படி இருப்பதாக எண்ணினால் அது வெறும் நடிப்பு. எதுவும் சில காலம். இதுவும் அப்படித்தான் நீருக்குள் ஊறிக் கொண்டிருக்கும்போது, மனிதன் மிருக குணத்தைதான் பிரதிபலிப்பான். தான் மனிதன் என்பதை அவனுக்கு மறந்து போகும். தண்ணீரில் மிதந்து கொண்டே தூங்குவதற்கு ஆசைப்படுவான். பிறகு கனா காண்பதற்கு ஆசைப்படுவான். அம்மாவின் வயிற்றில் நீர்மத்தின் நடுவே ஊறிக் கிடந்தபடி இருநூற்றுச் சில்லறை நாட்களைக் கழித்தவன்தானே? மீண்டும் சூலுக்குத் திரும்புவது எல்லோருடைய காலகால ஆசை.

நீருக்குள் இருந்தது போதும். இதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியாது என்கிற நிலை வரும் பொழுது மனுஷன் எழுந்து கொள்கிறான் விரைவாகக் கரையேறுகிறான். கரையில் இறங்கி நடக்கும் பொழுது முன் பொழுதில் இரண்டறக் கலந்து கிடந்த அதே நீர் அவன் உடலில் இருந்து மிக வேகமாக நீங்கும் பொழுது அதனை இயல்பாக எடுத்துக் கொண்டு மேனி மீது மணல் ஒட்ட நடந்து சென்று காணாமல் போவான். காதல் என்பது அப்படித்தான் நீர் வேறல்ல நான் வேறல்ல என்று இரண்டறக் கலந்து கிடந்த சொற்ப காலச் செயல்பாடு மட்டுந்தான்.

அடே பயலே, நீ அந்தப் பெண்ணை ஏமாற்ற முனைகிறாய். அது தெரிந்தோ தெரியாமலோ அவள் எப்படி சிரிக்கிறாள் பார். ஏமாறுவதால் அவள் ஒன்றும் குறைந்தவள் அல்ல. ஏமாற்றி நீ என்ன காணப் போகிறாய்? உன் சந்தோஷம் என்று நீ நம்புவது மிகக் குறுகிய காலத்துக்கு மட்டும்தான். அதை தாண்டினால் துக்கம் என்று நான் சொல்லவில்லை. அதைத் தாண்டினால் உனக்கு கிடைக்கப் போவது வெறுமை மட்டுமே. இதோ பார் நண்பா, மனிதன் துக்கத்தை கையாளுவதை விட வெறுமையைச் சந்திப்பதுதான் அதிக பாரமாய்ச் சுமக்கிறான். அனுபவஸ்தனாய் நான் சொல்கிறேன். அவளது உடலை நெருங்க வேற ஏதேனும் வழியை கடைப்பிடிக்கலாம் நீ. கிளுகிளுப்பான பாகங்களை தடவுவதற்காக ஏன் இப்படி பொய் சொல்லுகிறாய்? உன் உடல் என்னை ஈர்க்கிறது. என் உடம்பு தகிக்கிறது. நாம் ஒருவரை ஒருவர் புணரலாமா? என்னோடு கூடி நீ இன்புற்று இன்புறுத்துவாயா? ஒருவரை ஒருவர் ஏற்பதற்கான உன்னதமான உபாயம் அல்லவா கலவி என்பது? இதைப் பற்றி உன் அபிப்பிராயத்தை சொல். உன்னை எந்த விதத்திலும் நான் நிர்பந்திக்க மாட்டேன். இது பற்றி உன் கருத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன். விருப்பம் இருந்தால் எனக்கு பதில் சொல். இப்படி அல்லவா நீ மனு போட்டு இருக்க வேண்டும்?

மாயைக்கும் சத்தியப் பிறழ்ச்சிக்கும் ஆடவன்தான் எப்போதும் காரணமாகிறான். காதல் என்று ஒன்றாம் நம்பர் அயோக்கியத்தனம் ஒன்றை தான் நம்புவது போல் நடித்து அகப்பட்ட பெண்ணிடம் அதையே திணித்து அதன் பல மடங்குகளை திரும்பச் சொல்லி நிர்பந்தித்து போலித்தனத்தை மகா பெரிய அற்புதம் என்று நிறுவத் தலைப்படுகிறான். ஹே..எனக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் போலி..! அந்தப் பெண் எப்படி நகைக்கிறாள் பார். நிச்சயம் அவள் சுயம்பு. அவளிடம் உன் பொய்களை கொட்டுகிறாயே. அவள் மட்டும் வாய் திறந்து உன்னை அம்பலப்படுத்துவாளேயானால் நீ கட்டமைத்து வைத்திருக்கும், நீ தொழுது கொண்டிருக்கும், நீ தாண்ட முடியாமல் தவிக்கும் உன் பிம்பம் மொத்தமும் சுக்கு சுக்காக உடைந்து போகும். ஜாக்கிரதை!

சித்தரஞ்சனுக்கு இப்போது அந்த இரண்டு பேரின் முகங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. பரிபூரண அந்நியத்தை உடைத்துக் கொண்டு, இரண்டு முகங்களைத் தன் கண்களால் எடுத்து வந்து மன வாழ்வின் முதற் சுவரில் ஒட்டி வைத்துக் கொள்வதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறேன்? ஹம்பக்!. சுத்த ஹம்பக். தன்னையறியாமல் லேசான சத்தமாக சிரித்து விட்டான் சித்தரஞ்சன், சட்டென்று  ஒரு கணம் வெட்கினான். இப்போது சர்வர் தன் இரண்டு கரங்களிலும் பின்புற டேபிளுக்கு இரண்டு மூன்று தட்டுக்களோடு வந்து அடுக்கிவிட்டு மீண்டும் உட்பக்கம் சென்று திரும்பும் பொழுது சித்தரஞ்சனுக்கு முன்பாக காப்பி வட்டாஸெட்டை இருத்தி விட்டு நகர்ந்தான்.

