![பானுமதி](https://vasagasalai.com/wp-content/uploads/2019/08/IMG-20190830-WA0043-780x405.jpg)
கதை என்பது எப்போது உருவாகி வந்திருக்கும்?வாய்மொழியில் உருவாகி பின்னர் எழுத்து வடிவம் கண்டிருக்கும். அதிலும், முதலில் கவிதைகளே கதைகளாக இருந்திருக்கின்றன. சிறு நிகழ்வுகளை மொழி அழகோடும், கற்பனைச் செறிவோடும்,சுருக்கமாகவும் சொல்வதற்கு கவிதைகள், உலகம் முழுதும் கருவிகளாக இருந்திருக்கின்றன.பின்னர் நாவலும், சிறுகதைகளும் இலக்கிய வடிவம் கொண்டு கவிதை இலக்கியத்தோடு தாமும் வலம் வந்தன. 19-ஆம் நூற்றாண்டு தொடங்கி சிறுகதைகள் மேலை உலகிலும் கீழை உலகிலும் சிறப்பான இடம் பெறத் துவங்கின.. இர்விங்,எட்கர் ஆலன்போ, செகாவ், கொகோல், போலப் பலரும் தமிழில் சிறுகதைகளுக்கெனவே எழுதுகோல் எடுத்தனர். வீரமாமுனிவரின் ’பரமார்த்த் குரு’,கதா மஞ்சரி, ஈசாப்பின் நீதிக்கதைகள், மயில் ராவணன் கதை, மதன காமராஜன் கதை போன்றைவை முதலில் வெளிவந்தவையெனச் சொல்லப்படுகிறது.1910-ல் ஆ. மாதவையா,தமிழிலும், ஆங்கிலத்திலுமாக சிறுகதைகள் எழுதி தொகுப்பு வெளியிட்டார்.பாரதி, வ.வே.சு.அய்யர்,தி ஜ ரங்கனாதன், நாரண. துரைக்கண்ணன், மணிக்கொடி எழுத்தாளர்கள், சி சு செல்லப்பா,கு ப ரா க, நா சு, எம் வி. வெங்கட்ராம், மௌனி, லா ச ரா,வ ரா, அகிலன், கல்கி,நா.பா, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஜானகிராமன்,ஜெய காந்தன், பிரபஞ்சன்,விந்தன், அசோக மித்ரன், கோணங்கி,ஜெயமோஹன் ,சுந்தர ராமசாமி, எஸ்.ரா,கண்மணி குணசேகரன், கி,ரா,பூமணி, ரா பி சேது அம்மாள், சாவித்திரி, சரஸ்வதி,கமலா விருத்தாசலம், கமலா சடகோபன், லக்ஷ்மி, அம்பை, காவேரி, வாசந்தி, சிவசங்கரி, அனுராதா ரமணன்,உஷா சுப்ரமணியன்,திலகவதி, சிவகாமி போன்ற பல சிறப்பு எழுத்தாளர்கள் சிறுகதைகளின் வகைமையைக் காட்டியவர்கள்.(பட்டியலில் பல முக்கிய ஆளுமைகளை இடம் கருதி சேர்க்கவில்லை)கதைக்கரு, பாத்திரப் படைப்பு,நிகழ்சியின் விவரிப்பு, உணர்வுபூர்வமானவை என்ற பெரிய பட்டியலின் கீழ் நகைச்சுவை, அறிவியல் மற்றும் அரசியல் கலந்தும் எழுதியோரும்- பாக்கியம ராமசாமி, தேவன், சுஜாதா தமிழின் பொக்கிஷங்கள்.
நாவலும், கவிதையும் சிறுகதை ஆகாது.சுருக்கப்பட்ட நாவலின் ஒரு பகுதி சிறுகதையென மாறாது.அதைப்போலவே படிமமும், மொழி இன்பமும் மட்டுமே அமைந்து சொல்லப்படும் சிறுகதைகள் கதைகள் என நிலைப்பதில்லை.
ஒரு வேடிக்கையான கதை.கதையின் தலைப்பு’கரடி வேடம் ‘இரண்டே வார்த்தைகளில் இந்தத் தலைப்பின் கீழ் ஒரு கதை ’ஐயோ, சுட்டுவிடாதே’இது தன்னளவில் ஒரு கதை.
