இணைய இதழ் 121சிறுகதைகள்

ராஜகோபுரம் – றின்னோஸா

கும்பகோணத்தின் அந்திப் பொழுது, ஒரு மெல்லிய சந்தனப் பூச்சாக ஊர் முழுவதும் பரவியிருந்தது. அகல்யாவின் வீட்டு ஜன்னல் வழியே, ஆதி கும்பேஸ்வரர் கோவிலின் வானளாவிய ராஜகோபுரம் கம்பீரமாகத் தெரிந்தது. அந்திச் சூரியனின் தங்கக் கதிர்கள் கோபுரத்தின் கலசங்களில் பட்டுத் தெறிக்க, ஜன்னல் வழியே புகுந்த காவிரிக் கரையின் ஈரக் காற்று அகல்யாவின் முகத்தை மென்மையாக வருடியது. அந்தக் காற்றில் நந்தவனத்துப் பூக்களின் மணமும், எங்கோ ஒரு வீட்டில் ஏற்றப்பட்ட சாம்பிராணிப் புகையின் வாசனையும் கலந்திருந்தது.

மேசை மீது கிடந்த தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலின் பக்கங்கள், அந்தத் தென்றலில் ஒருவித தாளலையோடு படபடத்தன. பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வாசித்தபோது, அந்தப் பக்கங்களிலிருந்து அலங்காரத்தம்மாளின் கணீர் குரல் கேட்பது போன்ற ஒரு பிரமை அவளுக்குள். “எனக்கு எது பிடிக்குமோ அதைச் செய்தேன்” என்று உரக்கச் சொல்லும் அந்தப் பாத்திரத்தின் அதீத துணிச்சலும், அதனால் அவளது மகன் அப்பண்ணாவின் நெஞ்சில் விழுந்த ஆழமான பிளவும் இப்போது அகல்யாவிற்குள் ஒரு பெரும் தத்துவப் போராட்டத்தையே நிகழ்த்திக் கொண்டிருந்தன.

காவிரியின் ஓட்டம் எப்படி அமைதியாகத் தெரிந்தாலும் அடிமட்டத்தில் ஒரு வேகம் இருக்குமோ, அதுபோலவே திஜாவின் வரிகள் வெறும் சொற்களாக இல்லாமல், ரத்தமும் சதையுமாக மாறி அவள் மனதிற்குள் ஏதோ ஒரு ரசாயன மாற்றத்தை ஓயாமல் நிகழ்த்திக் கொண்டே இருந்தன. அலங்காரத்தம்மாள் – அந்தப் பாத்திரம்தான் எவ்வளவு அடாவடியான ஒரு சுதந்திரம்! ஆனால், அந்தச் சுதந்திரத்திற்காக அவள் கொடுத்த விலைதான் என்ன?

வெளியே காவிரி ஆற்றில் அந்தி வெளிச்சம் கரைந்து கொண்டிருக்க, மனசுக்குள் கேள்விகள் அலையடிக்க, அகல்யா மெல்ல எழுந்து சென்று கண்ணாடி முன் நின்றாள்.

நாற்பதைக் கடந்து ஒரு வருடம் ஓடிவிட்டிருந்தது. ஆனால், காலத்தின் கரடுமுரடான விரல்கள் அவளது அழகைத் தீண்ட அஞ்சியது போல் ஒரு தேஜஸ் அவளது முகத்தில் அப்பிக் கிடந்தது. கணவனைப் பிரிந்த ஒரு பெண்ணின் முகத்தில், இந்தச் சமூகம் ஒருவித மனத்திருப்தியோடு தேடும் அந்தத் தளர்ச்சியோ, கண்ணீர்க் கோடுகளோ, வாழ்விழந்த வாட்டமோ அவளிடம் துளியும் இல்லை. மாறாக, ஆழமானக் கடலின் அடியில் நிலவும் ஒரு தீர்க்கமான மௌனத்தைப் போல, அவளது கண்களில் ஓர் அமைதி குடிகொண்டிருந்தது. அந்த அமைதியும், குலையாத அழகும்தான் அவளுக்கு ஒரு சாபமாகவும், அதே சமயம் அவளது வைராக்கியத்தைப் பரிசோதிக்கும் உரைகல்லாகவும் மாறின.

