ராஜேஷ்வர் கவிதைகள்

அதீதத்தின் குறியீடு
மார்புக்கு நடுவிலிருந்து
ஒரு அங்குலம் கீழே
கசியத் துவங்குகிறது
ருசியற்ற பசி
கசியும் பசியை
வாரியெடுத்து
உண்டு செரிக்கிறது
மேற்கில் ஒரு உலகம்
காற்றின்
ஊடற்ற திசைகளில் எல்லாம்
தன் குடல் பரப்பியும்
கசிந்தபாடில்லை
ஒரு துளி ஈரம்
முலையறுந்து கிடக்கும்
தாயின் கூறுகளில்
பசியாறும் பிணந்தின்னிக்கு
அநேகமாய்
வயிறு முட்டியிருக்கும்
பசி யாரைத்தான் விட்டது
எப்படியோ
அவள் அதற்கும்
பசியாற்றியபடியே
மறைகிறாள்
மதங்களின் மடுவில்
கட்டிக்கொண்டு நிற்கிறது
மிதமிஞ்சிய பூசணம்
முட்டிக்கொண்டு அழுகிறது
பாழ் பட்டினி
ஏனோ
குருச்சேத்திரங்களில்
கடவுளர்களின்
கடைசி பிள்ளைக்கும்
சோறுடைக்கிறது
ஏதோவொரு
அதீதத்தின் குறியீடு!
*
கூவத்தின் சமீபத்திய குடில் ஒன்றில்!
கூரையின் விரிசல் வழி
நிலவின்
பெருங்கதையாடல்
நிகழ்கிற தருணம்
பின்னிரவில்
என் வீட்டு மலமும்
எதிர் வீட்டு
குருதி தோய்ந்த
நாப்க்கின்களும்
சிறிது கம்யுனிசமும்
கூடுதலாய்
சோசியலிசமும்
கூரையைப் பிய்த்துக்கொண்டு
நெடுங்கதை பேசும்
புணர்ந்துத் தீர வேண்டிய
எண்ணத்தில் புகுந்து
வண்ணங்களைத் தீட்டுகிறார்
பெருங்கடவுள்
இரண்டொரு கனத்தில்
அறுகாமைச் சுவரோடு
அதிர்கிறது குடில்
ஒவ்வொருநாளும்
சிலரை நகர்த்தியபடி
நகரம் விழித்துக்கொள்கிறது
பெருக்கெடுக்கும்
அபத்தத்தின் கரையில்
ஒதுங்குகிறது
சில மனிதர்களின் அன்றாடம்!
*
மௌன ராகம்!
எழிலாடும்
நந்தவனமொன்றில்
மலர் பறித்துகொண்டும்
மனம் கவர்ந்த
பாடலொன்றை
வாய் திறந்து
பாடிக்கொண்டும்
நிழலாடும்
தோழியர் முகங்களை வடித்து
கட்டங்கட்டி
தாவி குதித்துக்கொண்டும்
எதன் மீதோ
மனம் சஞ்சரித்தபடியும்
புலர்ந்தும் புலராத
பொன்னிற வேளையில்
தன் சுதந்திர வானில்
பறவையோடு பறவையாய்
சுற்றித் திரிந்ததாக
அம்மா கூறினாள்
அது கனவென்பது
அவளுக்கும் தெரியும்
ஏனோ
ஒவ்வொரு முறையும்
அவள் சிலாகித்துக் கூறுகையில்
யாரும் கேட்டுவிடாத
தூரத்து அறையில்
அவளுக்கென்று
அவள் பாதுகாத்து வைத்திருக்கும்
வீணையொன்று
அவளது பதினோராம் விரலால்
இசைக்கப்படுகிறது!
நிழல் கைதிகள்
ஒரு ஆயுள் கைதியின்
அருகாமை சுவரில்
முட்டிமோதி முளைவிடுகிறது
அவன் மனவெளியில்
வேரூன்றிய நினைவுகள்
இங்கு இடுக்குகளில் கசியும்
நிலவொளியை பருகிடத்தான்
அவனுக்கு அலாதிப் பிரியம்
அவ்வளவும்
பால் மனத்துக்கிடந்த
மகளை ஸ்பரிசிக்கத்தான்
இருள் போர்த்திய அரையிடுக்கில்
சில நூலிழைக் கூடுகள்
சிக்கிக்கொள்கிறது
அவன் விட்டெறியும்
அவனுக்கான சாட்சியங்கள்
பாவம்,
சிலந்திக்கும்
அவனுக்கும் மட்டுமே தெரிந்த
ரகசியம் அது
மீண்டும் பின்னப்படுகிறது
வழக்காடு கூடுகள்!
அந்த சிறிய அறையை
அவன் எப்போதோ உடைத்தெறிந்தான்
ஏனோ
ஒவ்வொரு இரவிலும் எழுப்பப்படுகின்றன
புதுப்புது சிறைச்சாலைகள்!