காபியை ஊதி ஊதிக் குடித்தான் சித்தரஞ்சன். நசீர் வந்திருந்தால் ‘டம்ளர் முழுவதும் காபியை நிரப்பி ரஞ்சனுக்கு தந்துவிட்டு வட்டவில் எஞ்சி நிற்கும் சொற்ப காஃபியைத் தான் ரசித்து ருசித்துக் குடிப்பானே’ என்று தோன்றியது. முதன் முதலில் காதலுக்கு மரியாதை திரைப்படத்திற்கு போய்விட்டு வீடு திரும்பும் பொழுது அடுத்த வாரம் பெங்களூருக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய வேண்டும் என்று இதே ரயில்வே ஸ்டேஷனுக்கு நசீரோடு தான் வந்தது சித்தரஞ்சனுக்கு ஞாபகம் வந்தது.

ஒல்லியாக நெடுநெடுவென்ற உயரத்தோடு பூச்சி கோலம் போட்ட வர்ணம் கெட்ட சட்டை, முழங்காலில் நூல்பிரிந்த நீலம் வெளுத்த ஜீன்ஸ் பேண்ட்டுடன் கல்லாவுக்கு முன்பாக நின்று கொண்டிருந்த ஒருவனுக்கு அனேகமாக 20 வயது இருந்தால் அதிகம். அச்சு அசலாக கலைந்த தலையும் லேசாய் தொங்கு மீசையும் கன்னத்தில் மேடும் பள்ளமுமாய் பருக்களும் எண்பது சதவிகிதம் அவனைப் பார்த்தால் நசீர் போலவே தோன்றியது. இப்போது அந்த இளைஞன் வந்து சித்தரஞ்சன் அமர்ந்திருந்த அதே மேசையில் எதிர்பக்க நாற்காலியில் அமர்ந்தான். சர்வர் வந்து ரஞ்சனிடம் அவன் அருந்திய காபிக்கான பில்லை சின்ன தட்டொன்றில் வைத்து ரசீது பறந்துவிடாமலிருக்க ஒரு ஸ்பூனை கிடைமட்டமாக அதன் மீது இருத்தினவன் எதிர்ப்புறம் அமர்ந்திருந்த வாலிபனிடம் ‘என்ன சாப்டுறீங்க?’ என்று கேட்டான். அவன் ‘என்னல்லாம் இருக்கு?’ என்று கேட்க, சர்வர் எல்லா ஐட்டங்களையும் வரிசை மாறாமல் ஒப்பித்தான்.

அவன் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ‘ம்ப்ச்’ என்று தலையை ஒரு தரம் குலுக்கிக் கொண்டு ‘ஒரே ஒரு காபி, ஹாஃப் சுகர்’ என்றான். ஒரு கணம் சர்வரின் முகத்தில் கடுமையின் இறுக்கம் மின்னி மறைந்தது. தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டவன் முன்பு சொன்ன அதே தொனியில் ‘ஒரு காப்பி… வட்டால… ஆஃப் சுகர்’.

வெற்றிகரமாக டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டு ‘எதுனா டிபன் பண்ணலாம் வா!’ என்று சித்தரஞ்சன் மறுக்க மறுக்க அதை ஏற்காமல் கையைப் பிடித்து நசீர்தான் இந்த ஓட்டலுக்கு முதன்முறை அவனை இழுத்து வந்தான். எல்லாவற்றையும் புன்னகையோடு ஏற்றுக் கொள்ளத் தெரிந்தவன் நசீர். அதை நிரூபிக்கும் வகையில் அந்த சம்பவம் நடந்தது. சர்வர் எடுத்து வந்த காபி அவன் மீது கொட்டி விட, ‘அய்யய்யோ காபி கொட்டிருச்சே!’ என்று நாமெல்லாம் பதறுவோம் அல்லவா? தன் சட்டை மீது சூடான காஃபி கொட்டியபோதும் உடம்பில் அத்தனை உஷ்ணம் எதிர்பாராமல் ரணமாக்கிய போதும் உணர்வுகளை மறைத்துக் கொண்டவன் முன்பு சொன்ன அதே தொனியில், முகத்தில் புன்சிரிப்பு மாறாமல் ‘இட்ஸ் ஓகே… இட்ஸ் ஓகே’ என்றவாறு பதறிப்போன சப்ளையரையும், அவனை வேகமாக இடித்து காபி கொட்டுவதற்கு காரணமாக இருந்த வட மாநிலத்து மனிதரையும் புன்னகையோடு எதிர்கொள்ள நசீரால் தான் முடியும். ‘எப்பா… நீ கடவுள்டா சாமி. உன்னை மாதிரி இன்னொருத்தன் இருக்கவே முடியாது நசீர். நானா இருந்தா ஓங்கி ஒரு அறை விட்டிருப்பேன்.’

