நான்: ஒரு போஹேமியன் பயணி – காயத்ரி சுவாமிநாதன் – அத்தியாயம் 08

தைரியம் தந்த தோள்- பீகார் நோக்கி ஒரு தேசாந்திரியின் முதல் படி
சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தின் அந்தப் பரபரப்பான மேடையில், இரும்புச் சக்கரங்கள் சப்தமிடும் இடையில், என் மனம் மட்டும் ஒரு நொடி நிசப்தமாக நின்றது. அந்த நிசப்தத்தின் மையத்தில் நின்றவர், என் வாழ்வின் உறுதியான நிழல், என் பயணங்களின் மறைமுகப் பாதசாரி, என் கணவர் குங்குமராஜ். “பத்திரமாக போயிட்டு வா பாப்பா” என்று சொன்ன வார்த்தைகள், வெறும் விடைபெறல் அல்ல; அது ஒரு தேசாந்திரத்திற்கான ஆசீர்வாதம். அச்சம் வந்து மனதைத் தொட்டபோது, அவர் கொடுத்தது கண்ணீரல்ல, தைரியம். சென்னை சென்ட்ரலின் அந்தச் சிகப்பு ரயில் வண்டிகள் முன் நின்றபோது, என் கைகளில் பயணப் பை மட்டும் இல்லை; அவர் நம்பிக்கையும், அவர் கொடுத்த தைரியமும் சேர்ந்து இருந்தது. “நீ போகணும்… நீ பார்க்கணும்… இந்த மண்ணை உன் கண்களால் உணரணும்” என்ற அவருடைய வார்த்தைகள், என்னை ஒரு தேசாந்திரியாக மாற்றின. “டாடா பாப்பா… பை பாப்பா… உனக்காக எப்போதும் காத்திருக்கிறேன்” என்று சொல்லிய அந்த நொடி, ஒரு மனைவியின் கண்களில் இருந்தது அச்சமல்ல; ஒரு தேசாந்திரியின் கனவு. அந்தக் கனவுக்குப் பின்னால் நின்றவர், என்னை பீகாரின் பாதைகளுக்குத் தள்ளிவிட்ட ஒரு உறுதியான மனிதன். இந்தப் பயணம் எனது விருப்பத்தினால் மட்டுமல்ல; அவரின் நம்பிக்கையால் தொடங்கிய பயணம். அவர் தந்த தைரியமே என் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் என் அருகில் பயணித்தது.

தேசாந்திரியின் பாதையில் — பீகார் நோக்கி ஒரு நெடும் பயணம்:
மழைத் துளிகள் ரயில் கூரையில் தட்டித் தட்டிப் பாடியபடி நனைக்கும் காற்றைச் சுமந்துகொண்டு நான் என் பையைத் தூக்கியபடி தேசாந்திரி பயணம் என்ற பரந்த உலகிற்குள் நுழைந்தேன். அந்தப் பெருநிலையத்தில் நின்றிருந்த ரயில் என்னை எங்கோ மர்மத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு நீண்ட பல்லக்காக இருந்தது. அந்நேரம் அந்நியர்கள் எப்போதும் எனது பயணத்தை ஆசீர்வாதம் செய்வார்கள் என்ற ஒரு விசித்திரமான உணர்வு மீண்டும் என்னுள் எழுந்தது. ரயில் புறப்பட்டதுமே, நனைந்த காற்று சாளரத்தைக் கிழித்துப்போடுவது போல குளிரை வீசியது. நாட்டின் ஓரத்திலிருந்து இன்னொரு ஓரத்துக்கு செல்லும் இந்தப் பயணத்தில், இந்தியாவின் பல வடிவங்கள் பரிமளித்தபடி என் கண்முன்னே விரிந்தன. பச்சை பசுமையால் போர்த்திய வயல்கள், மழையின் பளபளப்பில் நெய்த மெழுகு ஓவியங்களைப் போல் தெரிந்தன.
கிருஷ்ணா நதியை முதன்முதலாக பார்த்த கணம்
அது ஓர் அனுபவம் மட்டுமல்லாமல், ஓர் அற்புதம். ஒரு ரயில் பாலத்தின் நடுவே நின்று, இரு கரைகளையும் இணைக்கும் அந்தப் பெருநதி பழங்கால காவியத் தலைவனாக என் கண்களின் முன்னே பாய்ந்தது. பாலத்தின் கீழே மஞ்சள் நீரின் இரைச்சல், பாலத்தின் மீது ரயிலின் அதிர்வொலி. இரண்டு காலங்களை இணைக்கும் ஒரு புலம்பல் போல இருந்தது. மனிதன் கட்டிய இரும்புப் பாதையும், இயற்கை உருவாக்கிய நதியும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு ஒலிப்பதுபோல் எனக்குள் உணர்ந்தேன். அதெல்லாம் தாண்டி, என் தேசாந்திரப் பயணங்களில் எப்போதும் நிகழ்வது போலவே, யாரென்று கூடத் தெரியாத அந்நியர்கள் வந்து எனக்கு உணவை அளித்தார்கள். அறிமுகமில்லாதவள் என்றாலும், அன்பு அளிப்பதில் இந்திய மண்ணுக்குக் எந்த குறையும் இல்லை என்பது மறுபடியும் எனக்கு உணர்த்தப்பட்ட்டது. பல மணி நேரங்கள் ஓடித்தொடர்ந்தபடி ரயில் வடக்கை நோக்கிப் பாய்ந்தது. ரயில் ஒவ்வொரு மாவட்டத்தையும், ஒவ்வொரு காலநிலையையும் கடக்கும்போதெல்லாம் எனக்குள் புதுவித அற்புதங்கள் பொங்கி வந்தன.

