நூல் : காட்டுக்குள்ளே கணித மாயாவி
ஆசிரியர் : இரா. செங்கோதை
வெளியீடு : மகாயுகம் பதிப்பகம்
(பை கணித மன்றம்)
பக்கங்கள் : 72
விலை : ₹ 62
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கணக்கு என்றாலே, ‘கணக்கு எனக்கு பிணக்கு’ என்று காத தூரம் ஓடுவோர் பலருண்டு. ஆயினும், புதிர் கணக்குகளைப் பொருத்தவரை பெரும்பாலும் எல்லோரும் விரும்புவதுண்டு. பள்ளி சென்று முறையாய் பயிலாதவர்கள் கூட புதிர் கணக்குகளைக் கேட்பதிலும், புதிர்களை விடுவிப்பதிலும் வெகு ஆர்வமுள்ளோராய் இருப்பதைக் கண்டிருக்கிறோம்.
அவ்வகையில், “காட்டுக்குள்ளே கணித மாயாவி” என்ற இந்நூல் கதைகள் கேட்பதில் ஆர்வமும், கணிதப் புதிர்களை விடுவிப்பதில் விருப்பமும் உள்ளோருக்கான ஒரு சிறந்த நூல்.
பெற்றோரின் அறிவுரையை மீறி காட்டுக்குள் செல்லும் 4 நண்பர்களில் ஒருவன், உருவம் வெளித்தெரியா ஒரு மாயக்குரலிடம் மாட்டி மறைந்து போகிறான். அவனை விடுவிக்க அவனது மற்ற நண்பர்கள் முயற்சி செய்கின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால், அந்த மாயக்குரலின் நண்பர்களையும் இச்சிறுவர்கள் தான் மீட்டு அதனிடம் ஒப்படைக்க முயற்சிக்கின்றனர்.
அவர்கள் மீட்கச் செல்லும் ஒவ்வொரு நிலையும் பல கணிதப் புதிர்கள் நிறைந்ததாய் உள்ளது. அப்புதிர்களை அவர்கள் எவ்வாறு விடுவித்தனர், தங்களது நண்பனையும், மாயக்குரலின் நண்பர்களையும் மீட்டனரா? அதற்குள் அவர்கள் என்னென்ன சிரமங்களையெல்லாம் அடைந்தனர் என்பதே மீதிக்கதை.
கணிதத்தில் திறமையானோருக்கு மட்டும் என இல்லாமல், பள்ளி வயதுக் குழந்தைகள் முதல் வளர்ந்தவர்கள் வரையென அனைவரும் சிந்திக்கும் வகையிலான புதிர்கள் இடம்பெற்றுள்ளதே இந்நூலுக்கான சிறப்பு.
அதிலும், நாம் அன்றாடம் காணும் பொருட்களின் மீதுள்ள Bar code ஆனது கணித செயல்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்றும், அதிலுள்ள எண்கள் எந்த அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன என்றும் நூலில் இடம்பெற்றுள்ள விவரம் மிக வியப்பானதொரு தகவல்.
எலிகளின் வயதுகளைக் கண்டுபிடிப்பது, ஒரே எண்ணிக்கையிலான கற்களைக் கொண்டு சதுரம் மற்றும் முக்கோண வடிவங்களை அமைப்பது (1 முதல் 1000 வரையிலான எண்களில் ஒரே ஒரு எண்ணைக் கொண்டு மட்டுமே இதனை செய்ய இயலும்), கதவிலக்கம் இடப்படாத வீட்டின் எண்ணினைக் கண்டுபிடிப்பது என சிறுவர்களோடு சேர்ந்து நாமும் நமது மூளையைக் கசக்கி வேலை செய்ய எக்கச்சக்க புதிர்கள் இதிலுண்டு.
கதையின் இறுதியில் தனியே நமக்கெனவும் இரு புதிர்கள் காத்திருக்கின்றன. இப்புத்தகம் நம் சோர்வினைப் போக்கி, மூளைக்கான ரத்த ஓட்டத்தை அதிகமாக்கி நம்மை சுறுசுறுப்பாக்கும் என்பது நிச்சயம்.
இறுதியாக, இந்நூலிலிருந்து ஒரு புதிர் கணக்கை உங்களின் சிந்தனைத் திறனுக்கு சவாலாய் கொடுப்பது சிறப்பாய் இருக்குமெனக் கருதுகிறேன்…..
கேள்வி இதுதான்:
“என் தோட்டத்தில் வேலை பார்க்கும் கைதி ஒருவனுக்கு தினக்கூலி வழங்கப்படும். அதாவது, 1 ஆம் தேதியில் 1 ரூபாயும், 2 ஆம் தேதியில் 2 ரூபாயும், 3 ஆம் தேதியில் 3 ரூபாயும் என தேதிக்கு ஏற்றவாறு வருடம் முழுவதும் கூலி கொடுக்கப்படும். இவ்வாறு இருக்கையில் அவன் ஐந்து நாட்கள் தொடர்ந்து வேலை பார்க்கும் கூலியின் கூட்டுத்தொகை 61 ரூபாய்கள் வர வேண்டுமெனில், எந்த ஐந்து தேதிகளில் அவன் வேலை செய்திருக்க வேண்டும்?”
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்…..
ஆங்….. இன்னொரு விசயம் சொல்ல மறந்துட்டேன் பாருங்க.
அந்த மாயக்குரலுக்குச் சொந்தக்காரர் (சொந்தக்காரி) யாரென்று சொன்னேனா??? இல்லையா? அது இன்னுமொரு ஆச்சரியமான விசயம்….. புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்….. உங்களுக்கே அது யாரென்று தெரிந்துவிடும்….?
61 ரூபாய்கள் வர வேண்டுமெனில், February,27 & 28 March, 1,2 & 3 (27+28+1+2+3=61)