ஒளியன் கவிதைகள்

பெரிதாக ஒன்றுமில்லை
இடக்கண் ஒளி இழந்துவிட்டது
சில விரல்கள் பயனற்றவை ஆகிவிட்டன
வலது கால் மூட்டு கழன்றுது போல்
எப்போதும்
கொஞ்சம் தாங்கியே நடக்க வேண்டியுள்ளது
நானாய் வருவித்த வடுக்கள் சிலவும்
முகத்தில் தொல்பழங்காலக் கீறல்களாய்
வந்த வழி காட்டுகின்றன
நெஞ்சில் நெடுஞ்சுமையாய்
சில கதைகள் எழுதி மூடப்பட்டிருக்கின்றன
இருந்தபோதும்
பெரிதாக ஒன்றுமில்லை.
*
நினைவுகளாய் நின்றது காலம்
காலங்கள் உருண்டோடும்
காட்சிகள் மாறிவிடும்
கதைகளாய்ப் போவதில்லை
அது கணங்கள் தோறும் உயிர்த்திருக்கும்
காற்றாய் சில விரல்கள்
நினைவில் அதை மீட்டி வரும்
என்றோ இசைத்த பாடல்
இன்றும் கூட மயிர் சிலிர்க்கும்
காலமெல்லாம் கரைபுரளும்
அலைகடலாய் ஆர்ப்பரிக்கும்
ஆழ்கடலாய் ஓர் அமைதி
என்றும் அதைச் சுமந்திருக்கும்.
*
குடித்துக் குடித்து செத்துப் போனது அப்பா
அழுது அழுது வறண்டு போனது அம்மா
அலைந்து அலைந்து நலிந்து போனது மகன்
உளுத்து உளுத்து உதிர்ந்து போனது
எங்கள் குடும்பம்.
*
இப்போதும் கூடத் தோன்றுகிறது
வாழ்விலிருந்து
எல்லோரையும் கழற்றிவிட
பிணைப்புகளைத் தேடிய கைகள்
தளர்ந்தன
உள்ளிருந்து ஒலித்தது
அசரீரி
இப்போது
“யார் உன் வாழ்வில் பிணைந்திருப்பது?”
*
ஈரோட்டில் வெளுத்த தாடி
ஒன்று இருந்தது
அந்த வெளுத்ததாடி
கருத்தை வாங்கி பெருக்கிச் சென்றது
கருத்தமேனி பொருந்த நின்ற
கவிஞன்தான் அது
தமிழன்பன் ஆனது.