ஒவ்வொரு மனிதரும் கற்பனைகளின் மூலம் பல மடங்கு அதிகமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.வாழ்வின் இன்பத்தையும், துன்பத்தையும் இதன் மூலம் அதிகப் படுத்திக் கொள்கிறார்கள்.கலையும், இலக்கியமும் அளிக்கும் விடுதலை அது.ஏன் இவை தேவையாக இருக்கின்றன?அவை காலம் கடந்து நிற்பதால்;நீதியுணர்வையும், அறத்தையும் பற்றிப் பேசுவதால்.
கம்பன் வாழ்ந்த கால கட்டத்தில் எத்தனையோ அமைச்சர்கள்,அதிகாரிகள் இருந்திருக்கின்றனர். இன்று அவர்களில் ஒருவர் பெயரும் நிலைக்கவில்லை. ஒட்டக்கூத்தரும், சோழனும் கம்பனை நினைக்கும் போது வருபவர்கள்.சடையப்ப வள்ளல் கூட அப்படித்தான்.அவன் அறத்தைப் பேசும் காப்பியத்தை தமிழ் உலகிற்கு ஏற்றவாறு படைத்தான். சொல் நயம், கவி மனம், உட்செறிந்த பொருள்,இசை நடை, உணர்ச்சிகரமான நாடகம் என அனைத்துமான இராம காவியம் அது.பாடல் வரிகளுக்குள்ளே சில சிறுகதைகளையும் அவன் பொதித்தான்.அக நானூற்றிலே ஒரு பாடல் கதையாகவே இருக்கிறது. பொருளீட்ட தலைவன் செல்ல நினைக்கையில் தலைவி துவள்கிறாள்;எப்படி இவனைப் பிரிந்து இருப்பேன் என் ஏங்குகிறாள். தன் துயரை அவனுக்கு உணர்த்தும் முகமாக முல்லைச் சரத்தை எடுத்து மார்போடு அணைக்கிறாள்.அவளின் வெப்பக்காற்றில் அந்த மாலை நொடியில் வாடிவிடுகிறது;அவன் பிரிந்து செல்வதைக் கை விடுகிறான்.இன்று வெளிநாடுகளில் வேலைத் தேடி குடும்பத்தைப் பிரிந்து செல்லும் கணவனையும்,அவன் மனைவியையும் சித்திரத்தைப் போல் காட்டும் ஒரு சிறுகதை இது.
இலக்கியம் எப்போதும் நம்மை நோக்கி உரையாடிக்கொண்டேயிருக்கிறது.நம்மை சரி, தவறு என்று சீர்தூக்கிப் பார்க்கச் சொல்கிறது.நம் ஆழ் மனதின் சன்னமான குரலை நம் செவிகளில் ஓங்கி ஒலிக்கிறது.தி ஜாவின் ஒரு சிறுகதை.இறக்கும் போது அக்காவிடம் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக கதாநாயகன்பணத்தை எடுத்துக்கொண்டு அடுத்த ஊரின் பெரிய மனிதரைப் பார்க்கச் செல்கையில் விளக்கு வைத்தாகிவிடும்.அவன் அவரை பணத்தை வரவு செய்து கொள்ளலாமா என்று கேட்பான்.’பணமா முக்கியம்? நடந்து வந்திருக்க, சாப்பிடு, தூங்கு காலேல பாத்துக்கலாம்’என்பார் அவர். அவன் அவரிடமே பணப்பொட்டலத்தைக் கொடுத்து உள்ளே பூட்டி வைத்துக்கொள்ளச் செய்வான்.மனதில் அவரிடம் மதிப்பு மேலும் அதிகரிக்கும். காலையிலும், காப்பி, டிஃபன்உபசாரங்கள்;அவன் நெகிழ்வான்.”பணத்தை கொடு, வரவு வைக்கலாம்’ என அவர் சொல்கையில்,அவன் எத்தனை சொல்லியும் அவர் தன்னிடம் அவன் முதல் நாளிரவு பணமே கொடுக்கவில்லை எனச் சாதிப்பார்.இது தந்திரமாக ஏமாற்றும் மனிதர்களைப் பற்றியும், அப்பாவிகளைப் பற்றியுமான கதை.ஆனால், அதில் தி ஜா செய்திருக்கும் நகாசுகள் இருக்கிறதே-பாவங்கள் தொலையும் என இந்துக்கள் நம்பும் புனித கங்கைக் கரையில் நாயகனும், அவன் மனைவியும் அந்தப் பெரிய மனிதனைப் பார்ப்பதில் தொடங்கி, காவேரிக் கரையில் நிகழ்ந்த அந்த நம்பிக்கைத்துரோகம் இரு நதிகளுக்கிடையே பாய்ந்து ஓடும்.அச் சிறுகதையின் எழில் இதனால் அதிகரிக்கிறது.
