வித்யாபதியுடன் இப்ராஹீம் தயங்கியவாறு அவ்வீட்டின் வரவேற்பறைக்கு வந்தான்.அதிக ஆடம்பரங்கள் இல்லாத அறை.கண்களை உறுத்தாத சுவர்ப் பூச்சு.வடப்புறத்துச் சுவரில் இன்னதென்று புரியாத நவீன ஓவியங்கள் இரண்டு தொங்கின. தென்புறத்தில் இராமர் பட்டாபிஷேகக் காட்சி மிகப் பெரிய படமாகத் தொங்கியது.கண்ணாடிக்குழல்களால் அமைக்கப்பட்ட திரைச்சீலைகள் ஜன்னல்களை அலங்கரித்துக் கொண்டிருந்தன.மெல்லிய ரீங்காரத்தோடு குளிர் சாதனம் இயங்கிக்கொண்டிருந்தது. சற்றுமுன் அங்கே சாம்பிராணி போடப்பட்ட மணம் இன்னமும் நாசிகள் உணரும் வகையில் இருந்தது.
வித்யாபதி எதையோ எதிர் நோக்கும் தவிப்பில் இருந்தான். இப்ராஹீமுக்கு இந்தச் சூழலே புதிது.உவகையோடு இனந்தெரியா கலக்கமும் ஏன் தோன்றுகிறது என்று அவன் மனம் தனியே கேட்டுக் கொண்டிருந்தது.உள்ளே மணி அடிக்கும் ஓசையும், அதைத் தொடர்ந்து ‘க்ஷீராப்தி கன்யககு’ என்று இனிமையான குரலும் அவன் அமர்ந்திருந்த இடத்தில் மெதுவாக ஒலிக்கையில் அவன் மனதில் பர்வீன் பாடும் அந்தப் பாடல் எதிரொலித்தது.
‘பிஞ்சுக் கைகளை நீட்டுகிறேன் யா அல்லா
நெஞ்சம் உருகிட வேண்டுகிறேன் யா அல்லா
சுந்தர வானும், நிலமும் நீ அல்லா உன்
அன்பெனும் அமுதைப் பொழிந்திட நான் எந்தன்(பிஞ்சுக்)
அவளின் குரலுக்காகவே அவளை நிக்காஹ் செய்து கொண்ட நஜீப் பின்னர் அவளைப் பாடவே விடாமல் செய்ததும், அந்த ஏக்கத்திலியே அவள் உயிர் விட்டதும் அவன் மனதில் மேலெழும்பி இந்த இடத்தை விட்டுப் போய்விட்டாலென்ன என்று தவிக்கச் செய்தது.அதே நேரம் வித்யாபதியிடம் காணப்பட்ட பரவசம் சாதாரணமான ஒன்றில்லை என்பதையும் அவன் கவனித்தான்.பூக்கள் பூக்கும், வாசம் வீசும், இயற்கையின் செயல்பாடுதான்.ஆனால்,மனிதனுக்கு நியதிகள் உண்டல்லவா? உர்ஸ் கொடையில் ஊரின் பங்கிற்காக வந்து உட்கார்ந்திருக்கும் இடத்தில் பதியால் வம்பு ஏதும் வந்துவிடக்கூடாதென்று அவன் கவலைப்பட்டான்.
“வாங்கோ, வித்யா,அப்பா இப்போ வந்துடுவா, உங்க ஃப்ரண்டா? ஜலம் எடுத்துக்குங்கோங்கோ”
அந்தப் பெண் வரும் சத்தமே கேட்கவில்லை.கஸ்தூரி மஞ்சள் வாசம் வீசியது.திருத்தமான வட்ட முகம், பெரிய கண்கள்,நட்புப் பாராட்டும் இதழ்கள்,சற்றுப் பூசிய உடல் இதையெல்லாவற்றையும் கவனித்தாலும் தானறியாமல் எழுந்து நின்று கொண்டிருப்பதையும், வித்யாபதியும் கூடவே நிற்பதையும் அவன் உணரவில்லை.
