இணைய இதழ் 121கட்டுரைகள்

பாரதியின் தாக்கம்: திரையில் பாரதியின் வரிகள் – கமலா முரளி

பாரதியின் வைரவரிகள் இன்றளவும் வைரல் வரிகளாக, தமிழ் கூறும் நல்லுலகில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் உள்ளன. தமிழ் அறிந்த ஒவ்வொருவர் மனதிலும் ஆழமான தாக்கத்தை, நேர்மறையான தாக்கத்தை பாரதியின் கவிதைகள் ஏற்படுத்தும்.

தமிழ்த் திரையுலகில் பாரதியின் தாக்கம் இல்லாமலா? பாரதியின் புதுமைப்பெண்ணை பல திரைப்பட நாயகியரின் நடையிலும் பாவனையிலும், நேர் கொண்ட பார்வையிலும் காணலாம். பாடல்களிலும் பாரதியின் தாக்கம் நிச்சயம் உண்டு! பல பாடல்களில் இடம் பெறும் “கண்ணம்மா”, “கிளியே”, “கண்ணன்” மற்றும் “அச்சம் இல்லை” போன்றவை பாரதியின் குறியீடுகள்தானே!

“வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி, வாழிய வாழியவே” என்ற பாரதியின் பாடல் 1935-ஆம் ஆண்டு வெளியான ‘மேனகா’ திரைப்படத்தில் இடம்பெற்றது. நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, “ஆடுவோமே பள்ளு பாடுவோமே” பாடல் மிகப் பிரபலம். “நாம் இருவர்” (1947 ஜனவரி) படத்தில் அப்பாடல் டி. கே. பட்டம்மாள் குரலில் எங்கும் ஒலித்தது.

பாரதியின் வரிகள் பல படங்களில் வந்துள்ளன. ஒரே பாடல் வெவ்வேறு படங்களில், வெவ்வேறு இசையமைப்பாளர்கள் வெவ்வேறு மெட்டுகள், வெவ்வேறு பாடகர்களின் குரலில் வெளிவந்துள்ளன.

உதாரணமாக, “சின்னஞ்சிறு கிளியே” பாடல், ‘மணமகள்’, ‘நீதிக்குத் தண்டனை’ மற்றும் ‘குற்றம் கடிதல்’ படங்களில் வந்துள்ளது. “மனதில் உறுதி வேண்டும்” என்ற பாடல் ‘கள்வனின் காதலி’, ‘ஏழாவது மனிதன்’ மற்றும் ‘சிந்து பைரவி’ போன்ற படங்களில் வந்துள்ளது.

ஒரே திரைப்படத்தில் பாரதியாரின் பாடல்கள் அதிக எண்ணிக்கையில் அமைந்த திரைப்படங்களும் உண்டு.

உதாரணமாக, ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படத்தில் ஒன்பது பாடல்களும், ‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்தில் பதினொரு பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

முழுப்பாடலும் பாரதியாரின் பாடல் வரிகளுடன் உள்ள பாடல்கள் தவிர, பாடலின் ஒரு பகுதியாக, தொகையறாவாக பாரதியாரின் வரிகளைக் கொண்ட பாடல்களும் உள்ளன.

‘இளமை உஞ்சலாடுகிறது படத்தில் வரும் “என்னடி மீனாட்சி” பாடல். தொடக்கத்திலும் முடிவிலும் வரும், “வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா, மார்பு துடிக்குதடி” என்ற வரிகள் எல்லோரையும் கவர்ந்திழுக்கும். இளையராஜாவின் மெட்டா, எஸ்.பி.பியின் கந்தர்வக் குரலா… பாரதியின் கவிதை செய்யும் மாயமா… அவரது பாடல் வரிகள் கடத்தும் உணர்ச்சிப் பிரவாகம் நம்மை ஆட்கொள்கிறதே! ஆம்! அந்தப் பாடலில் வருவது போல், நாமும் “கமான் க்ளாப்” என்று பாரதியின் சொல்நயத்தை வியந்து கைதட்டி பாடலுடன் பயணித்திடுவோம். இளையராஜா இசையில் வாலியின் பாடல் வரிகளோடு ஓர் உணர்ச்சி ததும்பும் பாடல்.