அவளைச் சுற்றித் திரியும் மனிதர்கள், அவளது தனிமையை ஒரு வாய்ப்பாகக் கருதி அலைந்தனர். அலுவலகத்தில், சொற்களுக்கு இடையே தேன் தடவி வலை விரிக்கும் ராகவன்; பக்கத்து வீட்டுப் பத்மாவின் கணவன் பாஸ்கரின் பார்வையில் அவ்வப்போது தெறிக்கும் காமக் கசடு; ஃபேஸ்புக் இன்பாக்ஸில் ‘ஹாய்’ போட்டுத் தொடங்கி, அவளது தனிமையின் ஆழம் பார்க்கத் தூண்டில் போடும் அந்த வாலிப வயோதிக அன்பர்கள் என ஒரு பெரும் கூட்டமே அவளைச் சூழ்ந்திருந்தது.

அவர்கள் யாவரும் கையில் ஆயுதம் ஏந்தாத, கோட்-சூட் அணிந்த ‘நாகரிக வேட்டைக்காரர்கள்’. அவர்களின் போலிப் புன்னகைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பசியையும், அநாகரிகமான வேட்கையையும் அகல்யாவின் புத்தி மிகச் சரியாகவே எடை போட்டிருந்தது. இரையைச் சுற்றும் ஓநாய்களின் மூச்சுக் காற்றுத் தன் மீது படாதவாறு, ஒரு கண்ணுக்குத் தெரியாத வேலியைத் தன்னைச் சுற்றி அவள் எப்போதும் வைத்திருந்தாள்.

“அம்மா… பசிக்குதுமா!” – பத்தாம் வகுப்பு படிக்கும் விஷ்ணுவின் அந்தக் குரல், ‘அம்மா வந்தாள்’ நாவலின் அந்த மாயப் பிரபஞ்சத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த அகல்யாவைச் சட்டென்று நிகழ்காலத்தின் தரைக்கு இழுத்து வந்தது. புத்தகத்தை மூடி வைத்தபோது, ஜானகிராமனின் அனல் தெறிக்கும் வரிகள் ஏற்படுத்திய அந்த வெப்பம், ஒரு மின்சார அதிர்வைப் போல இன்னும் அவள் விரல் நுனிகளில் எஞ்சியிருந்தது.

சமையலறைக்குள் நுழைந்தவள், பாத்திரங்களின் சந்தங்களுக்கு நடுவே தன் பிம்பத்தைத் தேடினாள். விஷ்ணு அவளது அச்சு அசல்; ஒரு சிற்பியின் கைவண்ணத்தில் செதுக்கியது போன்ற எடுப்பான நாசி, எதையும் ஊடுருவிப் பார்க்கும் தீர்க்கமான கண்கள். தன் கருப்பையில் சுமந்து பெற்றெடுத்த தன் நகலையே எதிரே காண்பது அவளுக்கு ஒரு விசித்திரமான பலத்தைக் கொடுத்தது.

மகனுக்கு உணவு பரிமாறிவிட்டு மீண்டும் ஜன்னலோரம் வந்து அமர்ந்தபோது, அந்திப் பொழுது இன்னும் கொஞ்சம் அடர்ந்து, கருநீல நிறமாக மாறியிருந்தது. காற்றில் ஈரப்பதம் கூடி, ஜன்னல் கம்பிகளுக்கு இடையே புகுந்து புறப்படும் காற்று, ஏதோ ஒரு சோக ராகத்தை மீட்டிக் கொண்டிருந்தது. அகல்யாவுக்கு அந்த நிசப்தத்தின் கனம் பிடித்திருந்தது. ஆனால், அந்த நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு அவளது நினைவுகளின் ‘டைம்லைன்’, காலத்தின் நதியை எதிர்த்துப் பின்னோக்கி ஓடத் தொடங்கியது.

