நான்கே பக்கங்களில் அடிமைப்படுத்தப்பட்டோரின் வலியும் , வரலாறும் ( சிவசங்கர். எஸ்.ஜேவின் புனைவுச் சாத்தியம் )
-றாம் சந்தோஷ்
![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/10/68870434_2127453924215538_5688667046632488960_n-669x405.jpg)
கடந்த பத்தாண்டை விடவும் தற்போதைய டிஜிட்டல் உலகமானது எத்தனையோ மாறுபட்டதாய் இருக்கிறது. நம் உறுப்புக்களை இயக்கும் மூளையாய் கைபேசிகள் மாறி உள்ளன. பல்கிப் பெருகிக் கிடக்கும் தகவல் நிலத்தில் எது உண்மையின் உண்ணத்தக்க கீரை என்றோ, எவை தகாத களைகள் என்றோ தெரியதாபடி இரண்டையும் உண்டபடியும், உண்ணும்படியும்தான் இருக்கிறோம். நேரம், இந்த அவசர உலகத்திலும்கூட நம் கைக்குள் அடங்காமல் கைபேசியின் கட்டுப்பாட்டில் முடங்கி இருக்கிறது; நாமும். இதுபோன்ற சூழலில்தான் இலக்கியமானது தன் நுண் அரசியலை முன்பை விடவும் தீவிரமாய் செயல்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.
ஆனால், வாய்ப்புக்கேடாக, பதிப்பாளர்களின் முகவர்களாக மாறியபடி இருக்கும் எழுத்தாளர்கள் வாசகனை வெறும் நுகர்வோனாக மட்டுமே (இவை ஜமாலனின் வார்தைகள்) பாவித்து, தங்களுடைய படைப்பாக்க பிம்பத்தை ஊதி ஊதிப் பெருக்க வேண்டி மட்டும் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளுகிறார்கள். பக்கத்திற்கு ஒரு ரூபாய் வீதம் விலை நிர்ணயிக்க அன்றி, வேறு என்ன நியாயப்பாடுகளுக்காக இவை இவ்வளவு நீஈஈஈ…. எழுத்துக்களாக எழுதப்படுகின்றன என்பதை விளக்கினால் இலக்கியம் வளம் பெறும். காலனியமயமாக்கலின் காலாச்சாரத் தாக்கம் போன்று ஏதோ புதிய விசயங்களாய் இருந்தால்கூட பரவாயில்லை; ஏதோ புரியாத விசயம் என்று ஒப்புக்கொள்ளலாம். இல்லை, காலங்காலமாய் நம்மை காவு வாங்கிக் கொண்டிருக்கும் ஜாதி போன்ற புரிந்ததும் புரியாததுமான, அன்றி, களைய இயலாததும், மனிதத்தை மாளச் செய்வதுமான பிரச்சனைகள் குறித்து என்றாலும் அதுவும் நியாயமே. ஆனால், ஒற்றை மெல்லுணர்வினைக்கூட தீர்க்கமாய் உணர வைக்கிறேன் என்று கிளம்பிவிட்டு ஐந்தாறு அத்தியாயங்கள் வரைக்கும் நடு ரோட்டில் நடந்தபடி இருந்தால்.. இந்த வறிய வாசகர்கள் மேல் தங்களுக்குக் கருணை இல்லையா?
நான் அதிக பக்கங்கள் வாசிக்க விரும்பாத, அவ்வாறு ஒருவேளை அதிக பக்கங்களுக்காக என் நேரத்தை ஒதுக்க நேர்ந்தால் அதற்குச் சமமான ஊதியத்தை, அதாவது அதற்கு நிகரான பலனை பிரதியிடமிருந்து கோருபவன். செய்தித்தாள்களில் வருவதைவிடவும் சுவாரசியம் குறைந்த ஒரு நிகழ்வை, அதன் மீதான பார்வைக் கோணத்தைக்கூட மாற்றி அமைக்காத போதும் கதையாக்கிக் தரும் எழுத்தை, பிரதியை நிச்சயம் நான் புறக்கணித்தே பழகி இருக்கிறேன். அப்படியிருக்க, எனக்குப் பிடித்த மாதிரியேயான சிறிய, அதேசமயம் நுண்மையான, புலனுணர்வுகளை விசாலப்படுத்தக்கூடிய கதைகளை சில நாட்களாய் படித்துவருகிறேன். உதாரணமாக, திலீப் குமாரின் கதையை, இவர் கட்டுரையில் பேசவிருக்கும் கதையைப் படிப்பதற்கு முந்தைய நாள் இரவு படித்தேன். ‘கானல்’ என்ற அக்கதையின் தலைப்பு எனக்குக் க்ளிஷேவாகப்பட்டாலும், இரண்டு பக்கங்கள்கூட மிகாத அளவிலும்கூட அக்கதை பேசிய விசயமும், பேசமால், அதாவது, கதையின் முடிவை திறந்த நிலையில்விட்ட நேர்த்தியும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கதையை வாசிக்க சொடுக்கவும்: https://azhiyasudargal.blogspot.com/2012/08/blog-post_18.html?m=0