“உக்காருங்கோ, சேர்ல்லாம் அதுக்குத்தான்”என்றபடி அவள் உள்ளே போய்விட்டாள்.அவன் மனம் கிடந்து அல்லாடியது. வித்யாபதிக்கு அவர்கள் குடும்ப நண்பர்கள்.இவனோ இன்று தான் இங்கே வருகிறான். ஒரு பெண் தன்னுள் சந்தித்த மாத்திரத்தில் இத்தனை சலனத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதே அவனுக்கு வேதனையாக இருந்தது.பதியைப் பார்த்தால்,அவன் வேறு உலகில் இருப்பது போல் தெரிந்தது.’அப்படி இருக்குமா?அப்படியென்றால் அவனை இந்த வீட்டார்கள் அறியவில்லையா? அவர்களுக்கும் பிடித்தமா?அந்தப் பெண் இயல்பாகத்தானே நடந்து கொண்டாள், தன் நண்பன் ஏமாறப் போகிறானோ? அவனை விடு, நீ வந்த காரியம் அல்லாவிற்குப் பிரியமான காரியம், அதில் காமத்தைக் காதலைக் கொண்டு வந்தால் நீ என்ன உண்மையான ஊழியன்?அல்லாவின் முன்பு இதற்காக நீ தண்டனை பெற நேரிடும்.
“வா,வா,பதி,இப்ராஹீம் தான நீங்க?பதி நேத்து சொன்னான்.தாவூத்தோட பையன் தான நீங்க?உர்ஸ் கொடைக்கு எப்போதும் நான் தான் முதல் காணிக்கை; வாப்பா ஊர்வலத்தும்போது தானே நடந்து வருவார்,எதுக்குக் கவலப்படறேள்?நீங்களும் ஊரத்தெரிஞ்சுக்கணும்னு இப்டி நடக்கறது”
‘சார், என்ன நீங்க பதி போல நடத்தணும், வாங்க, போங்கன்னெல்லாம் வேணாம் சார் ,வாப்பா சொன்னாங்க நாப்பது வருசமா பளக்கம்னுட்டு.வளம போல பதினாறு தெருலயும் கூடு போகோணும்’
“ஓன்னும் ப்ராப்ளமே இல்ல.செக் கொடுக்கறேன்.அப்பாவக் கேட்டதாச் சொல்லு. நா கோர்டுக்குக் கெளம்பணும். விழாவை ஜமாய்ச்சுப்பிடலாம்”
நன்றி சொல்லிவிட்டு விடை பெறுகையில் அந்தப்பெண்ணைத் தேடிச் சலித்தன இரு ஜோடிக் கண்கள்.
பைக்குள் இரசீது புத்தகம் இருந்தும் தான் கொடுக்கவில்லை என்பதில் அவனுக்கு சுய கேலியும் மகிழ்ச்சியும் வந்தது.அந்த சாக்கில் மீளவும் அங்கே வரலாம் என்ற நினைப்பே கொஞ்சம் குத்தவும் செய்தது.அருகே பதி ஒன்றும் பேசாமல் வருவதும் இருவர் எண்ணங்களும் ஒன்றோ என்ற பயமும்,அப்படியே இருந்தாலும் வித்யாவைவிட தனக்கு வாய்ப்பு குறைவுதான் என்றும் அவனுக்குத் தோன்றியது.
“ரஹீம்,ரசீதே கொடுக்கலயேடா, சரி, பரவால்ல,என்ட்ட குடு என் வீட்டுப் புறத்தால தான, நா தந்துட்றேன்.”