சொல் பெருகும் ஓடையில் தி ஜா ஒரு செம்பகப் பூவை மலர வைக்கிறார்.
“பிரமிப்பில் ஏறி நின்ற சோகத்தின் அதிர்ச்சி கண்ணீராகக் கரைந்தது.”
“மலர்ந்து இரண்டு நாளான கொன்னைப் பூவைப் போல் வெண்மையும் மஞ்சளும் ஒன்றித் தகதகத்தையும், நீரில் மிதந்த கரு விழியையும் வயசான துணிச்சலுடன் கண்ணாரப் பார்த்து பூரித்துக் கொண்டிருந்தார்.
‘அது என்ன பெண்ணா? முகம் நிறையக் கண் .. கண் நிறைய விழி…விழி நிறைய மர்மங்கள்.. உடல் நிறைய இளமை.. இளமை நிறையக் கூச்சம்.. கூச்சம் நிறைய நெளிவு.. நெளிவு நிறைய இளமுறுவல்”
“தேங்காய்க்கும் பூவன் பழத்திற்கும் நடுவில் நிற்கிற குத்துவிளக்கைப் போல”
செம்பகப் பூவை அனைவராலும் முகர்தல் இயலாது.அதன் வாசம், அதன் வாடல் எல்லாமே தனி.இதழ் விரித்து மணம் வீசும் அது சிலர் முகர்கையில் குருதியையும் வரவழைத்துவிடும்.
அழகே உருவானவள்.மானிட இனத்தோரால் தன் உடமை என்று சொந்தம் கொண்டாட முடியுமா அவளை?ஆனாலும் அவளுக்கும் திருமணம் நடக்கிறது.அவள் கணவன் மரணித்துவிடுகிறான். இவளின் இள வயதும், அழகும்,ஆனந்தமும் ,களியும் யாரோ ஒருவன்(?) சாவினால் அழியக் கூடாதென கதையில் வரும் கிழவர் நினைக்கிறார்.அவர் மனைவியும், சமூகமும் வேறுபடுகிறார்கள்.இந்த செம்பகப் பூ சில நாட்கள் தான் துக்கம் கொண்டாடுகிறது. பின்னர் தன் ஆனந்தத்திற்கு வந்து விடுகிறது.சந்தன சோப்பில் முகம் கழுவி, கருமேகக் கூந்தலை பின்னலிட்டு முடிந்து,பாங்காய் சேலை உடுத்தி அந்தப் பூ வாடாது வாசம் வீசுகிறது.இறந்தவனின் அண்ணனின் துணை கொண்டு வாழ்வையும்,தன் இருப்பின் உண்மையையும் செம்பகம் சொல்லிச் செல்கிறது.
ஒரு சிறு கதையில் ஒரு பார்வையாளன் வாயிலாக தி ஜா நமக்கும் அந்த மலரின் வாசத்தைக் காட்டுகிறார்.நியதிகள் வாழ்க்கை முறைக்குவழி காட்டுபவையே.ஆனால் ஆனந்தம் என்பது வாழ்விற்கு அவசியம்.களி கொள்ளும் உவகை,உவகை தரும் உரிமை, உரிமை தரும் மாற்றம், மாறுதல் தரும் தருணம்,அந்தத் தருணத்தின் ஆனந்தம் இதுதான் உயிர்ப்பின் அடையாளம்.. மற்றவை உடலில் உயிர் இருக்கிறது என்பது மட்டும் தானோ?
