சிறார் இலக்கியம்
Trending

கோபம் கொண்ட கோழி

கன்னிக்கோவில் இராஜா

சமவெளியைத் தாண்டி அடர்ந்த மரங்கள் நிறைந்த சிறிய காடு இருந்தது. அந்தக் காட்டில் பல உயிரினங்கள் வாழ்ந்து வந்தன. அந்தச் சமவெளிக்கும் காட்டிற்கும் இடையே நெருப்புக் கோழிகள் கூட்டமாக வசித்து வந்தன.

உயரமான கால்கள், நீண்ட கழுத்து, உடல் முழுவதும் ரோமங்கள் எனப் பார்ப்பதற்கு மிக வித்தியாசமான உடல் அமைப்பைக் கொண்டிருந்தன அந்தக் கோழிகள்.

அதில் ஈமு என்ற நெருப்புக்கோழியும் இருந்தது. ஈமு எப்போதும் கோபப்பட்டுக் கொண்டே இருக்கும். யாராவது தன்னைக் கிண்டல் செய்தாலோ, மதிக்கவில்லை என்றாலோ கோபப்படும். அவர்களைத் துரத்திக் கொத்தும். அது கொத்தும்போது கடப்பாறையால் கொத்துவதைப் போல இருக்கும். அதற்குப் பயந்து யாருமே ஈமுவிடம் வாலாட்டுவதே இல்லை.

ஒருநாள் ஈமு, தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது. என்னைத் தொடு! என்னைத்தொடு! எனச் சிறுவர்களைப் போல ஒருவரிடம் ஒருவர் மாட்டாமல் விலகி விலகி விளையாடிக் கொண்டிருந்தன.

அப்போது தன் தாயுடன் பொந்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த கிளிக்குஞ்சின் எச்சம் ஈமுவின் தலைமீது விழுந்தது.

கறுப்பு நெற்றியில் விழுந்த வெண்ணிற எச்சத்தைக் கண்ட ஈமுவின் நண்பர்கள், கிண்டல் செய்தன.

அந்தக் கிண்டலால் கோபமுற்ற ஈமு, கிளிகளைப் பின் தொடர்ந்தது.

சமவெளியைத் தாண்டிக் காட்டிற்குள் நுழைந்தன கிளிகள். ஈமுவும் பின் தொடர்ந்தது. ஆனால் ஈமு பின் தொடர்வதைக் கிளிகள் அறியவில்லை.

காட்டின் ஓரத்தில் இருந்த பூவரசு மரத்தில் வந்து அமர்ந்தன கிளிகள்.

அம்மா! இன்றைய பயணம் மிக இனிமையாக இருந்தது. வயிறார உணவுக் கிடைத்தது. மகிழ்ச்சிதான் என்றது கிளிக்குஞ்சு.

ஆமாம் மகளே! கொஞ்சம் முயற்சி செய்ததால் சத்தான உணவு கிடைத்தது. இல்லையென்றால் சிரமப்பட்டிருப்போம். இந்தப் பயணம் உனக்கும் சோர்வில்லாமல் பறக்க ஒரு பயிற்சியாகவும் இருந்தது என்று சொன்னது அம்மா கிளி.

கிளிகளின் பின்னால் வந்த ஈமு அவை பூவரசு மரக்கிளையில் அமர்ந்திருப்பதைக் கண்டது.

மரத்திற்குக் கீழே சென்று, அண்ணாந்து பார்த்தது. ஏய் கிளிகளே! ஏய் கிளிகளே! என மரியாதை இன்றி அழைத்தது.

யாரோ நம்மை அழைக்கிறார்களே என்று உடலை அசைக்காமல் தன் கழுத்தைத் திருப்பிக் கீழே பார்த்தது கிளிக்குஞ்சு. அங்கே நெருப்புக்கோழி நின்றிருப்பதைக் கண்டது.

அம்மா! அம்மா! கீழே நெருப்புக்கோழி நம்மை அழைக்குது என்றது கிளிக்குஞ்சு.

அம்மா கிளியும் பார்த்தது. என்ன நெருப்புக் கோழியே! எங்களை அழைத்தாயா? ஏதேனும் செய்தியா? எனப் பணிவோடு கேட்டது.

ஆமா! ஆமா! கீழே இறங்கி வா என்று மீண்டும் மரியாதை இல்லாமல் அழைத்தது ஈமு.

