சிறுகதைகள்
Trending

க டை சி

முத்துராசாகுமார்

நேரம் இரவு 2 மணி ஆகப் போகிறது.

பருவம் மாறி அடிக்கும் அடைமழை.

குடித்த ‘ரம்’மின் தழல் மதமதப்பாக தணியத் தொடங்கியது. திருப்புவனம் பாலன் தியேட்டரில் ரெண்டாவது ஆட்டம் படம் பார்த்துவிட்டு  வரும்போதுதான் அந்த சம்பவத்தைப் பார்த்தேன்.

வீரமாகாளி கோயில் தோப்பு பக்கமாக நடந்து போனார் தேனீ. இந்த நேரம் பெருசு எங்கப் போயிட்டு இருக்குன்னு பின்னாலேயே போய் ஒளிந்து கவனித்தேன். பட்டமிளகாய் துவையல் போல முட்டிக்கால் உயரம் கிடக்கும் அந்த செங்கல் குவியலில் அவரது நாலு முழம் வேட்டியை அவிழ்த்து  போர்வையாகப்  போர்த்தினார். கூடவே துண்டையும். சாய்ந்த குத்துக் கற்களும் குழைந்த செங்கல் குவியலும்தான் தேனீயின் வீடாக இருந்தது. குவியலும் செந்நீர் சகதியாக வடிந்து ஓடியது.

அம்மணமான தேனீ தரையில் கால்களை நீட்டி அமர்ந்தார். வதியை அள்ளி உடலெங்கும் அப்பினார்.

எனக்குத் திக்கென்று இருந்தது.

செம்புக்குள்  அணையாமல்  புகைந்தப் பீடிக்கட்டை வெளியே எடுத்தார். கருப்பசாமி வேசங்கட்டி ஆடுபவர்கள் ஏந்தியிருக்கும் தீப்பந்தம் போல அடர்கனலாக  மிளிர்ந்தது. பீடிக் கங்கினால் தனது வலது காலில் தானே அழுத்தி சுட்டபடியே முனக ஆரம்பித்தார்.

‘யோவ்…தேனீ’

ஓடிச்சென்று பயத்தோடு அவரை உலுக்கினேன். விழுந்து புரண்டு கால்களைப் பற்றி ‘முனி…முனி’ எனத் தேம்பினார். முதன்முறையாக என் பெயரைச் சொல்லுகிறார். பயங்கள் குழப்பங்களாயின. தேனீயின் அழுகைக்கு நிச்சயமாக இந்தப் பின்னிரவு போதாது எனத் தோன்றியது. ஒருவழியாக ஆளைத்தேற்றி வேட்டியைக் கட்டிவிட்டேன். இருவரும் எதுவும் பேசவில்லை. மழைத் தூறலானது. கொஞ்சம் நேரம் கழித்து வார்த்தைகளை உடைத்துப் பேசத் தொடங்கினார்.

‘சாகுற வயசு வந்துட்டாலும் உசுரு போற கணத்த நெனச்சா ரொம்ப பயமா இருக்குடா. கம்பு ஊன்டாம இருக்குறதுனால இன்னும் நூறு வயசு வரைக்கும் வாழுவோமோன்னு அடிக்கடி அல்ப்பத்தனமா நெனைக்கிறேன். கொஞ்சநாளா என்னோட சொப்பனமே என்னைய ஒறங்க விட மாட்டேங்குது. என்னோட ஆத்தாளும் அப்பனும் சொப்பனத்துல வந்து தலமாட்டுல உட்காந்துக்கிட்டு, என்னைய மடியில படுக்கவச்சு நெஞ்சுக்கூட்டுல தட்டிக்கொடுத்துக்கிட்டே ‘என்னடா குட்டி! உனக்குத் தோல்லெல்லாம் சுருங்கி, ரத்தமெல்லாம் சுண்டிப்போச்சு. நாங்க சாப்பிட்டுக் கொள்ள காலமாச்சு. ரொம்ப பசிக்குது. சீக்கிரம் எங்கக்கிட்ட வாடா…ன்னு சொல்றாங்க.’