‘அட… நீ வேற. யார ஒரு அறை அறைவே? அந்த சப்ளையரைத்தானே? அவன் பாவம்.. பசி கடன் நோய் வறுமைன்னு ஆயிரம் காரணங்களோடு வேலை பார்த்துட்டு இருக்கிற பலவீனமான ஒருத்தனை ஓங்கி அறைஞ்சு, உனக்கு என்ன கிடைக்கப் போகுது? நியாயமா, நீ காபியை கொட்ட காரணமாக இருந்த அந்த நார்த் இந்தியனைத்தானே அறையணும்? ஆனா, அறைய மாட்ட. அறைன்னு சொல்லும்போது கூட உன்னை விட பலவீனமான ஒருத்தனைதான் உன்னால ஆதிக்கம் செய்ய முடியும்னு நம்புறே பார்… அதுதான் நண்பா ரொம்ப ரொம்பத் தப்பு. ஒரே மன்னிப்பை இரண்டு பக்கமும் பிட்டு கொடுத்ததால அந்த சப்ளையரும் வட மாநிலத்து மனிதனும் ஒன்னாகிட்டாங்க பாத்தியா? ரெண்டு பேரையும் நீ அறைஞ்சிருந்தா கூட உன்னால அவங்கள ஒன்னுபடுத்த முடியாது. இன்னும் சொல்லப் போனா அவன் இடிச்சு இவன் கொட்டுனதுக்கு நீ அறைஞ்சிட்டு போயிருவ. அதுக்கு அப்புறம் ஓட்டல் முதலாளி வடக்கத்திகாரன அமைதியாக்க தன் வேலையாளை நாலு கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவான். ஓங்கி அறைவான். ஏன் வேலையை விட்டு கூட அனுப்புவான். அதற்கு அப்புறம் அந்த வடக்கத்திக்காரன் நிம்மதியா போயிருவான்னே வச்சுக்கோ, இந்த சப்ளையர் என்ன ஆவான்?? குறைந்த பட்சம் ரெண்டு மூணு நாளைக்காவது அடுத்த வேலையை நோக்கிப் போகாம தன்னைத்தானே நொந்துகிட்டு இருப்பான். ஒருவேளை குடிக்கலாம். நடந்ததை தொடச்சு போட்டுட்டு அடுத்த வேலைக்கு போயிடலாம். நம்மால யூகிக்க மட்டும்தானே முடியும்? எதையும் நிறுத்த முடியாது நண்பா. ஆனா, மாத்த முடியும். நான் மாத்தத்தான் நினைக்கிறேன். என்னைப் பாராட்டி ஒரு பிரயோஜனமும் இல்லை. முடிஞ்சா நீயும் என்னை மாதிரியே இருந்து பார். அது ஒரு சுகம். நல்லவனா இருக்கிறது ஒரு போதை. மனசுக்குள்ள மட்டும் ஒவ்வொரு தப்பா எடுத்து இதை நாம செஞ்சா எப்படி அப்படின்னு யோசிச்சு கனாக்கண்டு அதுக்கு அப்புறம் சீச்சீ… நான் ஒரு நல்லவன். நானாவது இந்த தப்பை செய்கிறதாவது? அப்படின்னு அதை உதறிட்றது ஒரு விதமான போதைப் பழக்கம்தான். எதுவும் சில காலம் தான் நண்பா. கொஞ்ச நாளைக்கு அப்புறம் மனசார எந்த தப்பும் பண்ண முடியாமல் ஆயிடும். மனசு எடை இல்லாமப் போகும் நாள்ல நீ வேற ஒருத்தனா மாறிடுவ… ஒருவேளை 150 அடி உயரமா நீ விஸ்வரூபம் எடுக்கலாம் அல்லது எறும்போட கண்ணளவுக்கு சுருங்கவும் முடியும். யோசிச்சா ரெண்டுமே ஒரே மாதிரி நிம்மதிதான் அப்படின்னு தோணுது. உனக்கும் தோணும். நீயும் என்னோட வழிக்கு வா’

இப்போது என் எதிரே அமர்ந்திருந்த நசீர் காபி குடித்து முடித்து வலது பக்கம் பேண்ட் பாக்கெட்டில் இருந்து வெண்ணிற கைகுட்டையை எடுத்து மடிப்பு கலையாமல் நளினமாக தன் உதடுகளை ஒற்றிக்கொண்டான். சர்வர் வந்து அதேபோல் சின்ன கிண்ணத்தில் ஸ்பூனடியில் வைத்து பில்லை நீட்ட, நான் அதை பிடுங்கி விடுவதற்குள் சட் என்று அதையும் என்னுடைய பில்லையும் சேர்த்து எடுத்துக் கொண்ட நசீர் ‘விடுறா… இதெல்லாம் ஒரு விஷயமா?’ என்று நகரத் தொடங்க, ‘இங்க பார் நசீர், நீ மாறவே இல்லை. மேல மேல நன்மையை மட்டும் எடுத்து பூசிக்கிட்டே போறியேடா… இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ? எப்பவுமே நீதான் காசு கொடுக்கணுமா? நான் கொடுக்க மாட்டேனா? ஒரு முறையாவது நான் கொடுத்தால் குறைந்தா போவேன்?’ தழுதழுத்த குரலில் சித்தரஞ்சன் சொல்லி முடிக்க, ‘விடு நண்பா.. யார் கொடுத்தா என்ன?’ என்றபடியே தாராளமாக டிப்ஸை வைத்துவிட்டு வாசலை நோக்கி நகர்ந்த நசீர், திரும்பி அங்கேயே நின்று கொண்டிருந்த ரஞ்சனைப் பார்த்து, ‘அட வா மேன்! ஸ்வீட் பீடா போடலாமா?’ என்றவாறே மெல்ல நகர்ந்து பாண்டி பஜார் ஆரம்பத்தில் இருந்த பீடா கடையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

‘எத்தனை வருஷம் ஆச்சு நீ இன்னும் மாறவே இல்லை’ என முனகிய சித்திரஞ்சனிடம் முன்னால் சென்று கொண்டிருந்த நசீர் திரும்பி, ‘எதுக்குடா மாறனும்? அப்படியே இருக்கிறதுதானே சரி?’ என்று சிரிக்கத் தொடங்கிய நசீரிடம், ‘இங்கே பார் நசீர், நான் உன் மேல கெட்ட கோபத்தில் இருக்கேன். எத்தனை வருஷமா இதையே நான் யோசிச்சிட்டு இருக்கேன் உனக்கு தெரியுமா? ஏன்டா அப்டிப் பண்ணே? நீ எழுதி வச்ச அந்த கால் கடிதாசி அதுல இருந்தது உன் கையெழுத்துதான் அப்படின்னு போலீஸ் விசாரணையில் நானே சாட்சி சொன்னேன் அதை நீ எழுதலன்னோ அல்லது யாரோ நிர்பந்திச்சு நீ அப்படி எழுதினன்னும் எனக்கு சந்தேகம் இல்லை. நசீர், நீ எழுதுன லெட்டர்தான் அது. உன் கையெழுத்தை நான்தான் அடையாளம் காமிச்சேன். நீ ஏன் அப்படி எழுதின? ஒற்றை தலைவலி ஒரு காரணம் இல்லை. நான் அறிய நீ பொய் சொன்னதே இல்லை. அனேகமாக என்கிட்ட நான் அறிய நீ சொன்ன ஒரே பொய் அதுதான் அப்டின்னு நம்புறேன். நசீர், உன்னை நான் எங்கெல்லாம் தேடினேன்? எத்தனை நாட்கள் தூக்கம் இல்லாமல் தவிச்சேன்? இந்த ஊரே வேணாம். யாரும் வேணாம். எதுவும் வேணாம் அப்படின்னு முடிவு எடுத்து எவ்வளவோ தூரம் ஓடினேன். நீ என் கனவுல வரவே இல்லை. யார் யாரோ வந்தாங்க. நீ ஏன் வரல? என்கிட்ட உனக்கு பயமா? நீ வெறுக்கிற மாதிரி நான் ஏதாவது செஞ்சேனா? எனக்கு மண்டை வெடிச்சிடும் போல இருக்கு நசீர். எனக்கு ஒரு காரணத்தை சொல்லிட்டு பீடா கடைக்கு போலாம். முதல்ல சொல்லு’

