உரிமைக்கான போராட்டங்களைக் குற்றங்களாக வகைப்படுத்தக் கூடாது -பெ. சிவசுப்பிரமணியம்
நேர்காணல்கள் | வாசகசாலை

சந்தனக் கடத்தல் வீரப்பனை, காட்டில் முதலில் சந்தித்த பத்திரிகையாளர் பெ. சிவசுப்பிரமணியம், அதனால் சிறை சென்றவர். வீரப்பன் – வாழ்ந்ததும் வீழ்ந்ததும் (நான்கு தொகுதிகள்), பொய் வழக்கும் போராட்டமும், பெரியவர் தோழர் தமிழரசன் போன்ற நூல்களை எழுதியவர். அவர் சென்னை புத்தகக்
கண்காட்சிக்கு வந்தபோது, பீட்டர் துரைராஜ் எடுத்த நேர்காணல் இது.
கே: உங்களை எதற்காகக் கைது செய்தனர் ?
ப : 1993ஆம் ஆண்டில் முதலில் வீரப்பனைக் காட்டில் சந்தித்து, அவருடைய பேட்டி, புகைப்படங்களை எடுத்தது நான்தான். பிறகு, என்மூலமாக நக்கீரன் கோபால் வீரப்பனைச் சந்தித்தார். கன்னட நடிகர் Dr.ராஜ்குமார், வீரப்பனால் 2000ஆம் வருடம் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டபோது, தமிழ்நாடு-கர்நாடக அரசுகளால் அமைக்கப்பட்ட தூதுக்குழுவில் இடம்பெற்றேன். வீரப்பனைச் சந்தித்து நல்லபடியாக இருக்கிறார் என்று எழுதினேன். அதனால், கர்நாடகத்தில் நிலவிய கொந்தளிப்பான சூழல் அடங்கி, தமிழர்கள்மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் நின்றது. ராஜ்குமார் விடுதலை பெற உதவிகளைச் செய்தேன். பிறகு, தமிழ்நாட்டில் என் வீட்டிற்கு அருகிலிருந்து, கர்நாடக மாநில காவல் துறையினர் என்னைக் கைது செய்தனர். முதலில் ராமாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்து, 90 நாள்கள் முடிந்தவுடன், பிணையில் வரப் பெற முடியாதபடி, சாம்ராஜ்நகர் காவல் நிலையத்தில் வேறொரு வழக்கில் கைது செய்தனர். அதன் பிறகு தமிழ்நாட்டில் வெள்ளித் திருப்பூர், அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி, கோவை B-1, காவல்நிலையங்களிலும், பிறகு மீண்டும் மைசூர் தடா நீதிமன்றத்தாலும் கைது செய்யப்பட்டேன். ஓராண்டு சிறையில் இருந்தேன். என்னிடம் வாக்குமூலம் பெற்று, அதனை வைத்து நக்கீரன் கோபாலை கைது செய்வது தமிழ்நாடு காவல்துறையின் திட்டமாக இருந்தது. அதனால்தான் என்னை அச்சுறுத்தத் தொடர்ந்து சிறையில் வைத்தனர். அது ஜெயலலிதா ஆட்சிக்காலம். தமிழ்நாடு காவல்துறை கைது செய்தால், இத்தனை நாளாக ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வி வரும் என்பதற்காக, கர்நாடக மாநில காவல்துறை மூலம் கைது செய்ய வைத்து, அவர்கள் மூலமாக அறிக்கை பெற்று தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு செய்தனர். மொத்தம் எட்டு வழக்குகள்; ஓராண்டு சிறை; 11 ஆண்டுக்காலம் வழக்கை நடத்தி, பின்னர் எட்டு வழக்குகளிலும் விடுதலை ஆனேன். என்னுடைய அனுபவங்களை ‘செய்தியாளரின் சிறைக்குறிப்புகள்’ என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளேன்.
கே: உங்கள் மனைவி இதனை எப்படி எதிர்கொண்டார்கள்?
ப : எனக்குத் திருமணம் நடந்த, அடுத்த ஆண்டு 2001 நவம்பரில் என்னைக் கைது செய்தனர். அப்போது என் மகன் ஆறுமாதக் குழந்தை. எனது மனைவி கிராமத்துப் பெண். எப்படி இருந்திருக்கும் என நீங்களே அனுமானித்துக்கொள்ளுங்கள். இது பொய்வழக்கு என எல்லோருக்கும் தெரியும் என்பதால், காவல்துறையினர் மரியாதையோடு நடத்தினர். நீதிபதிகளும் அனுதாபத்தோடு பார்த்தனர். மொழி தெரியாத கர்நாடக மாநிலத்தில் வழக்குகளை எதிர்கொள்ளச் சிரமமாக இருந்தது. வழக்குச் செலவுகளை நக்கீரன் ஆசிரியர் பார்த்துக்கொண்டார். நக்கீரன் இணை ஆசிரியராக இருந்த காமராஜ் பெங்களூரில் 15 நாள்கள் தங்கி, வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து உதவினார். அவர்கள் என்னைக் கைது செய்ததாகச் சொன்ன நாளில், நான் சேலத்திலுள்ள கதிரவன் என்ற பத்திரிகையாளருக்கு நீதிமன்றத்தில் பிணை கொடுத்திருந்தேன். பொய்ச்சாட்சிகள் மூலம் புனையப்பட்ட வழக்கு என்பதால் விடுதலை பெற முடிந்தது.