அடுத்து, நான் படித்த கதை, சிவசங்கர் எஸ். ஜேயின் “கடைசியில் ஆமையே வெல்லும்..”. தலைப்பை வாசித்த கணமே நம் எல்லோருக்கும் பள்ளியில் படித்த, முயல், ஆமை கதை நினைவுக்கு வந்து போகும். முயல் அசந்து படுக்கவும் ஆமை வெற்றி பெறும் கதை, மறுமுறை நடந்த போட்டியில் இந்த முறை ஓய்வெடுக்காமல் முயல் வெற்றி பெறும் கதை, நீரில் நடந்த போட்டியில் ஆமை வேகமாய் நீந்தி முயலைத் தோற்கடிக்கும் கதை, ஒருநிலையில் இரண்டும் சமரசத்திற்கு வந்து நிலத்தில், ஆமை முயலின் மீது ஏறி அமர்ந்துகொண்டும் நீரில், முயலானது ஆமை மீது அமர்ந்துபடியுமாய் இரண்டுமே எல்லைக் கோட்டை கடந்து சமான வெற்றி பெறும் கதை என்று பல வகைகளை இதில் படித்திருப்போம். சிவசங்கர் எஸ்.ஜேவின் கதையும் முயல், ஆமைகளைப் பற்றியதேதான். அவ்வாறிருக்க, அப்படி என்ன புதிதாய் இருந்துவிடப் போகிறது அதில்; இருக்கிறது என்பதுதான் இக்கதையாடலின் வெற்றி.
மேற்சுட்டிய கதைகள் பொதுவாக சுயமுன்னேற்றக் கதைகளாக நமக்குச் சொல்லப்பட்ட நிலையில், (இந்தக் கதையையும் அவ்வாறு வாசிக்க இயலும்) சமூக முன்னேற்றத்தைத் தன் கதை நோக்காக கொண்ட இக்கதையில் வரும் ஆமை, முயல் என்பவை, முறையே அடிமைப்படுத்தப்பட்டவன், ஆண்டான் என்ற சாதிய அடிப்படையில் பிளவுண்ட மானுடர்களைக் குறிப்பீடு (Signified) (அர்த்தம்) செய்வதாக உள்ளன.
ஒரு ஆமை விவரிக்கும் கதையான இதில், அவற்றோடு முயல்களும் வசிக்கும் அந்த ஊரின் பெயர் ஆமையூர். “கிட்டத்தட்ட ஐயாயிரம் வருடப் பாரம்பரியமிக்கது எங்கள் ஊர். பல நாட்டு யாத்ரீகர்களும், வரலாற்றாய்வாளர்களும், எழுத்தாளர்களும் எங்களூரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். புராணம், இலக்கியம் எல்லாவற்றிலும் எங்கள் மூதைகளைப் பற்றிய கதைகள் பிரபலம். ஆனாலும், என்னுடைய இளம்பிராயத்தில் எனக்குள் ஏற்பட்ட கேள்விகள் இன்னும் தீர்ந்தபாடில்லை.” என்று கதை சொல்லத் தொடங்குகிறது ஆமை.
என்ன அந்த கேள்விகள்?
“முதலில் இந்த முயல் பயல்களின் கேலி. இரண்டாவது எங்கள் நகரும் தன்மை.”
சாதியக் கட்டுமானத்தில் அடிமைப்படுத்தப்பட்டவர்களாக இருக்கும் மக்களின் குரலாக இக்கதையினை வாசிக்கத் தலைபட்டால் (அதாவது, கதையில் எங்கும் ஜாதி, வர்க்கம் சார்ந்த எந்த வெளிப்படையான குறியீடுகளும் இருப்பதில்லை; பாத்திரங்கள்கூட மனிதர்கள் இல்லை என்பதை மறுபடியும் நினைவு கூறுகிறேன்) மேல் பத்தையை அடுத்து வரும், “எனக்கு முயல்களிலும் நண்பர்கள் உண்டு. குறிப்பாக என்னை எப்போதும் கேலி செய்யும் ஒரு குட்டி முயல் பயல். அவனோடான விவாத முடிவில் எனக்குள் வெறுமையே மிஞ்சியிருக்கிறது.” என்ற வரிகளுக்குப் பின்னால் இருக்கக்கூடிய ஆழமும், அதற்கு அடுத்த வரியான, “மீண்டும் மீண்டும் வெறுமையிலிருந்து மீள்வதும் விழுவதுமாகப் பல வருடங்கள்.” என்பதன் பின் இருக்கும் வலியும் நமக்கு நிச்சயம் புரியும்.