தி ஜா வைப் போலவே லா ச ராவும் இந்தப் பெண்ணின் பெயர் சொல்லவில்ல “ப்ரளயம்” என்ற சிறுகதையில்..உள்ளுக்குள் முனகும் ஒரு இராகம் கதை சொல்லும் மாற்றுத் திறனாளியின் ஆனந்த இராகம். அன்பைத் தேடுகிறான்-கருணை, இரக்கம் இவற்றையல்ல.அவன் சொல்கிறான்—“அன்பு கூட அல்ல; நான் தேடுவது உள்ளத்தின் நேர் எழுச்சி.இரு தன்மைகள் ஒன்றுடனொன்று இணைந்தோ, மோதியோ விளையும் இரசாயனம்”
“சில சமயம் வாழ்க்கையின் இன்பப் பகுதிகளை வாழ்க்கையிலிருந்து பலவந்தமாகப் பிடுங்கி அனுபவித்தால் நலமே என்று தோன்றுகிறது”
“என்னைச் சுற்றி எத்தனை பேர் இருந்தும் இந்த மீளமுடியாத தனிமை. நான் என்னுள் உணர்ந்த இந்தத் தனிமை சகிக்க முடியவில்லை”
உயிர்களின் அடிநாதமான நீட்சி, தன்னிலிருந்து ஒரு உயிர்… அவனுக்கும் வேண்டும்.தன்னைக் கொடுக்கும், தன்னிடம் அன்பாக இருக்கும் பெண் அவனுக்கும் வேண்டும். உடலில் குறைபாடு உள்ளவன் இதைப் பிறரிடம் சொல்லவும் நாணுகிறான். பணம் இருந்தும் துணை இல்லை.ஏழையான உறவுப் பெண்ணை நினைத்துக் கொள்கிறான்.கேட்கவில்லை. அவளுக்கும் திருமணமாகி ஊரை விட்டுச் செல்கிறாள். மணந்தவனும் வசதியற்றவன்.எப்பொழுதாவது அந்தக் கணவன் எழுதும் கடிதம்.
ஒரு நீல இரவில், பார்வையை ஏமாற்றிய சரடுகள் தொங்கும் நக்ஷத்திர இரவில், நீல ஏரியில் இரு கைகளிலும்(அவன் ஒரு கை அற்றவன்- தோளிலிருந்து சூம்பியவன்)துடுப்பு ஏந்தி அவன் செலுத்தும் ஓடம் கரை தட்டி அவனின் அந்தப் பெண் படகில் ஏறுகிறாள். அவள் நீலப் புடவை உடுத்தியுள்ளாள்.
“நான் நீலச் சுடரானேன்- கர்ப்பூரம் அசைவற்று எரிவதைப் போல். என்னுள் குறையும் அத்தனையின் நிவர்த்தியுமானேன்.என்னின் நிவர்த்தியுமானேன்”
அவனின் இந்த உண்மையுமான கனவில் ஓடம் பாறையில் மோதி அவள் நீரில் மூழ்குகிறாள்.
அவள் தாயாகப் போகும் செய்தி தாங்கி வரும் கடிதம் அவனின் ஆதார சூக்ஷுமத்தைத் தொடுகிறது. தன் மகவு, அது பெண் மகவு என திண்ணமாக நினைக்கிறான்.அவர்களுக்குத் தொடர்ந்து பணம் அனுப்பி தன் குடும்பம் போல் பார்த்துக் கொள்கிறான் அவளும் பிள்ளைபேற்றுக்கு வருகிறாள்.ஒரு நாள் குளக் கரையில் நீர் நிறைந்த விழிகளுடன் யதேச்சையாக அவனைப் பார்க்கிறாள்.
அவள் இறந்து விடுகிறாள். ஆண் குழைந்தையும் வயிற்றிலேயே இறந்து போகிறது.தன் ஆசைப் பசி அவளைத் தின்றுவிட்டதாக இவன் நினைக்கிறான். அவள் கணவன் இவனுடன் பேசுகையில் இவன் நினைக்கிறான்..”என் குழந்தையைப் பெற்றவள் அவள். என் குழந்தைக்கு தந்தையாய் இருப்பவன் அவள் கணவன்”
“உள்ளத்தின் மூலம் உடலை வெற்றி கொண்டேனா?அல்லது உடலின் மூலமே உள்ளத்தின் தாபத்தை வெற்றி கொண்டேனா?