துடிச்சுப் போய் இருக்குற எல்லா பொட்டலத்தையும் பிரிச்சு கஞ்சாவைப் பரசி வச்சேன். நல்லாத் தின்னு பசியாறிட்டு எனக்கும் ஊட்டி விட்டாக. கூட வரச்சொல்லி  கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்கடா’ என்றார்.

ஊரை விட்டுப் போனப் பிறகு தேனீயின் ‘குட்டி’ என்ற சொந்தப் பெயரும் காலப் பரணின் மூலைக்குப் போனது. பிழைக்க ஓடிய ஊரின் பெயரே அவருக்கும்  நிலைத்து விட்டது.

‘என்னோட வாலிபத்த இந்த ஊர் பார்க்கல. ஊரு வாலிபத்த நான் பார்த்து வளரல. ஊரு ஊரா சுத்தி விருதாப் பய  பொழப்பு பொழச்சுட்டேன். ரோட்டுல அனாதையா செத்துக் கெடக்கும் நாயிகள, காக்கா கூட்டத்துக்கு நடுவுல கொடலு உருவிக் கெடக்கும் எலிகள பார்க்கப் பார்க்க, நானும் அப்படித்தான் எங்கயாவது ஈ எறும்புக மொச்சு கெடந்திருவேனோன்னு ஈரக்கொல நடுங்கிருச்சு. அதுனாலதான் மாண்டு மடியிறதுக்கு இத்தனைக் காலம் கழிச்சு  சொந்தப் பூமிக்கே நொண்டி நொண்டி வந்துட்டேன். என்னப் பெத்தவுக வேர் விட்ட மண்ணுடா முனி இது. அந்த வேருக்கு ஆதாரமா இந்தப் பொட்டலாப் போன வீடு ஒன்னு மட்டுந்தான் இருக்கு. அந்த வேருக மழைக்கு கரைஞ்சு சாகுதுக. வெயிலுக்கு கருகி அழுகுதுக.

இன்னைக்கு கனாவுல எங்காலு ரெண்டையும் பிடிச்சு ஆத்தாளும் அப்பனும் பாதித் தூரத்துக்கு இழுத்துக்கிட்டுப் போயிட்டாக முனி. நான் ஓடியாந்து எங்க வீட்டுக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டேன்’ என்று தரையில் படுத்து தன்னைச் சுருட்டிக் கொண்டார்.

எல்லாவற்றையும் பார்த்த எனது உடல் ஈரப்பசை இல்லாமல் வறட்சி கண்டது.

******

புதிரான வைராக்கியத்திற்கு கிட்டத்தட்ட எண்பது வயது நடந்தால் அது தேனீக்குத்தான். சிறுவயதிலேயே அம்மாவும், அப்பாவும் ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் அரப்பாடி மணல் லாரி மோதி அகால மரணமாகினர். கையகல செம்மண்வீட்டைத் தவிர வேறு சொத்துபத்துகளும் இல்லை. கையில் பணங்காசு இல்லாததால் நெருங்கிய சொந்தங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்துக் கழுவினர். ஒத்தப்பிள்ளையான தேனீக்கோ தனிமைதான் எல்லாமும் ஆனது. கொஞ்சநாள் கழித்து ஒரு மதியத்தின் பசி வேளையில் ஊரைவிட்டு வெளியேறினார் தேனீ. தேனீயின் இல்லாமை சிறு வெற்றிடமாகக் கூட ஊருக்குத் தெரியவில்லை. வருத்தமாகவும் இல்லை. ‘இந்நேரம் அவனெல்லாம் எங்கயாவது காணாப் பொணமா ஆயிருப்பானப்பா’ என்று சோசியம் பார்த்ததுப் போல ஊரார் உறுதியாகச் சொல்லும் போதே, தேனி பக்கம் பார்த்ததாக சில பேர் சொல்லுவார்கள்.