நசீர் சிரித்தான். ‘இங்க பார், நான் இங்கயேதான் இருந்திட்டிருக்கேன். இதோ இந்த ரயில்வே ஸ்டேஷன்தான். உன் குடும்பம் இனி மதுரை வேண்டாம் என்று முடிவெடுத்து போகும் போது நீ கான்ஷியஸ்லையே இல்ல. ஆம்புலன்ஸ்ல ஆக்சிஜன் மாஸ்க் உதவியோட உன்னை கூட்டிட்டு போனாங்க. கொஞ்ச தூரம் நானும் பின்னாடி வந்தேன். அதுக்கு அப்புறம் சரி என்னைக்காவது நீ திரும்பி வருவன்னு காத்துருக்க ஆரம்பிச்சேன். அதான் நீ வந்துட்டியே. வந்த இல்ல?’

இப்போது நசீர் சிரிக்கும்போது அவனுடைய முகம் ஒரு இருட்டுப் பந்தாக மாறி மொத்த உருவமும் கரிப்பொடி மணல் துகள்களாய்க் கொட்டித் தரையில் குவிந்தது. அந்த நேரத்திலும் மறுநாள் வரப்போகிற ஒரு மாண்புமிகு பதவியாளருக்காக ஆறேழு துப்புரவுப் பணியாட்கள் சாலைகளைப் பெருக்கிக் கொண்டிருக்க, சர்வோதய இலக்கியப் பண்ணைக்கும் யூனியன் கிளபுக்கும் இடையே ‘சாலையில் என்ன இன்னிக்கு இங்கன இம்புட்டுக் கரித்தூளு?’ என்றவாறே அதைத் தன் கையிலிருந்த பிரம்புக் கோரியால் தள்ளி மற்ற குப்பைகளுடன் சேர்த்தபடி அடுத்த கடைவாசலை நோக்கிச் சென்ற பருமனான அம்மாளிடம் ரஞ்சன், ‘யம்மா… யம்மா… அது வெறும் கரித்தூள் இல்லை. அது என் சினேகிதன் நசீர். அவனை எங்க எடுத்து வீசப்போறீங்க… வேணாம்…’ என் தொண்டை கிழியக் கத்தினான். அந்தத் துப்புரவுப் பெண்ணுக்கு அருகே நின்றிருந்த இளவட்டப் பணியாளன் ஒருவன் அவன் பக்கம் திரும்ப ‘நசீர்… டேய்… நீ…’ என்று குழறினான்.

‘இங்க பாரு ரஞ்சன்…ஓட்டல்ல எவ்ளோ பேச முடியுமோ அவ்ளோ பேசியாச்சு. அவ்ளோதான் அங்கே பேச முடியும். இன்னும் உனக்குக் கதை கேட்கணும்னா என் கூட வா…’ என்றான். ‘எங்கடா…எங்கன்னாலும் வரேன் மச்சி. சொல்றா’ என்று கண் கலங்கினான் சித்தரஞ்சன்.

‘ரயில்வே ஸ்டேஷனுக்கு வா. நாலாவது பிளாட்பார்ம் சென்டர்ல ஒரு கல் பெஞ்சு இருக்கும். அங்க வந்து உட்காரு. பேசலாம்!’ – தலையில் கட்டி இருந்த துண்டை அவிழ்த்து உதறியவன் தன் முன் நின்று கொண்டிருந்த சித்திரஞ்சனை கொஞ்சம் லட்சியம் செய்யாமல் ‘வாக்கா… வாக்கா… மேஸ்திரி வந்தா திட்டுவாரு’ என்று விளக்குமாற்றை இடவலமாக திருப்பி கிளறிக் கொண்டே நகரத் தொடங்கினான்.

மணி பார்த்த சித்தரஞ்சன்  விக்டோரியா எட்வர்ட் ஹால், அதற்கு அடுத்தாற்போல் வண்ண மீன்கள் விற்கும் கடை தாண்டி பழைய புத்தக கடை வாசலில் கொஞ்ச நேரம் நின்றான். கடையில் இருந்த கரிய மனிதன், ‘என்னங்க வேணும்? ஸ்கூல், காலேஜ் புக்கு, இன்ஜினியரிங், மெடிக்கல் எல்லா புக்கும் நம்மகிட்ட இருக்கு. எது வேணும்னாலும் மாடிக்குப் போங்க’ என்றார். அதை காதிலேயே வாங்காத சித்த ரஞ்சன் மீண்டும் நகர்ந்து தங்கரீகல் தியேட்டர் முன்பு ஒரு கணம் நின்றான். என்ன படம் ஓடுகிறது என்று பேனரைப் பார்த்தவன், ஆட்டோவில் ஓட்டுநர் இருக்கையில் ஒரு காலை மடித்து அதன் மீது அமர்ந்து ஸ்டைலாக மாலை முரசு படித்துக் கொண்டிருந்த நசீரிடம், ‘முன்னாடி எல்லாம் இந்த தியேட்டர்ல மர பெஞ்ச்தானே இருக்கும்? எத்தனை இங்கிலீஷ் படம் பார்த்திருப்போம்? ஏ சர்டிபிகேட் படத்துக்கு மஞ்சனக்காரத் தெரு ரமேஷும் நம்ம கூட வந்தான். உனக்கும் எனக்கும் அப்ப 15 வயசுதான். நம்மள உள்ள விட்டுட்டாங்க. ரமேஷ் சின்ன பையன் ஏ படம் பார்க்க கூடாது அப்படின்னு சொல்லி விரட்டி விட்டுட்டாங்க. அதுக்கு அப்புறம் அவன் நாலு நாள் நம்ம கூட பேசவே இல்ல தெரியும்ல?’ என்று சிரித்தான்.