‘இரு கோடுகள்’ திரைப்படத்தில் ஒரு பாடல். “மூன்று தமிழ் தோன்றி விளையாடியதும் இங்கே” எனத் தொடங்கும். “நகைச்சுவைத் திலகம்” நாகேஷ், பாரதி வேடம் அணிந்து, பாடலைப் பாடுவதாகக் காட்சி அமைப்பு. இந்தப் பாடலில் பாரதியின் பாடல் வரிகளை கனகச்சிதமாகப் பயன்படுத்தி இருப்பார்கள். ‘பாரதியார் நேரடியாக வந்தால் எப்படி இருக்கும்?’ என்ற கற்பனையுடன் வித்தியாசமாக இருக்கும் பாடல். ”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்… புதுமைப்பெண்களடி” என்ற பாரதியின் வரிகளும், “ஓடி விளையாடு பாப்பா”, “விடுதலை, விடுதலை” மற்றும் “திக்குத் தெரியாத காட்டில்” போன்ற வரிகளும் பாடலில் இடம் பெற்று இருக்கும். வி.குமார் இசையமைப்பில், வாலியின் பாடல் வரிகளோடு சிந்திக்க வைக்கும் ஒரு பாடல்!

தமிழ்ச் சமுதாயம் வீறு கொண்டு எழும் பாரதியின் எழுச்சிமிகு சொற்களைக் கேட்டு! அவரது, “தேடிச் சோறு நிதம் தின்று” கவிதைக்கு உருகாதோர் யாருமுண்டோ? “வீழ்வேன் என்று நினைத்தாயோ” என்பதை “ஸ்டேட்டஸ்” ஆக வைத்திருப்பவர்கள் ஒரு கோடி பேர் உண்டு! அந்த வைர வரிகள், ‘மகாநதி’ திரைப்படத்தில், வசன நடையில், கமலஹாசனின் கணீர் குரலில் வரும். அப்போது மட்டுமல்ல, இப்போதும் அந்த ஒலிப்படிவம் சூப்பர்ஹிட்தான்!

பாரதியாருடன் நேரிடையாகப் பழகிய கல்யாணசுந்தரம் என்பவரைச் சந்தித்தது குறித்து, திரு.எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் அவரது வலைப்பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் அவர் பாரதியார் ஊருக்கு வெளியே கிடந்த கழுதைக்குட்டியைத் தூக்கிக் கொஞ்சி முத்தம் கொடுத்ததை நினைவு கூர்கிறார். அதைப் படிக்கும் போது, 1977-ஆம் ஆண்டு வெளிவந்த, ‘அக்ரஹாரத்தில் கழுதை’ திரைப்படம் என் நினைவுக்கு வந்தது. அதிலும், பாரதியின் வசன கவிதைகளில் காட்சி- இரண்டாம் கிளையில் ’புகழ் ஞாயிறு’ பகுதியில் வரும், ”தீ எரிக” கவிதை வரிகள் திரைப்படத்தில் டைட்டில் கார்டு பகுதியில் வரும். படம் முடியும் தருவாயில், பாரதியின் “ஊழிக்கூத்து” கவிதை ‘வெடி படு மண்டத் திடிபல தாளம் போட” வரிகள் வரும். எம்.பி.ஸ்ரீனிவாசனின் இசை மற்றும் குரலில், மிகச் சிறப்பாக அமைந்திருக்கும் படத்தில்!

குன்னக்குடி வைத்தியநாதன் இசையில், கண்ணதாசன் பாடலுக்கு, கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் மந்திரக்குரலில், “தகதகவென தகதகவென ஆட வா” பாடல் மறக்க முடியாத ஒன்று! பாரதியின் “சக்திக்கூத்து” பகுதியில் அவரே பியாக் ராகத்தில் அமைத்துள்ள பாடலின் பல்லவி என்ன தெரியுமா? “தகத்தகத் தகத் தகத் என்றோடோமோ? சிவ சக்தி சக்தி சக்தி சக்தியென்று ஆடோமோ?” என்பது தான்!

‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில் இரு முழுப் பாடல்கள், பாரதியின் பாடல்கள் இடம் பெற்று இருக்கும் அது தவிர, பாரதியின் கவிதைகளை அவ்வப்போது சொல்லும் கதையின் நாயகன்! அன்றைய காலகட்டத்தில் இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்றால் மிகையாகாது.

பாரதியின் “அச்சமில்லை, அச்சமில்லை” வரிகள், பல பாடல்களில் உள்ளீடாக, தொகையறாவாக ஆதி நாதமாக இடம் பெற்று இருக்கும்.

திரைப்பாடல்களில் பாரதியின் தாக்கம் பற்றி இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.

காதல், வீரம், ஆனந்தக் கூத்து மனநிலை, தேசபக்தி, எழுச்சி, சோகம் எனப் பல்வேறு உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாரதியாரின் கவிதை வரிகள் அள்ள அள்ளக் குறையாத பொக்கிஷம்! பாரதியின் தாக்கம் திரையுலகில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். 

kamalamurali63@gmail.com                                          

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button