இணைய இதழ் 121கவிதைகள்
பத்மகுமாரி கவிதைகள்

ஒன்றும் அவசரமில்லை
○
பத்திரப்படுத்தியிருக்கிறேன்
யாருக்கும்
கையளிக்க விரும்பாத ஒரு சொல்லை
தொலைக்கவும் மனமில்லை
அத்தனை சுலபமில்லை
அறிந்தே தொலைதல்
சத்தமில்லாமல் வெளியேறிட
அவசியமாக இருக்கிறது
நான் மட்டுமே அறிந்து வைத்திருக்கும்
பெருமழையின் வருகை
காத்திருக்கிறேன்
சொல்லப்படாத அவகாசத்தை நம்பி
○○○
பொய்த்துப்போன விரல் நுனிகள்
○
சுற்றிலும் சிதறியிருந்த
வாக்குறுதிகளின்
அழுகிய வாசனையிலிருந்து
கடைந்தெடுத்த திரவியத்தை
புட்டியிலடைத்து சுமந்தலைகிறேன்
அன்பின் மடியில்
தலைசாய்க்க எத்தனிக்கும்
முந்தைய நொடியில்
சப்தமின்றி
திறந்துக் கொள்ளும் புட்டி
ரகசியமாய் எச்சரிக்கிறது
டேக் டைவர்ஷன்
-npadmakumari1993@gmail.com



