ப.மதியழகன் கவிதைகள்

புத்தனுக்கு ஏதோ நடந்துவிட்டது!
தனித்திருத்தல் பழகிவிட்டால்
வேறு எந்தப் பிரிவைப் பற்றியும்
கவலைப்படத் தேவையில்லை
எனது இழப்பு ஒவ்வொன்றும்
உனது வெற்றிக்கான வாய்ப்புகளை
மேலும் சாத்தியமாக்குகிறது
மனிதனாக இருப்பது
வெட்கக்கேடானது
சாதாரணப் பறவை
தனது அலகினால் இவ்வுலகத்தை
கறைபடுத்த இயலாது
அதிகார வெறிதான்
இவ்வுலகத்தின் தலையெழுத்தை
மாற்றி எழுதியது
வாழ்க்கையை உடும்பாகப்
பிடித்துக் கொண்டுவிட்டேன்
இழந்துவிடுதலே அதைப்
பூரணப்படுத்தும் என்றுணராமல்
எனக்கான பாதையொன்றும்
புதிதானது அல்ல
வேறு ஒருவரின் வழித்தடத்தில்தான்
நான் பயணிக்க நிர்பந்திக்கப்படுகிறேன்
எல்லைக்காக மோதிக் கொள்வார்கள்
முதன்முறையாக
ஒரு தேசம் ஓர் இனத்தின் மீது
போர் தொடுத்தது
ஈழத்தில்தான்
உனது உணவுக்கு எருவானாலும்
இன்றும் கனன்றுகொண்டுதான்
இருக்கிறது
எனது இனத்தின்
புதையுண்ட எலும்புகள்
அவைகள் உக்கிரமாக ஒருநாள்
உயிர்த்தெழும்!
*
எனது கோப்பையில்
அன்பு நிரப்பப்பட்டிருந்தது
அதில் ஒரு துளி நஞ்சும்
கலந்திருந்தது
பலபேர் ருசித்ததுதான்
என்றாலும் இன்றும்
சுவை குன்றாமல் இருந்தது
எவரும் உணருவதில்லை
பூமியில் பிரவேசித்தததிலிருந்து
மெல்லக் கொல்லும் நஞ்சு
தங்களை கொஞ்சம் கொஞ்சமாக
மென்று தின்று கொண்டிருப்பதை
மனிதனின் வார்த்தைகள்
ஒவ்வொன்றும் விடம் தோய்த்த
அம்புகளை விடவும்
கொடியவை
நான் சிவனல்ல
விடமுண்ட கண்டன் ஆவதற்கு
எது என்னைச் சிறைப்படுத்தியதோ
அதனிடம்தான் மன்றாடுகிறேன்
விடுதலை அளிக்கும்படி
எல்லோருமே ஒருவிதத்தில்
சுவர்கள் தான்
முட்டிக்கொள்ளாமல் இருக்க
நீங்கள் தான்
விலகிப்போக வேண்டும்
நேற்றும் நாளையும்
மனிதனை துக்கப்படுத்துகிறது
இன்று என்பது
பிடிகொடுக்காமல் கைகளிலிருந்து
நழுவிக் கொண்டேயுள்ளது
எனது வானில்
எத்தனை நட்சத்திரங்கள்
இருந்தாலும்
நிலவை மட்டும் ஏன்
நோக்குகின்றன உனது கண்கள்?
*
எனது இரவுகள்
சபிக்கப்பட்டிருந்தன
எனது பகற்பொழுதுகளை
திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்
அவை எச்சில்படுத்தப்பட்டிருந்தன
எனது கண்கள்
உறக்கத்தைத் தழுவி
ஒரு மாதமிருக்கும்
கனவு தரும் போதைக்காக
எத்தனை முறை விஷம் குடிப்பது?
எத்தனை முறைதான்
மரணத்தைத் தழுவுவது?
எனது ரதம்
ராஜவீதயில் பயணிப்பது
இதுவே முதல் முறை
என்னிடத்தில் பிறக்கும் காதல்
உன்னை அடையும்
எந்த நொடிப் பொழுதில்
அது காமமாகிறது
இந்த முறையும்
நான் ஏமாற வேண்டும்
நீங்கள் காடாக
வேண்டுமென்றால்
கடுகு விதையாக மாறிவிடுங்கள்
பிறந்துவிட்டதற்காக
ஒருபோதும் சந்தோஷப்படாதீர்கள்
மறைந்திருந்து அம்பு எய்வது
பரமாத்மாவுக்கு ஒன்றும்
புதிதல்ல!



