![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/09/received_472216823626950-780x405.jpeg)
கடல்
சிலநூறு பிள்ளையார்களை
தன்னுள் வாங்கிக் கொண்டபடி இருக்கிறது,
வருவதும் போவதுமாய்
மனிதர்கள் மாறி மாறி
கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்
சிலர் கரைத்துவிட்டு
முழுதாய் எரிந்துவிட்ட
சடலத்தை பார்க்கும் ஆர்வத்தோடு
கடல் அலை
காலைத் தொட்டவாறே
அசையாது நின்று பார்த்துக்
கொண்டிருக்கின்றனர்,
ஐம்பது நூறென
காசுகளை
நனைந்த கைகளோடு வாங்கி
ஈர ட்ரௌசரில் சொருகிவிட்டு,
கடல்நோக்கி
பிள்ளையாரோடு ஓடும்
சிறுவர்களின் பெயர்
முகமது ஆல்பர்ட்
ஜோசப்பென
எதுவாக இருந்தாலும்
கடல் தரும் பயம் வரை மட்டுமே விநாயகர்கள்
அவர்களின் கையால்
கரைக்கப்படும்…
சூடம் அணையும் வரை
காத்திருப்பதற்கும்
நீங்கள் கும்பிட்டு முடியும் வரை காத்திருப்பதற்கும்
வேறு வேறு அளவிலான
வயிறுகள் இருக்கிறது…!
மெரினாவில்
விநாயகர் சதுர்த்தி
புதிதாக இல்லை….
பயமாகவும்
பாவமாகவும் இருக்கிறது…!
சிதிலமடைந்த விநாயகர்
வெளியில் வரக்கூடாது என்பது
உங்கள் கவலையென்றால்,
கரைக்கச் சென்ற சிறுவன்
சிதிலமடையக் கூடாது என்பது
என் கவலையாய் இருக்கிறது…!
***************************************
ராதையை மிஞ்சிய யசோதை
*********************************
கொன்ன மரம் பூ பூக்குது
கொடிக்காப் பூவும்
காய் காய்க்குது,
வீதிக்கு நாலு மரம்
தோரனமா பூச்சொரியுது…
பூக்கூட மிதிச்சதில்ல
புழுவுக்கும் துரோகம்
நெனச்சதில்ல..
பாவிமக வயிறு
பத்தவச்ச நெருப்பப் போல
கதகதனு எரியுதைய்யா,
வீடெங்கும் கொழந்த சத்தம்
வீரிட்டுக் கேக்குதைய்யா
பாதையெங்கும் பாதச்சொவடு
பம்பரமா சொழலுதைய்யா,
குண்டூசி சத்தம் கேக்கும்
கூதல் தெரியா வீட்டுக்குள்ள
குவா குவா சத்தமின்னும்
கொஞ்சங்கூட கேக்கலியே,
ஈரக்கொலையறுத்து
ஈயெறும்புக்குப் போட்டாலும்
புள்ள பெக்கும் ஆச மட்டும்
பொட்டுக்கூட கொறையாது…
கிருஷ்ண செயந்தி வருது
கிருஷ்ண வேசம் போடலான்னு
கிறுக்கிமக ஆசப்பட்டேன்னு
ஆசிரமத்துப் பிள்ளைகள
அள்ளிக்கிட்டு வந்தியே,,
வச்ச பாதம் காஞ்சிருச்சு
வந்த புள்ளைக போயிருச்சு
அடுத்த செயந்திக்காவுது
வீடு வந்த கிருஷ்ணன்
நம்மோடையே இருப்பானா
சொல்லு மாமா…!
Romba nalla iruku thozhii