‘பெரியவரு தவறா நெனக்க மாட்டாரா?நானும் வர்ரதுதான மொற’
“அடப் போடா,அவரு அதல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டாரு.நா அவுங்க வீட்டுக்கு வரப் போக இருக்கறவன்”
கூட்டிக் கொண்டு போனவன் இதே நண்பன் தான்; இப்போ வராதே எனச் சொல்பவனும் அவனேதான். வாப்பா சொன்னதால் அழைத்துப் போயிருக்கிறான்.சரி,அவன் சந்தேகப்பட வேண்டாம் என்று இரசீதை பதியிடமே கொடுத்துவிட்டான். அதை வாங்கிக்கொண்டபோது அவன் முகம் காட்டிய மலர்ச்சி,அவர்கள் நடந்து கொண்டிருந்த ஓடைக் கரையில் பூக்கும் வசந்த மலர்களுக்கு ஈடாகும்.இவ்வளவு நிச்சயமாக இருக்கிறான் என்றால் அவளும் இவனை விரும்புகிறாளோ என்னவோ என்று ஒரு மனமும்,இல்லயில்லை, உன்னைப் போல் இவனும் கனவில் தான் இருக்கிறான், அவள் குறிப்பால் கூட பதிக்காக ஒன்றுமே செய்யவில்லையே என்று ஒரு மனமுமாக அவன் பிரிந்து நின்றதை மற்றோரு மனம் பார்த்துக் கொண்டிருந்தது.
‘பாரினில் பறவைக்கும் சிறகை நல்கும் அல்லா’அவனின் தூய நேசத்தை அறியாமலா போவார்?மறு நாளே அவளைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை.
சாம்பிராணிப் புகையுடன், துவா ஓதிக்கொண்டு மயில் இறகுகளால் மந்திரிக்கும் ஃபக்கீர் தன் வீட்டை விட்டு வெளி வருவதைப் பார்த்தான்.
‘சாயுபு,இன்னக்கு எத்தால போறீக?’
“உமக்கென்ன,பொவ காத்ல எங்கிட்டும் போவும்”
‘அட,கோயிக்காதீக;டவுனு பக்கம் பைக்கில போறன்.உம்ம அங்கிட்டு எறக்கி விடலாம்னுட்டு கேட்டாக்க..’
“யெஜமானருக்கு என்னா இம்பூட்டுக் கருண;அத்தால வடம்போக்கி முக்கத்ல விட்டுடுங்க.”
அல்லாவின் தூதனை ஏற்றிச் செல்லும் பரவசத்தோடு அவன் ஃபக்கீரை ஏற்றிச் சென்றான்.தன் உரத்த குரலில் ‘நாகூர் ஆண்டவருக்குக் காணிக்கை’ என்று இவர் கூவமாட்டாரா, அவள் மந்திரித்துக் கொள்ள வரமாட்டாளா, அவளை அப்போது மீண்டும் பார்க்க மாட்டோமா என்று அவன் மனதிற்குள் கணக்குப் போட்டான்.
சாயபு ஒவ்வொரு வீடாகச் சென்று கொண்டிருந்தார்.இவன் நடந்து செல்லும் பாதங்களை, பேசிக் கொண்டே செல்லும் குரல்களை,காற்றில் கைவிரல்களால் சிந்தனையை எழுதிக் கொண்டு செல்லும் மனிதர்களை,கொலுசுகள் சத்தமிட ஓடும் சிறுமிகளை, வாயால் வண்டியோட்டும் சிறுவர்களை,மார்பில் புத்தகங்களை அணைத்துக் கொண்டு கிசு கிசுவெனப் பேசிக்கொண்டே கண்கள் அலைபாய நடக்கும் கல்லூரிப் பெண்களை,கணவனுடன் சினிமாவிற்குப் போகும் மகிழ்ச்சியில் அவன் தோளில் சாய்ந்து கொண்டு வண்டிகளில் பெருமிதத்துடன் செல்லும் மனைவிகளை எல்லாரையும் பார்த்தான். ஆனால், அவளைக் காணவில்லை.சாயபு அவள் வீட்டைக் கடந்து சென்றுவிட்டார்.இனியும் இங்கு நின்றால் அவனைப் போவோர் வருவோர் சந்தேகிக்கக்கூடும்.அவன் வண்டியை எடுக்கையில் அவள் உள்ளிருந்து விரைவு நடையில் வருவதைப் பார்த்தான். சாயபு தாண்டிச் சென்றுவிட்டதை ஏமாற்றத்துடன் பார்த்துவிட்டு அவள் உள்ளே திரும்ப யத்தனித்தாள்.அவன் ‘சாயபு, சாயபு’ என்று அவளுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தான்.அவளுக்கு மந்திரம் ஓதுவது முடியும் வரை அவனும் அங்கேயே நின்றான். அவள்’தேங்க்ஸ்,நீங்கதான நேத்திக்கு வந்தேள்’ என்றாள். அவளாகப் பேசுகிறாள், பேசு, பேசு என்றது மனம். பாழும் நாக்கு, ஒட்டிக்கொண்டு மேலே வரவில்லை. தலையை கௌரவமாக அசைத்து வைத்தான்.’வரேம்மா’ என்று குரல் கொடுத்துக்கொண்டே அவள் உள்ளே போய்விட்டாள். சாயபு கண்களில் குறும்பு கொப்பளிக்க அவனைப் பார்த்தார்.