கே : நக்கீரன் இதழில் பணியாற்றியதற்காக உங்கள் மகனுக்கு அந்தப் பெயரை வைத்திருக்கிறீர்களா?
ப:Dr.ராஜ்குமார் அவர்களை, வீரப்பனை பிடித்து வைத்திருந்த நேரத்தில், நக்கீரன் ஆசிரியர் கோபால் அண்ணனோடு செல்பேசியில் பேச நேரிட்டது. பேசி முடிக்கும்போது, என் மனைவியைப் பற்றி விசாரித்தார். அப்போது என் மனைவி கர்ப்பிணி. ஏப்ரல் 24 அன்று மகப்பேறு இருக்கும் என மருத்துவர் கூறியுள்ளார் என்றேன். “12 ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 20 அன்றுதான் நக்கீரன் இதழ் தொடங்கப்பட்டது. ஏப்ரல் 20 அன்றே, தங்கை ஜெயந்திக்கு ஆண் குழந்தை பிறக்கும்; அந்தக் குழந்தையின் பெயர் நக்கீரன்” என்று சொன்னார். அவர் சொன்னபடியே ஏப்ரல் 21 அன்று, என் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சொன்னபடியே கோபால் அண்ணன் நக்கீரன் என்று பெயர் வைத்தார்.
கே: தமிழ்நாடு, கர்நாடகம் என இரண்டு மாநிலங்களின் சிறைகளிலும் இருந்திருக்கிறீர்கள். அதைப்பற்றிச் சொல்ல முடியுமா?
ப : கர்நாடகச் சிறைகளில் உணவு, சுகாதாரம் போன்றவை மோசமாக இருக்கும். ஆனால் உரிமைகள் சார்ந்த விஷயங்கள் அங்கு நன்றாக உள்ளன. சிறையின் செல்களில் மின்சார விளக்கு, மின்விசிறி உண்டு. புத்தகங்களை எந்தக் கட்டுப்பாடும் இன்றி எடுத்துச் செல்லலாம். உறவினர்களோடு, அறைகளில் கலந்து பேசலாம். நிறையக் கலைநிகழ்ச்சிகள் சிறைகளில் நடக்கும். இதனால் சிறைவாசிகளின் மன அழுத்தம் குறையும். கர்நாடக மாநில சிறைகளில் இருக்கும் இத்தகைய சீர்திருத்தங்களைத் தமிழ்நாட்டிலும் கொண்டு வரலாம்.
கே : திறந்தவெளி சிறை என்று சொல்லுகிறார்களே !
ப : கோவை சிங்காநல்லூரில் திறந்த வெளி சிறை உள்ளது. நன்னடத்தை உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைவாசிகளை இங்கு அனுப்புகிறார்கள். இங்கு இருந்தால் தண்டனைக்காலத்தில் 50% குறையும். இந்தச் சிறைக்குக் கதவடைப்பு இல்லை. உணவு உற்பத்தி, விவசாய வேலை, மாடுகள் பராமரிப்பு, பால் உற்பத்தி போன்றவை நடக்கின்றன. இங்கு விளையும் பொருட்களைச் சிறைகளில் உபயோகப்படுத்துகிறார்கள். இங்கு உற்பத்தி ஆன பொருட்களை, சிறைவாசிகள் வெளியில் சென்று விற்பனை செய்து வருவார்கள்.
கே: விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை சிறைகளில் அதிகமாக இருப்பது பற்றி..
ப : கைது செய்த 90 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றால், கீழமை நீதிமன்றங்களில் பிணை கிடைத்துவிடும். புதிய குற்றச் சட்டப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆறுமாதம் வரை அவகாசம் உள்ளது. இந்தக்காலத்தைக் குறைக்க வேண்டும்.
குற்றவியல் சட்டப்படி உண்ணாவிரதமும் குற்றம்தான். தண்ணீர் வரவில்லை என்று மறியல் செய்தாலும் குற்றம்தான். உரிமைகளை வேண்டி நடத்தும் போராட்டங்களைத் தனியாக வகைப்படுத்த வேண்டும். எல்லா நடவடிக்கைகளையும் குற்ற நிகழ்வு என்று கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது.
