ப்ரியங்களின் சாயம்
யாரென்றேத் தெரியாதவர்
விலாசம் கேட்டுவிட்டு
கை குலுக்கிவிட்டுச்
செல்கிறார்…
என்றோ கேட்ட
ஒரு பாடலைப் போல
எங்கோ பார்த்த
ஒருவரின்
முகத்தைப் போல
ஞாபகக் கிளைகளில்
உன்னுடனான
கைகுலுக்கிக்கொண்ட
பற்றுதல் பறவை
சிறகடிக்கிறது….
கடைசியாக
உன் கரங்களைப்
பற்றிக்கொண்ட போது
இந்தப் பிரபஞ்சம்
பாதுகாப்பாயிருப்பதாகவே
சுற்றிக்கொண்டது.
உன் கரங்களைப்
பற்றிக்கொண்ட போது
உலகத்தின்
குளிர் பிரதேசங்களெல்லாம்
வெதுவெதுப்பான
மெல்லாடையைப்
போர்த்திக்கொண்டதாக
ஒளிந்துகொண்டது…
பற்றிக்கொண்ட
உள்ளங்கையின் நடுவே
மழையொன்று ஆவியாய்
விரவிக்கொண்டது…
பிடியிலிருந்து வெளிவந்த
உள்ளங்கையின்
மத்தியில்
அப்பிக்கொண்ட
அந்த வாசத்திற்கு
உன் பெயராலான
இன்னொரு பெயர்
சூட்டப்பட்டது.
யாரென்றேத் தெரியாதவர்
விலாசம் கேட்டுவிட்டு
கைகளைக் குலுக்கியபடிச்
சிரிக்கிறார்….
உன் சாயலேதுமற்ற
ஒருவனது
கை குலுக்கலில்
சாயமேறுகிறது
உன் ப்ரியங்களின்
சாயம்…