‘கேசவன் மனோகரன் ரெண்டு பேரும் அடுத்த வெள்ளிக்கிழமை ரமேஷுக்கு வண்டிமைல மீசை எல்லாம் வரஞ்சு கூட்டிட்டு வந்தாங்க.’ என்று அடக்க மாட்டாமல் மேலும் சத்தமாக சிரித்தான் சித்தரஞ்சன். ‘அட ஆமப்பா, அன்னிக்கு வேற படம் மாத்திட்டாங்க. ஜாக்கிசான் படம். எல்லாரும் குடும்பம் குழந்தை குட்டி சகிதம் பார்க்க வந்து ரமேஷுக்கு செம கடுப்பு. படம் போட்டதும் வண்டி மை மீசையை அழிக்கிறதா நெனச்சி கையால இங்கிட்டும் அங்குட்டும் இழுத்துட்டான். இன்டர்வல்ல ஒரே சிரிப்பு. அதிலிருந்து அந்தப் பய இந்த தியேட்டருக்கு வரவே மாட்டான்’ என்ற நசீர், ‘இப்ப இந்த தியேட்டரை பளபளன்னு மாத்திட்டாங்க பாத்தியா?’ என்றான். அதற்குள் ஆட்டோவில் யாரோ சவாரி ஏற சட் என்று ஆட்டோவை கிளப்பிக் கொண்டு சென்றான்.

ஆட்டோ செல்லும் திசையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சித்தரஞ்சன் தளர்ந்த கால்களால் ரயில்வே ஸ்டேஷன் வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினான். ஊருக்கு செல்பவர்கள் விரைந்து கொண்டு இருந்தார்கள் ஊர்களில் இருந்து திரும்புபவர்கள் ‘எப்படா வீட்டுக்கு போய் சேருவோம்?’ என்று அயர்ந்தபடி கிடைத்த வாகனங்களில் நிரம்பிக் கொண்டிருக்க போக்கிடமற்ற யாசகர்கள் அந்த சாயங்காலத்தில் செய்வதற்கு ஏதுமின்றி தரையில் ஆங்காங்கே படுத்திருந்தனர். பயந்தும் பயமுறுத்தியும் இங்குமங்கும் நகர்ந்து கொண்டிருந்த நாய்களில் ஒன்று உடம்பெல்லாம் சொறி பிடித்து ரோமம் வழுமுண்டு புண்ணாகி கிடக்க ஒரு காரணமும் இன்றி சிவப்பு நிறத்தில் பெரிய பெட்டியை தள்ளிக் கொண்டு வந்தவரை பார்த்து ‘லொஃப் லொஃப் கஃப் லொஃப்’ என விதவிதமான ஏற்ற இறக்கங்களோடு குறைத்தபடி பின் தொடர்ந்தது.

‘இப்பல்லாம் உனக்கு நாய்னா பயம் இல்லையா?’ எனக் கேட்ட சித்திரஞ்சனைப் பார்த்து தான் தள்ளிக் கொண்டிருந்த சிவப்பு பெட்டியை ஒரு கணம் நிறுத்திவிட்டு, தொப்பையிலிருந்து சரிந்து வழியும் மெருன் கலர் பேண்டை மேலே இழுத்து விட்டுக்கொண்டு இரண்டு கைகளையும் கோர்த்தபடி சொடுக்கிட்டு விட்டு, ‘போகச் சொன்னா போயிடும். எதுக்கு பயப்படனும்?’ என்றவாறே அதை ‘போ‘ என ஒரு வார்த்தை சொன்னான் நசீர். ‘ஆமாடா, உடனே போயிருச்சு’ என்று வியந்த சித்திரஞ்சனிடம், ‘சரி, நீ உள்ளே போ. நான் கிளம்புறேன்’ என்றவாறே தனக்காக காத்திருந்த டிரைவரிடம் பெட்டியை கொடுத்துவிட்டு ரிலாக்ஸாக நடந்தபடி தன் காரை நோக்கிச் சென்றான்.

பயணிகளின் அன்பான கவனத்திற்கு என்று உலோகம் பூசிய குரலில் அறிவிப்பு ஒழுகிக் கொண்டிருக்க சகல புறங்களிலும் நெறித்துக் கொண்டிருந்த ஜனக்கூட்டத்திற்கு நடுவே தானும் கலந்து நகர்ந்து நாலாவது ப்ளாட்ஃபார்மை நோக்கிப் போனான் சித்தரஞ்சன்.

சற்று முன்புதான் ஒரு ட்ரெயின் வந்து எல்லோரையும் இறக்கி விட்டு நிலை சென்றடைந்திருந்தது போலும். இன்னும் சந்தடி குறையவே இல்லை. ரயில்வே ஸ்டேஷனின் உட்புறம் என்பது பரபரப்புக்கு எப்போதும் குறைவில்லாத இடம்தான். பயணிகளும் வழியனுப்ப வந்தவர்களும் அழைத்துச் செல்லக் காத்திருப்பவர்களும் ஒரே போல் தோற்றமளித்தாலும் அவரவர் நடை உடை பாவனைகளில் நிச்சயமாகப் பெருத்த வித்யாசங்கள் இருக்கும். பயணிகள் ஒரு மாதிரி பரபரப்பாகவே காணப்படுவர். வழியனுப்ப வந்தவர்களுக்கு ட்ரெயின் கிளம்பியதன் பின்பாகச் செய்ய வேண்டிய காரியங்கள் மனக்கண் முன்பாக ஓடிக் கொண்டிருக்கும். அதுவே வரவேற்கக் காத்திருப்பவர்கள் ஒரு மாதிரியான காத்திருப்பின் எல்லைக் கணத்தில் பரவசத் தளர்ச்சியுடன் காத்திருப்பார்கள். வாடுவதற்கு முன்பான மலர்ப்பிரகாசம் அவர்களது முகங்களில் தென்படும். போர்ட்டர்களும் காபி டீ வெண்டார்களும் ரயில் வருவதற்கு முன் பின்னாகத் தமது ஓட்டத்தை/நடையை மாற்றி அமைத்துக் கொள்வர். தண்ணீர் பாட்டில் விற்பவர்களும், உணவுப் பொட்டலம் விற்பவர்களும் ரயிலில் பயணித்துக் கொண்டிருப்பவர்களின் மீது தத்தம் கவனத்தை முழுவதுமாகக் குவித்து வைத்திருப்பார்கள். ஊர்க்காரர்கள் எத்தனை பேர் வந்தாலும் அவர்களைக் கவனிப்பது இல்லை. யாசகர்கள், விபச்சாரர்கள், பிக் பாக்கெட்டுகள் தொடங்கிக் கஞ்சா விற்பவர்கள், பிள்ளைகளைக் கடத்துபவர்கள் என்று பலவிதமான மனிதர்கள் கும்பலுக்குள் கலந்து நடந்து கொண்டிருந்தார்கள். நாலாவது பிளாட்பாரம் மற்ற பிளாட்பாரங்களைக் காட்டிலும் நெரிசல் குறைவாகத்தான் இருந்தது.

