போத்தல்கள் நிரம்பிக் கிடக்கும்
மதுபானக்கடையின்
அதிகாலைப்பொழுது எத்தனைப் பேரழகோடு இருக்கிறது..
பச்சை நிறக்குப்பியில் லிப்ஸ்டிக்
தீற்றல் யாருடையதோ…
கழிந்த இரவில் எதைக்குறித்துப்
பேசினாளோ…
மிச்சமிருந்த கடைசித் துளியைப்போல
சொட்டுச்சொட்டாய் இறைந்து
கிடக்கிறது கவிதைகள்…
இரண்டு ஹைஹீல்ஸ் செருப்புகள்
ஒடிந்து கிடந்தன…..!
இன்னுமா கண்ணாடி வளையல்கள்
அணிந்து கொண்டிருக்கிறார்கள்.?
வாழ்க்கையைப் போல
நாகரீகமும் வட்ட வடிவமாகத்தான்
இருக்கும் போல….!!
பெண்களைப் போல சூழலைக் குறித்தான அத்தனை அலட்சியமில்லை
ஆண்களிடத்து.
எல்லாக் காண்டம்களும்
நேர்த்தியாக குப்பைத்தொட்டியில்தான்
போடப்பட்டிருந்தது..!!
*****************
என்னிடத்தில்
வழவழப்போடு எவ்விதக் கீறல்களுமின்றி
ஓர் பிச்சைப் பாத்திரம் இருக்கிறது.
அது
பாரசீகப் புழுதியிலோ
தேம்ஸ் நதியின் களிமண்ணிலோ
வார்க்கப்பட்டிருக்கலாம்.
செவ்வரளிப் பூவின் மேலமர்ந்து
அருளிக் கொண்டிருந்த
பெயரிடப்படா அவதாரத்தின் படம்
அத்தனை நேர்த்தியாக
அப்பிச்சைப் பாத்திரத்தின் நடுவில்
பொறிக்கப்பட்டிருந்தது..
ஐயா பசிக்கிறது என
ஆன்லைனில் கூவித் திரிகிறேன்.
யாரோ எழுவர்
மீந்து போன பீட்ஸாவை இட்டுப் போகிறார்கள்.
பன்றிக் கொழுப்பின் நெடி
மூச்சடைக்க…
இன்னும் சிலர் எதையோ
குடிக்கத் தருகிறார்கள்.
திரவங்களில் பெட்ரோலின் மணம்
அத்தனை சுகந்தம்.
நம்புங்கள்…!!
எனது பிச்சைப் பாத்திரத்திலும்
தேவதையின் படத்திலும்
துளிகூடக் கீறல்களில்லை…!!