கடல் நெடுக விழுந்து கிடக்கும் நிலவொளி.
கரையின் நீர் நிரப்பில் ஆழ்ந்திருந்த ஒளி நண்டு,
ஊர்ந்து இரு மின்னல்களால் உந்தப்பட்டு
மேலேறி மேலேறி நடுவானில் உட்கார்ந்திருந்தது.
ஈரம் மினுங்க குளிர்ந்த உப்பு நீர் சொட்ட,
சிவப்பேறி இருந்தது பௌர்ணமி.
முதிய செம்படவன், கிடுகுக் குடில் முற்றத்தில்
அந்த ஒற்றைத் தபேலாவிலிருந்து
அவன் இதயம் மறந்து போன தாளத்தை உயிர்ப்பிக்கிறான்.
இரவிலே வீசும்
இளங்காற்றும் சந்திரனும்
அரவாத வாள்போல்
அறுக்குதே என் மனசை
என்ட நெஞ்சில் இருக்கும்
கவலைகளைச் சொன்னவுடன்
ஏழு கடலும்
இரையமர்ந்து கேட்டிருக்கும்
கடலே இரையாதே
காற்றே நீ வீசாதே
நிலவே எறியாதே
இந்த நீலவண்டார் போய் சேருமட்டும்
ஆழிக்கடலிலே
அடி இறந்த கப்பலைப்போல்
உக்கிறேனே என் பிறவி
ஊழி உள்ள காலமட்டும்
விரல்கள் தட்டும் தாளம்
ஒன்றிலிருந்து ஒன்று மோதி உப்புச் சொற்களாய் கிளர்ந்தன.
அலை மடிப்புகள் அவற்றைச் சுருட்டி எடுத்து எங்கு கொண்டு செல்கின்றனவோ…..
அப்படித்தான் உதடுகளை மென்றபடியான அந்த முத்தங்களையும்
சுருட்டிச் சென்ற அதிர்வலைகள்
சாம்பல் மேகங்களாய் திரண்டிருக்கின்றன.
உன்னைத் தீண்டி வருகின்ற
காற்றெல்லாம் கடலில் எரிந்து கொண்டிருக்கிறது.
பாதியாக் கிழிந்த பிறை நிலா,
புத்தக அட்டைக்கு நீலம்.
என் பச்சைவெளியில் இன்னொரு பாதி உன் பெயராகியிருந்தது.
வருடித்தொட என் விரலில் பொன்மகரந்தம்.
கடலின் குருத்துமணல் அதன் உப்பை,
தன் நிசப்தமான இறுக்கத்தை, மழையில் உருக்குகின்றது.
ஆழ்ந்த தனிமைகள் ஒவ்வொன்றையும்
ஏதோ ஒரு மழையில் நனைத்துக் கொள்கின்றன.
மழையின் சத்தம்…. பீதியா ? நிராசையா ?
எது, எதை மிகைத்துவிடும் என்பதை கணிக்க இயலுமா ?
**கிழக்கிலங்கை நாட்டார் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.