![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/06/Na-periyasamay-780x405.jpg)
1. நட்சத்திர மலர்
வான் உதிர்த்த
ஒற்றைச் சிரிப்பை விழுங்கிய
அதிசய மலரை
அதிகாலையில் சூடி அலுவலகம் சென்றாள்.
வழக்கத்திற்கு மாறாக எல்லோரும்
மகிழ்ந்தோதிக் கொண்டிருந்தனர்.
என்னதான் ஆயிற்று
குழம்பியபடி வீடு திரும்பியவள்
ஓய்வுகொள்ள உடை களைத்து
வீசி எறிய மலரை எடுத்தவள்
காமத்தின் கிணற்றை
மலரில் காண
மகிழ்ந்தாடி பறவையாகி
பறந்தாள்
பறந்துகொண்டே இருந்தாள்
அன்றைய வானில் கூடுதல்
பிரகாசத்தோடிருந்த நட்சத்திரம்
உலகத்தாரை ஈர்த்தது.
2. விழித்திருப்பவனின் கனவு
பசித்திருப்பவனின்
செவிகளில் விழும்
சோறெனும் சொல்லே
ஆகச்சிறந்த இசை அதுபோல்
கேட்க ஏங்கிய காதுகளோடு
விழிப்பிலும் கனவோடிருப்பவனிடம்
குரல் கேட்டது
எனை பற்றி எழுதேன்.
நனவென நம்ப மறுத்தவன்
சுவரில் முட்டிப் பார்த்தான்
வலி
அவனுள் வழிந்தது
இசையாக
மழையாக
அருவியாக.
3. தும்மல் போல் பிறக்கும்
காலமற்று பிறக்கும்
கட்டுகளுக்குள் அடங்காதிருக்கும்
தும்மலின் இயல்பினை
ஒத்த காம நினைவின்
சொட்டொன்று போதும்
ஒலியின் வேகத்தில்
உடலுள் பரவி
உருவாக்கிடும் நிலத்தை
விதைப்பிற்குத் தோதாக.
வேர்புகா கெட்டித்த
நிலம்தன் மனமென நம்பியிருந்தவனை
உணர்ந்துகொள்ளச் செய்திட்டாள்
இதுகாறும்
நினைவின் பிழையோடு வாழ்ந்ததை.
காமத்தின் கிணறு இறைக்க இறைக்க ஊறிக்கொண்டேயிருக்கிறதோ?!