ஐஸ்கீரீம் சாப்பிட வேண்டும் போலிருந்தது, ஓடிச் சென்று ஏரியில் குதித்து நீந்த வேண்டும் போலிருந்தது,கவ்வாலி பாட வேண்டும் போலிருந்தது,கைகளால் சந்தனம் அரைத்துக் கரைக்க வேண்டும் போலிருந்தது,ஷெனாய் வாசிக்க, அத்தர் பூசிக்கொள்ள, சைலி அணிந்து கொள்ள, நட்புடன் அனைவரையும் தழுவிக்கொள்ள ஆசையாக இருந்தது.
“மாப்ள, போலாம, இல்ல, இன்னொமொரு வாட்டி பொவ போடட்டுமா?” என்ற ஃபக்கீரின் பேரில் ஏனோ கோபமே வரவில்லை.
வீட்டிற்கு வந்தால் வாசலில் பல காலணிகள் காணப்பட்டன. நஜீப்பின் ஆர்ப்பாட்டமான குரல் கேட்டது.
“என்னா, மச்சான், சந்தனக்கூட்டுக்காக அலயுதீயளாக்கும்.நம்ம ராவுத்தரு, அதான் மச்சான்,எங்க கொச்சப்பரு அவரு மவள உனக்குக் கட்டணும்னுட்டு கேக்கறாரு.உம்ம தங்கச்சியை எனக்கு முடிக்கணும்னு ஆசப்படுதாவ.அத்தான் வந்தன்.நாம என்னிக்கு இருந்தாலும் ஒன்னுக்குள ஒன்னு. வாப்பா வெவரம் சொல்வாரு.அத்தால நல்ல சேதி சொல்வீயளாம்”
எதற்குப் பெண் கொடுத்து பெண் எடுக்க வேண்டும்?நஜீப்பை மீளவும் நம் வீட்டிற்கா?இதைவிட பர்வீனுக்கு நாம் அநீதி செய்ய முடியுமா? வாப்பா என்ன நினைக்கிறார்? உம்மா என்ன சொல்கிறார்? அவன் வாப்பாவிடம் ஒன்றும் பேசாமல் உம்மாவைக்காணப் போனான். அவள் பர்வீனின் புகைப்படத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு கண்களில் நீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவனுக்கு அம்மாவின் மனம் புரிந்தது; அது பெரிய ஆறுதலாக இருந்தது.”தம்பி,நஜீப்புக்கு ஜுனைதாவைத் தர சம்மதமா உனக்கு?” என்றாள்.
அவன்இல்லையெனத்தலையசைத்தான்.”வாப்பாஒப்பணுமே?”என்றாள்.அவன்’பேசுதேன்’ என்றான்.
ஆனால், வாப்பாவின் எண்ணம் வேறுவிதமாக இருந்தது.”ரஹீம்,என்ன சொல்லுதே?”
‘வாப்பா, நீரு அறியாததா?’
