1. வினையெழுப்பும் அசைவின் தொடக்கம்
*
பலனை எதிர்பார்க்கிற பந்தத்தில்
பற்றுதலென்பது
பட்டாம்பூச்சி விளைவு
சிறு அசைவு
நகரச் செய்யும் மலையின் கனத்தை
வேடிக்கை பார்க்கிற
கண் வாங்கித் தருகிறது
கவனிப்பு
சிறுநகையோ
குறுமனமோ
கொடுத்துப் போகாத வாத்சல்யத்தைப்
பங்கு வைக்கிறது அடிவாங்கிப் பெற்ற
ஆறடி மனம்
இடமென்பது இட்டு நிரப்பும் சத்தத்தால்
வலுப்பெறும் போது
இடமற்றது
தன்னை இன்னும் வலுவாக்கும் கைகளை
மெளனத்தால் சுமக்கிறது
தூக்கிச் சுமப்பதல்ல
காரீயம்
கண்ணளக்க கற்றுக்கொண்ட படபடப்பை
தீர்மானிக்கும் திசை
நூல் பிடித்து வைத்திருக்கிறது
செய் நன்றி
செய்யப்பட்ட நன்றி
சொல்லின் கூடுதலில்
நிறம் மாறுகிற பலனை
பற்றிக்கொள்கிறது
இதுவரையிலானது..
2. தரிசனத்தின் நூலளவு
*
பகை நெய்து கொடுத்த
பழைய பிரிவு தான் அறியக்
கொடுக்கிறது
அறிந்திடாத உள் மடிப்புகளை
சிரித்த இதழ்
சிந்திய சொற்க்காட்டின் தீரா மணம்
திரும்பும் வலியெல்லாம்
சுகந்தம்
இதழ்
இதழாய் பதித்த அர்த்தம்
பதியனிட்ட பாதச் சுவட்டின் மேல்
கழன்றிடாத ஆணிகளை
அறைந்து கொடுக்கிற வழித்துணை
உத்தமம்
மாட்டிக்கொண்டு
மாட்டிக் கொண்ட
நிழலுறை காலம் தான்
கையிலிருக்கிறது
உடுத்திக்கொண்ட குறிப்புகள்
உடுத்தச் செய்யும் இருப்பின் மேல்
உறைந்த சட்டகத்தில்
உயிர் வாழ்கிறது அறிந்துவிட்டது
3. இலையுமில்லை காயுமில்லை
*
பழுக்கத் தெரிந்த காத்திருப்பை
காலங்காலமாக கையில் வைத்திருக்கிறது
மனமுறிந்து கீழ் விழுந்த
சருகுடைய ஓர் நாள்
ஒட்டிப்பார்க்கும் பதற்றத்தைக்
கொடுத்து விடுவதில்லை
பச்சையம் நழுவி
பூமி பார்த்த சொல்லொன்று
அசைத்து அசைத்து
அது நிகழ்த்தும் நாடகத்தில்
காற்றுண்டு
கட்டுக்கடங்காத மாசின் நுண்துகள்களோடு
சொல்லைத் தான் மந்திரமென்கிறது
மெளனம்
உச்சரிக்க
உடுத்திப்பார்க்க
கிடைக்கும் பார்வை
நிர்வாணம்
ஒரு நாள்
அசைகிற காற்றின் சருகுடைய இன்னுமொரு நாள்
அசைக்கிறது
காலங்காலமாக
காற்றைத் தான் மந்திரமென்கிறது
கிளை