#1 மெளனத்தின் இசை
—————————————–
இறந்தவனின் நாட்குறிப்பினை புரட்டுகையில்
தாள் வனங்களிலிருந்து
உதிர்கின்றன
நினைவு இலைகள்.
மெளனம் இசைத்தபடி…
காலத்தினை
அடி அடியாய் வளர்த்து
மனசை வனமென
வளர்த்திருக்கிற கதையை சொல்கின்றன
அறைச் சுவர்கள்.
புத்தகம் படிப்பதுப் போல
நாட்குறிப்பினை
படிக்க இயலாதென
சொல்கிறது
அறையின் அமைதி.
நாட்குறிப்புகளும்
கருவறைகள் போலவே.
இங்கும்
ஆகம விதிப் போல
ஆழ்மன விதி
திரியின் வெளிச்சத்திலேயே
தரிசனம்.
காலத்தூசியில்
மெளன விரல்கள்
வரைந்த வரிகளில்
கடந்த எழுத்துக்கள்.
நாட்குறிப்பினை வாசித்த கண்கள்
தன் தரிசனத்தினை
காண்கிறது
ஏதேனும் ஒரு பக்கத்தில்…
மெளன இசையோடு
படிப்பவர்க்கெல்லாம்
கூடுதலாய் காண கிடைக்கும்
இறந்தவனின் பல முகங்கள்
வெகு அருகே.
தம் முகங்களுக்கு
ஒத்திசைவுவாய்…
# 2. புரண்டு படுக்கும் நினைவுகள்
—————————————————–
பிடிபட மறுக்கிறது
இன்றைய நொடிகள்
மனக்குகையில்
நேற்றைகளின் வீச்சம்
வெளவால் மடியாய்
நினைவுகளை சுரந்து
காலக் குட்டிகளின் தாகம் தீர்க்கிறது.
படுத்தே கிடக்கும்
நெடுமாலை எழுப்புகிறது
அவன் முதுகில்
பூத்த பூஞ்சைகளில்
நினைவு அரிப்புகளின் சுப்ரபாதம்
பால்யம் முதல்
பல் கழியும் பருவம் வரை
நினைவுகள்
வளர்ந்து பெருகி
வனமாக அலைகிறது
தத்துவ வேட்டைக்குள்
அகப்படாத விலங்குகள்
வனமெங்கும்
சிரித்தபடியே ஓடுகின்றன
தூக்கம் வராமல்
புரண்டு கொண்டிருந்த
கடவுளிடம்
இது குறித்து கேட்க
‘ எனக்கே அப்படிதான்’
என்ன செய்ய?
புரளும் போது
யுகங்களின் தொல்லை
தாங்கவில்லை என்றான்.
இனி யாரிடம் கேட்க?
என்றிருக்க
புரண்டு படுத்த நினைவுகளின்
முதுகில்
தீராத ஒன்றை
எழுதிக் கொண்டே இருக்கிறது
அரூப விரல்.