பத்து வருடங்களுக்கு முன்பு, அந்த நச்சுத்தன்மை வாய்ந்த உறவிலிருந்து அவள் வெளியேறியபோது, இந்தச் சமூகம் அவளை ஒரு தோற்றுப்போனவளாகத்தான் முத்திரை குத்தியது. ஆனால் அகல்யாவுக்குத் தெரியும், அது தோல்வியல்ல; மூச்சுமுட்ட வைக்கும் ஒரு சிறையிலிருந்து தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள அவள் கையாண்ட மிகச்சிறந்த தற்காப்பு யுக்தி என்று.

சட்டரீதியான விவாகரத்து எனும் காகிதங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமான முத்திரைகளுக்காகக் காத்திருக்கலாம்; ஆனால் மனதளவில் அந்த உறவு, ஒரு பழைய பாழடைந்த வீட்டின் மூலையில் அறுந்து தொங்கும் நூலாம்படை போல எப்போதோ உயிரற்றுப் போயிருந்தது.

இந்த ஒரு தசாப்த காலத்தில் அவள் சேமித்த வசைகளும், எதிர்கொண்ட வக்கிரப் பார்வைகளும், கடந்து வந்த அவமானங்களும் ஒரு பெரும் நாவலுக்கான அடர்த்தியைக் கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் அவள் ஒரு போர்க்களத்தில்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

அலுவலகத்தின் அந்த நவீன கார்ப்பரேட் சூழலில், சென்ட்ரலைஸ்டு ஏசியின் அதீதக் குளிரையும் மீறி, மேலாளர் ராகவன் அவளது கியூபிகலுக்குள் நுழையும்போதெல்லாம் ஒருவிதமான ‘மஸ்க்’ வாடை காற்றில் ஏறும். அது விலையுயர்ந்த வாசனைத் திரவியத்தின் மணம் அல்ல; ஒரு வேட்டை மிருகத்தின் எச்சில் நாற்றம் என்பதை அவளது உள்ளுணர்வு துல்லியமாக உணர்ந்திருந்தது. “அகல்யா, நாளைக்கு சைட் விசிட் இருக்கு… என் கார்லயே போயிடலாம், ‘கம்பர்டபிளா’ இருக்கும்” என்று அவர் இதழ் பிதுக்கிச் சொல்லும்போது, அந்த ‘கம்பர்டபிளா’ என்கிற வார்த்தைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வக்கிரம் அவளுக்கு அப்பட்டமாகத் தெரியும். “தேங்க்ஸ் சார், நான் பப்ளிக் டிரான்ஸ்போர்ட்ல ‘கம்பர்டபிளா’ இருக்கேன்” என்று வார்த்தைகளால் ஒரு வாள் வீசிவிட்டு நகர்வாள்.

ஆனால், பக்கத்து வீட்டு பாஸ்கர் வேறு ரகம். அவள் தோழி பத்மாவின் கணவன் என்கிற அணுக்கம் அவனுக்கு ஒரு கூடுதல் துணிச்சலைத் தந்திருந்தது. “வாழ்க்கைங்கிறது ஒருமுறைதான் அகல்யா… உனக்கும் ஒரு வடிகால் வேணுமில்ல? எதுக்காக இப்படி ஒரு கூட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிற?” என்று அவன் கேட்கும்போது, அவனது கண்கள் அத்துமீறி அவளைத் தீண்டுவதை உணர்வாள். அவனுக்காகப் பத்மாவின் நட்பைத் துறக்கவும் முடியாமல், கசப்பை விழுங்கவும் முடியாமல் அவளுக்குள் அது ஒரு தீராத அவஸ்தை.

“ஏன் அகல்யா, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவுல வர்ற புரிதல் தப்புன்னு யாரு சொன்னது? உன்னோட இந்த அழகையும் இளமையையும் இப்படி வீணாக்குறது நியாயமா?” என்று அவ்வப்போது இன்பாக்ஸில் வழியும் மெசேஜ்களுக்கு ‘பிளாக்’ பட்டனை அமுக்கிப் பதில் சொன்னாலும், ஒவ்வொரு முறையும் அந்தச் சொற்கள் அவளது சுயமரியாதையின் மீது அமிலமாக விழுந்து மனதை அரித்துக் கொண்டே இருந்தன.