ஒரு வார்த்தை கூட கதையில் அந்தப் பெண்ணை லா.ச ரா பேசவிடவில்லை. சிறு பருவத்தில் கதை சொல்லியை அவள் கேலி செய்வது கூட இவன் குரலில் தான்.அந்தப் பெண் பேச வேண்டியதனைத்தும், நிறை சூலியாய் நீர் எடுக்க குளத்திற்கு வருகையில் துடிக்கும் உதடுகளும்,கண்களில் நிறையும் நீரும், மௌனமும்,அவள் விருட்டென்று சென்றுவிடும் வேகமும் மொத்தமாகக் காட்டிவிடுகின்றன.அவன் வாழ்க்கையில் பிறர் அறியா ஆனந்தம் அவள்.அவன் இசைத்த ஆன்மீகப் பாடல் அவள்.தன் சுருதி சேர்ந்த இடத்தினை நுட்பமாகக் கையாளுகிறாள்.. அவனின் தாபம் தீர்த்தவள்,அவனுக்கு மட்டுமே இரகசிய ஆனந்தத்தை தந்து இறந்து விடுகிறாள்.
இனி அதிகம் அறியப்படாத ஆனால், மிகத் தனித்த சுவையுள்ள கதையாளர் சுரேஷ் குமார் இந்த்ரஜித்தைப் பற்றிப் பார்ப்போம்.
மிகப் பரவலாக வாசிக்கப்படாதவர்,கதை அற்று கதை சொல்பவர்,மாயப் புனைவுகளைச் செய்பவர்,வாசகனின் தன் முனைப்பையும்,ஈடுபாட்டையும் கோருபவர், சொற் சிக்கனம் மிக்கவர்,வருணனைகளையும், உரையாடல்களையும் சில தருணங்களில் மட்டுமே கையாள்பவர்.
மெல்லிய கோடுகள் வரைந்து சித்திரத்தை வாசகனின் புரிதலுக்கு உட்படுத்துகிறார்- பொதுவாக சட்டக எல்லைகளை மீறும் கோடுகள்- இந்த ஓவியம் எங்கோ தொடர்கிறது அல்லது தொடரப் போகிறது என்றே படிப்பவரை எண்ணத் தூண்டுகிறார்.
‘விரித்த கூந்தல்’ இடம் பெறும் ஒரு சிறுகதை.அது பெண்ணின் வஞ்சினம் மட்டுமல்ல, அவள் கோரும் கட்டற்ற விடுதலை.பின்னியும், எடுத்துக் கட்டியும் இருப்பதை விட, தன் ஆறாத சினத்தை,இயற்கையின் வஞ்சத்தை,அவள் சொல்ல முடிவது அந்த விரிப்பினால்தான். நம் பாரத மாதா, பாஞ்சாலி, ரவிவர்மாவின் லஷ்மி, சரஸ்வதி, காளி அனைவரையும் நினைவில் எழுப்பும் கதைஇது.முதன்முதலில் குற்றாலத்தில் அருவியைப் பார்த்த லா.ச.ரா’அம்பாளின் கூந்தல் எப்படிப் புரள்றது’ எனச் சொக்குகிறார்.எழுத்தாளர்களின் கனவுச் செதுக்கல்கள்.
.’பழைய சமூக மதிப்பீடுகளைக் கலைப்பதிலும், மாயத் தன்மை வாய்ந்த பாணியினால் பல வழிகளைத் திறப்பதிலும்,தர்க்கத்திற்குப் புலப்படாத வாழ்வின் அபத்த திருப்பங்களைக் கூறுவதிலும்,பிடிபடாத வாழ்வின் மர்மங்களைக் காண்பிப்பதிலும் நான் ஈடுபாடாக இருந்தேன்’ என்று சுரேஷ் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
இன்றைய கதைக்களம் சாதாரண மனிதர் முதல், வேற்றுக்கிரக வாசிகள் வரை கையாள்கிறது.அபுனைவுகள் அதிகரித்துள்ளன.மொழி, அலங்காரங்களைத் தவிர்த்து இயல்புடன் இருக்கிறது. வர்ணனைகள் காட்சிகள் மூலமாக, அதுவும் படிமங்களாக,அல்லது தலைகீழ் விகிதங்களாக வருகின்றன.படிக்கும் ஆர்வம் மனிதனை மனிதனாக வைத்திருக்கும் என நம்புகிறேன்.