“தம்பி, நஜீப் மேல உனக்குக் கோவம், எனக்கு வருத்தம்.ஆனா, அல்லா அழைக்கிறாரு என்னய.வியாபாரம் படுத்துருக்கு. அதை எளுப்பணும்னா முதலு வேணும்.அவருக்கு ஒத்த மக. நம்ம வளமுற; தொழிலும் ஒன்னுப் போல. நாம ஊனிக்கிடலாம்; என்னய அடக்கம் செய்ய அதிக நாளில்ல ரஹீம் ரோசிச்சிக்கோ.”
‘வாப்பா,அல்லா நம்ம பாத்துப்பாரு.நஜீப் வேணாம்,அவன் நமக்கு ஆகி வல்ல.’
நஜீப்பின் சித்தப்பாவே நேரே இரு நாட்களில் வந்துவிட்டார்.”பொண்னெடுத்து பொண்குடுக்க வேணாம்னு தம்பி நெனைக்குது” என்று சமாளிக்கப் பார்த்தார் வாப்பா.
‘அது கெடக்குது களுத, அப்படியா சொல்லிப்பூட்டான் அவன்.உம்மகிட்ட எனக்காக பேசுதேன்னுதான் சொன்னான்; தனக்கும் பேசியிருக்கான்,முட்டாப்பய.ரஹீம் எம் மவள கட்டிக்கிட்டா போதும்.உம்ம மவளுக்கு நான் கொண்டாரேன் நல்ல மாப்ள.பொறவு ரெட்ட நிஹ்ஹாவுக்கும் ஜமாத்ல சொல்லிப் போடலாம். என்ன சொல்லுதீய?’
“அல்லா என்ன விரும்புறாரோ அதே நடக்கட்டும். என்ன தம்பி இப்ப சம்மதியா?” என்றார் வாப்பா.
‘வாப்பா, கொஞ்சம் அவகாசம் வேணும், பொறுத்துக்கிடுக.’ என்று அகன்றான் அவன்.
அவனாக வளர்த்துக்கொண்ட காதல்;நஜீப்பை சாக்குச் சொல்லி திருமணத்தை நிறுத்தலாம் என நினைத்ததற்கு அல்லாவின் சம்மதம் இல்லையோ?பொய்க்குப்பின் ஒளிந்து கொள்ள அவனை அவர் விடவில்லையா? நஜீப்பைப் போல் உள்ளவர்களும் இருக்கிறார்கள் தானே?அல்லா கருணையே வடிவானவர்,அவர் உண்மையான அன்பிற்கு எதிரியில்லை.அப்படியென்றால்,அந்தப் பெண், அவள் பெயர் கூடத் தெரியவில்லை, தன்னைக் காதலிப்பாளா, மதம் மாறுவாளா,தங்கைகளுக்கு நல்ல சம்பந்தம் கிடைக்குமா?ஏன் தடுமாற வேண்டும்; அவர், அந்த அய்யர், நன்றாகப் பழகினாரே, முற்போக்காகத்தானே காணப்படுகிறார், அவரிடமே பேசலாமா, கேட்கலாமா, ஒருக்கால் அவர் வாப்பாவிடம் சொல்லி விட்டால்,அந்த நாப்பது வருட நட்பு இவனால் முறிந்து விட்டால் அவன் வாழ்ந்துதான் என்ன பயன்?இல்லை, இதை இப்படியே விட்டுவிடுவதில்லை. உம்மா அவனைப் புரிந்து கொள்வாள், தனக்கு சரியான பாதையும் காட்டுவாள்.
அம்மா கண்களில் நீர் ததும்பப் பார்த்தார்.”தம்பி,தாழம்பூ இருக்குதில்ல, அது காட்டுல கண்ணுக்குத் தெரியாம பூக்கும்.ஆனா, வாசம் இங்கே இங்கேயின்னு இழுக்கும்.உள்ளார பூ நாகம் ஒளிஞ்சுக்குனு உக்காந்திருக்கும்.வீட்ல நட்ற பூ அல்ல தம்பி அது.அந்த அய்யருக்கு தங்கச்சிதான் மிஞ்சல, மகளாவது மிஞ்சட்டும்ப்பா”
‘மா..’அவன் கிட்டத்தட்ட அலறினான்.