“முயல்களுக்கும் எங்களுக்குமான வித்தியாசம், அவர்கள் வேகமானவர்கள், நாங்கள் மெதுவானவர்கள். எங்கள் வசிப்பிடப் பகுதியில் எல்லா நிலப் பகுதியும் உண்டு. அவர்களுக்குப் புதர்கள் மட்டும். அவர்கள் பாலூட்டிகள்; நாங்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவர்கள். அவர்களால் நிலத்தில் மட்டுமே வாழ முடியும்.” என்று தங்களுக்கிடையிலான வித்தியாசங்களைப் பட்டியலிட்டபடி இருக்கும் ஆமை, முடிவில், “மொத்த வித்தியாசங்களில் நகரும் தன்மை மட்டுமே எங்களைவிட அவர்களை உயர்ந்தவர்களாக்குகிறது” என்ற முடிவை அடைகிறது.
இந்த நகரும் தன்மையை கல்வி, உடைமை, அதிகாரம் போன்றவற்றைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தன்மை எனலாம். இவ்வாறு அவர்கள் மட்டும் இவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் என்ற கேள்வியும் ஆமைக்கு எழ, அது, கடலுக்கு அடிக்கடி பயணம் சென்றுவரும் தனது தூரத்து சொந்தக்கார மாமா, கர்வம் பிடித்த நட்சத்திர ஆமை அண்ணன் ஆகியவற்றைக் கேட்கிறது. மாமா, வேகம், புவியீர்ப்பு, நிலம், எடை, நிறை என அதற்குப் புரியாத காரணங்களைச் சொல்ல, நட்சத்திர ஆமை அண்ணனோ, ‘நீ நட்சத்திரங்களைக் குத்திக் கொள்ளாதவரை இந்த அவஸ்தையில்தான் உழல்வாய் என்றவாறு வழக்கமான திமிர் நடையை’த் தொடர்கிறது.. அடுத்ததாக, தனது ஐந்நூறு வயதான தாய்வழிப் பாட்டியிடம் இது குறித்து கேட்க, அதற்கு அவர் கூறிய பதிலில் தெளிவு பெற்றதாய், ஆமை, தன் தாத்தா சொன்ன கதையை நினைவுபடுத்திக் கொள்கிறது.
“….. மெல்ல நீரைவிட்டு நிலத்திற்கு இடம் பெயர முயற்சித்தன. ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு தன்மையிலும் உருவத்திலும் வித்தியாசமாக இருந்தாலும் நிலத்தை நெருங்குவதில் எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான போட்டி. ஆணும் பெண்ணுமாய் சகல ஜீவராசிகளும் ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு முந்தியபோது, நம் மூதை ஜோடியின் முதுகில், முன்னால் தாவிப் போன ஜோடி காலால் எத்திவிட்ட பாறை விழுந்தது. நிலத்திலும் இல்லாமல் நீரிலும் இல்லாமல் பாறை முதுகில் ஓடாய் மாற ஆமையினம் பிறந்தது”
கதையைக் கேட்ட ஆமைக்குத் தாவிப் போன உயிரினம் முயல் என்று சொல்லாமலே புரிகிறது. பிறகு, முயல் பயலிடம் சென்று இந்த விஷயத்தைச் சொல்லி அவன் மூதை செய்த தவறை உணர வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறது. சொல்கிறது. இதற்கு அடுத்த நாள் இருவருக்கும் பந்தயம்.
பந்தயத்தில் முதுகில் ஆமையின் ஓடு. எனினும், முயல் தோற்றுவிட்டது.
கடைசியில், ஆமை இப்படிச் சொல்கிறது்:
“…. நானே நினைத்ததுபோல் ஓடு என்பது வெளியில் இல்லை.
முயல் பயல் எல்லைக் கோட்டில் என் ஓட்டைக் கையில் பிடித்துக் கேடயம் போல் பாவித்தபடி அதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும் என்று கேலியாய்க் குதித்துச் சிரிக்கிறான்.”
இந்த கேலியாய்க் குதித்துச் சிரிக்கும் முயல் பயல் மனோபாவம்தான் இன்னமும் நம் பிள்ளைகளைச் சாதி பாரம் சுமக்கும் ஆமை சிறுவர்களின் முதுகுகளை ‘ப்ளேடா’ல் கீறச்செய்து மானுடம் பிறழ வைக்கிறது. அவலம்.
கதை இடம்பெறும் நூல்:
சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை, சிவசங்கர் எஸ்.ஜே., காலச்சுவடு பதிப்பகம், முதற்பதிப்பு 2017.