அத்தனை பரபரப்புக்கு நடுவே எங்கிருந்தோ பீடிப்புகை வழிந்து காற்றில் பரவிக்கொண்டிருந்தது. எங்கேயிருந்து புகை வருகிறது என்று மானசீகத்தில் பின் தொடர்ந்து சென்ற சித்தரஞ்சன் ஒரு மூலையில் தலையில் துண்டுடன் இருந்த அந்த மத்திம வயசுக்காரனைப் பார்த்ததும் ‘உன்னைக் கண்டுபிடித்து விட்டேன் பார்’ என்ற தோரணையில் லேசாய் இதழ் பிரித்துச் சிரித்தான்.

அவன் தலைத் துண்டைக் கழற்றினான். நசீர்!!

‘என்ன ரஞ்சன்… இந்த இடத்துக்கு வந்ததுமே உன் நினைவெல்லாம் ஸாவித்ரிய பத்தியதா மாறியிருக்குமே?’ என்று சிரித்தான். ‘அப்படிச் சிரிக்காதே நசீர்’ என்று சொல்ல விழைந்தான் ரஞ்சன். வார்த்தை வரவில்லை.

‘ஸாவித்ரியும் நானும் வழக்கமாக இந்த நாலாவது ப்ளாட்பார்லதான் சந்திப்போம். அவளுக்காக நான்தான் பெரும்பாலும் காத்திருப்பேன். அவள் என்னைக்காவது எனக்காகக் காத்திருந்ததும் உண்டு. ரொம்ப அபூர்வமா நாங்க ரெண்டு பேருமே குறிப்பிட்ட நேரத்துல ரயில்வே ஸ்டேஷன் வாசல்ல சந்திச்சுப்போம். அப்படியான நேரத்தில் கூட அங்கிருந்து அப்படியே கிளம்பி வேறெங்காவது போவது, உடனே ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்ச மாதிரி பேச ஆரம்பிக்கிறது, குறைந்தபட்சம் பார்த்ததும் சிரிச்சுக்கிறது, எதுவுமே கிடையாது. எங்கள் ரெண்டு பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் போல் தொடர்ந்து நடப்போம். இந்த நாலாகாவது பிளாட்பார்ம். இதுதான் எங்களுக்கு ஒரு திருத்தலம் மாதிரி. இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கா அப்படின்னு நான் யோசிச்சு யோசிச்சு பாத்துருக்கேன். அடுத்தடுத்து இருக்கிற இந்த ரெட்டை கல் பெஞ்சுங்கதான் அந்தக் காரணம்’ என்று அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் சற்று அருகருகே இரண்டு கல்பெஞ்சுகள் இருந்தன. ‘ஸாவித்ரி எந்த அளவுக்கு சூசகம் தெரியுமா? இந்த ஒட்டுமொத்த ரயில்வே ஸ்டேஷனுக்கும் நாம ரெண்டு பேரும் இப்ப போகலாம். எனக்கு தெரிஞ்சு இதே போல இரண்டு கல்பெஞ்சுகள் அடுத்தடுத்து பக்கத்துல கிடையவே கிடையாது. மேம்போக்கா பார்த்தா சாதாரணமாக தோணும். இதை நுட்பமா யோசி. ஸாவித்ரிக்கு மனிதர்கள் மேல நிரந்தரமான ஒரு அச்சமும் கும்பல் மேல ஒரு பதட்டமும் குறையாமல் இருந்தது. ரெகுலரா சந்திக்கணும் என்பதை தவிர்க்க முடியாது அப்படின்னு ஒரு நிலை வந்தது இல்லையா? அப்போ ஸாவித்ரிதான் இந்த இடத்தை பரிந்துரை பண்ணினா. வேறு எங்கு சந்தித்தாலும் ஏதாவது கண்கள்கிட்ட நாம மாட்டிக்குவோம். தெரிஞ்ச கண்கள், சொந்தக்கார கண்கள், பகுதிவாசிகள் கண்கள், பக்கத்து வீட்டார் கண்கள், கூடப் படித்த, வேலை பார்த்த,,தெரிந்த அறிந்த புரிந்த லட்சோப லட்சம் கண்கள் எங்கிருந்தாவது பார்த்திடும். நம் கவனமெல்லாம் சந்திப்பதிலோ பேசுவதிலோ இருக்காது. கண்களிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதிலேயே காலம் போயிடும். இந்த இடம் ஒரு சரியான தீர்வு. ஒரே கல்பெஞ்சில் நாங்க ரெண்டு பேரும் உட்கார வேண்டி வந்திருந்தால் கண்களிடம் மாட்டிக் கொள்வது சுலபமாக நடந்திருக்கும். வருடக் கணக்காக நாங்க ரெண்டு பேரும் இதே ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தோம். இப்படி அடுத்தடுத்த கல்பெஞ்சுகளில் உட்கார்ந்துகிட்டோம். பேசிக்கிட்டோம் சிரிச்சுக்கிட்டோம் டிபன் பாக்ஸை திறந்து தட்டில் கொஞ்சம் பகிர்ந்து தருவா. நான் அதை எங்கோ பார்த்தபடி சாப்பிடுவேன். சன்னமான குரல்ல வீசற காத்துக்கே கேட்காத அளவுக்கு ஸாவித்ரி என்கிட்ட பேசுவா. அவ கூட பேசி பேசி என் குரல் ஸ்தாயி கூட மென்மையாக ரொம்ப கனிவா சன்னமா மாறிப்போச்சு. பயம், இந்த சமூகத்து மேல பயம். அறிஞ்சவங்க மேல பயம் இருந்தால் கூட ஏதாவது பண்ணி அதை தீர்க்க முயற்சி பண்ணலாம். அந்நியர்கள் மேல பயம். கூட்டத்தின் மேல பயம். இத்தனை பயங்களுக்கு நடுவேதான் நாங்க பார்த்துக்கிட்டம்’

பீடியின் கடைசி இழுப்பை இழுத்த நசீர் அதை தூக்கிப் போட்டுவிட்டு துண்டால் தன் முகத்தை துடைத்துக் கொண்டான்.