பதினோரு வயதில் கிளம்பியவர், முழு கிழடாகத்தான் சொந்த ஊருக்குள் போன வருட வாக்கில் திரும்ப வந்தார். ஊரில் நடந்த எந்த நல்லது கெட்டதுகளுக்கும் தலைகாட்டவில்லை. பொண்டாட்டி, பிள்ளைகள் எதுவுமில்லை. விதிக்கப்பட்ட வாழ்க்கையை எங்கு என்ன செய்தார் என்று யாருக்கும் தெரியவில்லை. எல்லோருக்கும் பெரும் வியப்பாகவும், சந்தேகமாகவும் இருந்தது. வந்தவுடன் தனது வீடு இருந்த இடத்தையும், கருக்கா பெருசையும் மட்டும் போய் பார்த்தார்.

தேனீயின் வயதையொட்டிய டவுசர் கால நண்பர்களில் கடைசி உருப்படியாக ஊருக்குள் மிச்சம் கிடப்பது கருக்கா பெருசு மட்டுந்தான். அவரது வீடும் எனது வீடும் பக்கம் பக்கம்.

சிவன் கோவில் தெப்பத்தில் குளிக்கும் போது நீச்சல் தெரியாமல் தத்தளித்த கருக்காவைப் படியேற்றி விட்டு காப்பாற்றியது தேனீதான். அதன்பிறகு, மீன் பிடிக்க ஆத்துக்கும் கண்மாயிக்கும் அலைகையில் தேனீ கண்ணாடிப் பாட்டிலை எடுத்து வந்தால், சோற்றுப் பருக்கைகளையும், புழுக்களையும் கொண்டு வருவார் கருக்கா. யாருக்கும் தெரியாமல் பப்ளிமாஸ் பழம் பிடுங்கப் போவார்கள். பம்பரங்களுக்கு குறி தப்பாமல் ஆக்கர் வைத்துப் பழக ஆள்காட்டி விரலில் கொப்பளங்கள் முளைக்க விளையாடுவார்கள். தைப்பொங்களுக்கு கூளப்பூ பறிக்க நாகமலையில் ஏறும்போது சறுக்கி விழுந்ததில் இருவரது உடம்பிலும் சிராய்ப்புகள் வாங்கி வீட்டில் கிடந்தார்கள். அதன் பிறகும் நேரங்காலம் பார்க்காமல் எங்கெங்கோ சுற்றித் திரிவார்கள்.

ஊரை விட்டுப் போன குட்டியை சைக்கிளில் ஊடுகால் விட்டு ஓட்டி, பல நாட்களாக அழுதுபடியே தேடியலைந்த ஒரே ஆள் கருக்கா மட்டுந்தான். தன்னிடம் மட்டுமாவது ஏதாவது சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் என்ற கோபமும், பிரிவும் மங்காதத் தழும்பாக கருக்காவுக்குள் நிலை கொண்டது.

மூப்பில் நிதானம் தப்பிய கருக்கா இப்போது நடமாட்டமில்லாமல் படுத்தப்படுக்கை.

******

கொஞ்சம் துணிமணிகள், ஊடு கம்பி இல்லாத  பழைய சைக்கிள், ஒரு செம்பு என்று மிச்சசொச்ச வாழ்வை ஒரு கட்டைப்பையுக்குள் அமுக்கி ஊர் சாவடியில் ஒருக்களித்துப் படுத்திருப்பார் தேனீ. விரிசல்கள் விட்டு காரை உடைந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும்  சாவடியே  அவருக்கு வீடாகிப் போனது. சாவடிக்குப் பாலினப் பேதங்கள், அருவெறுப்புகள் தெரியாது. அடைக்கலம் மட்டுமே அதற்கு தெரிந்த ஒன்று. வீடுகளில் புறக்கணிக்கப்பட்ட வயோதிகங்களுக்கு சாவடிதான் கடைசிகாலப் போக்கிடம்.