இந்த ‘நாகரிக வேட்டைக்காரர்களுக்கு’ ஒரு பெண் தனிமையில் இருப்பது என்பது, திறந்து கிடக்கும் ஒரு வேட்டைக்களமாகவே தெரிந்தது. ஆனால், அகல்யாவைப் பொறுத்தவரை, அவளது தனிமை என்பது பிறரால் திணிக்கப்பட்ட ஒன்றல்ல; அது அவளே செதுக்கிக் கொண்ட ஒரு மேன்மையான அந்தரங்கம். ஒரு வடிகாலுக்காகவோ அல்லது உலகியல் சௌகரியங்களுக்காகவோ தனது அந்தரங்கத்தின் கதவுகளை எந்த அந்நியனுக்கும் திறந்துவிடும் உத்தேசம் அவளுக்கு எள்ளளவும் இல்லை.

அன்று மாலை, விஷ்ணு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றிருந்தான். அந்த நிசப்தமான பொழுதில் தன் அலுவலகத் தோழி பிரியாவிடம் தொலைபேசினாள் அகல்யா. அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் ஆடிட்டிங் பற்றிய அலுவல் ரீதியான பேச்சு, மெல்லத் திசைமாறி அகல்யாவின் தனிப்பட்ட வாழ்க்கையின் பக்கங்களுக்குத் திரும்பியது.

“ஏன் அகல்யா, உன்னை நினைச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கு. நீயும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி ஒரு தீவு மாதிரியே இருப்ப? உனக்கும் ஒரு வாழ்க்கை, ஒரு துணை வேணுமில்ல? ராகவன் மாதிரி அதிகாரமும் அந்தஸ்தும் இருக்கிற ஆட்கள் ஏன் உன்னைச் சுத்துறாங்கன்னு உனக்கும் தெரியும். இந்த வயசுல ஒரு துணையைத் தேடிக்கிறதுல என்ன தப்பு?” என்றாள் பிரியா.

அகல்யாவின் இதழ்களில் ஒரு மெல்லிய, பொருத்தமான சிரிப்பு அரும்பியது.

பிரியா விடவில்லை, “உனக்குத்தான் தி.ஜா-வை ரொம்பப் பிடிக்குமே! ‘அம்மா வந்தாள்’ நாவல்ல அலங்காரத்தம்மாள் மூலமா அந்த காலத்துலயே எவ்வளவு புரட்சிகரமான சிந்தனைகளை அவர் சொல்லியிருக்காரு? நீ அவர் கதையப் படிக்கிறியே தவிர, இன்னும் அந்தப் பழைய காலத்துப் பஞ்சாங்கமாத்தான் சிந்திக்குற. உன்னைப் புரிஞ்சுக்கவே முடியல அகல்யா. இன்னைக்கு டெக்னாலஜி எங்கேயோ போயிருச்சு, நீதிமன்றங்களே திருமணம் தாண்டிய உறவு தப்பில்லைனு தீர்ப்பு வழங்கிடுச்சு. தேவைகள்தானே ஒரு மனுஷனோட தெரிவுகளைத் தீர்மானிக்குது?” என்று தன் வாதத்தை அடுக்கினாள் தோழி.

“ஜானகிராமன் நாவல்ல வர்ற அந்த அலங்காரத்தம்மாள், அவளுக்குப் புடிச்ச மாதிரி அவ இஷ்டத்துக்கு வாழ்ந்துட்டா. இப்போ இருக்கறவா இத ‘You Live Only Once’னு ஏதோ ஃபேஷனாச் சொல்றா. ஆனா, அந்தத் தனிப்பட்ட சுதந்திரம், அவளோட பையன் அப்பண்ணாவோட மனசை எப்படியெல்லாம் போட்டுப் பிதுக்கி இருக்கும்னு எவனாவது யோசிச்சுப் பாத்துருக்கானா? அலங்காரம் தன் உடம்போட ஆசைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, தன் ரத்தத்தோட நிம்மதிக்குக் கொடுக்காம விட்டுட்டா பாரு… அங்கதான் அவ தோத்துப் போயிட்டா. ஊர்ல இருக்கறவன் அவளைப் பத்தித் தூத்திப் பேசின ஒவ்வொரு சொல்லும் அந்தப் பையன் காதுல விழுந்தப்போ, அவன் ஒவ்வொரு தடவையும் செத்துப் பிழைச்சிருப்பான் பிரியா!”