சித்ரஞ்சன் எதுவுமே பேசாமல் அந்த கல் பெஞ்சில் ஒரு ஓரத்தில் அமர்ந்தான். ‘நீ இப்போ உட்கார்ந்து இருக்கிறதுதான் ஸாவித்ரி எப்போதும் உட்கார்ந்து இருக்கும் இடம்” என்று நசீர் சொல்லும்போது, சக போர்ட்டர் வந்து அவனிடம் ஏதோ கேட்க, ரஞ்சன் பக்கம் திரும்பாமல் வேக வேகமாக நடந்து காணாமல் போனான்.

‘நசீர் நசீர்’ என்று கத்தத் தொடங்கிய சித்தரஞ்சனுக்குத் தொண்டை எதுவோ கவ்வுகிறாற் போலிருந்தது. கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலாம் என்று அருகே இருந்த கடையில் ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கி முக்கால்வாசியைக் குடித்து விட்டு, மீதத்தை அப்படியே அருகாமை குப்பைத் தொட்டியினுள் போட்டான்.

மறுபடி வந்து அதற்கடுத்த கல்பெஞ்சின் ஓரத்தில் உட்கார்ந்தான். பகபகவென்று சிரித்தபடியே கடந்து கொண்டிருந்த மூன்று பெண்மணிகளில் ஒருத்தி இவன் பக்கம் திரும்பி, ‘இப்ப நீ உட்கார்ந்திட்டிருக்கது என்னோட வழக்கமான இடம், நீ உட்கார்ந்துக்க’ என்றவாறே கடந்து போனாள்.

சித்தரஞ்சன் கண்களை மூடிக் கொண்டான். ‘இங்கே ஏன் வந்தே ரஞ்சன்?’ என நசீர் கேட்பது காதில் விழுந்தது. ‘இங்கே ஏன் வந்தே ரஞ்சன்?’ என அம்மா கேட்டாள். ‘மதுரையே வேண்டாம்னுதானே உன்னை அத்தனை தூரம் கூட்டிப் போனம்?’ என்றான் சந்தானம், அவன் தம்பி. ‘இது வியாதியில்லை மிஸ்டர் ரஞ்சன். இது ஒரு பிசகு. இதை சரி பண்றது முழுக்க உங்க கையிலதான் இருக்கு. உங்களை ட்ரிகர் பண்ற எதைப் பத்தியும் நீங்க யோசிக்காதீங்க. மனிதர்கள், இடங்கள், பெயர்கள், சம்பவங்கள், தேதிகள், பாட்டு, டான்ஸ், சினிமா, புஸ்தகம் அப்டின்னு எல்லாத்தையும் விட்டு தூரமாப் போறது ஒண்ணுதான் ரெமடி. மறுபடியும் சொல்றேன். மதுரைன்ற ஊரையே சுத்தமா மறந்துர ட்ரை பண்ணுங்க. உங்களுக்கு ஒண்ணும் இல்லை. எதுவும் வராது. இந்த மாத்திரைகளை மட்டும் சாப்ட மறக்காதீங்க” டாக்டர் ஞானேஸ்வரின் குரல் என அனைவரின் குரல்களும் காதில் ஒலித்தது.

மழை பெய்யும் சப்தம் மட்டும் கேட்கத் தொடங்கியது. துளியும் நீரற்ற மழையின் அரவத்தைக் கேட்கவொப்பாமல் சித்தரஞ்சன் தன் இரண்டு கண்களையும் இன்னும் இறுக்கமாக மூடிக் கொண்டான். கண்ணீர் மல்கியது.

‘கண்களைத் திறக்காதே ரஞ்சன். கண்களை மூடிக் கொள். அதுதான் சரி. நீ ஏன் இத்தனை நாட்களாக மாத்திரைகளை சாப்பிடவில்லை? அதுவும் அந்த ரோஸ் கலர் மாத்திரையை நாள் தவறாமல் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார் இல்லையா? தவறலாமா? எங்கேயும் போகக் கூடாது ரஞ்சன். அம்மா சொல்வதைக் கேள். இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் வந்து உன்னைக் கூட்டிச் செல்வார்கள். அதுவரை அப்படியே உட்கார்ந்திரு. சமர்த்துப் பய்யன் நீ.’ அம்மாவின் குரல் கேட்டதும் ரஞ்சனுக்கு உடம்பு நடுங்கத் தொடங்கியது.

‘அம்மா… அம்மா… நீ எப்படி இங்க வந்த..? நான் இங்கே இருக்கேன்னு உனக்கு எப்படி தெரியும்? நீ போ அம்மா. இன்னும் கொஞ்ச நேரத்தில் நசீர் வந்துடுவான். அவனை விட்டால் எனக்கு வேறு யாரம்மா ஸ்னேகிதம்..? அவனைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிறது? நீ வந்தால் அவனுக்குப் பிடிக்காது. அவன் என்னை யாருக்கும் தெரியாமல் இங்கே வரச் சொல்லி இருக்கிறான். காலையிலிருந்து அவனுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரம்தான் அம்மா. நசீர் வந்து விடுவான். தயவு செய்து நீ போ. நீ வந்தால் அவன் வரமாட்டான். ப்ளீஸ்…!’