“ஆமாய்யா, உனக்கு மொறப் பொண்ணு,இப்ப கேக்க மொற இல்ல.அண்ணா என் நிஹ்ஹாக்கு அப்றம் கூட உன் வாப்பாவோட சினேகிதமா இருக்காரு.அவுக காலேஜ்ல ஒன்னா பிஏ படிச்சவுங்க,விடுதில ஒரே ரூமாம்.எந்தக் காலத்லயும் நட்பை முறிக்கறதில்லேன்னு சபதம் வச்சாங்கலாம். அப்றம் அண்ணா பி.எல் படிச்சாரு, இவரு தொழில் தொடங்கினாருஅப்ப நாங்க மண்ணச்ச நல்லூர்ல இருந்தோம். ஒரு விடுமுறை நாளுக்கு உன் வாப்பாவை அண்ணா வீட்டிக்கு அழைச்சு வந்தாரு. அப்பவே எங்க மனசு நெருங்கிடுச்சு.வீடு, உறவு எல்லாம் எதிச்சித்து ஆனா, அண்ணா, குறுக்க நிக்கல. குடும்பம் என்னயத் தள்ளினாத்தான் கலியாணமும்னு சொல்லிட்டாங்க;அதனால, எங்க நிக்காவுக்கு அப்றம் அண்ணா என்னோட பேசல்ல, பாக்கல்ல. அந்த ஊர விட்டு இங்கன தொழிலுக்காக வந்தா அண்ணாவும் இங்கே லாயரா இருந்தாரு, இருக்காரு. எப்பயாச்சும் ஏரிக்கரையில அவரு நடக்கச் சொல்ல ஒளிஞ்சு நின்னு பாப்பேன்.அந்தப் பொண்ணுக்கு என் நெல வேணாம் தம்பி”.
அவனிடம் அல்லா ஏன் இப்படி விளையாடுகிறார்?புதையலைக் காட்டிவிட்டு அது உனக்கில்லை என்கிறாரே?மாமன் மகளாக அந்தப் பெண் இயற்கையாக அமைந்துள்ளதை ஏன் நம் குடும்பத்தை இணைக்கும் வாய்ப்பாகப் பார்க்கக் கூடாது? என்று நினைத்தான்.அவன் எண்ணத்தை அறிந்தவள் போல் அம்மா அவனைக் கண்ணீரோடு பார்த்தார் ’தம்பி,உண்மைங்கறது என்னைக்கும் உள்ளதுய்யா.என் அண்ணாவ ஒருமுற முறிச்சுட்டேன்;இன்னொரு கோடரி தாங்காதய்யா;எங்க நிக்கா நடந்த சமயம் இருந்த சொந்தமெல்லாம் இன்னமும் இருக்காஹ தம்பி. நாம கஷ்ட காலத்ல ஒட்டிக்க வாரோம்னு நெனைச்சுடுவாஹ;அது உன் வாப்பாவுக்கு அவமானம்.தம்பி,என் ரண்டு கண்ணுக்காக உன் மனச ஒடிக்கிறேன்.இளம தாங்கிடும், முதும முறிஞ்சுடும் தம்பி.விட்டுடுய்யா!’
‘உம்மா சொல்வது நடைமுறை;அந்தப் பெண் ஒருக்கால் தன்னை விரும்பாவிட்டால் என்ன நடக்கும்?அவள் தந்தையே கூட மகன் மூலம் நெருங்கிய உறவு கொள்ளப் பார்ப்பதாக நினைத்தால் வாப்பாவிற்கும்,அவருக்கும் இடையிலுள்ள நட்பு கூட முறியலாம்.சில நினைவுகள் கனவுகளில் மட்டுமே மணக்குமோ என்னவோ?’