கடவுளின் வாகனமல்லாத உணவு
பேரண்டத்தின் சமத்துவ
உணவைத் தேடி
மாமாங்கப்பசியோடு
இறைஞ்சிக் கொண்டிருக்கிறேன்.
விட்டம் தெறித்துவிட்டிருந்த
என் ஈயக் கோப்பைகளில்
வெற்றிடங்களை விஞ்சிய
காரணங்களே
நிரம்பிக் கிடக்கின்றன.
கொலைப்பசியோடிருப்பவனின்
கையைப் பிடித்துக்கொண்டு
விவாதத்திற்கு அழைக்காதீர்கள்..
வரலாறுகள் துளையிட்ட
கோப்பைகளில்
அழகாகக் கசிந்துகொண்டிருக்கிறது…
சாதிஇரத்தம்.
நபிகளைத் துரோகித்திருக்காத ஒரு பன்றியுமா இல்லாமல் போயிற்று…?
நல்ல மழைக்குப் பிறகு
மேகங்கள் இல்லாது போனால்
கோமாதாக்கள் எங்ஙனம்
இறங்கிவரச் சாத்தியம்….?
நல்மேய்ப்பர் அறுத்த
புனிதச் செம்மறியின்
தொடைக்கறி எப்படியோ
தீட்டுக்காரர்களை
நுகர்ந்தறிந்து கொள்கிறது…!!
சரிந்துபோன கொட்டடிக்குள் அசைபோட்டுக் கிடக்கும்
என் பேருணவே…
உன்னையேனும் எந்தக் கடவுளும்
வாகனமாக்கிக் கொள்ளாதிருக்கட்டும்….!!