‘நான் என் கண்களை திறக்க மாட்டேன். நீ என்னை மறுபடியும் பிடித்துக் கொண்டு போய் வீட்டில் விட்டு விடுவாய். அப்புறம் என்னால் நசீரைப் பார்க்க முடியாது. அவன் ஏன் செத்துப் போனான் என்று எனக்கு சொல்லாமலே போய்விடுவான். எனக்குத் தெரிய வேண்டும். உனக்கு தெரிந்தால் நீ சொல். அவன் ஏன் செத்துப் போனான்? நான் இவ்வளவு தேடுகிறேன் இல்லையா? ஸாவித்ரி ஏன் அவனைத் தேடி வரவில்லை? ஒருவேளை ஒரு வேளை ஸாவித்ரியும் செத்துப் போய்விட்டாளா? எனக்குத்தான் எதுவும் தெரியாது. உனக்குத் தெரியும்தானே அம்மா? என்னை ஏன் நீங்கள் எல்லோரும் சேர்ந்து இப்படி கொடுமைப்படுத்துகிறீர்கள்? எல்லிஸ் நகர் வேண்டாம். எஸ் எஸ் காலனி வேண்டாம். கரிமேடு வேண்டாம். பெரியார் பஸ் ஸ்டாண்ட் வேண்டாம். நசீர் வேண்டாம். ஸாவித்ரி வேண்டாம். மதுரையே வேண்டாம். இப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். பாதி கதையில் நிறுத்துவது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா அம்மா? இன்னும் எத்தனை நாட்கள் இந்த கதைக்கு நான் முடிவறியாமல் வதைபடப் போகிறேனோ தெரியவில்லை.ப்ளீஸ் என்னை விடேன்.’

எல்லா ரயில்களும் போய் விட்டன. எல்லா ரயில்களும் போன பிறகு ரயில் நிலையத்துக்கு வேறொரு தோற்றம் ஏற்பட்டு விடும். காத்திருப்பவர்கள் முற்றிலும் அற்றுப் போன பிறகு கூட்டம் எதுவுமில்லாத விஸ்தாரத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக தலைகள் தென்படும். நாலைந்து நாய்கள் எங்கோ தூரத்தில் ஊளையிட்டன.

மூடிய இமைகளைத் தாண்டி யாரோ குறி வைத்து அடித்த டார்ச் ஒளி அவன் முகத்தைக் குறுக்கும் நெடுக்குமாக வெட்டிக் கிழித்தது. சித்தரஞ்சன் கண்களைத் திறந்தான். அவர்கள்தான். சித்தரஞ்சனின் மனைவி மைதிலி. அவனுடைய தம்பி சந்தானமும் நீலச் சீருடை அணிந்த ரெண்டு பேரும். தங்களுக்குள் கிசுகிசுவென்று ஏதோ பேசிக் கொண்டார்கள். அம்மா அவர்களுக்குச் சம்பந்தம் இல்லாமல் வலது பக்கம் மிதந்து கொண்டிருந்தாள். பகபகவென சிரித்த அம்மாவைப் பார்க்கப் பார்க்க ஆத்திரமும் இயலாமையும் பொங்கி வந்தது. கட்டுப்படுத்த முடியாமல் பெருங்குரலில் அழத் தொடங்கிய சித்தரஞ்சனின் தோளில் கை வைத்து ஆதுரமாக தன்னோடு அணைத்துக் கொண்டாள் மைதிலி.

‘எல்லாம் சரியாயிடும். அழாதீங்க. பாப்பா இருக்கால்ல? அவளை பார்த்துக்கனும் இல்ல? நீங் தானே எங்களுக்கு எல்லாமே’ தன்னுடைய அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

‘சரி கிளம்பு’ என்ற அம்மா மிதந்து நகர்ந்து மணல் மணலாய் வெண்ணிறப் பொடியாய் உதிர்ந்து காணாமல் போனாள்.

ரயில் நிலையத்தின் முன்பக்கம் போவதற்காக நீண்டு கிடந்த படிகளில் சித்ரஞ்சனை கைப்பற்றிச் சந்தானமும் மைதிலியும் நடத்திச் சென்றார்கள். சீருடை அணிந்தவர்கள் முன்னும் பின்னும் எதற்கும் தயாராக உடன் வர, சித்தரஞ்சன் தளர்வாகச் சென்றான்.

நிலையத்தின் வாசலில் இவர்கள் ஏறிக்கொள்வதற்கு வசதியாக இன்னொவா கார் அரை வட்டமடித்து திரும்பி வந்து நின்றது. ‘நைட் ஓட்டுவது ஒன்னும் சிரமம் இல்லேல்ல?’ என்று சந்தானம் கேட்க, ‘எங்களுக்கெல்லாம் நைட்டுதான் சார் வசதி. நீங்க நிம்மதியாத் தூங்குங்க. பூ மாதிரி உங்களை கூட்டிப் போய் ஊர்ல விட வேண்டியது என் பொறுப்பு’ என்று சிரித்தான் டிரைவர்.

மிடில் சீட்டில் நடுவில் சித்தரஞ்சன் அமர்ந்து கொள்ள சந்தானமும் மைதிலியும் இருபுறமும் அடைகாத்தார்கள். நீலச்சீருடை அணிந்தவர்கள் பின்பக்கம் எதிரெதிரே அமர்ந்து கொள்ள வண்டி கிளம்பி தெப்பக்குளத்தில் ஊர் சாலையில் இருந்து விலகி மோதிர சாலையைப் பிடித்தது. எல்லோரும் தூங்கி விட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட டிரைவர் சத்தத்தைக் குறைத்து ம்யூசிக் பிளேயரை ஆன் செய்து பாடலை ஒலிக்க விட்டான்.

ஜேசுதாஸ் ஜென்மங்களை ஊடுருவும் தன் குரலால் தொடங்கினார்.

ராஜராஜ சோழன் நான்!

எனை ஆளும் காதல் தேசம் நீதான்!

பூவே காதல் தீவே!

சித்தரஞ்சனுக்கு அந்தப் பாடல் இதமாக இருந்தது. நசீருக்கு மிகப் பிடித்த பாடல். ‘எனக்கு உசுருடா அந்தப் பாட்டு!’ என அடிக்கடி சொல்வான் நசீர்.

மூடிய கண்களைத் திறந்தான். இவன் விழிப்பதை ரியர்வ்யூ மிரரில் பார்த்த நசீர் இவன் பக்கம் திரும்பாமல் வண்டி ஓட்டிக்கொண்டே சொன்னான்.

‘அடுத்த முறை வரும்போது யாருக்கும் தெரியாமல் வா. இதே ரயில்வே ஸ்டேஷன். அதே நாலாவது ப்ளாட்ஃபார்ம். மறக்காம ஒற்றைத் தலைவலின்னு லெட்டர் எழுதி வச்சிட்டு வா’

சித்தரஞ்சன் ‘சரி டா’ என்று முனகினான். கண்களை மூடிக்கொண்டான்.


-aathmaarthi@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button