“வாங்க! வாங்க! சீக்கிரம் வாங்க! கடலுக்குப் போகணும்” என வேகமாகச் சத்தமிட்டபடி தன் கூட்டத்தை அழைத்தது பூ நாரை.
“எதுக்கு இந்த நாரை இவ்வளவு சத்தம் போடுது. அந்தக் கடல்ல என்ன அவ்வளவு மீன்களா கிடைக்கும்” எனத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, அருகில் இருந்த மரக்கிளையில் தன் கூட்டைக் கட்டிக் கொண்டிருந்தது ஒரு மைனா.
“எல்லோரும் தயாரா? வாங்க போகலாம்” எனத் தன் இறக்கையை அடித்தபடி பயணத்தை ஆரம்பித்தது அந்தப் பெரிய பூ நாரை. உடனே கூட்டமாக மற்ற நாரைகளும் பின் தொடர்ந்தன.
வானில் நாரைகள் பறப்பதைப் பார்ப்பதற்கு மிகப் பெரிய ஓவியத்தை வரைந்தது போல இருந்தது.
“ஒரு சில நாரைகள், போனமுறை அந்தக் கடலுக்குப் போன அனுபவத்தைப் பேசிக் கொண்டே பறந்தன.
“என்னால போன முறை 15 ஆமைக்குஞ்சுகளைக் கடல்ல போய் விட முடிஞ்சது. ஆனா அந்த நாய்த் தொல்லையை சமாளிக்கத்தான் நேரம் ஆயிடுச்சு” என்றது பெருமையாக ஒரு நாரை.
“நான் மட்டும் என்ன.. அதிக ஆமைக்குஞ்சுகளைக் காப்பாற்றினேன். அதற்காக பெருமை பட்டுக் கொண்டேனா என்ன…” என்று கோபப்பட்டது ஒரு நாரை.
அந்தப் பூ நாரைக் கூட்டத்தில் இரண்டு புதிய நாரைகளும் சேர்ந்து பறந்து வந்தன.
“இவங்க பேசிக் கொள்வது ஒன்றுமே புரியலை. நாம எதற்குக் கடற்கரைக்குப் போறோம்… கடல்வாழ் உயிரினங்களைச் சாப்பிடத்தானே.. அப்புறம் எதுக்கு இந்த ஆமைக்குஞ்சுகளைக் காப்பாத்துவதும், அதைப் பெரிய திருவிழா போலக் கொண்டாடுவதும்…” என ஆச்சரியப்பட்டது. அந்தப் புதிய நாரை.
“எனக்கும் அதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லைதான். ஆனா நான் கேட்டதுக்கு அங்க வந்து பாரு உனக்கே புரியும்னு சொன்னாங்க… சரி அப்படி என்னதான் இருக்கும் எனப் பார்க்கலாம்னு தான் இவங்ககூட வரேன்” என்றது மற்றொரு நாரை.
“அதோ… அதோ… கடல் மணலைப் பாருங்க” எனச் சத்தமிட்டது முன்னால் பறந்து கொண்டிருந்த பெரிய பூ நாரை.
எல்லா நாரைகளும் கடற்கரை மணல்ªளியைப் பார்த்தன.
அங்கே காக்கை, பருந்து, நாய், நரி எனப் பெரிய பட்டாளமே காத்துக் கொண்டிருந்தது.
“வாங்க! வாங்க! வேகமா…. அவங்களை விரட்டணும்” எனத் தன் இறக்கையை வேகமாக அடித்தது பெரிய நாரை.
வானில் பறந்து வந்த நாரைகளின் நிழலைப் பார்த்ததும், மணல்வெளியில் இருந்த காகம், பருந்து, நாய், நரியும் எரிச்சல் அடைந்தன.
“அடடே! இந்த நாரைகளுக்கு எப்படித்தான் தெரியுதோ தெரியலை.. சரியா வந்துவிடுதுங்க” என வேதனைப்பட்டது நரி.
“என்ன ஆனாலும் சரி. இந்த நாரைகளை ஒரு கை பார்த்திடலாம்” என முன்னேறி வந்தன காக்கைக் கூட்டம்.
நாரைகள் வந்த வேகத்தில் தனது பெரிய இறக்கைகளை பட..பட..வென அடித்ததிலேயே பாதிக்கும் மேற்பட்ட காகங்கள் பயந்து ஒதுங்கின. அதன் நீண்ட அலகைப் பார்த்து, அந்த அலகு குத்திலிருந்து தப்பிக்க முடியாது என ஓடின நாய்கள்.
இப்போது பருந்துகள் மட்டும் நாரையுடன் சண்டையிடத் தயாராயின. வேடிக்கை பார்க்க ஆரம்பித்தன நரிகள்.
“நண்பர்களே! நாம் இரு பிரிவுகளாகப் பிரிவோம். ஒரு பிரிவினர் ஆமைக்குஞ்சுகளைக் காப்பாற்றி கடலில் சேருங்கள். இன்னொரு பிரிவினர் அந்தப் பருந்துகளுடன் சண்டையிடுவோம். அப்படியே வேடிக்கைப் பார்க்கும் நரிகளுக்கு அலகு குத்துவோம்” எனக் கட்டளையைச் சொல்லியபடி பருந்துகளை நோக்கி விரைந்தது அந்தப் பெரிய பூநாரை.
பூநாரையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, ஆமைகளைக் காப்பாற்றக் கொஞ்சம் நாரைகள் பறந்து சென்றன. அதிகமான நாரைகள் பருந்துகளுடன் சண்டையிடத் தயாராயின.
முதலில் சண்டையிடத் தயாராக இருந்த பருந்துகள் அதிகமான நாரைகளைக் கண்டதும் கொஞ்சம் பயந்தன.
“பருந்துகளே! என்ன பயம், நமக்குத் தேவை உணவு. அது ஆமையாய் இருந்தால் என்ன… நாரையாய் இருந்தால் என்ன… ம்… வாருங்கள். சண்டை இட்டு வெற்றி பெறுவோம்… பசியாறுவோம்…” என உரக்கக் குரல் கொடுத்தது ஒரு பெரிய பருந்து.
முன்னே பறந்த பருந்தைப் பார்த்துத் தைரியம் அடைந்த மற்ற பருந்துகள் நாரைகளை நோக்கிப் பறந்தன.
கூர்மையான அலகுடன் வேகமாக பறந்துவந்த நாரைகள், ஒரே அடியில் பருந்துகளை வீழ்த்தின. இதைக் கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத பருந்துகள் அடிபட்ட பருந்துகளை விட்டுவிட்டுப் பறக்கத் தொடங்கின.
அதே நேரத்தில் அடிபட்ட பருந்துகளும் வலியுடன் பறக்க முயன்றன. தப்பித்துப் பறந்த பருந்துகளைச் சில நாரைகள் துரத்தின.
இப்போது கடற்கரை முழுவதும் நாரைகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
பருந்துகளை விரட்டிக் கொண்டிருந்த நேரத்தில் கடற்ரை மணலில் முட்டைகளில் இருந்து ஆமைக்குஞ்சுகள் பொரிந்து வெளியேறின. அவை சிறு சிறு பாறைகள் நகர்வதைப்போல இருந்தன. அந்தக் காட்சியைக் கண்டதும் நாரைகள் தங்களது மகிழ்ச்சியை இறக்கையை முறம் போல அடித்து வெளிப்படுத்தின.
ஆமைக்குஞ்சுகள் செல்லும் பாதையின் இருபுறமும் நாரைகள் அணிவகுத்து நின்று, மற்றவற்றிலிருந்து அவைகளைக் காத்தன. அந்தக் காட்சி இராணுவப் பாதுகாப்புப் படையைப் போல இருந்தது.
நடக்க முடியாத ஒரு சில ஆமைக்குஞ்சுகள் தலை குப்புற மணலில் கவிழ்ந்தன. அதனை நிமிர்த்தி நடக்க ஏற்பாடு செய்தன ஒருசில நாரைகள்.
“அண்ணே! எனக்கு ஒரு சந்தேகம், நமக்குக் கடல்வாழ் உயிரினங்கள்தானே உணவு. அப்படி இருக்க இந்த ஆமைக்குஞ்சுகளை நாம் ஏன் காப்பாற்றணும்?” என்று கேட்டது புதிதாய் வந்த ஒரு நாரை.
“…ம்… நீ கேட்டது சரியான கேள்விதான். நமக்குக் கடலில் கிடைக்கக்கூடிய மீன்கள்தான் விருப்பமான உணவு. அது கடலில் பெருகி வளர, இதோ போகிறதே இந்த ஆமைக்குஞ்சுகள்தான் காரணம்..” என்றது மற்றொரு நாரை
“என்ன… கடல் வாழ் உயிரினங்கள் பெருக ஆமை காரணமா?” ஆச்சரியத்துடன் கேட்டது புதிய நாரை.
“ஆமாம். கடலில் ஒருவித பாசிச் செடி அதிகமாக வளர்ந்திருக்கும். அது மீன்களுக்குப் பெரும் ஆபத்தை உருவாக்கும். ஆனால் அந்த ஆபத்தான பாசிதான் இந்த ஆமைக்குஞ்சுகளுக்கு விருப்பமான உணவு. நாம் இந்த ஆமைகளைத் தின்றுவிட்டால், அந்தப் பாசிகள் அதிகம் வளர்ந்து மீன் இனத்தையே அழித்துவிடும். அதன்பிறகு நம்மைப்போன்ற பறவைகளுக்கு மீன்கள் கிடைக்காமல் போய்விடும். இது இயற்கையின் உணவுச் சங்கிலி” என்றது நாரை.
“அட! இதில் அப்படி ஒரு செய்தி அடங்கி இருக்கிறதா? சரி. சரி. நான்கூட இது தேவையில்லாத வேலை என்று நினைத்தேன். ஆனால் இது நம் கடமை என்பது தெரிந்த பிறகு, முன்பைவிட அதிகமாக உற்சாகம் ஆகிறேன்” என்றபடி ஆமைக்குஞ்சுகளின் அருகில் சென்று “உங்கள் பாதுகாப்புக்குத்தான் நாங்கள் இருக்கோம். பயப்படாம கடற்கரைக்குப் போங்க” என்று உற்சாகக் குரல் கொடுத்தது புதிய நாரை.
“நான் இந்த முறை இருபது ஆமைக்குஞ்சுகளைக் கடற்கரைக்குக் கொண்டு சென்றேன், நான் 15, நான் 30 என ஒவ்வொரு நாரைகளும் ஆமைக்குஞ்சுகளை மற்றவைகளிடம் இருந்து காப்பாற்றிய கதையைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டே தங்களது கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன.
***
Sargunam