கிளிகள் கீழே இறங்கிப் பக்கவாட்டுக் கிளையில் அமர்ந்தன.

என்ன நெருப்புக்கோழியே! வழி தவறி வந்துவிட்டாயா? நான் உனக்கு எதாவது உதவி செய்ய வேண்டுமா? என்று மீண்டும் பணிவாகக் கேட்டது அம்மா கிளி.

கிளியின் பணிவைக் கண்டதும் ஈமு, தன் தவறை உணர்ந்தது. நாம் எத்தனை முறை மரியாதை இல்லாமல் அழைத்தோம். ஆனால் ஒருமுறைகூடக் கோபப்படாமல் எவ்வளவு பணிவாக கேட்கிறது இந்தக் கிளி. தவறு என்னுடையதுதான் என முதன்முறையாக வருந்தியது.

கோழியே! என்ன யோசனை? உனக்கு என்ன உதவி வேண்டும் கேள். என்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்றது அம்மா கிளி.

கிளியே! என்னை மன்னித்துவிடு. உன் அன்பான பேச்சால் என் மனம் மகிழ்கிறது. நான் விளையாடிக் கொண்டிருக்கும்போது கிளிக்குஞ்சின் எச்சம் என்மீது விழுந்தது. அதனால் ஏற்பட்ட கோபத்தைத் தீர்த்துக் கொள்ளவே உங்களைப் பின் தொடர்ந்து வந்தேன். ஆனால் உன் பணிவான பேச்சு என்னை மாற்றிவிட்டதுநன்றி என்றது.

! அப்படியா? கிளிக்குஞ்சு அறியாமல் செய்த தவறு அது. அதனைப் பொறுத்தருள்க. எச்சம் உன்மீது விழுந்ததால் உனக்கு கோபம் வந்தது; எனக்கு வருத்தத்தை உண்டாக்குகிறது என்றது கிளி.

என்ன வருத்தம்? என்று கேட்டது ஈமு.

பழங்களை உண்ணும் எங்களைப் போன்ற பறவைகள் அதன் விதைகளையும் விழுங்கிவிடும். வயிற்றுக்குள் சென்ற விதைகள் நொதித்தலின் மூலம் எச்சமாக வெளியேறும். அவை பூமியில் விழுந்து, ஈரப்பதத்துடன் இணைந்து செடியாக முளைத்து, பின் மரமாகின்றன

! என ஆச்சரியமாகக் கேட்டது ஈமு.

அப்படி வளர்ந்த மரங்கள் இந்தப் பூமியைச் செழிப்பாக்குகின்றன. ஆனால் இன்று உன் தலையில் விழுந்த எச்ச விதைகள் வீணாகி இருக்கும். அதுதான் எனக்கு வருத்தமாகிவிட்டது என்றது கிளி.

! இவ்வளவு பெரிய செய்தி பறவைகளின் எச்சத்தில் இருக்கிறதா? சரி. சரி. உங்களால் என் கோப மனம் மாறியது. புதுச்செய்தியும் கிடைத்தது. உங்கள் செயலுக்குத் தலை வணங்குகிறேன். நன்றி. சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டது ஈமு.

கிளிக்குஞ்சும் புதிய செய்தியை அப்போதுதான் தெரிந்து கொண்டது.

அம்மா! நாம் உண்ணும் உணவு நமக்குப் பயன்தருவது போல, அதிலிருந்து வெளியேறும் கழிவும் பூமிக்குப் பயன்படுவது எனக்கு மகிழ்வைத் தருகிறது என்றது கிளிக்குஞ்சு.

ஆமாம் கண்ணே! நமக்கு மிகுந்த பலன்களைத் தரும் பூமிக்கு, நாம் செய்யும் நன்றிக்கடன். இது இயற்கை நமக்குக் கொடுத்திருக்கிற வாய்ப்பு என்றது அம்மா கிளி.

சரி. சரி. வா உறங்கலாம்.. நாளைக் காலை சூரிய உதயத்திற்கு முன்பு புறப்பட வேண்டும் என்று சொல்லியபடி தனது பொந்தை நோக்கிப் பறந்தது.

மகிழ்ச்சியுடன் பின்னால் பறந்தது கிளிக்குஞ்சு

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button