மாவட்ட அளவில், 40 வயதைக் கடந்த, அனுபவம் உள்ள, காவல் அதிகாரி தலைமையில் குற்றம் நடப்பதைத் தடுக்கும் பிரிவு அமைக்க வேண்டும். உதாரணமாக, எழும்பூர் நீதிமன்றத்தில் 14 நீதிமன்றங்கள் உள்ளன. மூன்றாவது நீதிமன்றத்தில் ஒரு குற்றவாளி வரவில்லை என்று இருக்கும்; அதே வளாகத்தில் உள்ள வேறொரு நீதிமன்றத்தில் அந்தக் குற்றவாளி வந்து செல்வார். மாவட்ட அளவில் ஒரு குற்றத்தை விசாரிப்பதற்கு எனத் தனியான ஒரு பிரிவு இருந்தால் இதைத் தடுக்க முடியும். குற்றம் ஓர் இரவில் நடந்தால், உடனடியாக விசாரித்தால் ஆதாரம் கிட்டும். அதனை விசாரிப்பதற்குள்ளாக, அதே காவலர்கள் பந்தோபஸ்து, பொதுக்கூட்டம் என மற்ற வேலைகளைப் பார்த்துவிட்டு வருவதற்குள் நிலைமை மாறிவிடும். குற்றங்களை விசாரிப்பதற்கு, சட்டம்- ஒழுங்கு பிரிவில் இருக்கும் காவலர்களைப் பயன்படுத்தக் கூடாது. தனியே காவலர்களையும் அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும். அப்போதுதான் குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும்.
கே: வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் நூலின் தாக்கம் எப்படி இருக்கிறது?
ப : நான் எதையும் என் கருத்தாக எழுதுவதில்லை. களத்திற்குச் சென்று ஒரு சம்பவத்தைப் பார்த்தவர்கள், விசாரணை செய்தவர்கள், நேரடியாகத் தொடர்புள்ளவர்கள் சொல்வதைத் தொகுத்துத்தான் நான் எழுதியுள்ளேன். ‘நள்ளிரவில் சுதந்திரம்’, உ.வே.சா அவர்களின் ‘என் சரித்திரம்’, ரா.கி.ரங்கராஜன் மொழிமாற்றம் செய்த ‘பட்டாம்பூச்சி’ ஆகிய நூல்களைப் போல எழுத வேண்டும் என்று எண்ணி எழுதத் தொடங்கினேன். ஓடை, பள்ளம், சுனை, ஆறு எனப் பெயர்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொன்றின் இயல்புகளும் வேறு. உதாரணமாக ஓடுகின்ற நீர் பாசனத்திற்குப் பயன்பட்டால் அதற்குப் பெயர் ஆறு. இப்படி சிறுசிறு செய்திகளை விளக்கி எழுதியுள்ளேன். குறிப்பாக வீரப்பன் வாழ்ந்த அந்தக் காடுகளில் வாழும் மக்களின் வாழ்வியல் கூறுகளை அதிகம் எழுதியுள்ளேன்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியான உதயசந்திரன் என்னுடைய நூலைப்படித்துவிட்டு ஒருசில விவரங்களைக் கேட்டார். பின்னர் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால் வன விலங்குகள் இரவு நேரங்களில் சாலையைக் கடக்க முடியும். கேரளா மாநிலத்தில் இருந்து 100 முதல் 300 வரை எண்ணிக்கை உள்ள யானைகள் ஓசூர்வரை கும்பலாக வந்து, திரும்பவும் கேரளா செல்லும். இவ்வாறு வருவது 2010க்கு பிறகு நின்றுவிட்டது. இதுபோன்ற விவரங்கள் இந்த நூலில் உள்ளன.
என்னுடைய நூல் Veerappn saga rise and fall என்ற பெயரில் ஆங்கிலத்தில் வந்துள்ளது. புதிதாகக் காவல்துறைக்கு வந்த விசாரணை அதிகாரிகளுக்கு எனது நூல் உதவிகரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
கே : இன்றைக்கு வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது ‘தவறு செய்துவிட்டேன்’ என்ற நினைக்கிறீர்களா?
ப : சட்டவிரோதமாக நான் எதையும் செய்யவில்லை. ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் செயல்பட்டு இருக்கிறேன். காவல்துறை விசாரிக்கும்போது, எனக்குத் தெரிந்தவற்றைப் பகிரங்கமாகப் பத்திரிகையாளர்கள் மத்தியில் சொல்லவும் தயாராக இருந்தேன். ‘சிவா மீடியா’ யூட்யூப் சானலை நடத்தி வருகிறேன். என்னோடு படித்தவர்கள், இப்போது என்னைவிடப் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில்தான் உள்ளனர். ஆனாலும், இதழியல் துறைக்கு வந்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாகவே உணர்கிறேன்.