பீகார் – என் வாழ்க்கையில் அழியாத செதுக்கல்
ரயில் பீகார் எல்லைக்குள் நுழைந்த தருணமே, என் உள்ளத்தில் ஒரு விசித்திரமான பழமை நெசவிழை என விழுந்தது. அங்கு வீடுகள், குறிப்பாக கிராமப் பகுதிகளில், வெறும் செங்கல்லினால் மட்டும் கட்டப்பட்டு, மேல் பூச்சு எதுவும் போடப்படாத அலங்காரமற்ற வறண்ட சுவர்களின் நடுவே வாழ்ந்துகொண்டிருந்த மக்களின் உலகம் என் கண்முன்னே விரிந்தது. அந்த வீடுகளைப் பார்த்தபோது, அது ஏழ்மை இல்லை, ஒரு திண்மையான எளிமை; எந்த கற்பனைச் சாயமும் இல்லாத ஒரு வாழ்வியல் உண்மை என்பதை உணர்ந்தேன். அங்குள்ள ஒவ்வொரு சுவரும், அதன் பிளவுகளும், அதன் மண்ணின் நிறமும், அங்கிருந்த மனிதர்களின் கதைகளை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தன. இந்த நிலம் ஒவ்வொரு அம்சத்திலும் எனக்கு புதிய விளக்கங்களை அளித்தது. ஒரு மாநிலம் என்றுமே புத்தகங்களில் படிக்கப்படும் தரவுகளால் புரியாது. அதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றால், அது அதனுடைய மண்வாசனையால், அதன் முகங்களால், அதன் வீடுகளின் வெறுமையால், அதன் நதிகளின் ஓசையால் மூலமே சாத்தியமாகும். கயா ரயில் நிலையத்திற்கு சேரும் முன், அதிசயங்கள், அந்நியர்களின் உபசாரங்கள், மழையின் இசை, வயல்கள், நதிகள், பழமையான வீடுகள் அனைத்தும் ஒன்றாகக் குவிந்து என் இதயத்தில் ஒரு நினைவு மண்டபத்தைக் கட்டின.

நிழலற்ற செங்கல் வீடுகளின் பேருலகம்
பீஹாரை நோக்கிச் செல்லும் பாதையில், சாளரத்துக்கு வெளியே தெரிந்த காட்சிகள் வேறு ஓர் உலகம். அங்கு வீடுகள், சுத்தமான செங்கல்லால் மட்டும் பதித்துக் கட்டப்பட்டவையாக இருந்தன. அது மேல் மசாலாவோ, வர்ணனையோ, நிறமோ எதுவும் இல்லாமல், அழகு என்பது நேர்மையான வெறுமை என அறிவிக்கின்றது போல காட்சியளித்தது. அந்தக் காட்சிகள் எனக்குள் ஓர் கேள்வியை எழுப்பியது: ‘எப்படி இப்படி எளிமையாக வாழ்கிறார்கள்?’. ஆனால், நான் அங்கே பார்த்தது வறுமை அல்ல; தன்னம்பிக்கை நிறைந்த குறைந்தபட்ச வாழ்க்கை என்ற சுத்தமான வடிவம். மழையால் நனைந்த அந்த செங்கற்கள், ஒரு கவிதை போல நிறமில்லாமலே நிறைவானதாக இருந்தது. நான் புகைப்படங்கள் எடுத்தபோது, ஒவ்வொரு படத்திலும் ஒரு முழு மாநிலத்தின் அமைதியான அதிர்வுகள் இருந்தன. மக்கள் நடந்து சென்றதின் தூசுகள், சலசலக்கும் மரங்கள், கற்சுவர்களின் நிழல்கள், வானின் மங்கலான நீலம்.
இவை அனைத்தையும் பார்த்தபோது, தேசாந்திரிப் பார்வையில் நான் உணர்ந்தது ஒன்றே ஒன்றுதான். இந்தியாவை அறிவது என்பது புத்தகத்தில் மூலமாக அல்ல; ரயிலின் சாளரக் காட்சிகளின் மூலம்தான்.
(தொடரும்)