தோழி குறுக்கிட்டாள், “அது அந்தக்காலம் அகல்யா. இப்போதைய ‘மாடர்ன்’ உலகம் இதையெல்லாம் பெரிசா எடுத்துக்காது.”

“உலகம் ஒண்ணும் மாறல பிரியா, நாம பேசற பாஷை வேணா மாறியிருக்கலாம்,” அகல்யாவோட குரலில் வைரம் மாதிரி ஒரு உறுதி தெறித்தது.

“நேத்திக்கு விஷ்ணு ஸ்கூல்லருந்து வரும்போது சொன்னான், ‘அம்மா, என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் உன்னை ரொம்பப் பாராட்டுறா. நீ எவ்வளவு கஷ்டப்பட்டு என்னை வளர்க்கறேன்னு அவா ஆத்து அம்மாக்கள்லாம் பேசிக்காளாம்’. அதை அவன் சொல்லும்போது அவன் முகம் எவ்வளவு பிரகாசமா இருந்தது தெரியுமா? அந்தத் தலை நிமிர்வுதான் பிரியா என் சொத்து. நான் பண்ற ஒரு கண நேரச் சலனம், என் பையனோட அந்த நிமிர்ந்த தலையைத் தொங்கவிட்டுடும். ஒரு பையனுக்குத் தன் அம்மான்னா ஒரு தேவதை மாதிரி. அந்தத் தேவதையோட சிறகுல ஒரு துளி கறை படிஞ்சா கூட, அவன் இந்தச் சமூகத்துல கூனிக் குறுகிப் போயிடுவான். எனக்கு என்னோட தற்காலிக சந்தோஷத்தை விட, என் மகனோட நிரந்தரமான தலைநிமிர்வுதான் முக்கியம். இந்த வீதியில அவன் இறங்கி நடக்கும்போது, ஊர் உலகத்து கண்ணைத் தைரியமா நேருக்கு நேர் பாத்துட்டு நடக்கணும்.”

மறுமுனையில் நிலவிய நிசப்தத்தைத் துளைத்துக்கொண்டு அகல்யா தொடர்ந்தாள்.

“இந்தத் திருமணம் கடந்த உறவு, பர்சனல் ஃப்ரீடம்ங்கறதெல்லாம் வெளியில பேசறதுக்கு ரொம்பப் பளபளப்பா இருக்கலாம் பிரியா. ஆனா, ஒரு அம்மாவா நான் எடுக்கற ஒவ்வொரு முடிவும் என் பையனோட அடையாளத்தைத் தீர்மானிக்கிறது. நான் சலனப்பட்டு வைக்கற ஒரு தப்பான அடி, நாளைக்கு என் மகன் காலேஜ்லயோ, இல்லாட்டி ஒரு ஆபீஸ்லயோ நாலு பேருக்கு மத்தியில நிக்கறப்போ, அவன் முதுகுக்கு பின்னாடி ஒரு ஏளனப் பேச்சா வந்து நிக்கும். ‘அவன் அம்மாவா… அவளைப் பத்தித்தான் தெரியுமே’ங்கற அந்த ஒரே ஒரு வரி, அவனை வாழ்க்கையில நிமிரவே விடாது. ஒரு தாயோட ஒழுக்கம்ங்கறது அவளுக்கு மட்டுமே சொந்தமானது இல்ல பிரியா; அது அவ பிள்ளைகள் இந்தச் சமூகத்துல சூடிக்கற கௌரவம்!” என்று சொல்லிவிட்டு, அமைதியாக அழைப்பைத் துண்டித்தாள்.

ஜன்னல் வழியே தெரிந்த ராஜகோபுரம், நிலவொளியில் நனைந்து மாபெரும் பிரம்மாண்டமாய் வானத்தை முட்டி நின்றது. அந்த நிமிர்ந்த கோபுரம் அகல்யாவின் கண்களுக்கு தன் மகன் விஷ்ணுவாகவே தெரிந்தது. 


rinnokrishna@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button