சாவடிக்கு எதிர்புறம் கவர்மெண்ட்டிலிருந்து பல லட்ச முதலீட்டில் சிறிய  லைப்ரேரி ஒன்றைக் கட்டினார்கள். டைல்ஸ் கற்கள் போட்டு முன்வாசல் வைத்து கட்டப்பட்ட லைப்ரேரி, திறப்புவிழா அன்று மட்டுமே திறந்திருந்தது. லைப்ரேரி பூட்டில் நூலாம்படைகள் அடர்த்தியாவதைப் பார்த்த தேனீ, தனது வீட்டை  லைப்ரேரிக்கு  மாற்றினார். ஊர் மையத்தில் இருக்கும் லைப்ரேரியில் இருந்துதான் தெரு மனிதர்களையும், நிகழ்வுகளையும், காலநிலைகளையும் கஞ்சா புகைத்தப்படி கவனிப்பார். பல இரவுகளில் உறங்காமல் பீடிக் கங்கைப் பார்த்து எதையோ யோசித்துக்கொண்டே  குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பார்.

‘தேனி பக்கம் கஞ்சா ஏவாரியா இருந்தாப்ளயா. தொழிலு மோட்டிவ்ல கூட இருந்த பயலுகளே காசையெல்லாம் அமுக்கிட்டு ஆள சோலிய முடிக்கப் பார்த்தாய்ங்க. உசுருப் பொழச்சதே பெருசு. சோத்தாங்கால ஒடச்சு வெளியூருப் பக்கம் போய் விட்டுட்டு வந்துட்டாய்ங்க. அப்புறம் ஊரு ஊரா திரிஞ்சு ஏதேதோ வேலைகளப் பார்த்துட்டு, கடைசிகாலத்துலப் பெருசு பொறந்த ஊருக்கே  வந்துருச்சு’ என்ற பல கதைகளை ஊரார் உலவ விட்டனர். வளைந்து நிற்கும் தனது வலதுகாலுக்குப் பின்னால் உள்ள கதைகளையும், இவ்வளவு வருஷங்கள் கழித்து ஊர் திரும்பிய காரணங்களையும், பார்த்தப் பொழப்புகளையும் பற்றி சுவாரஸ்யம் தாங்காமல் எல்லோரும் கேட்டுக்கேட்டு சலித்துவிட்டது. யாரிடமும் முழுசாய் வாய் திறக்க மாட்டார்.

‘பீடி வேணும்னா கேளுங்க தாரேன். பழசலாம் நோண்டி நோண்டிக் கேட்டு என்னத்த நொட்டப் போறீங்க’ என்று அமைதியாக அசிங்க வார்த்தைகளை அடுக்கும்போதே எல்லோரும் சாவடியிலிருந்து கலையத் தொடங்குவார்கள்.

நல்ல உயரமான கருத்த மேனியும், சுத்த பால் நரையும் வெயிலுக்கு மினுங்கும். தேனீ என்ற பெயருக்கேற்பத் துடுக்காக இருப்பார். முதுமை நடுக்கம் அந்த ஒல்லி உடம்பில் துளியளவு கூட இருக்காது. பொங்கல், தீபாவளி நாட்களில் இளந்தாரிகள் தரும் கறியையும், சரக்கையும் கொஞ்சநேரத்தில் செமித்துவிட்டு, மேல் உதட்டை மறைக்கும் தொங்கு மீசையை துடைத்துவிட்டு தூள்பீடி சுத்த ஆரம்பித்துவிடுவார். நல்ல விளைச்சலான கஞ்சா வாடை அவரின் மேல் எப்போதும் அடிக்கும். சரியாக நடக்க வராத தனது வலதுகாலை லாவகமாக வைத்து பொறுமையாக பெடல் போட்டு காடுகரைப் பக்கம் போய் வருவார். எனக்குத் தெரிந்து எவரிடமும் கையேந்தி நின்றதில்லை. தென்னை மட்டைகளைப் பொறுக்கி வாய்க்காலில் ஊறப்போட்டு ரெட்டமடை, மூணுமடைத் தட்டிகள் முடைந்து விற்று  சில்லரைகள் சேர்ப்பார்.

