வாழைக்குருத்தில் ஒழுகும்
நுண்மழைத்துளியாகும்
எளிய இரவு
கனத்துக்கிடக்கிறது இன்று
சிறு மரக்குச்சியிழுக்கும்
திருவைக்கல்லென.
எப்போதோ வீடடைந்திருக்க வேண்டும் –
நீயின்றித் தனியாய்
நெடுவெளியில் நின்றிருக்கும்
திசைதவறிய ஆட்டுக்குட்டி.
வாசல் மாடக்குழி விளக்கேற்ற
விண்மீன் தேடிச்சென்ற நீ
விலக்கிவைத்த நட்சத்திரங்கள்
மின்மினிகளாய் மண்ணில் வந்து
திசையெங்கும் நிறைய
திகைத்து நிற்கிறது
வழிமறந்து.
எதிர்க்காற்றில் அவியாத
எரிசுடரென
பிரியத்தை ஏந்திவை –
உன் வாசல் மாடத்தில்.
வீடடைய வேண்டும்
மேய்ப்பனில்லா ஆட்டுக்குட்டி.