சைக்கிளிலேயே திருப்பாச்சேத்திக்குப் போய் தரமான கஞ்சா வாங்கி, வரும் வழியிலேயே விதைகள் வெடிக்க மணமாக ரசித்துப் புகைப்பார். தெருவில் யாரையும் வற்புறுத்தி குடிக்க வைக்கமாட்டார். கேட்டாலும் தரவும் மாட்டார். அவர் அறிய எந்த சின்னப்பயலாவது பொட்டலம் பிரிப்பதை நேரில் பார்த்தால் ‘இப்பயே வரக்கஞ்சாவா குத்த சொல்லுதோ பொடி வென்னைக்கு’ என மானங்கெடத் திட்டுவார்.

‘கருக்கா கொஞ்சம் தேவலையா இருக்கானா?’ என அவரைப் பற்றி மட்டும் என்னிடம் அவ்வப்போது ஒரே வார்த்தையில் விசாரித்துவிட்டு நகர்ந்து விடுவார்.

******

தேனீயைத் தூக்கிவந்து லைப்ரேரியில் படுக்கவைத்தேன். தூங்க மறுத்து அங்கிட்டும் இங்கிட்டும் உருண்டதில் உடம்பிலிருந்த செம்மண் கற்கள் தரையில் உரசி கடவாய் பற்களைக் கூச வைத்தது. எனது கைலியால் அவரை சுத்தமாகத் துடைத்தேன். நான்கரை மணி போல தேனீயின்  அனத்தல் குறைந்து கண்கள் சொக்கத் தொடங்கின.

யாரிடமும் சொல்லாத தனது வாழ்க்கைக் கமுக்கத்தை என்னிடம் மட்டும் தேனீ ஏன்? சொன்னார் என்ற யோசனையிலேயே வீட்டிற்கு கிளம்பினேன்.

மனதைத் தேற்றிக் கொண்டதற்கு ஏற்ப விடியலில் சேதி வந்தது.

லைப்ரேரிக்கு ஓடினேன்.

குச்சியால் குத்தி தேனீயை உசுப்பி விளையாடும் வாண்டுகளைத்  துரத்திவிட்டேன். வலது கணுக்காலுக்கு மேலேயிருக்கும் காயத்தின் ஓட்டைக்குள் எறும்புகள் நுழைந்துக் கொண்டிருந்தன. முகத்திலடிக்கும் காலை வெயிலை இமைகள் கொட்டாமல் வாய்பிளந்து பார்த்துக் கிடந்தார் தேனீ. இரும்புக் கதவிடுக்கின் கீழே, நகராமல் நிற்கும் கரையான்கள் அவரையே பார்த்தன.

தனது அப்பா அம்மாவால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தார்  குட்டி.

கனமற்ற அனுதாபத்தோடு விஷயம் ஊருக்குள் பரவியது. கொஞ்சம் நெருங்கியும், தூரமாகவும் நின்று ஒருசிலர் வேடிக்கைப் பார்த்தார்கள். சிலர் எட்டிப் பார்த்துவிட்டு கிளம்பினார்கள். காயத்தின் ஓட்டைக்குள் புகுந்த எறும்புகளை ஊதிவிட்டேன். நேரம் ஓடியதால் கலைந்த எறும்புகள் மீண்டும் வரிசைகள் அமைக்கத் தொடங்கின. எவர் பேச்சையும் காதில் வாங்கவில்லை. உடனே பக்கத்தில் கிடந்த இரண்டு அகத்தி மரங்களை எடுத்து, அவரே முடைந்தப் பச்சை தென்னை மட்டையில் அவசரமாகப் மொட்டைப் பாடைக் கட்டி தேனீயைத் தூக்கி வைத்தேன். காய்ந்துப் போய் பட்டைகள் உதிர்ந்த மூன்றாவது அகத்தி மரமாக பாடையில் கிடந்தார்.  துணிமணிகளை சுருட்டி தலைக்கு அணைவாக வைக்கப் போகையில் கூட்டத்தில் சலசலப்பு அதிகமானது.

காயம்பட்ட அட்டைப்பூச்சியாக நீர் தடம் பதித்து, மூத்திரப்பைத் தளும்ப பொச்சைத் தரையில் தேய்த்து தேய்த்து குட்டியை நோக்கி வந்தார் கருக்கா.

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button